புதன், 4 மார்ச், 2020

பொருளுற்பத்தியில் இருந்து துண்டித்துக் கொண்டு
கிராம்சியவாதிகளாகச் சீரழிந்து போய்க்கொண்டிருக்கும்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகளுக்கு ஒரு வேண்டுகோள்!
 ------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) மொத்தத் தமிழகத்திலும், சமூகத்தின் பொருளுற்பத்தியில்
இருந்து முற்றிலுமாகத் தங்களைத் துண்டித்துக் கொண்டு
ஒரு கூட்டம் இருக்கிறது என்றால், அது தமிழகத்தின்
மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள்தான்! இது உண்மை! 
உண்மை கசக்கும்! சுடும்!! என்றாலும் உண்மையை
யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

2) "உங்கள் பண்பாட்டின் வேர்களைக் கண்டு அடையுங்கள்.
அதிலிருந்து உங்களின் மார்க்சியம் பீறிட்டுக் கிளம்பட்டும்
என்று அறைகூவல் விடுத்தார் கிராம்சி.

3) மார்க்சியம் பொருளுற்பத்திக்கே முதன்மை தருகிறது.
சமூகத்தின் பொருளியலை மாற்றினால் பண்பாடு
தானே சுலபமாக மாறும் என்கிறது மார்க்சியம்.
எனவே மார்க்சியம் பண்பாட்டுக்கு முதன்மை
அளிப்பதில்லை.

4) மாறாக கிராம்சியம் பண்பாட்டுக்கே முதன்மை
அளிக்கிறது. அதாவது அது தலைகீழாக நிற்கிறது.
எனவே  கிராம்சியம் மார்க்சியத்துக்கு எதிரானது.
மேலும் அது அறிவியலுக்கும் எதிரானது.

5) தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள்
அனைவரும், விதிவிலக்கின்றி, சமூகத்தின்
பொருளுற்பத்தியில் இருந்து முற்றிலுமாகத் தங்களைத்
துண்டித்துக் கொண்டுள்ள நிலையிலேயே பல
ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். இது குறித்த
பிரக்ஞையும்கூட அவர்களுக்கு இல்லை என்பது
பேரவலம் ஆகும்.

கஞ்சி குடிப்பதற்கு இலார்- அதன்
காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்.
......................பாரதி......................

6) பொருளுற்பத்தியோடு எவ்விதத் தொடர்பும் அற்ற
இவர்களை மார்க்சிஸ்டுகள் என்று அழைக்க இயலாது.
இவர்களை கிராம்சியவாதிகள் என்றுதான் அழைக்க
முடியும். மெய்யாகவே இவர்கள் கிராம்சியவாதிகள்தான்!

7) சாரு மஜூம்தார் காலத்திய உற்பத்தி முறை இன்று
இல்லை. இன்றைய உற்பத்தி 1970ஐ விட மிகப்
பெரிதும் நவீனமாகி உள்ளது. 1995க்குப் பின்னர்
உலகமயமாகி உள்ளது. மிக நவீனமான உற்பத்திக்
கருவிகள் இந்திய உற்பத்தியில் பயன்படுகின்றன.
இந்த மாற்றங்கள் குறித்த ஓர்மை இல்லாமல்
இருப்பது பெருத்த அறியாமை ஆகும்.

8) Fake idயில் ஒளிந்து கொண்டு, வீராவேசமாக
அடுத்தவனைத் திட்டுகிற, கோழைகள்கூட
முகநூலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் வைத்திருக்கும் ஜியோ சிம்மும் முகநூலும்
உற்பத்திக் கருவிகளே என்ற உண்மையை என்றாவது
அவர்கள் உணர்வார்களா?

9) மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு தோழர்களே,
எவ்வளவு காலம்தான் இந்து முஸ்லீம் விவகாரங்களையும்
பார்ப்பான் சூத்திரன் விஷயங்களையுமே எழுதிக்
கொண்டு இருப்பீர்கள்? இதெல்லாம் அடையாள
அரசியல் என்ற ஓர்மை வேண்டாமா? அடையாள
அரசியலைக் கட்டி அழுவது பின்நவீனத்துவர்களின்
வேலை அல்லவா?

10) இந்திய சமூகத்தின் பொருளுற்பத்தி பற்றி
உங்களுக்கு என்ன தெரியும்? எவ்வளவு தெரியும்?
என்றாவது பண்பாட்டு விஷயங்களில் காட்டும்
அக்கறையில் ஒரு சதவீதமாவது பொருளுற்பத்தியில்
காட்டி இருப்பீர்களா? உங்களின் பொருளுற்பத்தி
மீதான அக்கறைக்கு ஏதாவது ஆதாரம் காட்ட
முடியுமா?

11) இன்றைக்கு இந்தியத் தொலைதொடர்புத்துறை பெருத்த
நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இத்துறையின்
நெருக்கடியானது பிற துறைகளையும் தீவிரமாகப்
பாதிக்கும்.

12) இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை வரும்
ஏப்ரல் மாதத்தில் நடத்த இருப்பதாக மோடி அரசு
அறிவித்துள்ளது. மொத்த நிறுவனங்களுமே படுத்த
படுக்கையாக இருக்கும் இந்த நேரத்தில், ஏலம்
நடத்துவது சரியாக இருக்குமா? இது பற்றி எல்லாம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகளின் நிலைபாடு என்ன?

13) "இதுபற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது" என்பது
உங்களின் பதிலாக இருக்குமென்றால், பொருளுற்பத்தி
பற்றிய அக்கறையே இல்லாதவர்கள் நீங்கள்
என்றுதானே பொருள்படும்! அப்படியானால்
மார்க்சிஸ்ட் கட்சி நடத்துவதற்கான உங்களின்
அருகதை என்ன?

14) வலதுசாரிகளும் வலது இடது சார்பற்ற அரசியலற்ற
ஒரு பெருங்கூட்டமுமே தற்போது பொருளுற்பத்தியில்
அக்கறை காட்டுகிறது. மா லெ முகாமில் இருந்து
மருந்துக்கு கூட ஒருவர் பொருளுற்பத்தியில்
அக்கறை காட்டுவதில்லை. இப்படி இருக்க
மக்கள் எப்படி மாலெ அமைப்புகளின் பின்
அணி திரள்வார்கள்?

15) எனவே இனிமேலாவது பொருளுற்பத்தியில்
அக்கறை காட்டுங்கள். பண்பாட்டு விஷயங்களுக்கு
பிரதான முக்கியத்துவம் அளிப்பதைக் கைவிடுங்கள்.
இல்லையேல் கிராம்சியவாதிகளாகவும், அடையாள
அரசியலை முன்னெடுக்கும் பின்நவீனத்துவர்களாகவும்
இருக்கும் நிலையில் இருந்து விடுபட முடியாமல் போகும்.
**********************************************************
   
 
 




சமூகத்தின் பொருளுற்பத்தி குறித்த அணுவளவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக