வெள்ளி, 19 ஜூலை, 2019

அனுப்புநர்:
இசை
முகிலனால் பாதிக்கப்பட்ட பெண்
குளித்தலை
கரூர் மாவட்டம்.

பெறுநர்:




மதிப்புக்குரிய ஐயா, அம்மா,

மண்ணுக்கும் மக்களுக்கும் ஆதரவாகப் போராட வேண்டும் என்ற
எண்ணம் கொண்டிருந்த நான்
போராட்டக் களத்துக்கு வந்தேன். முகில சக போராளியாய்
மணல் கொள்ளை எதிர்ப்பு, காவிரியாற்றுப் பாதுகாப்பு உள்ளிட்ட
பல்வேறு களங்களில் போராடினேன். இதனால் என் மீது அரசு
தொடுத்த வழக்குகளை நீதிமன்றத்தில் இன்றும் சந்தித்துக்
கொண்டிருக்கிறேன்.

முகிலன் மீதான என் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும்
விதத்தில் அவர் என்னை பாலியல் வன்கொடுமை
செய்தார். நான் அழுதேன்; அரற்றினேன்; தற்கொலை வரை
சென்று மீண்டேன்.

தமது குடும்ப வாழ்க்கை  கசந்து விட்டதாகவும், தமது
திருமண பந்தத்தில் இருந்து விலகி முறைப்படியான
மணவிலக்குப் பெற்று என்னைத் திருமணம் செய்து
கொள்வதாகவும் உறுதி கூறினார்: நம்பிக்கை ஊட்டினார்.

ஆனால் நாளடைவில் அவர் தமது வாக்குறுதியை
நிறைவேற்ற முன்வராமல் தட்டிக் கழிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் கடந்த 2019 பெப்ரவரி 17 அன்று குளித்தலையில்
ஒரு பேச்சுவார்த்தைக்கு என் நலனில் அக்கறை உடைய
பெரியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு வருவதாக
உறுதி கூறி குறுஞ்செய்தி மூலம் தமது வ்ருகையையும்
உறுதி செய்த முகிலன், அக்கூட்டத்திற்கு வராமல்
முந்திய நாளே தலைமறைவாகி விட்டார்.

எனவே குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
நான் புகார் கொடுத்தேன். தற்போது 140 நாட்கள் 
தலைமறைவுக்குப் பின் முகிலன் வெளியே வந்துள்ளார்.

என்னை ஏமாற்றி மோசடி செய்தது, பாலியல் வன்கொடுமை
செய்தது உள்ளிட்ட புகார்களில் எனக்கு நீதி கிடைக்க
நான் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு நாளும் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
என் மீது அவதூறு பொழியப்பட்டு வருகிறது. இந்நிலையில்
பாதுகாப்பு கருதி என் அடையாளங்களை மறைத்துக் கொண்டு
வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறேன்.

செல்வாக்கு மிக்க முகிலனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட
நான் எனக்கான நீதி கிடைக்க தனி ஒருத்தியாக நின்று
போராடிக் கொண்டிருக்கிறேன்.முகிலன் ஒரு போராளி
என்பதால் அவரின் பாலியல் குற்றங்களைப் பொருட்படுத்தக்
கூடாது என்று முகிலனின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக்கொண்டு
பார்வையை இழக்க முடியுமா?

தமிழ்ச் சமூகத்தின் சான்றோர்களும் பெரியோர்களும்
பெண்ணுரிமைப் போராளிகளும் சமூக அரசியல்
செயல்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும்
நீதிக்காகப் போராடும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  தமிழ்ச் சமூகம் எனக்கு
ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
இசை
முகிலனால் பாதிக்கப்பட்ட பெண்.
இடம்: குளித்தலை நாள்: 19.07.2019.
-----------------------------------------------------------------------------------


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக