ஞாயிறு, 28 ஜூலை, 2019

நிலவில் தண்ணீர்!
---------------------------
நவம்பர் 14, 2008ல் சந்திரயான்-1ல் இருந்த கருவியானது (Moon Impact Probe)
நிலவில் மோதி நிலவின் தரையின் கீழ்ப்பரப்பில் உள்ள மண்ணை
(subsurface debris) அள்ளிக் கொண்டு வந்தது. இப் பகுத்தாய்ந்து, சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்தது. எனினும் குளம் அல்லது ஏரியில் தண்ணீர் இருப்பது போல நிலவிலும் தண்ணீர் இருக்கிறது என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. நிலவில் தண்ணீர் திரவ நிலையில் இல்லை. ஆனால் உறைந்த நிலையில் இருப்பதை சந்திரயான்-1 கண்டறிந்தது.

உறைந்த நிலையில் தண்ணீர் என்பதன் பொருள் நம் வீட்டில்
உள்ள குளிர்பதனப் பெட்டியில் தண்ணீர் உறைந்து
பனிக்கட்டியாக இருப்பது போன்றதல்ல. ரஷ்யாவில் உள்ள சைபீரியா பனிப்பாலைவனப் பகுதியில் நிலத்தடி உறைபனியாக (permafrost) தண்ணீர் உள்ளது. இது போலவே நிலவிலும் நிலத்தடி உறைபனியாக
தண்ணீர் இருக்கக்கூடும் என்பதே சந்திரயான்-1ன் கண்டுபிடிப்பு.
அல்லது தண்ணீர் தனித்து இல்லாமல் ஏதேனும் கனிமங்களுடன் கலந்து
உறைந்து அந்தக் கனிமமாகவே மாறிப்போன நிலையிலும்
இருக்கக்கூடும். உதாரணமாக ஆபடைட் (apatite) என்னும் பாஸ்பேட்
குழுவைச் சேர்ந்த கனிமத்தில் ஹைடிராக்சில் அயனிகள்
(hydroxyl ions) உள்ளன. இந்த வடிவிலும் தண்ணீர் இருக்கக் கூடும்.

பூமியின் துருவப் பகுதிகள் போன்றே சந்திரனின் துருவப் பகுதிகளும்
அதீத வெப்பநிலைக்கு ஆட்படாமல் இருப்பதால், பிற பகுதிகளை விட  துருவப் பகுதிகளை ஆராய்வது சந்திரனைப் பற்றிய உண்மைகளை அறிய உதவும். சந்திரனின் வட துருவத்தை விட தென் துருவம் அதிகமாக நிழலில் மூழ்கி இருக்கும் பகுதி. இங்கு நிரந்தர நிழல் பிரதேசங்கள்
நிறையவே உண்டு. எனவே சந்திரயான்-2வில் உள்ள தரையிறங்கி (lander) சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்க முடிவாகி
உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக