வெள்ளி, 17 செப்டம்பர், 2021

 பதின்ம வயதினருக்கானவை!

பாடத்திட்டத்திற்கு வெளியிலுள்ள கற்றல் செயல்பாடுகள்!

For teen age group of students and youth!

EXTRA CURRICULAR ACTIVITIES!

------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------

1) பாடுங்கள்! பாடக் கற்றுக் கொள்ளுங்கள்!

எல்லோரும் பாடகர்களாகி விட முடியாது. ஆனால் 

ஒவ்வொருவரும் குறைந்தபட்சமாக தமிழாசிரியர் 

ராகத்திலாவது பாடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வகுப்பில் பாரதியாரின் பாடல்களைப் பாடம் நடத்தும் 

தமிழாசிரியர் குறைந்தபட்ச இசைத்தன்மையுடன் 

ஒரு ராகத்தில் பாடுவார் அல்லவா! அதுதான் 

தமிழாசிரியர் ராகம்.


காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே நீ 

கனியிலே இனிப்பதென்னே கண்ண பெருமானே.

பாரதியாரின் இந்தப் பாடலை ராகத்துடன் பாடுங்கள்.


பாரதியார் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியார் 

காவடிச்சிந்து, திருப்புகழ் சந்தப் பாடல்கள், கம்ப 

ராமாயணப் பாடல்கள் என்று பாடுங்கள்! வாய்விட்டுப் 

பாடுங்கள்.


2) சுடோக்குப் புதிர்களைப் போடுங்கள். ஒரு நாளில் 

அதிகபட்சமாக அரை மணி நேரம்வரை சுடோக்குப் 

புதிர்களைத் தீர்ப்பதில் செலவழிக்கலாம்.


3) சதுரங்கம் விளையாடுங்கள். விளையாடத் துணை 

கிடைக்காவிட்டால் கம்ப்யூட்டருடன் விளையாடுங்கள்.

FIDE அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 

உங்கள் பெயரைப் பதிந்து வைத்துக் கொண்டு 

நல்ல பார்ட்னருடன் விளையாடலாம். ஒரு வேலைநாளில் 

அதிகபட்சமாக அரை மணி நேரம் மட்டுமே 

சதுரங்கத்திற்குச் செலவழிக்கலாம். வார விடுமுறை 

நாட்களில் ஒரு மணி நேரம் செலவழிக்கலாம். பைத்தியம் 

பிடித்து அலையக் கூடாது. நீடித்த விடுமுறை நாட்களில்

நேர வரம்பு இல்லாமல் விளையாடுங்கள்.


4) ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ள ஊர்களில் 

வசிப்பவர்கள் கண்டிப்பாக நீச்சல் கற்றுக் கொள்ள 

வேண்டும். தினசரி நீந்த வேண்டும்.


5) ஏதேனும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.

விளையாட்டுப் போல கற்க வேண்டும். மெதுவாகக் 

கற்கலாம். உங்களின் தாயமொழி தமிழ் என்றால்,

நீங்கள் மலையாளம் அல்லது தெலுங்கு அல்லது கன்னடம் 

அல்லது சமஸ்கிருதம் அல்லது இந்தி என்று ஏதேனும் 

ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். முப்பது நாளில் 

இந்தி கற்பது எப்படி? போன்ற புத்தகத்தை வாங்கி 

வைத்துக் கொண்டு படியுங்கள். பழமொழிகள் 

தெரிந்திருப்பது மிகவும் அவசியம். எனவே வெவ்வேறு 

மொழிகளைக் கற்பது பயன் தரும்.


6) ஒரு பேன்சி ஸ்டாருக்குப் போய், ரூ 100 கொடுத்து 

நல்லதாகப் பார்த்து ஒரு கியூப் (Rubik's cube) வாங்கிக் 

கொள்ளுங்கள். அதை solve பண்ணுங்கள்.


7) ஒவ்வொருவருக்கும் படம் போடத் தெரிந்திருக்க 

வேண்டும். அறிவியல் மாணவர்களுக்கு பாடம் சார்ந்தே 

நிறைய வரைய வேண்டி இருக்கும். அவற்றை  வரைந்து 

பழகுங்கள். எனினும் பாடம் சார்ந்த drawing மட்டும் 

போதாது. கொஞ்சமாகவேனும் drawing, painting, caricature 

ஆகியவற்றில் சிறிது ஈடுபாடு கொள்ளுங்கள்.


8) பல விஷயங்கள் மனப்பாடமாகத் தெரிய வேண்டும்.

தமிழில் கடல் போல் இலக்கியங்கள் உள்ளன. அவற்றை 

பள்ளி கல்லூரிகளில் மட்டும் கற்றுக் கொண்டு விட 

முடியாது. அவற்றையெல்லாம் மனப்பாடமாகவும் 

பொருளுணர்ந்தும்  படியுங்கள். இப்போது 10ஆம் வகுப்பில் 

சேர்ந்திருக்கிறீர்கள். 10ஆம் வகுப்பு முடியும்போது 

உங்களுக்கு ஒரு 100 பாட்டாவது மனப்பாடமாகச் 

சொல்லத் தெரிந்திருக்க வேண்டாமா? Periodic tableல் 

உள்ள தனிமங்களில் 100 தனிமங்களை வரிசை 

மாறாமல் மனப்பாடமாகச் சொல்லத்  தெரிய வேண்டாமா? 


9) ஆன் லைன் கேம்களைத் தவிர்த்து விடுங்கள்.  

செயற்கையாக உருவாக்கப்பட்ட பப்ஜி கேம் போன்ற 

ஆன் லைன் கொடுமைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ஆன்லைன் ரம்மியில் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

இது போன்ற கொடிய நடவடிக்கைகளில் செலவழிப்பதற்கு 

உங்களுக்கு நேரம் இருக்கிறது அல்லவா! அதைப் பயனுள்ள

வழியில் கழியுங்கள். சமையல் கற்றுக் கொள்ளுங்கள்.


காப்பி போடுவது, டீ போடுவது, கடையில் போய் தோசை 

மாவு வாங்கி வந்து, இட்லி அவிப்பது, ரவா உப்புமா 

கிண்டுவது, ரவா கேசரி கிண்டுவது. உளுந்த வடை சுடுவது,

ரசம் வைப்பது இப்படி மிக எளிமையான சமையலில் 

தொடங்கி சற்றே கடினமான சமையல் வரைக்கும்  செய்யத் 

தெரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் தெரியவில்லை 

என்றால் முட்டாளாக இருக்கிறோம் என்று பொருள்.


10) உங்களது வாழ்க்கையில் பாடப்புத்தகத்தில் இல்லாத 

ஏதாவது ஒரு அறிவியல் கட்டுரையை, தமிழிலோ 

ஆங்கிலத்திலோ முழுசாகப் படித்து இருக்கிறீர்களா?

இல்லையென்றால் இன்றே படியுங்கள்.


அறிவியல் கட்டுரைகள், அறிவியல் நூல்கள் ஆகியவற்றைப் 

படிக்க வேண்டும். அறிவியல் சினிமாக்களைப் பார்க்க 

வேண்டும். அறிவியல் சினிமா என்றாலே ஆங்கில 

சினிமாதான். கிராவிட்டி, ஸ்பேஸ் ஒடிசி போன்ற படங்கள், 

கிறிஸ்டோபர் நோலனின் படங்கள் ஆகியவற்றைப் 

பார்க்க வேண்டும்.


சில எளிய அறிவியல் பரிசோதனைகளை, அறிவியல் 

செயல்பாடுகளை வீட்டிலேயே வைத்துச் செய்யக்கூடிய 

நடவடிக்கைகளைச் செய்து பழக வேண்டும்.

-----------------------------------------------------------------

தொடரும் 

****************************************

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக