ஞாயிறு, 27 மார்ச், 2022

உக்ரைன்-ரஷ்யப் போரில் 
சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடு! 
இது மட்டுமே சரியான ஒரே நிலைபாடு!
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
இக்கட்டுரையின் முதல் பகுதி அறிவியல் ஒளி 
ஏட்டில் மார்ச் 2022 இதழில் பிரசுரமானது. அது 
முகநூலிலும் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது 
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளியிடப் 
படுகிறது. இவ்விரண்டு பகுதிகளையும் வாசகர்கள் 
படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 
----------------------------------------------------------------------------------

உக்ரைனில் தலையிடும் ரஷ்யாவும் அமெரிக்காவும்!
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
இந்த மில்லேனியத்தின் தொடக்கத்தில் 
(ஜனவரி 2000) ரஷ்யா ஒரு போரில் தீவிரமாக 
ஈடுபட்டு இருந்தது.  செசன்யாவுடனான போர் 
அது. இந்த உலகில் மிக அதிகமான மலைகளைக் 
கொண்ட நாடு செசன்யா. ஒன்றல்ல இரண்டல்ல 
168 மலைகள் அங்கு உள்ளன.

செசன்யாவை ஆக்கிரமித்த ரஷ்யா, தனது 
ஆக்கிரமிப்புப் போரில் வெற்றி கண்டது.
விளைவு: செசன்யா ரஷ்யாவுக்குச் சொந்தமானது.

என்றாலும் செசன்யாவின் தேசபக்த சக்திகள் 
ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து தலைமறைவாக 
இருந்து கொண்டு கொரில்லா தாக்குதல்களை 
அவ்வப்போது நிகழ்த்தி வந்தன. (இது Insurgency
என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது). 2000ஆம் 
ஆண்டு முதற்கொண்டு பத்தாண்டுகளுக்குச் 
சற்று மேலும் நீடித்த இந்த கொரில்லாத்  
தாக்குதல்கள் காலப்போக்கில் மங்கி விட்டன.


கிரிமியா என்ற நாட்டை, குடியரசை, பிரதேசத்தை 
வாசகர்களில் சிலருக்கேனும் நினைவிருக்கலாம்.
சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக உக்ரைன் 
இருந்த அந்தக் காலத்தில் (1954-1991), உக்ரைனின் 
ஒரு பகுதியாக இருந்தது கிரிமியா. 1991ல் சோவியத் 
ஒன்றியம் உடைந்து சிதறியது. உக்ரைனின் 
பகுதியாகவே அப்போது கிரிமியா இருந்தது.

ஆனால் அப்படி இருக்க ரஷ்யா விடுமா? 
படையெடுத்துச் சென்ற ரஷ்யா கிரிமியாவைத் 
தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது 
(annexation of Crimea). இந்த இணைப்பு 2014 பிப்ரவரியில் 
நடைபெற்றது. ஆனால் ஐநாவின் 2014 தீர்மானம் 
கிரிமியாவை இன்னும் உக்ரைனின் ஒரு 
பகுதியாகவே காட்டுகிறது.

காட்டி என்ன பயன்? ஐநா சபையில் ரஷ்யாவுக்கு 
ரத்து அதிகாரம் (VETO POWER) உள்ளது. ரஷ்யாவைக் 
கண்டித்து ஒருபோதும் ஒரு தீர்மானத்தை ஐநாவில் 
இயற்ற முடியாது.   

செசன்யாவைப் போலவும் கிரிமியாவைப் 
போலவும்  உக்ரைனையும் சொந்தமாக்கிக் 
கொள்ள இயலும் என்ற நம்பிக்கையுடன் 
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ளது. இது 
நியாயமற்றதும் நிலப்பிரபுத்துவ மண்வெறி  
மேலோங்கி நிற்பதுமான ஆக்கிரமிப்புப் போர் ஆகும்.

ஆபத்தான ரஷ்ய ஏகாதிபத்தியத்தை அருகில் 
வைத்துக் கொண்டு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் 
உக்ரைனால் வாழ முடியவில்லை. கடந்த பல 
ஆண்டுகளாகவே உக்ரைனின் உள்நாட்டு 
விவகாரங்களில் தலையிட்டு, தன்னுடைய கைப்பாவை 
அதிபர்களை உக்ரைனில் ஆட்சியில் அமர்த்தி 
உக்ரைனின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் 
பெரும் அச்சுறுத்தலாக ரஷ்யா விளங்கி வந்தது.

தலைக்கு மேலே டிமாக்கிளிசின் வாளாக 
(Sword of  Damocles) ரஷ்யா  தொங்கிக் 
கொண்டிருக்கும்போது உக்ரைன் 
அமைதியாக இருக்க முடியாது. தன் நாட்டின் 
சுதந்திரத்தையும் இறையாண்மையையும் 
ரஷ்யாவிடம் இருந்து பாதுகாக்க உருப்படியாக 
ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் 
இருந்தது உக்ரைன்.

எனவே நேட்டோ ராணுவ ஒப்பந்தத்தில் இணைய 
முடிவு செய்து அதற்காக விண்ணப்பித்தது. 
உக்ரைனுக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை.
ராணுவ அரசியல் ரீதியாக இந்த உலகில் மெய்யான 
பன்மைத்துவம் எதுவும் இல்லை. எனவே பற்பல சிறந்த 
வழிகள் இருக்கும்போது, அவற்றை விட்டு விட்டு, 
நேட்டோவில் சேருவது என்ற முடிவை உக்ரைன் ஏன் 
எடுத்தது என்று கேட்க வழியில்லை. 

பனிப்போர்க் காலத்தில் நேட்டோவும் வேண்டாம்; 
வார்சா ஒப்பந்தமும் வேண்டாம் என்று முடிவெடுத்த 
நாடுகள் 1955ல் பாண்டுங் நகரில் கூடி ஒரு மாநாடு 
நடத்தின. இதன் தொடர்ச்சியாக 1961ல் அணிசேரா 
நாடுகளின் அமைப்பு உருவானது.

இந்தியப் பிரதமர் நேரு, எகிப்திய அதிபர் நாசர்,
யூகேஸ்லேவியா அதிபர் மார்ஷல் டிட்டோ, கானா 
அதிபர் நிக்ருமா, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ 
ஆகியோர் அணிசேரா நாடுகளின் இயக்கத்தை 
முன்னின்று உருவாக்கினார்கள்.

இன்று இந்த 2022ல் இது போன்ற வாய்ப்பு எதுவும் 
உக்ரைனுக்கு இருக்கவில்லை. (இன்றும் அணிசேரா 
நாடுகளின் அமைப்பு யாருக்கும் பயனின்றி 
பெயரளவில் நீடித்து வருகிறது)
      
எனவே தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் 
கொள்ள, ரஷ்யாவிடம் தனது பிரதேசங்களை 
இழந்து விடாமல் இருக்க, ரஷ்யாவுக்கு அடிமைப் 
படாமல் இருக்க நேட்டோவில் சேருவதைத் தவிர 
வேறு வழி எதுவும் உக்ரைனுக்கு இருக்கவில்லை.

மலைப்பிரதேசமான செசன்யாவால் தொடர்ந்து 
கொரில்லாத் தாக்குதல்களை நிகழ்த்தி ரஷ்யாவுக்கு 
பதிலடி கொடுக்க முடியும். ஆனால் உக்ரைன் ஒரு 
சமவெளிப் பிரதேசம். சோவியத் ஒன்றியத்தில் 
இருந்தபோது, சோவியத்தின் தானியக்  
களஞ்சியமாகத் திகழ்ந்தது உக்ரைன். கொரில்லாப் 
போருக்கான புவியியல் ரீதியான நில அமைப்பு
உக்ரைனில் கிடையாது. எனவே போர் என்று வந்தால், 
மரபான போரை, அதன் அத்தனை பாதக 
அம்சங்களுடனும் எதிர்கொள்வதைத் தவிர 
உக்ரைனுக்கு வேறு வழி இல்லை. மேற்கூறிய 
காரணிகள் அனைத்தும் நேட்டோவை நோக்கி 
உக்ரைனைத் தள்ளின.

உக்ரைன் சந்திக்கும் பிரச்சினை உக்ரைனுக்கு
மட்டும் பிரத்தியேகமானது அல்ல. ஏகாதிபத்தியத்தின் 
பார்வைக்கு இலக்காகும்  எந்த ஒரு சிறிய நாடும் 
உக்ரைன் போன்று இதே பிரச்சினையை 
எதிர்கொள்ள நேரிடும். 

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்!
இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிந்து தமிழ்நாடு 
தனி நாடாக ஆகிவிட்டது என்று முட்டாள்தனமாகக் 
கற்பனை செய்வோம். தமிழ்நாட்டின் புவியியல் 
முக்கியத்துவம் கருதி, இந்தியாவும் மற்றும் உலகின் 
பல ஏகாதிபத்திய நாடுகளும் தமிழ்நாட்டின் மீது 
கண்ணாக இருந்து, தமிழ்நாட்டின் சில 
பகுதிகளை அபகரிக்க நினைக்கும். 

அப்போது தமிழ்நாடு எப்படி தன்னைக் காத்துக் 
கொள்ளும்? ஏதேனும் ஒரு ராணுவ ஒப்பந்தத்தை 
ஏதேனும் ஒரு ஏகாதிபத்திய நாட்டுடன் செய்து கொண்டு   
தமிழ்நாடு தன்னைக் காத்துக் கொள்ள முயலும்.
அல்லது நேட்டோ போன்ற ராணுவ ஒப்பந்தத்தில் 
தமிழ்நாடு இணைய வேண்டியது வரும். இதற்காகத் 
தமிழ்நாட்டைக் குற்றம் சொல்ல இயலுமா? 


சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், பல 
சந்தர்ப்பங்களில், அவர்களுக்குச் சரியான option 
கிடைப்பதில்லை.They have to choose between the 
devil and the deep sea. எனவே உக்ரைன் போர் 
விவகாரத்தில் உக்ரைனைக் குற்றம் சாட்டுவது 
பேதமையுள் எல்லாம் பேதைமை ஆகும். 
புத்தி பேதலித்துப்போன குட்டி முதலாளித்துவம் 
இத்தகைய சர்வ மூடத்தனத்தில் இறங்கும்.

உக்ரைன் பிரச்சினைக்கு ஒரு உலகளாவிய 
பரிமாணம் உண்டு. நாளைய உலகில் மேலும் 
மேலும் உக்ரைன்கள் தோன்றும். அதற்கான 
சூழல் நிரந்தரமாகவே உள்ளது. தங்களை 
விழுங்கக் காத்திருக்கும் ஒரு ஏகாதிபத்தியத்திடம் 
இருந்து தப்பிக்க இன்னொரு ஏகாதிபத்தியத்திடம் 
அடைக்கலம் தேட வேண்டிய நிலைக்கு சிறிய 
நாடுகள் தள்ளப்படும். எனவே 
இப்பிரச்சினையில் சிறிய நாடுகளைக் குற்றம் 
கூற முற்படுவது மூடத்தனத்தின் உச்சம் ஆகும்.  

எனவே உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் முழுமையான 
குற்றவாளி ரஷ்யாவே. சூழ்நிலையின் கைதியாக 
இருக்கும் உக்ரைனைக் குற்றம் சாட்ட ஏதுமில்லை.
உக்ரைனைக் குற்றம் சாட்ட விரும்புவோர், 
நேட்டோ ஒப்பந்தத்தில் சேருவதைத் தவிர 
உக்ரைனுக்கு வேறு சிறந்த வழி என்ன இருந்தது 
என்று சொல்ல வேண்டும்.     
  
இந்தியாவில் நக்சல்பாரிக் கட்சிகள் நிறையவே 
உள்ளன. இவை மக்கள் ராணுவத்தைக் கட்டி 
அமைத்துள்ளன. இப்படைகளிடம் அதி நவீன 
ஆயுதங்கள் உள்ளன. இந்த நக்சல்பாரிக் குழுக்களின் 
கூட்டுப்படையை பிரிகேடியர் கார்முகில், பிரிகேடியர் 
மருதையன் தலைமையில் உக்ரைனில் கொண்டு
போய் நிறுத்தி, ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து 
உக்ரைனைப் பாதுகாக்கலாம் என்று நக்சல்பாரிகள் 
உறுதியளித்தால் உக்ரைன் ஏன் போய் 
நேட்டோவில் சேரப் போகிறது?  

வேறு வழியின்றி விபீஷணன் இராமனிடம் 
அடைக்கலம் ஆனதைப் போல, உக்ரைன் 
அமெரிக்காவிடம் அடைக்கலம் புகுந்தது. 
ஆனால் உக்ரைன் விபீஷணன்தான் என்றாலும் 
அமெரிக்கா இராமன் அல்ல என்பதுதான் இதில் சோகம்.

"குகனொடும் ஐவரானோம் 
முன்புபின் குன்றுசூழ்வான் 
மகனோடும் அறுவரானோம் 
எம்முழை அன்பின்வந்த 
அகனமர் காதல்ஐய 
நின்னொடும் எழுவரானோம்"
என்று இராமன் புளகாங்கிதம் அடைந்ததைப்போல 
உக்ரைன் தன்னிடம் வந்ததும் அமெரிக்காவுக்கு 
goosebumps எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

காவிய இராமன் பறவை ஜடாயுவையும் தன் சுற்றமாகக் 
கருதினான். ஆனால் கயமை மிகுந்த அமெரிக்காவுக்கு 
எதிலும் ஆதாயக் கண்ணோட்டமே! "நம்மிடம் வருவதைத் 
தவிர வேறு வழியில்லை உக்ரைனுக்கு. இனி அவனை 
எப்படியெல்லாம் ஒட்டச் சுரண்ட முடியுமோ 
அப்படியெல்லாம் ஒட்டச் சுரண்டிவிட வேண்டியதுதான்" 
என்று குரூர மகிழ்வை எய்தியது அமெரிக்கா 
(US was sadistically delighted).

அமெரிக்க ரஷ்யா இரண்டுமே குரூரம் மிகுந்த கொடிய 
முதலாளித்துவத்தின் உயிருள்ள உதாரணங்கள்.
சகல விதமான மனித உறவுகளையும் பண உறவுகளாக 
மட்டுமே ரொக்க உறவுகளாக மட்டுமே இரு நாடுகளும் 
பார்க்கின்றன. தன் பிறப்பு முதலே ஒரு முதலாளித்துவ 
நாடாக இருக்கிற அமெரிக்கா ஈவிரக்கமற்ற கொடிய 
சுரண்டலின் வடிவமாக ஈர்ப்பதில் வியப்பில்லை.

ஆனால் தன் வாழ்வில் எழுபது ஆண்டுகாலமாக  
(1917-1991) சோஷலிச நாடாக இருந்த ரஷ்யா, 
சுரண்டலுக்கு எதிரான நாடாக இருந்த ரஷ்யா,
சோஷலிஸப் பண்பாட்டின் சுவடே இல்லாமல், 
அமெரிக்காவை விஞ்சும் குரூர முதலாளித்துவ
நாடாக இருப்பதற்கு என்ன நியாயத்தை நம்மால் 
கற்பிக்க இயலும்?

அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளுமே மனித குல 
எதிரிகள்.  உக்ரைனின் பிரதேசங்களை ஆக்கிரமித்து 
தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் பொருட்டே 
இவ்விரு நாடுகளும் இந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
ரஷ்யா தானே நேரடியாக ஆக்கிரமிப்புப் போரை 
நடத்துகிறது. அமெரிக்கா தன்னுடைய நேட்டோ 
கூட்டாளிகளுடன் சேர்ந்து உக்ரைன் சார்பாக  
ஒரு பதிலிப்போரை நடத்தி வருகிறது. 

இவ்விரு நாடுகளுக்கும், உக்ரைன்-ரஷ்ய எல்லையில் 
அமைந்துள்ள லுஹான்ஸ்க் (Luhansk), டோனெட்ஸ்க் 
(Donetsk) மாகாணங்களின் பகுதிகளைக் கைப்பற்றுவதே 
இறுதி நோக்கம். இவ்விரு மாகாணங்களின் 
எல்லையோரப் பிரதேசங்களில் உக்ரைன் அரசை 
எதிர்த்து, ரஷ்ய ஆதரவுடன் ஆயுதப் போராட்டங்கள் 
நடந்து வருகின்றன. 

உக்ரைனின் அக்கிலீஸின் பாதங்களாய் (Achilles' heels) 
இருக்கும் இப்பிரதேசங்களை ரஷ்யா கைப்பற்றுவதுடன் 
போர் அநேகமாக முடிவுக்கு வரும். அப்போது 
உக்ரைனின் வேறு பிரதேசங்களை அமெரிக்கா 
தனக்காக எடுத்துக் கொண்டிருக்கும். இந்தப் போர் 
இப்படி முடிவடையவே வாய்ப்புகள் அதிகம்.  

ரஷ்யாவின் போரும் நாஷ் சமநிலையும்!
--------------------------------------------------------------
உக்ரைன்-ரஷ்யப்போர் 2022 பெப்ரவரி 24ல் தொடங்கியது
இன்று (27.03.2022) 32ஆவது நாளாக போர் தொடர்ந்து 
நடக்கிறது. இப்போரில் ரஷ்யாவும் அமெரிக்காவும் 
எப்படி நடந்து கொள்கின்றன என்பதை உன்னிப்பாகப் 
பார்க்கும்போது அவர்களின் எச்சரிக்கையான நடத்தை 
பல விஷயங்களை உணர்த்துகிறது. 

அ) போர் தொடங்கி 32 நாளாகியும் உக்ரைனின் 
எல்லைக்கு உள்ளாகவே போர் நடக்கிறது. உக்ரைனைத் 
தாண்டவில்லை (confined to Ukraine). எந்த ஒரு நேட்டோ 
நாட்டின் மீதும் கவனக் குறைவாகக் கூட தாக்குதலோ 
தாக்குதலுக்குரிய சூழலோ ஏற்பட்டு விடாமல் 
அதீத எச்சரிக்கையுடன் ரஷ்யா நடந்து கொள்கிறது.     
 
ஆ) அமெரிக்கா தன் நேட்டோ கூட்டாளிகளின் மூலமாக
இப்போரில் பங்கெடுக்கவில்லை. போரை உக்ரைன் 
மட்டுமே நடத்துகிறது. ரஷ்யா உக்ரைன் ஆகிய இரண்டு 
நாடுகளைத்தவிர வேறெந்த நாடும் இப்போரில் 
குதிக்கவில்லை.
     
இ) ரஷ்யா அணுஆயத நாடு. உக்ரைன் அணுஆயுத 
நாடு அல்ல. சோவியத் ஒன்றியத்தில் இருந்து 
பிரிந்தபோது தன் நாட்டில் இருந்த பெரும் 
எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களைத் தங்களுக்கு 
வேண்டாம் என்று ரஷ்யாவிடமே திரும்ப ஒப்படைத்து 
விட்டது உக்ரைன். என்றாலும் நேட்டோ ஒப்பந்த 
ஷரத்துக்களின்படி, ஓர் உறுப்பு நாட்டுக்கு அணுஆயுதம் 
தேவையென்றால், நேட்டோ அதை வழங்கும்.

ஈ) எனினும் இந்தப்போரில் அணுஆயுதம் பயன்படுத்தப்படும் 
என்று நினைப்பது அடிமுட்டாள்தனம் ஆகும். அணு ஆயுத 
நாடுகள் அனைத்தும் MAD doctrineஐப் பின்பற்றுபவை.
(MAD doctrine பற்றி இக்கட்டுரைத் தொடரின் முதல் 
கட்டுரையில் விளக்கப் பட்டுள்ளது).   

ஆக மேற்கூறிய அனைத்துக் காரணிகளையும் மிகவும் 
கவனத்துடன் பரிசீலித்த பின்னர் பின்வரும் முடிவுகளுக்கு 
வந்து சேருகிறோம்.

நாஷ் சமநிலையைப் பேணுவதில் சம்பந்தப்பட்ட 
அனைத்து நாடுகளும் மிகவும் கவனமாகவும் 
கறாராகவும் உள்ளன. எந்த ஒரு இடத்திலும் 
எள்முனை அளவேனும் நாஷ் சமநிலையில் இருந்து 
விலகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு 
ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, நேட்டோ ஆகிய 
அனைவருக்கும் உள்ளது. 

எனவே எந்த நிலையிலும் உக்ரைன்-ரஷ்யா போர் 
உலகப்போராக மாறாது என்பதும் அணுஆயுதம் 
பயன்படுத்தப் படாது என்பதும், நாஷ் சமநிலை 
மீறப்படாமல் இருப்பதில் இருந்து புலப்படுகிறது.

உலகப்போரின் சகாப்தம் முடிந்து விட்டது என்றும் 
இனி இந்த உலகில் உலகப்போருக்கு எள்முனை
அளவேனும் இடமில்லை என்றும் நியூட்டன் அறிவியல் 
மன்றம் முன்வைத்த கோட்பாடு (theory) உக்ரைன்-ரஷ்யப் 
போரின் மூலம் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. 
(முற்றியது) 
----------------------------------------------
உக்ரைன்-ரஷ்யப் போரில் 
சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடு என்ற கட்டுரை 
இந்த இரண்டாம் பகுதியுடன் நிறைவடைகிறது.  
***************************************************
பின்குறிப்பு:
1) இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 
Modern Military Strategy,  MAD doctrine, Game theory, 
Nash equilibrium ஆகிய subjectsல் நல்ல புலமை 
தேவைப்படும். வாசகர்கள் பிறழ்புரிதலைத் 
தவிர்க்கவும்.

2) உக்ரைன்-ரஷ்யப் போர் குறித்து 
இக்கட்டுரையாசிரியர் எழுதிய ஏனைய 
கட்டுரைகளையும் படிப்பது நல்லதொரு 
புரிதலை ஏற்படுத்தும். பிறழ்புரிதலைத் 
தடுக்கும்.  
------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக