செவ்வாய், 3 மார்ச், 2020

(போலி அறிவியல்வாதியும் ஆட்கொல்லி அணு மின் நிலைய தீவிர ஆதரவாளரும் இந்துத்துவ பாசிச ஆதரவாளருமான 'இளங்கோ பிச்சாண்டி'யின் கீழ்வரும் சந்தர்ப்பர்வாதப் பதிவும் அதன் கீழ் அமைந்துள்ள எதிர்வினையும்)
பிளவுகளின் அமில மழையில்
மார்க்சிஸ்டு லெனினிஸ்டு குழுக்கள்!
தோழர் மருதையன் விலகலை முன்னிட்டு!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--இளங்கோ பிச்சாண்டி
தத்துவச் சீரழிவு அரசியல் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்.
அரசியல் சீரழிவு அமைப்புச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்.
அமைப்புச் சீரழிவு தனிநபர் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்.
தத்துவம், அரசியல், அமைப்பு, தனிநபர் ஆகியவற்றுக்கு
இடையே ஒரு அந்தாதித் தொடர்பு உண்டு. (இங்கு
தத்துவம் என்பது மார்க்சியத்தைச் சரிவரப்
பிரதிபலிக்காத கட்சிகளின் வேலைத்திட்டத்தைக்
குறிக்குமே தவிர மார்க்சியத்தைக் குறிக்காது)
தோழர் மருதையன் அண்மையில் மாநில அமைப்புக்
கமிட்டியில் இருந்து (SOC CPI ML) விலகியுள்ளார்.
அவருடனும் அவரைத் தொடர்ந்தும் சிலர்
விலகி உள்ளனர்.
மொத்த மாநில அமைப்புக் கமிட்டியிலும், யாரினும்
கூடுதலாக தோழர் மருதையனே மக்களுக்கு நன்கு
அறிமுகம் ஆனவர். எனவே அவரின் விலகல் தமிழக
இடதுசாரி உலகில் அதிர்வுகளைத் தோற்றுவிப்பது
இயல்பே.
முன்னதாக ஒன்றைத் தெளிவுறுத்தி விடுவது உத்தமம்.
மருதையனுக்கு ஆதரவாகவும் மாநில அமைப்புக்
கமிட்டியின் தலைமைக்கு எதிராகவும் எழுதப்படுபவை
அல்ல எனது கட்டுரைகள். தொழுநோயாளிகளின் மீது
பரிவு கொள்வதைப் போல இத்தகைய புகார்களைக்
கூறுவோர் மீது பரிவு கொள்கிறேன்.
மருதையனும் நானும் மத்திய அரசின்
தொலைதொடர்புத் துறையில் பணியாற்றியவர்கள்.
கடந்த கால் நூற்றாண்டு கால தொழிற்சங்க இயக்கத்தில்
மருதையன் எங்களோடும் நாங்கள் அவரோடும்
பரஸ்பரம் இணைந்து செயல்பட்டவர்கள். மாநில
அமைப்புக் கமிட்டிக்கு அப்பாலும் உலகம் இருக்கிறது
என்பதை மேற்படி புகார்தாரர்கள் உணர்வது நல்லது.
தமது விலகலை அறிவிக்கும் கடிதத்தை வினவு
இணையதளத்தில் வெளியிட்ட மருதையன்
தமது விலகலுக்கான மெய்யான காரணத்தை
நியாயமான முறையில் தெரியப் படுத்தவில்லை.
எட்டாம் வகுப்புச் சிறுவன் இந்திய சுதந்திரம் என்ற
தலைப்பில் எழுதிய கட்டுரை போல் உள்ளது
அவரின் கடிதம்.
எனவே பெறுமதி உடைய ஒரு ஆவணமாகக் கருதி
அவரின் கடிதத்தைப் பரிசீலிப்பது இயலாது. ஒருவேளை
பின்னாளில் தமது விலகலுக்கான காரணத்தை
விளக்கி அவர் ஒரு அறிக்கை வெளியிடக் கூடும்.
அந்த அறிக்கையிலும் கூட உண்மை
வெளிப்படுவதற்கான நிகழ்தகவு பூஜ்யமே.
தமது விலகல் கடிதத்தில் உலகப் பிரசித்தி பெற்ற
ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப்பண்ணை வாசகத்தை
நினைவூட்டி இருப்பார் மருதையன்.
(“அமைப்பில் எல்லோரும் சமம்” என்று ஏட்டளவில்
கூறிக்கொண்டாலும், “சிலர் மட்டும் கூடுதலாகச் சமம்” என்ற
கருத்து தலைமைத் தோழர்கள் மனதில் இருக்கிறது).
ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று "நிரூபிக்கும்"
ஒரு கட்டுரை புதிய கலாச்சாரத்தில் வெளியானதை
சிலர் படித்திருக்கக் கூடும். தமது அறிவிக்கப்பட்ட
நிலைபாட்டுக்கும் தமது உள்மனசு ஏற்றுக் கொண்ட
நிலைபாட்டுக்கும் இடையே ஒரு சீனப் பெருஞ்சுவர்
இருப்பதை மருதையன் தன்னை அறியாமலே
வெளிப்படுத்தி விட்டாரோ? அல்லது ஜார்ஜ் ஆர்வெல்லின்
வாசகம் ஒரு Universal Truth ஆக நிலைபெற்று விட்டதோ?
நன்கு பழகிய தோழர்கள் "ஒதுங்குவதைக் காணும்போது
மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன" என்கிறார்
மருதையன். தோழர் ஏ எம் கே அவர்கள் மறைந்தபோது,
அவருக்கு வினவு இணையதளத்தில் ஒரு வரி இரங்கல்
கூடத் தெரிவிக்காத, ஏஎம்கேவின் மறைவை போகிற
போக்கில் ஒரு obituary செய்தியாகக் கூடச் சொல்லாத
ஈவிரக்கமற்ற வன்மம் பிடித்த மருதையன் இன்று
புலம்புகிறார்.
தோழர் ஏ எம் கே மீது ஏன் இந்தத் தீண்டாமை? ஏ எம் கே
ஒரு சூத்திரர் என்பதால்தான் அவரின் மறைவின்போது
கூட, அவரை குரூரமாக அவமானப் படுத்தினார்
வன்மம் பிடித்த பார்ப்பனரான மருதையன் என்று நான்
வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறேன்.
மருதையன் மட்டும் பார்ப்பனராக இல்லாமல் வேறு
சாதியினராக இருந்திருந்தால், அவர் நிச்சயம் ஏ எம் கே
அவர்களின் மறைவுக்கு உரிய அஞ்சலியைச் செலுத்தி
இருப்பார். அவரிடம் வெளிப்பட்டது பார்ப்பன வன்மமே.
மருதையனுக்கு முன்பும் மாநில அமைப்புக் கமிட்டியில்
இருந்து நூற்றுக்கணக்கில் விலகி உள்ளனர். பின்னும்
பலர் விலகக் கூடும். எனினும் இந்த விலகல்கள்
மாநில அமைப்புக் கமிட்டிக்கு மட்டும் உரித்தானவை
என்றோ, தனித்துவம் உடையவை (unique) என்றோ
கருதுவதில் உண்மை இல்லை. இத்தகைய விலகல்கள்
தமிழகத்தில் செயல்படும் எல்லா மார்க்சிய லெனினிய
அமைப்புகளுக்கும் பொதுவானவையே.
மார்க்சிய லெனினிய அமைப்புகளைப் பொறுத்தமட்டில்
பிளவுகளின் அமில மழையை அவை எதிர்கொண்டே
வருகின்றன. பிளவுபடாத அமைப்பு இல்லை.
அண்மையில் தோழர் ஏ எம் கே அவர்களின் மறைவுக்குப்
பின்னர், மஜஇக அமைப்பும் போல்ஷ்விக் கட்சியும்
இரண்டாகப் பிளவுபட்டன. மூன்றாவதாகச் சிலர்
அமைப்பில் இருந்தே வெளியேற்றப் பட்டனர்.
மூன்று நான்கு துண்டுகளாக உடைந்துதான் லிபரேஷன்
குழு இன்று ஜீவித்துக் கொண்டுள்ளது. இது போல
சொல்லிக் கொண்டே போகலாம். உடைவுகள்,
பிளவுகள், விலகல்கள் என்று மார்க்சிய லெனினிய
அமைப்புகள் மேலும் பலவீனம் அடைந்து வருகின்றன.
இவற்றுள் தனிநபர் சார்ந்த பிளவுகளே இல்லை
என்று எவராலும் சான்றிதழ் அளிக்க இயலாதுதான்.
என்றாலும் பெரும்பான்மையான பிளவுகள்
தத்துவார்த்த நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டவை.
பிளவுகளின் மூல ஊற்று சித்தாந்தம் திவாலாகிப்
போனதே!
நன்கு விஷயம் தெரிந்த மார்க்சிய லெனினியத்
தோழர்கள் தங்களின் தனிப்பட்ட உரையாடல்களின்
போது, 1970 வேலைத் திட்டம் இன்று பொருந்தாது என்று
ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் எவரும்
பொதுவெளியில் அதை ஒத்துக் கொள்வதில்லை.
அடிப்படை நிலைபாடுகள் என்று அறியப்பட்ட
பலவும் இன்று ஆட்டம் கண்டு விட்டன. எல்லா
அமைப்புகளிலும் நிலவும் சித்தாந்தக் குழப்பங்கள்
பற்றி மிக எளிமையாகப் பார்ப்போம்.
1) இந்திய அரசு ஒரு பாசிச அரசு என்கிற வரையறையை
பலரும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
2) இந்திய அரசு தரகு முதலாளித்துவ அரசு என்ற
வரையறையும் இன்று பலராலும் ஐயுறப் படுகிறது.
3) நிலப் பிரபுத்துவத்திற்கும் பரந்து பட்ட
விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடே
பிரதான முரண்பாடு என்ற வரையறை காலாவதி
ஆகிவிட்டதாகப் பலரும் கருதுகின்றனர்.
4) இந்தியப் புரட்சியின் கட்டம் ஜனநாயகக் கட்டம்
என்பதை நிராகரிக்கப் பலரும் முன்வந்துள்ளனர்.
வெகுசிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று,
கட்டக் கொள்கையையே நிராகரிக்கும் டிராட்ஸ்கியிடம்
அடைக்கலம் புகத் தலைப்பட்டுள்ளனர்.
வேலைத்திட்டம் வகுக்கப்பட்ட 1970களில்,
நாடு முழுவதும் உள்ள கட்சி அணிகள் முழுமனதோடு
ஏற்றுக் கொண்ட அடிப்படை நிலைபாடுகளில் பல
இன்று கேள்விக்கு உள்ளாகி நிற்கின்றன.
மேற்கூறிய நான்கு அம்சங்களும் விதிவிலக்கின்றி
எல்லா அமைப்புகளிலும் முழு அளவில் நிலவுவதாக
யாரும் யாந்திரிகமாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
மார்க்சிய லெனினியக் குழுக்களில் வேறுபட்ட
அளவுகளில் நிலவும் சித்தாந்தப் போக்குகள் இங்கு
தொகுத்துக் காட்டப் பட்டுள்ளன.
1995 முதல் இந்தியாவில் உலகமயக் கொள்கைகள்
புகுத்தப் பட்டன. LPG கொள்கைகள் வேக வேகமாகச்
செயல்பாட்டுக்கு வந்தன. இந்தியச் சந்தையானது
அந்நிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களால்
நிறைந்தது. நாட்டின் பொருள் உற்பத்தி முறையில்
இவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.
இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளை
எவ்வாறு எதிர்கொள்வது என்று மார்க்சிஸ்ட் கட்சி (CPM)
உட்பட எந்த ஒரு மார்க்சிய லெனினியக் குழுவும்
புறநிலையில் ஆய்வு நடத்தி சரியானதொரு
மாற்றுத் திட்டத்தை உருவாக்கவில்லை.
1980களில் இந்தியா முழுவதும் என்ஜிஓக்கள் புற்றீசலாய்
வந்து விழுந்தன. ரஜனி கோத்தாரியின் முயற்சியில்
சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரையும் என்ஜிஓக்கள்
வளைத்துப் பிடித்தன. இந்தியாவின் சமூக அரசியல்
களங்களை என்ஜிஓக்கள் தம்வசப் படுத்திக் கொண்டன.
மக்களுக்காகப் போராடும் உரிமையை
கம்யூனிஸ்டுகளிடம் இருந்து என்ஜிஓக்கள் பறித்துக்
கொண்டன. இதனால் ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட்
இயக்கமும் வலுவிழந்தது. மாறாக என்ஜிஓக்கள்
மக்களின் ஏகப் பிரதிநிதிகளாய் தங்களை வரித்துக்
கொண்டன.
நாட்டின் சமூக அரசியல் அரங்கை என்ஜிஓக்கள்
கைப்பற்றிக் கொண்டன என்பதன் பொருள்
ஏகாதிபத்தியம் கைப்பற்றிக் கொண்டது என்பதுதான்.
ஏனெனில் என்ஜிஓக்கள் என்பவை ஏகாதிபத்தியத்தின்
குழந்தைகள் மட்டுமல்ல ஏகாதிபத்தியத்தின்
ஆயுதங்களும் ஆகும்.
என்ஜிஓக்களை ஆரம்பத்தில் எதிர்த்துப் போராடிய பல
மார்க்சிய லெனினியக் குழுக்கள் கூட,காலப்போக்கில்
என்ஜிஓக்களிடம் சரண் அடைந்தன. மாவோயிஸ்ட்
கட்சியானது பிரபல என்ஜிஓ அருந்ததி ராயின்
செல்லப் பிள்ளை! ஆரம்பத்தில் என்ஜிஓக்களை
எதிர்த்த மாநில அமைப்புக் கமிட்டியானது,
காலப்போக்கில் தீஸ்தா செதல்வாத், கூடங்குளம்
உதயகுமார் ஆகியோருக்கு ரசிகர் மன்றம்
அமைப்பதில் தீவிரம் காட்டியது.
நெருப்பு வளையத்தின் நடுவே ஒரு கற்பூரக் கட்டி
போல, வலுக்குறைந்த மார்க்சிய லெனினியக் குழுக்கள்
எவ்வளவு காலம்தான் என்ஜிஓ எதிர்ப்பில் கற்போடு
இருந்து விட முடியும்? போல்ஷ்விக் கடசி மட்டுமே
இன்று வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு என்ஜிஓ
எதிர்ப்பில் உறுதிபட நிற்கிறது. இது ஒரு விதிவிலக்கே!
சாராம்சத்தில், என்ஜிஓக்களின் ஏகாதிபத்திய
அரசியலை எதிர்த்து முறியடிப்பதில் மா லெ குழுக்கள்
தோல்வி அடைந்ததன் காரணம் என்ன?
இந்தியப் புரட்சியின் பிரதான முரண்பாடு
நிலப்பிரபுத்துவத்துக்கும் பரந்துபட்ட மக்களுக்கும்
இடையிலான முரண்பாடே என்ற தவறான
வரையறுப்புத்தான் இதற்குக் காரணம் என்று பலரும்
சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் தலைமையில் திரள
வேண்டிய மக்களைத் திசை திருப்பி, என்ஜிஓக்களின்
தலைமையில் அணிதிரட்டியது யார்? ஏகாதிபத்தியமா
அல்லது நிலப்பிரபுத்துவமா?
இந்தியாவில் எந்த ஒரு சதுர அங்குல நிலப்பரப்பிலும்
எந்த ஒரு கம்யூனிஸ்ட் கடசி இயக்கம் நடத்த
முன்வந்தாலும் அங்கு என்ஜிஓக்களின் இருப்பை
எதிர்கொள்ள நேரும்.அந்த அளவுக்கு என்ஜிஓக்களின்
ஆதிக்கம் இந்தியாவில் தலை விரித்து ஆடுவதற்குக்
காரணம் ஏகாதிபத்தியமா அல்லது நிலப்பிரபுத்துவமா?
இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு குழுவிலும் உள்ள
சிந்திக்கும் திறன் பெற்ற அணிகள் கேட்கத்
தொடங்கி விட்டார்கள். இவற்றின் ஒட்டு மொத்த
விளைவே இன்று நேரிட்டுள்ள சித்தாந்தக் குழப்பம்.
சித்தாந்தக் குழப்பத்தில் இருக்கும் அணிகளை
விடுவிக்க மார்க்சிய லெனினியக் குழுக்களின்
தலைமையால் முடியவில்லை. காரணம் தலைமைக்
குழுவிலேயே இந்தக் குழப்பம் இருக்கிறது.
இவை தவிர, பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு
தலைமை முதல் கடைசி ஆதரவாளர் வரை அத்தனை
பேரும் ஏதோ ஒரு வகையில் அறிந்தும் அறியாமலும்
இரையாகி உள்ளனர்.
சித்தாந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட இயலாத
மா லெ குழுக்களின் தலைமை, அமைப்புக்
கட்டுப்பாடு, அமைப்பு முறை ஆகிய ஆயுதங்களைப்
பயன்படுத்தி கேள்வி கேட்பவர்களை ஒடுக்குகிறது.
இதன் விளைவே மா லெ குழுக்களில் இருந்து
பலரும் விலகுவதற்குக் காரணம்.
ஆக, மா லெ குழுக்கள் சித்தாந்தத் தெளிவை
அடையாமல் பிளவுகளை செயற்கையாகக் கூட
இனி தடுக்க இயலாது.
************************************************
(எதிர்வினை கீழே)
----------------------
ஐன்ஸ்டீன் காலமும் முடிந்து குவாண்டம் காலமும் தொடங்கி சில பத்தாண்டுகள் ஆன பின்னரும் 'Newtonian' கண்ணோட்டத்தில் 'நியூட்டன் அறிவியல் மன்றத்தை' தனக்குத்தானே நடத்திவரும் போலி மார்க்சியவாதி இளங்கோ பிச்சாண்டி,
அறிவியலை அரசியலிலிருந்து துண்டித்து 'Science'ஐ' ' 'Scientism'ஆக அணுகி போலி அறிவியல்வாதியாக 'நியூட்டன் அறிவியல் மன்றத்தை' நடத்திவரும் இந்த இளங்கோ பிச்சாண்டி,
அசாம் NRC விவகாரத்திலும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சென்ற ஜனவரியில் இந்துத்துவ பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்திய விவகாரத்திலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரே நாளில் சுமார் எண்பதாயிரம் தொழிலாளர்கள் ஓய்வுபெறவைத்த விவகாரத்திலும் இந்துத்துவ பாசிஸ்டு ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை மேற்கொண்ட இவர் பாலியல்சார் விவகாரங்களிலும் அதேபோன்ற நிலைப்பாட்டை ஒழுக்கவாத அடிப்படையில் அணுகும் இந்த இளங்கோ பிச்சாண்டி,
"இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?" என்பதுபோல்
மார்க்சிய - இலெனினிய இயக்கப் பிளவுகள் விவகாரத்தில் இப்பொழுது தலையிடுகிறார். மட்டுமல்லாமல் இந்துத்துவ பாசிஸ்டுகளின் உண்மையான வாரிசு என்பதை நிரூபிப்பதைப் போல் அவரது பதிவில் அவரோடு சற்று முரண்படக்கூடிய எவரையும் 'unfriend' செய்துவிடுகிறார்; அது பலனளிக்காவிட்டால் ' block' செய்துவிடுவார். அவரது பதிவையும் வாசிக்காமல் இருப்பதற்காகவும் இந்த எதிர்வினையை இடாமல் இருப்பதற்காகவும் அவர் 'block' செய்திருக்கிறார். அதனால் அவர் எழுதிய பதிவு 'copy'& paste'(காண்க மேலே) செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்கீரின் ஷாட்டுகள்(சில பத்திகள் தவறுதலாக விடுபட்டுள்ளது)கீழே இடப்பட்டுள்ளது.
எனறாலும் ஒரு மார்க்சிய-இலெனினிய அமைப்பை சந்தர்ப்பவாதமாக ஆதரிக்கிறார். அந்த மார்க்சிய-இலெனினிய அமைப்போ அசாம் NRC, புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சென்ற ஜனவரியில் இந்துத்துவ பாசிஸ்டுகளின் தாக்குதல், மேற்காண் பிஎஸ்என்எல் விவகாரம் ஆகியவற்றில் மேற்காண் போலி அறிவியல்வாதி/மார்க்சியவாதியும் இந்துத்துவ பாசிஸ்டு இளங்கோ பிச்சாண்டியின் நிலைப்பாட்டுக்கு மாறாகவே நிலைப்பாடுகளை மேற்கொண்டிருக்கிறது.
இளங்கோ பிச்சாண்டி தனது இப்பதிவுக்கு தொடர்பில்லாதவாறு மருதையன் ஏஎம்கேவுக்கு அஞ்சலியை செலுத்தவில்லை எனவும் ஏஎம்கே சூத்திரர் என்பதே அதற்கு காரணம் எனவும் எழுதியுள்ளார்.
மருதையன் அங்கம் வகித்த கட்சியின் செயலரை கேட்கவேண்டிய கேள்வியை அவரிடம் கேட்கிறார் இளங்கோ பிச்சாண்டி.
சொல்லப்போனால் இளங்கோ பிச்சாண்டியால் உயர்த்திப் பிடிக்கப்படும் ஏஎம்கே தனது கட்சியிலிருந்து வெளியேறி இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர் எனும் காரணத்தினால் 'சமரன்' இதழின் முன்னாள் ஆசிரியர் இல. கோவிந்தசாமி, விஸ்வம் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் கோவை ஈஸ்வரன் ஆகியோரின் இறந்த உடல்கள் அருகே நடந்த அஞ்சலிக் கூட்டங்களில் ஏஎம்கேவின் பிரதிநிதிகள் ஆற்றிய உரையானது 'இழவு வீட்டில் கணக்கு தீர்ப்பதுபோல்' இறந்த உடல்களிடமே கணக்கைத் தீர்த்துக் கொண்டனர்.
மார்க்சிய - இலெனினிய இயக்கப் பிளவுகளைப் பற்றி எழுதும் இவர் இன்னொரு புறத்தில் ஏஎம்கேவின் பக்தராக காட்டிக் கொள்கிறார்.
இப்பிளவுகள் பிறந்ததன் தாயே ஏஎம்கேதான் என்பதை வசதியாக மறைத்துவிட்டு. சுமார் பத்து பிளவுகளை அவர்தான் பெற்றெடுத்தார்.
அணுப்பிளவுகளை அங்கீகரிக்கவும் அணு மின்நிலையங்களை ஆதரிக்கவும் தயாராக இருக்கும் 'இளங்கோ பிச்சாண்டி' மார்க்சிய - இலெனினிய இயக்க பிளவுகளின் 'பொருளாயத அடிப்படை'(material basis) எனும் எதார்த்தத்தை காணமறுக்கிறார்.
இந்துத்துவ பாசிச நிலைப்பாடுகளை அண்மைக் காலமாக மேற்கொண்டுவருவதால் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதை பரிசாகப் பெறும் இந்த 'இளங்கோ பிச்சாண்டி' இந்துத்துவவாதிகளைப் போலவே அனைத்து மார்க்சிய - இலெனினிய அமைப்புகளையும் என்.ஜி.ஓக்கள் ஊடுருவிவிட்டதாக புனைசுருட்டாக எழுதுகிறார். மஜஇக எனும் மார்க்சிய -இலெனினிய அமைப்பை மட்டும் ஊடுருவவில்லையாம்.
இவர் போலி பக்தியுடன் வழிபடும் ஏஎம்கே உயிருடன் இருந்த இறுதி ஆண்டுகளில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க நிர்வாகி தியாகுவின் பங்கேற்பு இல்லாமல் மஜஇகவினரின் கூட்டங்கள் நடைபெறாது.
தியாகுவோ பேராசிரியர் சரஸ்வதி, 'Peoples Watch' ஹென்றி போன்ற என்.ஜி.ஓக்கள் நடத்தும் கூட்டங்களில் ஆண்டாண்டுகளாக பங்கேற்றுவருகிறார்.
இதை இளங்கோ பிச்சாண்டி மறைப்பது சந்தர்ப்பவாதமாக ஏஎம்கேவை காப்பாற்றுவதற்கா?
இந்துத்துவ பாசிச நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் இந்த இளங்கோ பிச்சாண்டி தனது இந்துத்துவச் சார்பை மறைப்பதற்கு மஜஇக மீதான ஆதரவை திரையாகப் பயன்படுத்துவதை மஜஇகவினர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக