வியாழன், 23 செப்டம்பர், 2021

 



வெண்பா! வெண்பா!  

கொழுந்திக்கு வளைகாப்பு!

------------------------------------------

இன்னிசை வெண்பா 

இயற்றியவர்: வீரை பி இளஞ்சேட்சென்னி 

--------------------------------------------------------------------

என்மனதில் தண்ணென்(று) இனிக்கும் கொழுந்தியவள்     

மென்கரங்கள் மின்னமின்ன பொன்னால் வளைகாப்பு              

பூணுகிறாள்  கன்னத்தில் நாணுகி றாள்கொழுநன்  

பேணுகிறான்  வாழுகிறாள் சீர். 

-------------------------------------------------------------------------

எதுகையில் "ன"வுக்கு இனமாகிய "ண"

வரலாம். இது யாப்பில் அனுமதிக்கப் படுகிறது.


என்னுடைய வெண்பாவில், நாற்சீர் கொண்ட

முதலடியில், 

"என்மனதில் தண்ணென்று" என்று உள்ள அடியில் 

இணையெதுகை பயில்கிறது. ன் என்பதற்கு ண் 

எதுகை ஆகும். வருக்க எழுத்துக்களும் 

இன எழுத்துக்களும் எதுகையாகும்.


பின்வரும் திருக்குறளைப் பாருங்கள்:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 

நண்பென்னும் நட்டாச் சிறப்பு.


இக்குறளில் முதலடியில் அன்பீனும் என்பதில் 

உள்ள ன் என்ற எழுத்துக்கு, இரண்டாம் அடியில் 

உள்ள ண் என்ற எழுத்து (நண்பென்னும்)

எதுகையாக வந்துள்ளது. இப்படிப்பட்ட 

எதுகையானது மெல்லின எதுகை எனப்படும்.

மெல்லின மெய்கள் ஒன்றுக்கொன்று 

எதுகையாக வரும்.


அது போலவே வல்லின மெய்களும் ஒன்றுக்கொன்று 

எதுகையாக வரும். இக்குறளைப் பாருங்கள்.


தக்கார் தகவிலர் என்பது அவரவர் 

எச்சத்தால் காணப் படும்.


இக்குறளில் முதலடியில் உள்ள க் என்ற எழுத்துக்கு

இரண்டாம் அடியில் உள்ள ச் என்பது எதுகையாக 

உள்ளது. இது இன எதுகை ஆகும்.அதாவது 

வல்லின எதுகை.

------------------------------------------------------------ 

  

        

என்னுடைய வெண்பாவை வாய்விட்டுப் 

படியுங்கள். கூடவே சரோஜினி நாயுடுவின் 

The bangle sellers என்ற ஆங்கிலக் 

கவிதையைப் படியுங்கள்.


The bangle sellers படித்திருக்கிறீர்களா?


Bangle sellers are we who bear

Our shining loads to the temple fair...

Who will buy these delicate, bright

Rainbow-tinted circles of light?

Lustrous tokens of radiant lives,

For happy daughters and happy wives.


இக்கவிதையில் circles of light  

என்று சரோஜினி நாயுடு எதைக் 

குறிப்பிடுகிறார்?


மனிதகுல வரலாற்றிலேயே இவ்வளவு 

ஓசைநயத்துடன் அமைந்த வெண்பா 

என்னுடைய வென்பாதான். அதை அனுபவிக்க 

அருள்கூர்ந்து வாய்விட்டுப் படியுங்கள்.


பூணுகிறாள், நாணுகிறாள், பேணுகிறான், 

வாழுகிறாள் என்று சொற்கள் ஓசை 

நயத்துடன் குவான்டம் குவான்டமாக (quantum)

வெளிவருகின்றன. அனுபவியுங்கள்.   

 .  

                                                        .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக