ஞாயிறு, 1 மார்ச், 2020

பாசிசம் fascism 
--------------------------
தற்கு முதலாளி எவ்வாறு பாசிஸ்டாக இருக்க முடியும்?
--------------------------------------------------------------------------------------- 


இந்தியாவில் பாசிசம் மேலெழும்பியுள்ள இன்றைய சூழலில் இதன் பிரத்யேகப் பண்பு வரையறுக்கப்படவேண்டியிருப்பதால்
சில கட்சிகள் கார்ப்பரேட் பாசிசம் என்று வரையறுத்துள்ளன.
ஆனால் பாசிசம் எனும் ஒன்றை கோட்பாட்டுரீதியாக வரலாற்றில் முதன்முதலாக வரையறுத்த மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பொதுச் செயலராக செயலாற்றிய ஜார்ஜ் டிமிட்ரோ பாசிசத்தை பாசிசம் என்றோ அதன் பிரத்யேகப் பண்புக்காக 'ஜெர்மன் பாசிசம்' என்றோ 'இத்தாலிய பாசிசம்' என்றோதான் வரையறுத்தார்.
மாவோ இதைப் பின்பற்றியே 'ஜப்பான் பாசிசம்' எனவும் சூ என் லாய் 'சீன பாசிசம்' எனவும் வரையறுத்தனர்.
ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கு இடையிலான கழுத்தை நெரிக்கும் போட்டியில் முதலாளிய ஜனநாயகமும் அறவே கைவிடப்பட்ட வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகாரமே பாசிசம் என மேற்காண் டிமிட்ரோ வரையறுத்தார்.
ஆனால் இந்தியாவில் இன்று பாசிசம் என்ற சொல்லோடு 'கார்ப்பரேட்' எனும் அடைமொழியை இணைத்து வரையறுத்துள்ளன சில கம்யூனிஸ்ட் கட்சிகள்.
'காவி' பாசிசம் எனவோ 'பார்ப்பன' பாசிசம் எனவோ 'பிராமணீய இந்துத்துவ பாசிசம்' எனவோ 'நவீன பார்ப்பனீய இந்துத்துவ பாசிசம்' எனவோ வரையறுக்கப்படுவதில் ஒருவர் மாறுபட்டாலும் இந்தியாவில் இன்றைய பாசிசத்தின் பிரத்யேகப் பண்பு என இதை வாதிடுவதற்கு முடியும்.
ஆனால் 'பாசிசம்' என்ற சொல்லாக்கத்தோடு 'கார்ப்பரேட்' எனும் அடைமொழியை இணைத்து வரையறுப்பதற்கான பிரத்யேகத்தை அவ்வாறு வரையறுப்போர் முன்வைப்பதில்லை.
மாறாக இந்தியப் பெருமுதலாளிகளின்/ஏகாதிபத்தியவாதிகளின் நலனுக்காகவே 'கார்ப்பரேட் பாசிசம்' வருகிறது என்கின்றனர் இவர்கள். பாசிசமே அதற்குத்தானே வருகிறது. தனியாக 'கார்ப்பரேட்' என்ற அடைமொழியை அத்துடன் இணைப்பது ஏன்?
உண்மையில் 'கார்ப்பரேட்' என்பது ஒரு முதலாளிய தொழிற்நிறுவன கட்டமைப்பு வடிவம்தான். ஆண்டுக்கு ரூ. 200 கோடிக்கு மட்டும் தொழிலை நடத்தும் நிறுவனங்களையும் 'கார்ப்பரேட்' என்று தவறாகச் சொல்கிறார்கள். இன்னொரு புறத்தில் ஆண்டுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு தொழிலை நடத்தும் பெருந்தொழில் நிறுவனங்களையும் 'கார்ப்பரேட்' என்கிறார்கள்.
உண்மையில் இந்தியாவில ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் தொழிலை நடத்தும் பெருமுதலாளிகளாக இருப்போரால்தான் இந்தியாவில் பாசிசத்தை கொண்டு வருவதைப் பற்றி குறைந்தபட்சம் யோசிக்கவாவது முடியும். ஏனைய முதலாளிகளோ ஜனநாயக உரிமைகளை பறிப்பதைப் பற்றியோ குறிப்பிட்ட நிலைமைகளில் அதைச் செயற்படுத்துவதைப் பற்றியோதான் யோசிக்க முடியும்.
இந்நிலையில் இந்தியாவில் நூற்றுக்கணக்கான தொழிற்நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய தொழிற்நிறுவனங்களின் நிறுவனர்களும்(Promoters) பங்குதாரர்களும் நேரடியான அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடாமல் இயங்கும் கட்டமைப்பே 'கார்ப்பரேட்' ஆகும்(காண்க கீழ்வரும் இணைப்பு). பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாமல் 'கார்ப்பரேட்' கட்டமைப்பில் குறிப்பிட்டளவில் இயங்கும் தொழிற்நிறுவனங்களும் இருக்கின்றன.
எனினும் 'கார்ப்பரேட்' கட்டமைப்பில் இயங்கும் அனைத்து தொழிற்நிறுவனங்களும் பாசிசத்தை கொண்டுவந்துவிடமுடியாது. நிதிமூலதன ஏகபோகங்கள் என்ற வடிவை இவை எட்டிவிடும்பட்சத்தில் இத்தொழிற்நிறுவனங்கள் தமக்கு இடையிலான கழுத்தை நெரிக்கும் போட்டியின் விளைவாக வேறு வழியில்லாமல் பாசிசத்தை கொண்டுவருகின்றன. நிலவும் முதலாளிய ஜனநாயக உரிமையை இன்னொரு பிரிவு நிதிமூலதன ஏகபோகங்களுக்கும் பறித்துவிட்டு.
இங்ஙனம், பாசிசத்தை கொண்டுவரும் நிதிமூலதன ஏகபோகங்களும் அதனால் பாதிக்கப்படக்கூடிய இன்னொரு பிரிவு நிதிமூலதன ஏகபோகங்களும் 'கார்ப்பரேட்' கட்டமைப்பிலேயே இயங்கிவருகின்றன.
எனவே பொத்தாம்பொதுவாக 'கார்ப்பரேட்' பாசிசம் என வரையறுப்பது பொருத்தமாக இருக்காது.
அவ்வாறு வரையறுத்தால் 'பாசிசம்' எனும் கருத்தாக்கத்தை/சொல்லாக்கத்தை வெறும் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களுக்கானதாக புரிந்துகொண்டதாக பொருளாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக