வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஒரு வாக்குச் சாவடியில் மக்கள் EVMல் வாக்களித்துக்
கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் திடீரென
கண்ணைப் பறிக்கும் மின்னலும் பெருத்த இடியோசையும்
கேட்கின்றன. EVM மீது மின்னல் தாக்கி விடுகிறது.

இந்நிலையில் EVM வேலை செய்யுமா என்று சிலர்
கேட்கிறார்கள். இதற்கு என்ன பதில்? மின்னல் தாக்கினால்
EVM வேலை செய்யாது என்பதே ஒரே பதில்.

நமது EVMகள் இடி மின்னலால், சுனாமியால்,
பூகம்பத்தால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்
கூடியவையே..மின்னல், சுனாமியால் பாதிக்கப்
படாதவாறு EVMகள் தயாரிக்கப் படவில்லை.
அதற்கான தேவையும் இல்லை.

மின்னல் தாக்கி EVM சேதம் அடைந்தால், மழை வெள்ளம்
ஏற்பட்டால், வாக்குப் பதிவு தள்ளி வைக்கப்பட்டு
பின்னர் நடைபெறும். இதுதான் தீர்வு. 

மின்னல் தாக்கினால் EVM மட்டும்தான் சேதம் அடையும்
என்று நினைப்பது மடமை. மின்னல் தாக்கினால்
வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகளும்
ஓட்டுப்போட வந்த மக்களும் இறந்து போவார்கள்.
மின்னல் என்பது திடீரென ஏற்படும் பிரம்மாண்டமான
ESD (Electro Static Discharge). மின்சாரத்துக்கு மனிதர்கள்
என்றும் மரச்சாமான்கள் என்றும் பேதம் பார்த்து
அழிக்கத் தெரியாது; மொத்தமாக எல்லாவற்றையும்
அழித்து விடும்.    
 
கேஜ்ரிவாலின் கோமாளித்தனம்!
--------------------------------------------------
"என்னிடம் ஒரு EVMஐக் கொடுங்கள் 90 வினாடிக்குள்
(within 90 seconds) அதை ஹேக் (hack) செய்து காட்டுகிறேன்"
என்று சவால் விட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
சவால் விட்ட தேதி மே 10, 2017.

பத்தே நாட்களுக்குள் கேஜ்ரிவாலின் சவாலை இந்தியத்
தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. ஏற்றுக் கொண்ட
தேதி: 20 மே 2017. சவாலுக்கான நாளாக ஜூன் 3, 2017
தேதியை  அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

ஆனால் சொன்னபடி வந்து EVMஐ ஹேக் செய்து
காட்டினாரா கேஜ்ரிவால்? இல்லை. வரவில்லை.
தானும் வரவில்லை; தன் கட்சியின் சார்பாக
ஆட்களையும் அனுப்பவில்லை.

90 வினாடிக்குள் மட்டுமல்ல 90 நிமிடம் ஆனாலும்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMகளை
ஹேக் பண்ண முடியாது என்ற உண்மை கேஜ்ரிவாலுக்கு
நன்கு தெரியும். சவால் விடுவதெல்லாம் மக்களை
ஏமாற்றத்தான்.

கொசு விரட்டும் மட்டையைக் கொண்டு
EVMஐ நாசமாக்க முடியும் என்னும் கொக்கரிப்பு!
 ----------------------------------------------------------------------------
EVM குறித்த  ஐயங்களில் பல  சிறுபிள்ளைத் தனமானவை.
இருப்பினும் இவற்றுக்கும் பதிலளிக்க வேண்டியது நம்
கடமை ஆகிறது.

ஏனெனில் A doubt is a doubt is a doubt which is to be clarified.
ஆனால் அறிவியலை எதிர்க்கும் பிற்போக்காளர்கள்
பல்வேறு விபரீத சிந்தனைகளை முன்வைக்கிறார்கள்.

"என்ன பெரிய EVM உங்கள் EVM? கொசு விரட்டும் ஒரு
மட்டையை (mosquito bat) வைத்துக்கொண்டு உங்களின்
EVMஐ நாசப் படுத்தி விட முடியும்; ஓட்டுக்களை எண்ண
விடாமல் ஆக்க முடியும்" என்றும் சில விபரீத எண்ணங்கள்
முன்வைக்கப் படுகின்றன.

"சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்
வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்"
என்றார் அறிஞர் அண்ணா. "விபரீதக் கோட்பாடு"
என்று நாவல் எழுதினார் சுஜாதா.

விபரீத ஆசாமிகள் கூறுவதைப் போல, ஒரு கொசு மட்டையை
(MOSQUITO BAT) வைத்துக் கொண்டு EVMன் செயல்பாட்டை
நிறுத்தி விட முடியுமா? முடியாது; முடியவே முடியாது.

EVMகளை வடிவமைத்தவர்கள் நன்கு பயிற்சி பெற்ற
திறன் வாய்ந்த பொறியாளர்கள். கடுமையான
தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்குப் பிறகே
EVMகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படுகின்றன.
ஒரு கொசு மட்டையால்  வீழ்த்தப்படும் அளவுக்கு
பலவீனமான EVMகளை நம் நாட்டுப் பொறியாளர்கள்
தயாரிக்கின்றனர் என்று மனச்சிதைவு நோயாளிகள்
மட்டுமே கூற இயலும்.

மனித உழைப்பை, அதுவும் தனித்திறன் வாய்ந்த
பொறியாளர்களின் உழைப்பை இதைவிட யாரும்
கொச்சைப் படுத்த இயலாது.

தேர்தல்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கொசு விரட்டும் மட்டையை வைத்துக் கொண்டு EVMகளை
நாசமாக்க முடியும் என்று சொல்பவர்கள் ஏன் அதை
நடைமுறையில் நிரூபித்துக் காட்டக் கூடாது?
தேர்தல் நடைபெறும் ஏதேனும் ஒரு பூத்துக்குள்
சென்று, அங்கிருக்கும் EVMஐ கொசு மட்டையால் அடித்துச்
செயலிழக்க வைக்கலாமே! யார் தடுத்தார்கள்?

நாம்  ஏற்கனவே கூறியபடி, இத்தகைய கேள்விகள் யாவும்
நியாயமானவை அல்ல. இவை வீணர்களின் விதண்டா
வாதமே தவிர வேறில்லை. எனினும் இவ்வாறு விபரீதமாகச்
சிந்திப்போர் மீது  நாம் கோபம் கொள்ள வேண்டியதில்லை.
Hate the sin but not the sinner என்கிறது பைபிள். பாவத்தை
வெறுக்க வேண்டுமே தவிர பாவியை வெறுக்க
வேண்டாம் என்று இதற்குப் பொருள்.

EVM குறித்த கேள்விகளில் இயற்கையான ஐயங்கள் இல்லை.
கேள்விகளில் வன்மம் தலைவிரித்தாடுகிறது.
குரோதம் கொப்பளிக்கிறது. கண்மூடித்தனமான வெறியுடன்
கேள்விகள் எழுப்பப் படுகின்றன. இக்கேள்விகளில்
நோய்மனம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

இதன் பின்னணி என்ன? இவற்றின் ஊற்றுமூலம் (source) என்ன?
அடுத்துப் பார்ப்போம்.
---------------------------------------------------------------------------
தொடரும்
----------------------------------------------------------------------- 




  


  






   
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக