வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனாவில் இருந்து மயிரிழையில்
உயிர் தப்பிய ராகுல்காந்தி!
------------------------------------------------------------
இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லசுக்கு கொரோனா
அறிகுறிகள் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் தன்னைத்
தனிமைச் சிறையில் அடைத்துக் கொண்டுள்ளார்
என்றும் செய்தி வந்துள்ளது.

ஏழை பணக்காரன் வேறுபாடின்றி குப்பன் சுப்பன்
முதல் நாட்டின் அதிபர் வரை கொரோனா பீடித்து
விடுகிறது.

கொரோனாவில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட
இத்தாலி நாட்டுக்குச் சென்றிருந்தார் ராகுல் காந்தி.
இளைஞரான அவர் அங்கு பல்வேறு கேளிக்கை
விருந்துகளில் பங்கேற்று இருக்கக்கூடும்.

உரிய நேரத்தில் இந்தியா திரும்பினார். அவருக்கு
கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில்
சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. நல்ல வேளையாக
அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது.
மேலும் சில நாட்கள் இத்தாலியில் இருந்திருந்தால்,
அவரை கொரோனா பீடித்து இருக்கக்கூடும்.
கொரோனா பாதிப்பில் சிக்காமல் மயிரிழையில்
தப்பித்த ராகுல் காந்தியை வாழ்த்துவோம்.

கோவில் காளையாக பொறுப்பற்றவராக ராகுல் காந்தி
ஊர் சுற்றுகிறார் என்பதே பலரின் கவலையாக உள்ளது.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்ற உண்மையை
அவருக்கு எடுத்துக்கூற நாதி இல்லை. தமது தாய்க்கு
அவர் கட்டுப்படக் கூடியவராக இல்லை.

ஒருவேளை அவரின் தந்தை உயிரோடு இருந்திருந்தால்,
தந்தையின் கண்டிப்பான வளர்ப்புக்கு ராகுல் காந்தி
ஆளாகி இருந்தால், அவர் முன்னிலும் பொறுப்பானவராக
ஆகி இருக்கக்கூடும். எவ்வளவுதான் பணமும் அதிகாரமும்
இருந்த போதிலும், தகப்பனற்ற வளர்ப்பு என்பது
அதற்கே உரிய குறைகளைக் கொண்டது.

ராஜிவ் காந்தியைக் கொன்ற கயவர்களை ஒருபோதும்
மன்னிக்க முடியாது. இந்திரா, ராஜிவ் என்று அடுத்தடுத்து
5 ஆண்டுகளுக்குள் அந்தக் குடும்பத்தை ஒழித்ததில்
சிஐஏவின் சதி உண்டு. சிஐஏயின் சதியால் பிரதமர்
ஆனவர்தான் வி பி சிங் என்ற உண்மையையும்
நாம் மறந்து விடக்கூடாது.

ஆக ராகுல்காந்தி கொரோனாவில் இருந்து தப்பிய
செய்தி எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும்
அளிக்கிறது. எத்தகைய பாசாங்கும் இல்லாமல் எனது
மனதில் பட்டதை எழுதுகிறேன்.

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டு
இருந்தபோது நானும் மூன்று நாட்கள் அப்பல்லோவில்
ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்காக இருந்தேன். நன்கு
குணமடைந்து நான் வீடு திரும்பியது போல,
ஜெயலலிதாவும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்
என்று மனசார விரும்பினேன். அது நடக்கவில்லை.

இத்தனை வயதில் நோய் நொடி  மயக்க மருந்து
அறுவை சிகிச்சை என அனைத்தையும் பார்த்து
விட்டேன். அல்லோபதி என்னும் அறிவியல் மருத்துவத்தின்
உதவியால் நோய்களை வென்று வாழ்ந்து
கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை
மருத்துவ அறிவியல் எனக்கு இட்ட பிச்சை!

கூடிய விரைவில் நம் நாடும் உலகமும் இந்தக்
கொரோனாவின் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டும்
என்று விரும்புகிறேன். விட்டேத்தியாக அணுக வேண்டிய
கொரோனா பிரச்சினையை, என்னுடைய வயதின்
காரணமாக, என்னுடைய நோய் நொடிகளின்
காரணமாக, சற்று ஈடுபாட்டுடன் அணுகுவதால்
எனக்கு நிம்மதியின்மை ஏற்படுகிறது. ஒரு முப்பது
வயது இளைஞனின் திமிர் பிடித்த மனநிலையுடன்
என்னால் இப்பிரச்சினையை அணுக இயலவில்லை.

எனவே இந்நிலையில் மத்திய மோடி அரசுக்கும்
மாநிலத்தில் எடப்பாடி அரசுக்கும் உரிய ஒத்துழைப்பை
அளிப்பதும் அரசின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுமே
கொரோனாவை வெல்ல ஏதுவாகும் என்று கருதுகிறேன்.
******************************************************        



 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக