வெள்ளி, 5 ஜூலை, 2019

புவி வெப்பம் அடைதலைத் தடுக்காமல் வாழ்வு இல்லை!
---------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-----------------------------------------------------------------------------
இந்தியச் சாலைகளில் இனி பெட்ரோல் டீசலால் இயங்கும்
வாகனங்கள் ஓடாது என்றும் இந்த நிலை 2030ல்
செயல்பாட்டுக்கு வரக்கூடும் என்றும் இந்திய அரசின் நிதி ஆயோக்
அமைப்பு தெரிவித்துள்ளது. முதலில் ஆட்டோ போன்ற மூன்று
சக்கர வாகனங்களை 2025க்குள் அகற்றி விட்டு, 2030க்குள்
இரு சக்கர வாகனங்களை அகற்றுவது பற்றி அரசு திட்டமிட்டு
வருவதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. இவை அனைத்தும்
மின்சாரத்தால் இயங்க வைக்கப்படும்.

இவ்வாறு பெட்ரோல் டீசல் வாகனங்களை முழுவதுமாக அகற்றி விட்டு
அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்ற
அரசின் கொள்கை முடிவுக்குக் காரணம் என்ன? அவை சுற்றுச்
சூழலை, வளிமண்டலத்தை வெகுவாக மாசுபடுத்தி புவியை வெப்பம்
அடையச் செய்கின்றன என்னும் ஒரே காரணம்தான்.

புவி வெப்பமடைதல் (Global Warming) என்பது ஆய்வரங்குகளில்
அலசப்படும் அறிவியலாளர்களின் கல்விப்புலத்து நிகழ்ச்சி நிரலாக
(an agenda of mere academic interest) இனிமேலும் தொடர இயலாது.
அது தலைவாசலில் காத்திருக்கும் ஆபத்தாக மாறி விட்டது.
புவி வெப்பமுறுவது போர்க்கால அடிப்படையில் தடுக்கப்
படாவிட்டால் நாம் வாழும் இந்த பூமி இந்த நூற்றாண்டின்
இறுதிக்குள் வாழத தகுதியற்றதாக மாறிவிடும். உலக நாடுகளின்
அரசுகள் அனைத்தும் இந்த உண்மையை உணர்ந்து தீவிரமான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்
அடையாளம்தான் இந்திய அரசு பெட்ரோல் டீசல் வாகனங்களை
அகற்றி விட்டு, மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை
மட்டுமே சாலையில் அனுமதிக்க எடுத்த முடிவு.

புவி வெப்பமுறுதலைத் தடுத்தல் என்பது ஊர் கூடித் தேர்
இழுக்கும் முயற்சியாகும். அரசின் கடமை என்பதோடு
நின்று விடாமல், மக்களும் தம் பொறுப்புணர்ந்து
இது குறித்த போதிய விழிப்புணர்வு பெறுதல் வேண்டும்.


பூமியின் வெப்பம் எவ்வளவு?
-------------------------------------------
பூமியின் மேற்பரப்பில்தான் (surface) நாம் வாழ்கிறோம்.
பூமி சூடாவது அல்லது புவி வெப்பம் அடைவது
என்று பேசுகையில் நாம் பூமியின் மேற்பரப்பின்
வெப்பநிலை பற்றித்தான் பேசுகிறோம். பூமியின் உட்பகுதியின்
(inner core) வெப்பநிலை சராசரியாக 5500 டிகிரி செல்சியஸ் ஆகும்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது
அடுத்தடுத்து நெருக்கமாகக் குண்டூசிகளைக் குத்தி நிறுத்துங்கள்.
குண்டூசி குத்தப்பட்ட பழம் போன்றுதான் இந்த
பூமியில் நாம் வாழ்கிறோம். குத்தப்பட்ட குண்டூசிகள்
ஆரஞ்சுப் பழத்தின் தோலைத் தாண்டி உள்ளே செல்வதில்லை.
அது போலவே பூமியின் மேற்பரப்பில்தான் நாம் வாழ்கிறோம்.

எனவே பூமியின் வெப்பம் என்று எதைக் கூறுகிறோம்? பூமியின்
மேற்பரப்பில் உள்ள கடல்கள் ஆறுகளின் நீரின் வெப்பம்,
கடற்காற்று, பருவக்காற்று  உள்ளிட்ட காற்றின் வெப்பம்
 துருவப் பகுதிகளில் உள்ள உறைபனி மற்றும் உருகும் பனியின்
வெப்பம் ஆகியவை அடங்கிய புவியின் சராசரி வெப்பம்
குறிப்பிடப் படுகிறது.

முதலில் பூமியின் தற்போதைய வெப்பம் எவ்வளவு என்று
தெரிந்து கொள்வோம். பூமி முழுவதும் ஒரு சீராக வெப்பம்
நிலவுவதில்லை. நிலநடுக்கோட்டை (equator) ஒட்டியுள்ள
இந்தியா போன்ற நாடுகளின் வெப்பம் வேறு; ஐரோப்பிய
நாடுகளின் வெப்பம் வேறு; துருவப் பகுதிகளின் வெப்பம்
வேறு. எனவே பூமியின் சராசரி வெப்பமே (mean global temperature)
கணக்கில் கொள்ளப் படுகிறது. ஒரு தோராய மதிப்பீட்டின்படி,
பூமியின் சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் என்று
எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு புரிதலுக்காக மட்டுமே.
இன்று (2019 ஜூலையில்) பூமியின் வெப்பம் எவ்வளவு என்று
துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டுமெனில், ஐநா சபையின்
பருவநிலைக்கான அமைப்பின் (IPCC) அட்டவணையைப்
பார்க்க வேண்டும்.

உலக நாடுகள் ஒன்றிணைந்து ஐநா சபையின் முன்முயற்சியில்
புவி வெப்பம் அடைதலைத் தடுக்க ஓர் அமைப்பை நிறுவி உள்ளன.
IPCC (Inter governmental Panel on Climate Change).என்று அதற்குப் பெயர்.

இயற்கைக் காரணங்கள்:
-----------------------------------------
புவி வெப்பமடைதலில் இயற்கையின் பங்கும் உண்டு.
இயற்கை நிகழ்வுகளின் காரணமாக புவியின் வெப்பம்
அதிகரித்தலும் குறைதலும் உண்டு. குறும் பனியுகம்
(little ice age) எனப்படும் 1300-1800 காலக்கட்டத்தின் ஐந்து
நூற்றாண்டுகளில் புவி குளிர்ச்சி அடைந்தது.

பூமியில் நிறைய எரிமலைகள் உண்டு. இவை அவ்வப்போது
வெடிக்கும். எரிமலை வெடிப்புகளின்போது,வளிமண்டலத்தின் உட்பகுதிக்குள் ஆழமாகச் செல்லும் வெடிப்புத் துகள்கள்
வானத்தை அடர்த்தியான கரும்புகையால் மூடிவிடும்.
இதனால் சூரியனில் இருந்து பூமிக்கு வரும் அதிக ஆற்றல்கொண்ட
வெப்பம்  தடுக்கப் படுகிறது. கரும்புகை மூட்டம் மறைந்த பிறகே  கதிர்கள் பூமிக்கு வர இயலும். இவ்வாறு சூரிய வெப்பம் தடுக்கப்பட்டு
தற்காலிகமாக பூமி குளிர்ச்சி அடைகிறது.

இதற்கு மாறாக, எல்நினோ தெற்கு நீரோட்டம்
(El Nino Southern Oscillation) புவியின் வெப்பத்தை அதிகரித்து விடுகிறது.
இந்நீரோட்டம் வளிமண்டலத்துக்கும் கடலுக்கும் இடையில்
வெப்பத்தைக் கடத்துகிறது. இதனால் ஆண்டுதோறும்
குறிப்பிடத்தக்க அளவில் புவியின் வெப்பம் உயர்கிறது.
இவ்வாறு வெப்பம் அதிகரிப்பதும் குறைவதுமாக இயற்கையானது
புவி வெப்பத்தில் ஒரு சமநிலையைப் பேணி வந்திருக்கிறது.

இந்த இயற்கைக் காரணங்களைத் தவிர்த்து விட்டு, புவி வெப்பம் அடைந்ததற்கான  பெருங்காரணமாக இருக்கும் மனிதச்
செயல்பாடுகளையே புவி வெப்பமடைதல் (global warming)
என்ற பொருளில் கணக்கில் கொள்கிறோம். எரிமலை வெடிப்பதையும்
பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல் நினோ நீரோட்டத்தையும்
மனித முயற்சியால் இன்று தடுக்க இயலாது. ஆனால் மனிதனால்
அதிகரித்த வெப்பத்தை மனிதனால் குறைக்க முடியும்.
புவி வெப்பமடைதலில் குற்றவாளி மனிதனே. எனவே
முன்பு செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்ய
வேண்டியதும் மனிதனே.   

வெப்பத்தின் காரணம் தொழிற்புரட்சியே!
--------------------------------------------------------------------
புவி வெப்பம் அடைவது எப்போது தொடங்கியது?
1750ல் தொழிற்புரட்சி தொடங்கியபோதே புவி வெப்பம்
அடைவதும் தொடங்கி விட்டது.. ஒரு நூற்றாண்டு காலம்
தொழிற்புரட்சி நீடித்தது. அதன் விளைவாக புவியின் வெப்பம்
அதிகரித்து விட்டது.

தொழிற்புரட்சிக்கு முன்பு இந்த பூமியின்
வெப்பநிலை எவ்வளவு இருந்ததோ (pre industrial level),
அதை ஒரு குறிப்புச் சட்டகமாக (reference temperature)
உலக நாடுகளின் பருவநிலைக்கான அமைப்பு (IPCC)
எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வெப்பநிலையை விட
2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் அது பூமியில்
மனித வாழ்வுக்கு முடிவுரை எழுதி விடும் என்று IPCC கருதுகிறது.
ஆக, 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த
உலகத்தின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

1880க்கும் 2012க்கும் இடையிலான 132 ஆண்டுகளில்,
புவியின் வெப்பம் தொழிற்புரட்சிக்கு முன்பிருந்ததை விட
0.85 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருப்பதாக IPCCயின்
ஒரு மதிப்பீடு கூறுகிறது.

தொழிற்புரட்சிக்கு முன் இருந்த பூமியின் வெப்பநிலை என்ன?
இதை நிர்ணயிப்பதில் வானிலை வல்லுநர்களிடையே
ஒத்த கருத்து இல்லை. வெவ்வேறு மாதிரிகளில் (models)
வெவ்வேறு ஆண்டுகள் குறிப்புப் புள்ளிகளாக (reference point)
எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

எனவே ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு
பின்வரும் மதிப்பீட்டை நாம் கருத்தில் கொள்ளலாம்.
தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த வெப்பநிலை
(pre industrial temperature) = 14.15 டிகிரி செல்சியஸ்.
அதன் பிறகு அதிகரித்துள்ள வெப்பநிலை = 0.85 டிகிரி செல்சியஸ்.
பூமியின் தற்போதைய வெப்பநிலை =  15 டிகிரி செல்சியஸ்.
மேற்கூறிய மதிப்பீடு தோராயமானதும் ஒரு புரிதலை
ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டுச் செய்யப்படுவதும்
என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

புவி வெப்பமடைதல் குறித்து பல்வேறு கோட்பாட்டு
மாதிரிகளை (theoretical models) உலகின் அறிவியலாளர்கள்
உருவாக்கி உள்ளனர். இவற்றில் உலக நாடுகளின் அரசுகள்
அனைத்தும் ஒரு பொதுக்கருத்தின்  (consensus) அடிப்படையில்
ஏற்றுக் கொண்டிருக்கும் IPCC அமைப்பு பரிந்துரைக்கும் கோட்பாட்டு
மாதிரியை (theoretical model) பின்பற்றியே இக்கட்டுரை
எழுதப் பட்டுள்ளது.

வெப்பமடைதலின் அடையாளங்கள்!
-----------------------------------------------------------
புவி  வெப்பமடைதல் என்பதே வெறும் புரளிதான் என்று
கூறும் சதிக் கோட்பாடுகள் (conspiracy theories) அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் நிறையவே உள்ளன. எனினும் ஏற்கத்தக்கதும்
நிரூபிக்கப் பட்டதுமான அறிவியல் சான்றுகளும் தடயங்களும்
புவியின் வெப்பம் அபாயகரமான வேகத்தில் அதிகரித்துக்
கொண்டிருப்பதை உறுதிப் படுத்துகின்றன. இவை
சதிக் கோட்பாடுகளைப் புறந்தள்ளுகின்றன.

உலகெங்கும் பெருங்கடல்களின் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இதன் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
1901க்கும் 2010க்கும் இடைப்பட்ட 110 ஆண்டுகளின் உலகின்
சராசரி கடல் மட்டம் 19 செமீ உயர்ந்துள்ளது. 2065ல்
கடல்மட்டம் 24 செமீ  முதல் 30 செமீ வரை அதிகரிக்கும் என்றும்
2100ல் 40 செமீ முதல் 63 செமீ வரை அதிகரிக்கும் என்றும் ஒரு
கணிப்பு கூறுகிறது. இந்தக் கணிப்பு 1986 முதல் 2005 வரையிலான
20 ஆண்டுகளை குறிப்புப் புள்ளியாக எடுத்துக் கொண்டு
மேற்கொள்ளப்பட்ட கணிப்பாகும்.

அமேசானின் மழைக்காடுகளும் ஆர்ட்டிக் பகுதியின்
துந்திரப் பிரதேசம் என்னும் மரங்களற்ற பெருவெளியும்
தொடர்ந்து வெப்பமடைந்து கொண்டே வருகின்றன.
இவை ஒரு முட்டு நிலையை (threshold level) விரைவில்
அடைந்து விடும் என்று தோன்றுகிறது.

பாதிப்புகள் என்னென்ன?
---------------------------------------
சென்னை நகரம் கடல் மட்டத்துக்கு மேல் 20 அடி உயரத்தில்
உள்ளது.தூத்துக்குடி 13 அடி உயரத்தில் மட்டுமே உள்ளது
(elevation above MSL Mean Sea Level). புவி வெப்பம் காரணமாக
கடல்மட்டம் அதிகரித்துக் கொண்டே போகுமானால் என்ன
நிகழும். கடல்நீர் ஊருக்குள் வந்து விடும். கடல்மட்டத்திற்கு மேல்
வெறும் 13 அடி உயரத்தில் இருக்கும் தூத்துக்குடியும்
 20 அடி உயரத்தில் இருக்கும் சென்னையும் தப்ப முடியுமா
என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். புவி வெப்பம்
அடைவதன் முதல் பலியாக உலகெங்கும் உள்ள கடற்கரை
நகரங்களும் ஊர்களும் இருக்கும்.

புவி வெப்பமாதலுக்கும் பருவநிலைக்கும் நேரடியான
தொடர்பு உண்டு. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க
தாறுமாறான பருவநிலை மாற்றங்கள்
நிகழும். இவற்றால் உணவு தானிய உற்பத்தி உள்ளிட்ட
வேளாண்மை உற்பத்தி பெரும் பாதிப்படையும். அனல் அலைகள்
(heat waves) அடிக்கடி ஏற்படும். வறண்ட பிரதேசம் மேலும்
வறட்சி அடைவதும் மழைப்பிரதேசம் மேலும் அதிகமான
மழைப்பொழிவுக்கு இலக்காகி வெள்ளச் சேதத்திற்கு இலக்காவதும்
நடக்கக் கூடும். சுருங்கக் கூறின், மனித குலம் உயிர்வாழ்வதற்குத்
தவிக்கும் நிலை (existential crisis) ஏற்படும்.

புவி எப்படி வெப்பம் அடைகிறது?
----------------------------------------------------
பூமியை ஒரு கனத்த போர்வை போல மூடிக்கொண்டு இருக்கும்
வளிமண்டலம் (atmosphere) இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை..
இந்த வளிமண்டலம்தான் சூரியனில் இருந்து வரும்
தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து நம்மைப்
பாதுகாக்கிறது. நமது வளிமண்டலம் பல அடுக்குகளாக
(layer) உள்ளது.

வளிமண்டலத்தில் பின்வரும் வாயுக்கள் உள்ளன.
நைட்ரஜன் = 78 சதம்.
ஆக்சிஜன் = 21 சதம்.
இவை இரண்டும் சேர்ந்தே 99 சதம் ஆகி விடுகிறது.
ஏனைய வாயுக்கள் மீதி ஒரு சதம் உள்ளன.

பசுங்குடில் வாயுக்கள்: (Green house gases)
------------------------------------------------------------
எஞ்சி இருக்கும் மீதி ஒரு சதம் வாயுக்களில் பின்வரும் வாயுக்கள்
பசுங்குடில் வாயுக்கள் எனப்படுகின்றன.
1. கார்பன் டை ஆக்ஸைடு CO2
2. மீத்தேன் CH4
3. நைட்ரஸ் ஆக்ஸைடு N2O
4.ஓசோன் O3
5. க்ளோரோ ஃபுளோரா கார்பன் CFC
6. ஹைட்ரொ ஃபுளோரா கார்பன் HFC
7. நீர்த்திவலைகள் (water vapour).

பசுங்குடில் வாயுக்கள் எவ்வாறு புவி வெப்பத்தை அதிகரிக்கின்றன?
பூமியில் அனல் மின் நிலையங்களாலும், ஹைட்ரோ கார்பன்
எரிபொருளைப் பயன்படுத்துவதாலும் இன்னும் பல்வேறு
காரணிகளாலும் வெப்பம் உருவாகிறது. இப்படி உருவாகும்
வெப்பமானது பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி
அண்ட வெளிக்குச் சென்று விட வேண்டும். இதுதான்
இயற்கை நிகழ்வு.

ஆனால் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு
போன்ற பசுங்குடில் வாயுக்கள், பூமியில் உருவான வெப்பத்தை
அண்ட வெளிக்குச் செல்ல விடாமல் தடுத்து வளிமண்டலத்திலேயே
தக்க வைத்துக் கொள்கின்றன. வளிமண்டலத்தில் தங்கிய
வெப்பத்தை பூமியை நோக்கி உமிழ்கின்றன. இதனால் பூமி
வெப்பம் அடைகிறது.

மொத்தமுள்ள பசுங்குடில் வாயுக்களில், அதிக அளவு இருப்பது,
அதாவது மூன்றில் இரண்டு பங்கு இருப்பது கார்பன் டை ஆக்சைடுதான். எனவே  இப்பசுங்குடில் வாயுக்களில் புவிவெப்பம் அடைதலுக்குப்
பெரிதும் காரணமாக இருப்பதும் இதுவே.

கார்பன் டை ஆக்ஸைடு உலகம் முழுவதும் பெருமளவு பயன்படுத்தப் படும்
எரிபொருள். பெட்ரோல் டீசல் போன்றவை ஹைட்ரோ
கார்பன்கள் ஆகும். கார்பனை எரிக்கும் போதெல்லாம் கார்பன் டை
ஆக்ஸைடு வரும். இது வளிமண்டலத்தில் சென்று தங்கி
புவியை வெப்பமடையச் செய்யும்.

மனிதர்கள் மட்டுமல்ல, அஃறிணை உயிர்களான மாடுகள் போன்ற கால்நடைகளும் புவி வெப்பத்திற்குக் காரணமாக
அமைகின்றன. மாடுகள் அசை போடும்போது ஏப்பம்
விடுகின்றன. அப்போது மீத்தேன் வாயு (CH4) வெளியிடப்
படுகிறது. இந்தியாவில் சுமார் 30 கோடி மாடுகள் உள்ளிட்ட
கால்நடைகள் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. எனவே
மாடுகளின் ஏப்பம் மூலமாக வெளியாகும் மீத்தேன் வாயு
புவியின்  வெப்பத்தை குறிப்பிட்ட அளவு அதிகரிக்கத்தான்
செய்கிறது.

கார்பன் டை ஆக்சைடின் அளவு!
---------------------------------------------------
வளிமண்டலத்தில் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு
இருக்கலாம்? இதை ppm என்ற யூனிட்டால் அளப்பார்கள்.
(ppm = part per million பத்து லட்சத்தில் ஒரு பங்கு).

தற்போது ஜூலை 2019ல் வளிமண்டலத்தில் கார்பன் டை
ஆக்ஸைடு 413.76 ppm by volume உள்ளது.
2013ஆம் ஆண்டிலேயே வளிமண்டலத்தில் கார்பன்
டை ஆக்ஸைடு 400 ppm ஆகி விட்டது.
இதைக் குறைத்து 350 ppm என்ற அளவுக்குக் கொண்டு
வர வேண்டும்.

413.76 ppm என்பதும், 400 ppm என்பதும் ஆபத்தானவை (dangerous level)
350 ppm என்பது பாதுகாப்பானது (safety level).

எனவே 400ஐத் தாண்டி நிற்கும் கார்பன் டை ஆக்ஸைடை
350க்கு இறக்குவது உலக நாடுகளின் கடமை.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கடமை.

உலகில் பல்வேறு இடங்களில் 350 Club என்ற பெயரில்
மன்றங்களை அமைத்து கார்பன் டை ஆக்ஸைடின்
அளவை 350க்குக் கீழிறக்குவது பற்றி மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

1.5 டிகிரி செல்சியஸ் என்பதே பேராபத்து!
----------------------------------------------------------------
2018 அக்டோபரில் IPCC அமைப்பானது ஒரு சிறப்பு
அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, புவியின்
வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே
எல்லாத் தீய விளைவுகளும் ஏற்பட்டு விடும் என்று
கணிக்கப் பட்டுள்ளது. 2 டிகிரி செல்சியசாக உயரும்போது
ஏற்படக்கூடிய தீய விளைவுகள் 1.5 டிகிரி செல்சியசாக
உயரும்போதே ஏற்படுகின்றன என்றால் புவியின் வெப்பம்
ஏற்கனவே கணித்ததை விட, அதிகரித்த வேகத்தில்
உயர்ந்து கொண்டு வருகிறது என்று பொருள்.

எனவேதான் உலக நாடுகளின் அரசுகள் ஹைட்ரோ கார்பன்
எரிபொருட்களைப் பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு
முன்னுரிமை கொடுக்கின்றன. கூடவே உலகம் முழுவதும்
உள்ள அனல் மின்நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
சூழலை மாசு படுத்தாத விதத்தில் மின்சாரம் உற்பத்தி
செய்யப்பட வேண்டும். இது மனித குலத்தின் அடுத்த
உடனடி இலக்காக இருக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன்
எரிபொருளும் அனல் மின்சாரமும் இந்த பூமியில் இருந்தே
அகற்றப்பட்டு விடுமென்றால், புவியின் வெப்பம்
வெகுவாகக் குறைந்து விடும்.
**********************************************************     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக