சனி, 6 ஜூலை, 2019

புத்தாண்டுக்கு ஒருமுறை  கொண்டாடப்படும் புறநானூறு!
நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்!
-------------------------------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------------
வரவு செலவுத்திட்ட அறிக்கையை நேற்று (சூலை 5, 2019)
இந்திய நா முன்மொழிந்து பேசிய நிதியமைச்சர்
நிர்மலா அம்மையார் தம் உரையில் ஒரு புறநானூற்றுச்
செய்யுளை மேற்கோள் காட்டினார். இதன் விளைவாக
தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளி எங்கும் அப்பாடல்
கொண்டாடப் படுகிறது.

"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே"
என்று தொடங்கும் பிசிராந்தையாரின் அப்பாடலையும்
அதற்குரிய உரையையும் மிகுதியும் பிழையின்றி, தமிழரும் தமிழறிந்தோரும் பெரும் ஆரவாரத்துடன் போற்றி
வருகின்றனர்.

இக்காட்சியும் இதன் மாட்சியும் கண்டு
"நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்" என்று
உவகையில் மூழ்காதார் யார்?

(உவகை = மகிழ்ச்சி; நகையும் உவகையும் கொல்லும்
சினத்தின் பகையும் உளவோ பிற....குறள்)

தமிழ்ச் சமூகத்தில் பத்தாண்டுக்கு ஒருமுறைதான்
புறநானூற்றுப் பாடல் பொதுவெளியில் அறிமுகமாகிறது.
இது மிகக் கடுமையான கால இடைவெளி ஆகும்.

இதற்கு முன்பு 2009இல், கலைஞர் அவர்கள் ஒரு
புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார்.
இப்போது போன்றே அப்போதும் அப்பாடல்
பொதுவெளியில், ஆனால் சற்றுக் குறைந்த ஆரவாரத்துடன்
கொண்டாடப் பட்டது.

"ஓரில் நெய்தல் கறங்க" என்று தொடங்கும் அப்பாடல்
பக்குடுக்கை நன்கணியார் இயற்றிய பாடல் ஆகும்.
கலைஞருக்குப் பின் நிர்மலா அம்மையார் அவர்களால்
இப்போது ஒரு புறப்பாடல் பொலிவு பெற்றிருக்கிறது.

ஆக, ஒரு புறப்பாடல் கொண்டாடப்பட வேண்டுமெனில்,
அதற்கு கலைஞர், நிர்மலா அம்மையார் போன்ற
பெருஞ்செல்வாக்கும் அதிகாரமும் உடையோர்
தேவைப் படுகின்றனர். அது மட்டுமின்றி, அனைவரின்
கவனத்தை ஈர்க்க வல்ல உரிய சூழலும் தேவைப்
படுகின்றன.

கலைஞர் எச்சூழலில் அப்பாடலைக் கூறினார்?
அதனை இடஞ்சுட்டிப் பொருள் விளக்க எவர் எவரால்
இயலும்? திராவிட அன்பர்களால் இயலாது.
தமிழ்ப் பற்றாளரும் புலமை உடையோரும் மட்டுமே
விடையிறுக்க இயலும்.

இக்கேள்விக்கு வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
ஓரில் நெய்தல் கறங்க என்னும் புறப்பாடலை 2009இல்
கலைஞர் கூறினார். இதை இடஞ்சுட்டிப் பொருள்
விளக்குக.  

"கறங்க" என்னும் சொல்லின் பொருளை அறிய
"கறங்குகின்ற விற்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்" 
என்னும் கம்பனின் விருத்தத்திற்குச் செல்ல வேண்டும்.
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரையில் உவகை, ஆரவாரம், மாட்சி ஆகிய
சொற்களைப் பயன்படுத்தி உள்ளேன். அன்றாட உலகில்
அதிகம் புழங்காத சொற்கள் இவை. இவை வழக்கு வீழ்ந்து
விடக்கூடாது என்ற அக்கறையின் வெளிப்பாடே இக்கட்டுரை.

விடை தெரியாமை குற்றமென்று. விடை தெரிந்திட
முயலாதோர் நட்புநீக்கம் செய்யப்படுவர்.
*********************************************************** 




    

 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக