சனி, 6 ஏப்ரல், 2019

தோழர் கார்முகில் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!
2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது
கலைப்புவாதமே தவிர மார்க்சியம் அல்ல!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) 2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது
என்ற நிலைப்பாட்டை தோழர் கார்முகில் அவர்கள்
எடுத்துள்ளார். தமது அமைப்பின் நிலைப்பாட்டை
வெட்ட வெளிச்சமாக அறிவித்து விட்டார் என்பதற்காக
கார்முகில் அவர்கள் பாராட்டுக்கு உரியவர் ஆகிறார்.

2) தமது நிலைபாட்டை கார்முகில் அவர்கள் அறிவித்து
விட்டார் என்பதில் அவரின் பங்காளிகள் ஆடிப்போனார்கள்.
ஏனெனில் காங்கிரஸ் ஆதரவு நிலைபாட்டை நோக்கி
வெகுவாக அவர்கள் நகர்ந்து வந்து விட்டார்கள்  காங்கிரஸ்
ஆதரவு நிலைபாட்டை அவர்கள் அறிவிக்கப் போகிறார்கள்
என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்குள் கார்முகில்
அவர்கள் முந்திக் கொண்டு விட்டார் என்பதுதான் அவரின்
பங்காளிகளுடைய வருத்தம்.

3) இன்று வேறு வழியின்றி தேர்தல் பாதை திருடர் பாதை
என்ற முழக்கத்தை வேண்டா வெறுப்பாகத் தங்கள்
தோளில் சுமந்து கொண்டு திரியும் அவலம் அவரின்
பங்காளிகளான மா.அ.க.வினரிடம் நீடிக்கிறது.

4) வர்க்கங்களில்  இருந்து விடுபட்ட அரசியல் கட்சிகள்
எவையும் இந்தியாவில் இல்லை; உலகம் முழுவதும்
இல்லை என்கிறது மார்க்சியம். இதன்படி பார்த்தால்
காங்கிரசும் பாஜகவும் இந்திய ஆளும் வர்க்கத்தின்
கட்சிகள்.பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகள்
அவை; பெரும் கார்ப்பொரேட் முதலாளிகளின்
கட்சிகள் அவை.

5) இந்துத்துவம் என்று எடுத்துக் கொண்டாலும், பாஜக
இந்துத்துவத்தின் ஏ டீம் (A Team); காங்கிரஸ் அதன் பீ டீம்
(B Team) என்பதுதானே உண்மை. தன்னை கவுல் பிராமணன்
என்று அழைத்துக் கொள்ளும் ராகுல் கடந்த இரண்டு
ஆண்டுகளாகவே கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறார்
என்பதைத் தினமும் கண்ணால் பார்த்துக் கொண்டுதானே
இருக்கிறார்கள் மக்கள்!

6) பாசிசம் என்று எடுத்துக் கொண்டால், அதில் காங்கிரசை
எவரேனும் மிஞ்ச முடியுமா? இந்தியாவில் நெருக்கடி
நிலையைப் பிரகடனம் செய்து 19 மாத காலம் பாசிச
ஆட்சி நடத்திய காங்கிரசின் ரெக்கார்டை எவராலும்
முறியடிக்க இயலுமா?

7) நெருக்கடி நிலையின் போது உயிர் வாழும் உரிமை
கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திரா அரசின்
தலைமை அட்டார்னி ஜெனரல் அறிவிக்கவில்லையா?
நெருக்கடி நிலையின்போது ஹேபியஸ் கார்ப்பஸ்
மனு போட முடியாது என்ற நிலை இருந்ததே, அது
தோழர் கார்முகி அவர்களுக்குத் தெரியாதா?

8) நக்சல்பாரிகளை கொத்துக் கொத்தாகப் படுகொலை
செய்ததில், மேற்கு வங்கத்தின் அன்றைய காங்கிரஸ்
முதல்வரை எவராலும் விஞ்ச முடியுமா?

9) காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே ஆட்சியில்
இருக்கும்போது ஜனநாயக மறுப்புடனும் பாசிசத்
தன்மையுடனும் செயல்படுவதும், ஆட்சியில் இல்லாமல்
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகப்
பாதுகாவலன் வேடம் தரிப்பதும் அக்கட்சிகளின்
வழக்கமான தந்திரம்தானே! இதில் என்ன புரட்சிகரம்
உள்ளது?

10) இந்தியாவில் மாநில அரசுகளை 356ஆவது பிரிவின் கீழ்
கலைத்ததில் காங்கிரசின் சாதனையை விஞ்ச முடியுமா?
ஜனநாயகக் கோமான் ஜவஹர்லால் நேரு கேரளத்தில்
ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்டின் ஆட்சியை 356ன் கீழ்
கலைத்தது முதல், இந்திரா காந்தி கலைத்த மாநில
அரசுகளின் என்ணிக்கைக்கு ஏதேனும் வரம்பு உண்டா?

11) DIR சட்டம், மிசா சட்டம், தடா சட்டம், பொடா சட்டம்,
அப்பா சட்டம் (UAPA) ஆகிய ஆள்தூக்கிச் சட்டங்களைக்
கொண்டு வந்தது யார்? கமலஹாசன் கட்சியா அல்லது
சீமானின் நாம் தமிழர் கட்சியா?

12) இந்திரா கொலையைத் தொடர்ந்து, சீக்கியர்களைக்
கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்த காங்கிரஸ் கட்சி
எவ்வாறு ஜனநாயகப் பாதுகாவலன் ஆக முடியும்?

13) கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில்
இஸ்லாமியர்களின் படுகொலை பாஜகவின் சாதனை
என்றால், டில்லியில் சீக்கியர்களின் படுகொலை காங்கிரசின்
சாதனை அல்லவா? காங்கிரஸ் பாஜக இரண்டும்
சரிசமமாக அல்லவா இருக்கின்றன? காங்கிரஸ் சீனியர்;
பாஜக ஜூனியர்! இது மட்டும்தானே வேறுபாடு!

14) காங்கிரசின் நரசிம்மராவ்தானே புதிய பொருளாதாரக்
கொள்கைகளை, LPG கொள்கைகளை இந்தியாவில்
முதன் முதலாக அறிமுகப் படுத்தினார்! அதற்குப்பின்
ஆட்சிக்கு வந்த வாஜ்பாயோ மோடியோ காங்கிரசின்
LPG கொள்கைகளை ரத்து செய்து விட்டார்களா? இல்லையே.

15) காங்கிரஸ் ஆளுவதா அல்லது பாஜக ஆளுவதா என்பது
இந்திய ஆளும் வர்க்கத்தின் கவலை. அது பாட்டாளி
வர்க்கத்தின் கவலை அல்ல!

16) பாஜக சரியில்லை என்றால் காங்கிரசை ஆட்சிக்குக்
கொண்டு வரும் வேலையைப் பாட்டாளி வர்க்கம்
செய்ய வேண்டியதில்லை. அதை இந்திய ஆளும்
வர்க்கம் செய்யும்.

17) அரசு என்பது அதாவது இந்தியாவின் மத்திய அரசு
என்பது ஒரு இழையறாத தொடர்ச்சியைக் கொண்டது.
காங்கிரசோ பாஜகவோ மாறி மாறி ஆட்சிக்கு
வந்தாலும் அரசின் தொடர்ச்சி என்பது இருந்து
கொண்டே இருக்கும். காங்கிரசுக்குப் பின் ஆட்சிக்கு
வந்த மோடி, காங்கிரசின் எந்தக் கொள்கையிலாவது
மாற்றம் செய்தாரா?

18) காங்கிரசின் நந்தன் நிலக்கேனி கொண்டு வந்த
ஆதார் திட்டத்தை, காங்கிரசின் GSTயை மோடி அப்படியே
ஏற்றுக் கொண்டு செயல்படுத்தவில்லையா?

19) ஆகவே, காங்கிரஸ் பாஜக இரண்டும் அண்ணன் தம்பிகள்.
இரண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நம்பகமான
பிரதிநிதிகள். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு இல்லை.
அவர்களுக்கு இடையில் சிற்சில முரண்பாடுகள் இருக்கலாம்.
அவை அவர்களின் சுயநலம் சார்ந்தவையே தவிர,
மக்கள் நலன் கருதிய முரண்பாடுகள் அவ்விரு
கட்சிகளுக்கும் இடையில் இல்லை. எனவே அவற்றுக்கு
இடையில் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தலாமே
என்பதெல்லாம் பேதைமை.

20) காங்கிரசை ஆதரிப்பது என்பது கம்யூனிச இயக்கத்தில்
இன்று முதன் முதலாக தோழர் கார்முகில் அவர்களால்
முன்வைக்கப் படும் ஒன்றல்ல.கார்முகிலுக்கு
முன்னோடியாக எஸ் ஏ டாங்கே இருக்கிறார்;
மொஹித் சென் இருக்கிறார். காங்கிரசை ஆதரிப்பதுதான்
கம்யூனிசம் என்றார் டாங்கே.

21) இன்று கார்முகில் கூறும் காங்கிரஸ் ஆதரவு
கார்முகிலின் மொந்தையில் உள்ள டாங்கேயின்
புளித்த கள். காங்கிரஸ் ஆதரவு நிலை எடுத்ததால்தான்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இன்று துடைத்தெறியப்
பட்டுள்ளது.

22) காங்கிரசை ஆதரிப்பதும் மார்க்சிய லெனினிய
மாவோ சிந்தனையைக் கைவிடுவதும் ஒன்றுதான்.
ஒரு புரட்சியாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய
தோழர் கார்முகில் ஒரு டாங்கேயிஸ்டாக
எதிர்ப்பரிணாமம் அடைந்துள்ளார் என்பதே உண்மை!
(தொடரும்....அடுத்து பகுதி-2.....)
********************************************************
           
 
           
     



         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக