சனி, 6 ஜூலை, 2019

பசுத்தோல் போர்த்த புலி இருக்கிறது!
ஆனால் புலித்தோல் போர்த்த பசு இருக்கிறதா?
----------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------------------
பசுத்தோல் போர்த்த புலியைப் பற்றி மக்கள் அனைவரும்
அறிவார்கள். குழந்தைகளுக்குக் கூட இக்கதை
சொல்லப் பட்டுள்ளது.

ஆனால் புலித்தோல் போர்த்த பசு பற்றி எத்தனை பேருக்குத்
தெரியும்? ஒரு பசு மாடு புலித்தோலைப் போர்த்திக் கொண்டு
மந்தையிலோ வயற்காட்டிலோ திரியுமா?

உண்மையில், இந்த உலகில் புலித்தோல் போர்த்த பசு
இருக்கிறதா?

ஆம், இருக்கிறது என்கிறார் கலைஞர் மு கருணாநிதி.

எப்படி ஐயா இருக்கும் என்று கலைஞரை மடக்கினர்
சிலர். அவரோ வள்ளுவரை ஆதாரம் காட்டி
எல்லோர் வாயையும் அடைத்து விட்டார்.

வள்ளுவர் காலத்திலும் பல பசுக்கள் புலித்தோலைப்
போர்த்துக் கொண்டு ஊரை ஏமாற்றி இருக்கின்றன.
நம்முடைய காலத்திலும் நிறையப் பசுக்கள்
புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு
புலிவேடமிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றன.

வைகோ ஒரு பசு. ஆனால் அவர் எப்போதும்
போர்த்தி இருப்பது ஒரு புலித்தோல். இவர்களை
வள்ளுவர் கண்டிக்கிறார். இக்குறளைப் படியுங்கள்.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலித்தோல் போர்த்து மேய்ந் தற்று.
(சந்தி பிரித்து எழுதப் பட்டுள்ளது).

(வலியில் = வலி இல் = வலிமை இல்லாத
வல்லுருவம் = வல்+ உருவம் = வலிமையான தோற்றம்
பெற்றம் = பசு) 

வலிமை இல்லாத ஒருவன், தன்னை மாபெரும் வீரனாகக்
காட்டிக் கொள்வது பசுவானது புலியின் தோலைப்
போர்த்திக் கொண்டு திரிவது போன்றது.

பெற்றம் என்ற சொல்லின் பொருள் ஆண்டாளைப்
படித்தோர்க்குத் தெரியும்.

"பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் ஆகாது"
(ஆண்டாள் திருப்பாவை)

புலித்தோல் போர்த்து மேய்ந்த பசு என்ற தலைப்பில்
இக்குறளை விளக்கி கலைஞர் ஒரு கட்டுரை
எழுதி உள்ளார். அது ஒன்பதாம் வகுப்புக்கு
(பொதுத்தமிழ்) முன்பு பாடமாக இருந்தது.

எத்தனை பேர் கலைஞர் எழுதிய இக்கட்டுரையை
பாடப்புத்தகத்தில் இருந்ததைப் படித்து
இருப்பீர்கள்?

படியுங்கள்! படிக்காமல் தமிழ் எப்படி வளரும்?
****************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக