ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

இணையக் குற்றங்களைத் தடுக்க 

தடை செய்யப்படும் வலைப்பின்னல்! 

-------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------- 

இது கலிகாலமோ இல்லையோ,  நாம் வாழும் இக்காலம் 

இணையக் குற்றங்களின் பொற்காலம். தாக்கி விட்டு ஓடிவிடும் 

தந்திரத்தைக் (hit and run tactics) கையாளும் இணையக் குற்றவாளிகளைப் 

பிடிக்க முடியவில்லை. ஒரு மாயாவியைப் போல் மறைந்து 

விடுகிறார்கள். ஆங்காங்கே குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி  

மனித உயிர்களைக் கொல்லும் பயங்கரவாதிகளை அரசுகளால் 

பின்தொடர இயலவில்லை. அவர்கள் இணையத்தில் சர்வ சுதந்திரமாக 

உலவுகிறார்கள். மின்னேற்றம் இல்லாததால் எந்தத் தடத்தையும் 

விட்டுச் செல்லாத நியூட்ரானைப் போல், இக்கொடுங் குற்றவாளிகளும்

தங்களின் காலடித் தடம் தரையில் பதியாவண்ணம் முக்காடு 

போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இணையத்தில் நடமாடுகிறார்கள்.


இணையக் குற்றங்களும் சரி, அவற்றைத் தடுக்கும் அரசுகளின் 

முயற்சிகளும் சரி, இரண்டுமே உலகளாவியவை. இந்திய அரசு இது 

குறித்து முடிவெடுக்க உள்துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் 

பொறுப்பை ஒப்படைத்தது. முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் 

தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ள இக்குழு  

இப்பிரச்சினை குறித்து ஆழமாக விவாதித்து அண்மையில் 

(செப்டம்பர் 2021) தனது அதிர்ச்சிகரமான பரிந்துரைகளை அரசிடம் 

வழங்கி உள்ளது. 


இந்தியாவில் VPN வலைப்பின்னல்களைத் தடை செய்ய 

வேண்டும் என்பதே நிலைக்குழுவின் பிரதானமான பரிந்துரை.

(VPN = Virtual Private Network). பயிருக்கு நடுவில் உள்ள களைகளைப் 

பறிக்காமல் பயிர் வாழாது என்பது போன்ற பரிந்துரை இது.

எனினும் VPNகளைத் தடை செய்வது எளிதல்ல. ஏனெனில் 

VPNகளால் அளப்பரிய நன்மைகள் உண்டு. அதே நேரத்தில் 

அவை தீய நோக்கங்களுக்கும் பயன்பட்டு வருகின்றன. 


தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இணையப் பயன்பாடு 

சார்ந்து அவ்வப்போது இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்  

மற்றும் தடைகளை விதித்து வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 2020ல் 

சீனாவின் 59 செயற்பேறுகள் (Apps) மத்திய அரசால் தடை 

செய்யப் பட்டன. அதற்கு முன்னதாக ஒரு சில குறிப்பிட்ட  செயற்பேறுகள் மட்டுமே தடை செய்யப் பட்டிருந்தன. தொடர்ந்து செப்டம்பர் 2020ல் 

118 சீன செயற்பேறுகள் தடை செய்யப்பட்டன. ஒட்டு மொத்தத்தில் 

267 சீன செயற்பேறுகள் (Apps) இதுவரை இந்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ளன.  


டிக்டாக் (TikTok) எனப்படும் சீனாவின் செயற்பேறு (App) மூலம் நாட்டில் ஒழுக்கக்கேடு பரவுவதாகக் கூறித் தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிக்டாக் மூலம் பாலுறவு சார்ந்த ஆபாசம் (pornography) பரவுவதாகக் கூறி, அதைத் தடை செய்யுமாறு 

ஏப்ரல் 3, 2019ல் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து,

ஜூன் 2020ல் டிக்டாக் இந்தியாவில்  தடை செய்யப்பட்டது. 


சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) எனப்படும் நிறுவனத்தின் 

உருவாக்கமான  டிக்டாக் என்பது உறுப்பினர்கள் தங்களுக்குள் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடு ஆகும். டிக்டாக் வந்த உடனேயே, இந்தியாவில் உள்ள பெண்களில் மிகப்பலர், ஆறு வயதுக் 

குழந்தை முதல் அறுபதைத் தாண்டிய கிழவி வரை, நடனம் 

ஆடுகிறோம் என்ற பெயரில் குத்தாட்டம் போட்டு அதை வீடியோ எடுத்து 

பொதுவெளியில் வெளியிட்டனர். தற்போது டிக்டாக் தடை 

செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. எந்தக்குடி முழுகி 

விட்டது? ஒன்றும் இல்லை அல்லவா! இந்தத் தடையால் 

யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்பது புலப்படுகிறது.


இதைப்போலவே பப்ஜி கேம் (PUBG Mobile) எனப்படும் இணைய விளையாட்டும்

இந்தியாவில் அண்மையில் செப்டம்பர் 2020ல் தடை செய்யப் பட்டுள்ளது.

 "PlayerUnknown's Battlegrounds" என்பதே பப்ஜி கேம் எனப்படுகிறது.

இது சீனாவில் உருவாக்கப்படவில்லை என்றபோதிலும்,

இதன் குறியீட்டாக்கமும் மொபைல் போன் பதிப்பும் (coding and mobile version)

டென்சென்ட் (TenCent) என்னும்  சீன நிறுவனத்தைச் சேர்ந்தவை.

ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுவதும், அதில் 

யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்பதும்தான் பப்ஜி விளையாட்டு.

குழந்தைகள் மனத்தில் மிகுந்த வன்முறையை விதைக்கும் 

இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது வரவேற்கத் தக்கதே. 


உதாரணத்திற்காக மட்டுமே டிக்டாக், பப்ஜி கேம் ஆகிய இரண்டும் இங்கு 

சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. மற்றப்படி இந்திய அரசால் தடை 

செய்யப்பட்ட அத்தனை செயற்பேறுகளும் (Apps) நாட்டின் பாதுகாப்புக்கு 

குந்தகம் விளைவிப்பவை மட்டுமின்றி சமூகத் தீங்கையும் 

ஏற்படுத்தியவையே.      


மேற்குறிப்பிட்ட தடைகளின் தொடர்ச்சியாகவே, VPN தடை செய்யப்பட 

வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையைப் 

பார்க்க வேண்டும். இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், 

VPN என்றால் என்ன என்பது முதல் அது குறித்த எல்லா விவரங்களையும்  ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.


இணையம் என்பது எல்லோருக்கும் பொதுவான மிகப்பெரிய ஒரு வலைப்பின்னல் (public network) அல்லவா! இதன் மீது தனிப்பட்ட 

முறையில், ஒருவர் தமக்காக என்று ஒரு வலைப்பின்னலை உருவாக்கினால், 

அது VPN எனப்படும். VPN (Virtual Private Network) என்பதை தமிழில் 

மெய்நிகர்  தனிப்பட்ட வலைப்பின்னல் என்று கூறலாம்.  


மெய்நிகர் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு அதை ஒருவர் 

பயன்படுத்தும்போது, அனைவருக்கும் பொதுவான இணையமானது 

அவரைப் பொறுத்தமட்டில் தனிப்பட்ட ஒன்றாக, அந்தரங்கமான 

ஒன்றாக ஆகி விடுகிறது. அதைப் பிறர் அறியவும் இயலாது. அத்தோடு இணையத்தில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் 

அனைத்துக்கும் இது முக்காடு போட்டு விடுகிறது. (VPN serves as a mask and offers privacy and anonymity).  


மெய்நிகர் வலைப்பின்னல் இல்லாமல் ஒருவர் இணையத்தைப் 

பயன்படுத்தும்போது, குறிப்பாக கடைகள் உணவகங்கள் போன்ற 

பொதுவான இடங்களில் உள்ள வயர்லெஸ் வசதி (WiFi hotspots) மூலம் 

இணையத்தில் உலவும்போது, அவரின் தரவுகள் அனைத்தும் 

ஒட்டுக்கேட்கப் படுவதற்கான (eavesdropping) நிகழ்தகவு 

100 சதவீதம் வரை செல்லும். பேரங்காடிகள் (shopping malls) உணவகங்கள்

முதல் கட்டணக் கழிப்பிடங்கள் வரை, எல்லா இடங்களிலும் இன்று 

இந்தியாவில் வயர்லெஸ் சுட்டிடடங்கள் (WiFi hotspots) நிறையவே உள்ளன.

இத்தகைய பொதுவான இடங்களில் இருந்து கொண்டு மின்னஞ்சல்களை   

அனுப்புதல், வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்தல், பங்குச் 

சந்தையில் முதலீடு செய்தல் இன்ன பிற செயல்களை ஒருவர் 

மேற்கொள்ளும்போது அவரின் தரவுகள் அனைத்தும் அவர் அறியாமலேயே 

அபகரிக்கப் பட்டிருக்கும். இந்த அபாயத்தில் இருந்து ஒருவரைப் 

பாதுகாக்கும் ஏற்பாடே மெய்நிகர் வலைப்பின்னல் ஆகும். சுருங்கக் 

கூறின், இணையத்தில் ஒருவர் மேற்கொள்ளும் அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளும் மெய்நிகர் வலைப்பின்னலால் பாதுகாக்கப்

படுவதுடன் ரகசியமாகவும் வைக்கப்படும். 


இணையத் தொடர்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு 

இணைய முகவரி உண்டு. இதுதான் அவரின் அடையாளம் ஆகும்.

இது IP address என்று அழைக்கப்படும் (IP = Internet Protocol). இது 

தனித்துவமானது (unique). ஒருவரின் இணைய முகவரி மற்றவரின் 

இணைய முகவரியில் இருந்து வேறுபட்டிருக்கும். இணையம் அல்லது வேறெந்த உள்ளூர் வலைப்பின்னலின் தொடர்பு பெற்றிருந்தாலும், அதற்கு 

தனித்துவமான இணைய முகவரி வழங்கப்படும். ஒரு இணைய 

முகவரி இல்லாமல் ஒரு வலைப்பின்னலில் (network) இயங்க முடியாது.


VPN மூலமாக இணையச் செயல்பாடுகளை ஒருவர் மேற்கொண்டால், அவரின் மெய்யான இணைய முகவரியை (IP address) VPN மறைத்து விடும். அதற்குப் பதிலாக வேறு ஒரு இணைய முகவரி, அதுவும் வேறொரு நாட்டில்  

உள்ளது போன்ற ஒரு இணைய முகவரி காட்டப்படும். இதன் மூலம் தொடர்புடையவர் எந்த நாட்டில் எந்த ஊரில் இருக்கிறார் என்று கண்டுபிடிக்க இயலாது.      


IP முகவரி என்பது நான்கு கூறுகளைக் கொண்டது. இது IPv4 

(Internet Protocol version 4) ஆகும். தற்போது ஆறு கூறுகளைக் கொண்ட 

IPv6 வந்து விட்டது. வலைப்பின்னலின் எண்ணும் மூலவரின் எண்ணும் 

(network number and host number) ஒரு குறிப்பிட்ட  வடிவில் (format)

அமைந்திருப்பதே IP முகவரி ஆகும்.


ஒரு இணைய முகவரி இப்படி இருக்கும். 103.58.115.141 என்பது இணைய முகவரிக்கு ஒரு உதாரணம் ஆகும். இந்தியாவில் ஈரோட்டில் உள்ளது இந்த இணைய முகவரி. இது IPv4 வகையிலான இணைய முகவரி ஆகும்.

இணைய முகவரியில் உள்ள நான்கு கூறுகளில், ஒவ்வொன்றும்  

256 எண்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்கும்.  0 முதல் 255 வரையிலான மொத்தம் 256 எண்களைக் கொண்டு இந்த IPv4 வகையிலான 

முகவரிகள் உருவாக்கப் படுகின்றன. ஆக ஒரு இணைய முகவரியானது  

பின்வருமாறு 0.0.0.0 முதல் 255.255.255.255 வரையிலான கணக்கற்ற 

சேர்க்கைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கும்.   


நீங்கள் இணையத் தொடர்பு (Internet connection) பெற்றுள்ளவரா?

உங்களின் இணைய முகவரி (IP address) என்ன என்று தெரியுமா?

தெரியாது என்றால் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

இதற்கு மிக மிக எளிமையான ஒரு வழி உண்டு. கூகுள் தேடலில் 

"What is my IP address?" என்று அடியுங்கள். அரை நொடியில் உங்களுக்கு 

விடை கிடைக்கும். உங்களின் இணைய முகவரியை கூகுள் 

அறிவிக்கும். அருள்கூர்ந்து, இணையத் தொடர்பு பெற்றுள்ள 

ஒவ்வொருவரும் இவ்வாறு கூகுள் தேடல் மூலம் அவரவரின் 

இணைய முகவரியை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.  


இணையத்தில் உலவும் எவர் ஒருவரையேனும் பிடிக்க 

வேண்டுமெனில் அவரின் இணைய முகவரி தெரிய வேண்டும்.

அது தெரிந்து விட்டால், அதைக்கொண்டு அவரின் இருப்பிடத்தை,

அவரின் சேவை வழங்குநரை (Service Provider) அறிந்து கொள்ள 

இயலும். ஆனால் ஒருவர் ஒரு மெய்நிகர் வலைப்பின்னலை 

ஏற்பாடு செய்து கொண்டால், அவரின் தனித்துவ அடையாளமான 

இணைய முகவரியை அரசோ காவல்துறையோ உளவு 

அமைப்புகளோ அறிந்து கொள்ள இயலாது. கிரிமினல்கள் 

இவ்வாறு தங்களை மறைத்துக்கொண்டு இணையத்தில் 

சர்வ சுதந்திரமாக ஊர்வலம் வருகிறார்கள்.


முன்பெல்லாம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மெய்நிகர் 

வலைப்பின்னல் தேவைப்படுவோர் BSNL, ஏர்டெல் போன்ற 

இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்துதான்  

அதைப்பெற வேண்டும். இந்நிறுவனங்கள் மிகவும் அதிகமான 

கட்டணத்தில் VPN சேவையை வழங்கி வந்தன. தற்போது 

நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆனை விலை குதிரை 

விலையில் விற்கப்பட்ட மெய்நிகர் வலைப்பின்னலானது 

தற்போது இலவசமாகக் கிடைக்கிறது.


கட்டணம் உடையது, இலவசமானது (Paid VPN, Free VPN) என்று 

இரண்டு வகைகளில் மெய்நிகர் வலைப்பின்னல் இன்று 

சுலபத்தில் கிடைக்கிறது. இதன் காரணமாக VPNஐப் 

பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சமகாலத்தில் பெருகி வருகிறது.


உலகெங்கும் கொரோனா பீடித்தபோது, அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்ய 

(Work from home) வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீடுகளில் உள்ள,

ஊழியர்களின் இணையத்  தொடர்புகள் முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளபடியால், மெய்நிகர் வலைப்பின்னலை ஏற்பாடு 

செய்து கொள்வது ஊழியர்களின் இணையச் செயல்பாடுகளுக்கு உரிய 

பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் இந்திய அரசு 2020ல் 

VPNகளின் பயன்பாட்டை மிகவும் தாராளமாக்கி உத்தரவுகளைப் 

பிறப்பித்து இருந்தது. VPNகள் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே 

வேலை செய்வது சாத்தியமற்றது என்பதால் அரசு இவ்வாறு 

செய்தது.


இன்று VPNகளைத் தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற 

நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது. இந்தப் பரிந்துரையைச் 

செயலாக்க இயலுமா? செயலாக்க வேண்டுமெனில் எப்படிச் 

செயல்படுத்துவது? ஒட்டு மொத்தமாக VPNகளே வேண்டாம் என்று

எந்த ஒரு அரசும் அதிரடியாக முடிவெடுத்து விட முடியாது.

VPNகளின் துணையுடன் இணையச் செயல்பாடுகளை

மேற்கொள்ளுவோர் யார்? அரசும் தனியார் நிறுவனங்களும் தனி 

நபர்களுமே. இவர்கள் அத்தனை பேரையும் ஒரே இரவில் தற்கொலைக்குத் தள்ள முடியாது. அதே நேரத்தில் பெருக்கல் தொடராகப் பெருகிவரும் 

(Geometric Progression) இணையக் குற்றங்களைத் தடுக்கவும், 

அவற்றைச் செய்யும் கிரிமினல்களைப் பிடிக்கவும் VPNகளின் 

பயன்பாட்டைத் தடுக்க வேண்டியதும் அவசியமாகிறது. 


மேலும் Darkweb எனப்படும் இருள் வலைப்பின்னலை முற்றிலுமாகத் 

தடை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு 

பரிந்துரைத்துள்ளது. வரவேற்கத்தக்க பரிந்துரை இது.

Darkweb என்றால் என்ன? மறைத்து வைக்கப்பட்ட இணைய 

வலைத்தளங்களின் தொகுப்பே டார்க்வெப் என்னும்  

இருள் வலைப்பின்னல் ஆகும். இந்த வலைத்தளங்களை 

சாதாரண உலவிகளைக் (browser) கொண்டு அணுக இயலாது.

தேடுதல் பொறிகளுக்கு (search engines) இவை புலப்படாது. 

இவ்வளவு இருள் நிறைந்த வலைப்பின்னல்கள் 

ஜனநாயக நாடுகளில் எதற்கு? எனவே அவற்றைத் தடை செய்வதை 

நாடே திரண்டு ஆதரிக்கும்.              

    

சீனாவின் செயற்பேறுகளை (Apps) தடை செய்தது போன்று 

VPNகளைத் தடை செய்வது எளிதன்று. VPNகளின் பயன்களைத்

தக்கவைத்துக் கொண்டும் அதே நேரத்தில் அதன் தீமைகளை 

வேரறுத்தும் சரியானதொரு தீர்வை மத்திய அரசு எட்ட வேண்டும்.

ஒட்டுமொத்தமாக VPNகளே கூடாது என்பதற்குப் பதிலாக 

VPNகளின் பயன்பாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகளை 

விதிப்பதும், தெரிவு செய்யப்பட்ட சில குறிப்பிட்ட VPNகளைத் 

தடை செய்வதும் உரிய பலனைத் தரும்.


இது குறித்து முடிவு செய்யப் போகிறவர் இந்தியாவின் 

தொலைதொடர்பு அமைச்சர்தான். அதிர்ஷ்டவசமாக

தொலைதொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சராக

இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள். இவர்
கான்பூர் ஐஐடியில் எம் டெக் பட்டம் பெற்றவர். நல்லதொரு
தொழில்நுட்ப அறிஞர். (அவர் ஐ ஏ எஸ் தேர்வில் தேறி,
கலெக்டராகப் பணியாற்றியதும் அமெரிக்கா சென்று வணிக
மேலாண்மை பயின்றதும் கூடுதல் தகவல்கள்).
எனவே VPNகளைத் தடை செய்ய வேண்டுமா
வேண்டாமா என்பது பற்றி யாரினும்
கூடுதலாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
நன்கறிவார். அவர் தம் தொழில்நுட்ப மேதைமையின்
துணைகொண்டு VPN குறித்து நல்லதொரு முடிவை எடுப்பார்.
இதை இந்த நாடு காணும்!
*************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக