சனி, 4 மார்ச், 2017

எடுக்கலாம்! எடுக்கலாம்!
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கலாம்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) குப்பை என்றால் மட்கத்தக்க குப்பை
(bio degradable waste) என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அதில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். எடுக்கப்பட்டு
வருகிறது.

2) காய்கறிக் குப்பை, இறைச்சிக் குப்பை, காகிதக்
குப்பை, துணிக்குப்பை என்னும் நான்கில்
முன்னிரண்டும் விரைவில் மட்கும். துணிக்குப்பை
மட்குவதற்கு அதிக காலம் பிடிக்கும்.

3) தமிழ்நாட்டில் சேரும் குப்பையில் கணிசமான
அளவு பிளாஸ்டிக் குப்பை, எலக்ட்ரானிக் குப்பை,
செல்போன் குப்பை ஆகியவை. இவை மட்குவதில்லை.
அதாவது இவற்றின் அரை ஆயுள் (half life) மிக அதிகம்.

4) பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் குப்பையில்
இருந்து நஞ்சு தயாரிக்கலாம்; மின்சாரம்
தயாரிக்க முடியாது.

5) CBSE 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில், சாக்கடை
நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பரிசோதனை
வகுப்பறைகளில் நடத்தப படுகிறது.

6) தமிழ்நாட்டில் குப்பைகளைக் கையாளுவது
பெண்களின் பொறுப்பில் வருகிறது. மட்கும் குப்பை,
மட்காத குப்பை என்று பிரித்து,  தனித்தனியாக
குப்பைத் தொட்டியில் போடுமாறு மாநகராட்சிகள்
தொடர்ந்து வலியுறுத்துகின்றன. என்றாலும்
இந்த அறிவுரை பின்பற்றப் படுவதில்லை.

7) குப்பை மின்சாரம் என்பது அனல் மின்சாரம்
போன்றதே. அனல் மின்சாரத்தில் நிலக்கரியை
எரித்து மின்சாரம் பெறுகிறோம். அதுபோல
குப்பையை எரித்து மின்சாரம் பெறலாம்.

8) குப்பையை முற்றிலுமாக எரிக்க வேண்டும்
(complete burning). அதாவது 1000 டிகிரி செல்ஸியஸ்
அல்லது அதற்கும் மேலான வெப்பத்தில் எரிக்க
வேண்டும். இத்தகைய எரித்தல் incineration எனப்படும்.
அப்படி எரித்தால்தான் டர்பைனைச் சுழற்றி
மின்சாரம் பெற முடியும்.

9) இவ்வாறு எரிக்கும்போது கிடைக்கிற சாம்பலைச்
சேமித்து வைக்க பெரும் ஏக்கர் பரப்பிலான
சாம்பல் கிடங்கு வேண்டும். குப்பைகளை சேகரிக்க
பெருமளவு இடம் வேண்டும்.

10) சுருங்கக் கூறின், அனல் மின் நிலையம் போன்றதே
குப்பை மின் நிலையமும். பெருமளவு சூழலை
மாசு படுத்தும்.

11) Grid connectivity இல்லாமல், off the grid என்ற அளவில் ,
சிறிய அளவில் குப்பை மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
பேரளவிலான உற்பத்தி என்பது பேரளவிலான
சூழல் மாசை ஏற்படுத்தும்.

12) ஹைட்ரோ கார்பனுக்கு மாற்றாக உள்ள
மின் உற்பத்திதான் இன்றைய உலகின் தேவை;
இன்றைய இந்தியாவின் தேவை. குப்பை மின்சாரம்
என்பது ஹைட்ரோ கார்பன் மின்சாரமே. இதைத்
தவிர்க்க முனைவதே சிறந்த வழி. என்றாலும்
இந்தியாவின் ENERGY MIXஇல் குப்பை மின்சாரமும்
இடம் பெறுவதில் தவறில்லை.

13) குப்பை மின்சார உற்பத்தியில் சுவீடன் நாடு
முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிலும் இது
உண்டு. ஏன், இந்தியாவில் மராட்டிய மாநிலம்
சோலாப்பூரில் குப்பை மின்சாரம் எடுக்கப்பட்டு
வருகிறது.

14) இந்திய எரிசக்தித் தேவையின் ஒரு மிகச் சிறு
பகுதியை மட்டுமே குப்பை மின்சாரம், ஏகப்பட்ட
சூழல் சீர்கேடுகளுடன் நிறைவேற்றும். பத்தோடு
பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்ற
அளவில்தான் இது பயன்படும். எனவே குப்பை
மின்சாரம் என்பது இறுதித் தீர்வல்ல
(not a lasting solution).

15) அடுத்து குப்பையில் இருந்து மீத்தேன் எடுப்பது
பற்றியும்  பார்க்கலாம். ஒரு டன் குப்பையில் இருந்து
40 கிலோ மீத்தேன் எடுக்கலாம் என்பது குறித்து
இப்போது கருத்து எதுவும் கூற முடியாது. என்ன
தொழில்நுட்பம் என்பது பற்றி விளக்கமான தகவல்
இருந்தால்தான், தக்க தொழில்நுட்ப வல்லுநர்களால்
இது குறித்துக் கருத்துக் கூற இயலும். இது
பொத்தாம் பொதுவாகப் பேசக்கூடிய விஷயம் அல்ல.
*******************************************************************






      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக