புதன், 3 ஜூலை, 2019

கொண்டு என்பது வேற்றுமை உருபு என்பது என்னுடைய
சொந்தக் கருத்தோ சொந்தக் கண்டுபிடிப்போ இல்லை.
சில நூற்றாண்டுகளாகவே இப்படி இருக்கிறது.
நான் இதை அறிந்தது 198களில்.
 
கொண்டு என்பது துணை வினைச்சொல்;
ஆடிக்கொண்டு, பாடிக்கொண்டு, படுத்துக்கொண்டு
என்று வரும் இடங்களில் அப்படி. ஆனால் குறிப்பிட்ட
பிரதேசத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினர்
கொண்டு என்பதை வேற்றுமை உருபாகவே \பாவித்து
வருகின்றனர். எனவே கொண்டு என்பது மூன்றாம்
வேற்றுமை உருபாக ஏற்கப் பட்டுள்ளது. கொண்டு
என்பது கருவிப் பொருளில் வழங்கப் படுகிறது.

1) வாள்கொண்டு அறுத்தான். இதன் பொருள் வாளால்
அறுத்தான் என்பது. இங்கு கருவிப்பொருள் உள்ளது.

2) தடிகொண்டு அடித்தான். தடியால் அடித்தான்
என்பதே பொருள். தடி என்பது கருவி. எனவே
கருவிப் பொருள்.

3) ஊசிகொண்டு தைத்தான். ஊசியால் தைத்தான்
என்று பொருள். ஊசி ஒரு கருவி. எனவே கருவிப்பொருள்.

4) விரல்கொண்டு பூத்தொடுத்தாள்.  
விரலால் பூத்தொடுத்தாள் என்பது பொருள். இங்கும்
விரல் என்பது கருவி. எனவே கருவிப்பொருள்.

பூ என்பது ஓரெழுத்தொரு மொழி. ஓரெழுத்தொரு
மொழியின் முன் வல்லினம் மிகும் என்ற விதிப்படி
பூத்தொடுத்தாள் என்றாகிறது.
***********
எந்த இலக்கண ஆசிரியரும் இதுவரை கூறாத,
கூறத் துணியாத, இதுவரை அச்சேறாத சில
புதிய வேற்றுமை உருபுகளை நான் கண்டறிந்து
(discovered) வைத்துள்ளேன். அவற்றைப் பொதுவெளியில்
அனைவரும் அறியும்வண்ணம் எழுத விரும்பவில்லை.
என்றேனும் எழுதுவேன்.

தொல்காப்பியர் காலத்தில் இனக்குழுச் சமூக
வாழ்க்கை. சங்க காலம் இனக்குழுச் சமூக
வாழ்க்கையின் காலம். நிலவுடைமைச் சமூக
அமைப்பு அப்போது தோன்றியே இருக்கவில்லை.
மக்கள் தொகையும் மிகவும் குறைவு. எனவே சொற்களும்
குறைவு.

சங்க காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் அக்கம்
பக்கமாக வாழ்ந்து வந்த மொழிகள் என்கிறார்
பொ வேல்சாமி. பகைமை ஏதுமற்ற சூழலில்
இணக்கத்துடன் திகழ்ந்தன என்கிறார் அவர். நிற்க.

பல வேற்றுமை உருபுகள் சங்க காலத்தில் இல்லை.
புலிகொல்யானை என்ற சங்க காலச் சொல்லைக் கருதுக.
புலியைக் கொன்ற யானையா?
புலி கொன்ற யானையா?
எப்படிப் பொருள் கொள்வது?

நிலவுடைமைச் சமூக அமைப்பின்போதுதான் தமிழ்
பெரும் ஏற்றம் பெற்றது. குறிப்பாக கடல் போரும்
கடல் வணிகமும் பெரும் ஏற்றத்தைத் தந்தன.
----------------------------------------------------------

மீண்டும் சொல்கிறேன்; கொண்டு என்பது வேற்றுமை
உருபு என்ற கருத்து என் சொந்தக் கருத்தன்று.
அதை நான் என் சொந்த முயற்சியில் கண்டறியவில்லை.
கொண்டு என்பதை வேற்றுமை உருபாகக் கருதியோர்
நன்னூலின் சில உரையாசிரியர்கள். நான் அல்லன்.
உரிய நன்னூல் உரைகளைப் படிக்கவும். அது கருவிப்
பொருளில் வரும் என்பது வரை இலக்கணம் செய்யப்
பட்டுள்ளது. எனவே கொண்டு என்பது கருவி வேற்றுமையின்
(instrumental case) உருபு.

ஒடு என்ற ஒற்றை உருபை மட்டுமே கூறினார்
காப்பியர். மக்களின் பேச்சு வழக்கில் ஒடு என்ற
உருபு ஓடு என்றானது.

எடுத்து என்ற சொல்லை வேற்றுமை உருபாக
மக்கள் கையாள்கிறார்கள் என்றால், அது
பலரால் அல்லது ஒரு பிரதேசத்தில் உள்ள
குழுவினரால் வேற்றுமை உருபாகப்
பயன்படுத்தப் படுகிறது என்றால்,
அதை உறுப்பாக ஏற்கலாமா கூடாதா என்பது
பற்றி தமிழறிஞர் குழாம் முடிவு செய்யும்.
இது தனியொருவர் முடிவு செய்யும் விஷயமன்று.

ஏட்டிக்குப் போட்டியாக ஏதேனும் சொல்ல முற்படுவது
தமிழுக்குப் பயன் சேர்க்காது.

சரி, இயன்றவரை தொடருவோம்.

நம்முடைய விவாதங்களைத் தனியாக வைத்துக்
கொள்வது நல்லது என்று எனக்குப் படுகிறது.
12 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காகவும்
பிழை திருத்துவோர் (proof readers), ஊடகங்களின்
செய்தி அறிவிப்பாளர் மற்றும் செய்தி எழுதுவோர்
ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க
இப்பகுதி ஆரம்பிக்கப் பட்டது.

இதில் உங்களின் புரிதலுக்காகச் சொல்லப்பட்ட
பல்வேறு விஷயங்களை நான் மாணவர்களுக்குச்
சொல்வதில்லை. சான்றாக, கொண்டு என்பது
மூன்றாம் வேற்றுமை உருபாக ஏற்கப் பட்டு
இருக்கிறது என்பது எம் ஏ வகுப்பு மாணவர்களுக்கு
ஏற்றது. தொல்காப்பியமே முதுகலைப் படிப்புக்கான
பாடம்தானே!

எனவே 12ஆம் வகுப்பின் பாடத்திட்டத்துக்கு
அப்பாற்பட்ட இலக்கண விஷயங்களை இங்கு
விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லதே என்று
எனக்குப் படுகிறது. தனிக்குழுவில் விவாதிக்கலாம்.

ஐயா,
கைத்தல நிறைகனி என்ற திருப்புகழ் காப்புச்
செய்யுளில், மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
என்பார் அருணகிரிநாதர். மலர்கொடு = மலர் கொண்டு.
கொடு என்பது கொண்டு என்பதன் இடைக்குறை.

ஆக, கொண்டு என்ற சொல் முழுவதாகவும்
இடைக்குறையாகவும் பல நூற்றாண்டுகளாகப்
பயன்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டின் சில
பகுதிகளில் வாழும் மக்கள் கொண்டு என்ற சொல்லை
வேற்றுமை உருபாக, கருவிப் பொருளில்
பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மை
கண்டறியப்பட்டது. எனவே இலக்கண நூலார்
கொண்டு என்பதனை வேற்றுமை உருபாகக்
கருதி இலக்கணம் செய்துள்ளனர்.

இவ்வாறு இலக்கணம் செய்தது நானோ நீங்களோ
இல்லை. மக்களே எஜமானர்கள் என்ற கருத்தின்படி,
இலக்கணம் செய்யப் பட்டுள்ளது. இதில் வருந்துவதற்கு
என்ன உள்ளது?

இன்று கல்லூரி மாணவர்கள் எத்தனை எத்தனை
புதிய சொற்களைப் புதிய பொருளில் ஆள்கின்றனர்!
அங்கு போய் அவர்களின் நடுவே நின்ற் கொண்டு
அது சரியில்லை என்று நம்மால் பேச முடியுமா?
முடியாதல்லவா!

நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். அவர்களின்
பேச்சுக்கு நாம் இலக்கணம் செய்ய வேண்டும்.
அவ்வளவுதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக