திங்கள், 8 ஏப்ரல், 2019

காங்கிரசுடன் தாலி கட்டிக் குடும்பம் நடத்துகிறது
த நா மா லெ கட்சி! (TNML)
தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்தல் முறையில்
(living together) குடித்தனம் நடத்துகிறது மாஅக (SOC)!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
நக்சல்பாரி இயக்கத்துக்கு தற்போது வயது 50. இந்த
அரை நூற்றாண்டு காலத்தில் இந்திய அரசியலில்
பாரதூரமான மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அவற்றின்
தாக்கத்தில் இருந்து மார்க்சிய லெனினியக் கட்சிகள்
தப்பிக்க இயலவில்லை.

தேர்தல் புறக்கணிப்புடன்தான் நக்சல்பாரி இயக்கம்
தொடங்கியது. கட்சி பல குழுக்களாகச் சிதறுண்டு
போனபோதிலும், அனைத்துக் குழுக்களும் தேர்தல்
புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில்தான் ஊன்றி
நின்றன.

இதில் முதன் முதலில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்
தோழர் வினோத் மிஸ்ரா. தலைமறைவுக் கட்சி என்பது
தேவையில்லை என்பது முதல் தேர்தல் பங்கேற்பு
உள்ளிட்ட பெரும் மாற்றங்களை லிபரேஷன் குழு
முதன் முதலில் முன்வைத்துச் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், தேர்தல் புறக்கணிப்பைக்
கைவிடும் இரண்டாவது கட்சியாக த நா மா லெ இருக்கிறது.
(தமிழ்நாட்டில் மட்டும் செயல்படும் கட்சிகளே இங்கு
பேசப்படுகின்றன). அடுத்து வரிசையில் நிற்கும் முதல்
கட்சியாக மாஅக (SOC) இருக்கிறது. SOC என்றால் மகஇக
என்று திருப்பூர் குணா போன்ற தோழர்கள் புரிந்து
கொள்ள வேண்டும். 

மாபெரும் நிலைபாட்டு மாற்றத்தை முன்மொழிந்து
இருக்கிறார் தோழர் கார்முகில். இதற்கான எத்தகைய
நியாயங்களை அவர் முன்வைக்கிறார் என்பது மட்டுமே
நமது கேள்வி.

தேர்தல் புறக்கணிப்பு என்பதில் இருந்து தேர்தல் பங்கேற்பு
என்ற நிலைக்கு மாறியுள்ளது த நா மா லெ என்பது
எளிய விஷயமல்ல. இது அந்தக் கட்சியை மட்டுமே
பாதிக்கும் என்று கருதுவதும் பெரும் பிழையாகும். ஒட்டு
மொத்த மார்க்சிய லெனினிய இயக்கத்தைப்
பாரதூரமாகப் பாதிக்கும் ஒரு நிலைபாட்டு மாற்றத்தை
முன்மொழிந்து விட்டு, நடப்புத் தேர்தலில் (2019) அதைச்
செயல்படுத்தவும் செய்கிற தநாமாலெ கட்சி,
தனது நிலைபாட்டு மாற்றத்திற்கான (paradigm shift)
நியாயங்கள் (justifications) என்னென்ன என்று சொல்வதற்கு
கடமைப் பட்டுள்ளது.

தேர்தல் பங்கேற்பு என்பது நடப்புத் தேர்தலோடு மட்டும்
தொடர்புடையது என்று திருப்பூர் குணா போன்ற எளிய
தோழர்கள் கருதுகிறார்கள். அதற்கு மேல் அவர்களின்
சிந்தனை நீட்சி அடைவதில்லை. அது அவர்களின்
குறையல்ல. அவர்களின் தத்துவார்த்தப் பற்றாக்குறை
அவர்களை அதற்கு மேல் சிந்திக்க அனுமதிக்காது.

தேர்தல் பங்கேற்பு என்பது காலப்போக்கில் அமைப்புக்
கட்டுமானம் மற்றும் அமைப்பு நடைமுறையின் மீதும்
தீவிரமான செல்வாக்குச் செலுத்தும். தலைமறைவுக்
கட்சி என்ற அமைப்புக் கட்டுமானம் தொடர்ந்து
நீடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். மிக எளிய தர்க்கங்களைத்
தாண்டி வேறு எதையும் சிந்திக்க இயலாதவர்களுக்கு
இதைப் புரிந்து கொள்ள இயலாமல் போகும்.

இதைப்புரிந்து கொள்ள சாரு மஜூம்தார் எந்தச் சூழலில்
தேர்தல் புறக்கணிப்பை நிலைபாடாகக் கொண்டார்
என்பதைச் சிந்திக்க வேண்டும். 70ன் பத்தாண்டுகளை
விடுதலையின் பத்தாண்டுகளாக ஆக்குவோம் என்ற
முழக்கத்தை அப்போது கட்சி கொண்டிருந்தது.
புரட்சிக்கான புறநிலைமைகள் கனிந்த ஒரு சூழலில்
நாடு இருப்பதாக கட்சி கருதியது. இதன் அடிப்படையில்தான்
1970 வேலைத்திட்டம் வகுக்கப் பட்டது.

கட்சி மெய்யாகவே தலைமறைவாக இயங்கியது. ஆயுதப்
போராட்டங்கள் நடந்தன. செந்தளங்கள் உருவாக்கப்
பட்டிருந்தன. இந்தச் சூழலில் தேர்தல் புறக்கணிப்பு என்பது
மிகவும் இயற்கையான ஒரு உத்தி ஆகும்.

1970களின் இறுதியில் நடைபெற்ற இக்கட்டுரை ஆசிரியர்
பங்கேற்ற ஒரு திடீர் ஊர்வலத்தை இத்தருணத்தில் சுட்டிக்
காட்டுவது பொருந்தும். நாங்களெல்லாம் சென்னை
தி நகர் ரங்கநாதன் தெருவில் ஆங்காங்கே நின்று
கொண்டிருந்தோம். திடீரென பலத்த ஓசையுடன் ஒரு
பட்டாசு வெடித்தது. அதுதான் எங்களுக்கான சிக்னல்.

உடனே நாங்களெல்லாம் ஊர்வலத்திற்காக
எங்களை அணிசேர்த்துக் கொண்டோம்.ஊர்வலம் கிளம்பியது
காவல் துறையின் அனுமதியைப் பெறாத ஊர்வலம் அது.
அமெரிக்கத் தூதரகம் நோக்கிச் செல்வதாக முடிவு.
பத்து நிமிடத்தில் தகவல் கிடைத்து போலிஸ் வந்து
விட்டது. பெரும் தேர்தல் எதிர்ப்பு முழங்கங்களுடன்
ஊர்வலம் முன்னேறியது. ஊர்வலத்தில் பங்கேற்ற
ஆயுதப் படைக்குழுவைச் சேர்ந்த சில தோழர்கள்
ஆயுதம் (துப்பாக்கி) வைத்திருந்தனர் இதற்குள் தேர்தலை
எதிர்த்து கம்யூனிஸ்டுகள் ஊர்வலம் என்ற செய்தி
பரவி விட்டது.

இன்று நடைபெறுகிற எல்லா ஊர்வலங்களும் காவல்
துறையின் அனுமதியை வணங்கிக் கேட்டுப் பெற்றுக்
கொண்ட பிறகு நடைபெறும் ஊர்வலங்கள். இந்த
நிலைமைக்கும் திடீர் ஊர்வலத்தை நடத்திக் காட்டிய
அன்றைய நிலைமைக்கும் உள்ள வேறுபாட்டைப்
புரிந்து கொள்ள இயலாதவர்களால் இக்கட்டுரை
எழுப்பும் கோட்பாட்டுச் சிக்கல்களையும்
(theoretical questions) புரிந்து கொள்ள இயலாது.

சனிப்பிணம் தனியாகப் போகாது என்பதைப்போல,
தேர்தலில் பங்கேற்பு என்பது தேர்தலோடு போகாது.
அது தலைமறைவுக் கட்சி என்ற கட்டுமானத்தையும்
சுடுகாட்டுக்குக் கூட்டிச் சென்று விடும்.

மேலும் தநாமாலெ எடுத்துள்ள இந்த முடிவு தநாமாலெ
அல்லாத பிற மாலெ கட்சிகளின் மீதும் தாக்கத்தை
ஏற்படுத்தும். ஏற்கனவே ரெட் ஸ்டார் கட்சியின்
(CPI ML Red star) தாக்கம் இவ்விரு கட்சிகளின் மீதும்
(SOC, TNML) இல்லையென்று சொல்ல இயலாது. 

SOC, TNML ஆகிய இரு கட்சிகளும் ஒரு கொடியில்
பூத்த இரு மலர்கள். 1970களில் கோட்டயம் வேணு
முன்வைத்த MASS LINEஐ ஏற்றுக் கொண்டு
செயல்பட்ட கட்சிகள் இவை. இவை இரண்டுக்கும்
நக்சல்பாரிப் பாரம்பரியம் என்னும் ஆயுதப் போராட்டப்
பாரம்பரியம் கிடையாது. எனவே தேர்தல் பங்கேற்பு
என்னும் சமாதான சகவாழ்வை நோக்கி இவர்கள்
விரைவது இயற்கை. இக்கட்சிகள் annihilation எனப்படும்
அழித்தொழிப்பில் ஈடுபட்டதே இல்லை.

மாவோயிஸ்ட் கட்சியும் போல்ஷ்விக் கட்சியும்
இவ்விரண்டும்கூட ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான்.
எனவேதான் இவை இன்றும் தேர்தல் புறக்கணிப்புப்
பாதையில் ஊன்றி நிற்கின்றன. இவையும் லிபரேஷன்
கட்சியும் அழித்தொழிப்புப் பாரம்பரியம் உடையவை.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களைத் திரட்டி நடத்திய
நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்டங்கள்
என்னென்ன என்று கேட்கிறார் திருப்பூர் குணா.
புத்திசாலித்தனம் நிரம்பி வழியும் ஒரு கேள்வியைக்
கேட்டு கிடுக்கிப்பிடி போட்டு விட்டதாக திருப்பூர் குணா
புளகாங்கிதம் அடையலாம். போராட்டங்களை
முன்னெடுப்பது நமது அகநிலை விருப்பம்
சார்ந்தது அல்ல. பெரும் போராட்டங்களை முன்னெடுப்பதில்
அமைப்பு வலிமை ஒரு முக்கியமான காரணி. எல்லா
மா லெ கட்சிகளுக்கும் உள்ள அமைப்பு வலிமை
பெரும் போராட்டங்களை சொந்த முயற்சியில்
முன்னெடுப்பதற்குப் போதுமானதல்ல.

ஒரு கோட்பாட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு
அமைப்பு வலிமை ஒரு காரணி என்று கருதுவது
முற்றிலும் மார்க்சியமற்ற குட்டி முதலாளித்துவப்
போக்கு ஆகும். திருப்பூர் குணா அவர்களால்
இத்தகைய குட்டி முதலாளித்துவக் கருதுகோளை
மட்டுமே முன்வைக்க முடியும்.

எது எப்படி இருப்பினும், கார்முகில் அவர்களின்
இந்த முன்வைப்பு மா லெ கட்சியின் 1970 வேலைத்திட்டம்
குறித்து பெரும் ஐயங்களை எழுப்பி உள்ளது. அனைத்து
மா லெ கட்சிகளும் இதற்கு விடை காண வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம்.
*************************************************




             

           


          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக