வியாழன், 9 செப்டம்பர், 2021

 காதலின் இயற்பியல்!
-----------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------
உன் இளமூங்கில் தோளில்
துப்பட்டா
தொங்கும் அழகில் லயித்து
கச்சிதமான பேரபோலா என்று
உறுத்து உறுத்துப் பார்த்தேன்
வசவு உமிழ்ந்து நகர்ந்தாய்.
உன் தங்கையைக் கண்டதும்
உன் ஐசோடோப்
உன்னினும் அழகு என்றேன்
கோபத்தில் சிவந்தாய்.
உன் மேனியின் அபாய வளைவுகளில்
திரும்புவதற்குத் தேவையான
torqueஐ அளக்க விரும்பினேன்
அனுமதி மறுத்தாய்.
மின்னி மறையும் உன் இடையில்
உற்பத்தியாகும் மின்சாரத்தின்
வோல்டேஜை அளக்க விரும்பி
உன் இடையில்
மல்டி மீட்டரைப் பொருத்த முற்பட்டேன்
கண்டிப்புடன் தடுத்தாய்.
நம் காதல்
அசிம்ப்டோட் ஆகவே நீள்கிறதே
அது தொடுபுள்ளியில் சங்கமிக்கும்
பொன்பொழுது எப்போது என்றேன்.
துருத்திக்கொண்டு
என்னுடன் கூடவே வரும்
இயற்பியலைக் கைவிட்டால்
உன் கைத்தலம் பற்றலாம் என்றாய்.
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று
அப்பாலுக்கு அப்பாலும்
உச்சம் தரும் இயற்பியலைக்
கைவிடுதல் எங்ஙனம்?
நியூட்டனும் கலாமும்
வெளிச்சம் பாய்ச்ச
ஒரு நானோ நொடியில்
நான் தெளிந்தேன்.
********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக