வெள்ளி, 25 மார்ச், 2022


உலகப்போர் ஏன் வராது?
உலகப்போரின் சகாப்தம் முடிந்து விட்டது!
அணுஆயுத உலகப்போருக்கான நிகழ்தகவு  பூஜ்யமே!
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
முன்குறிப்பு:
நாஷ் சமநிலை பேணப்படும் வரை உலகப்போர் வராது 
(அறிவியல் ஒளி மார்ச் 2022) என்ற என் கட்டுரை
மீதான விளக்கம்.
--------------------------------------------------------------   
இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்தபோது
பாசிசத்தை வீழ்த்திய சோவியத் ஒன்றியம் 
உலக நாடுகளின் மதிப்பைப் பெற்றது. தொடர்ந்து 
முதலாளித்துவ முகாம், சோஷலிச முகாம் என்று 
உலகம் இரண்டு முகாம்களாகச் செயல்பட்டு வந்தது.  
ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில், ரத்து 
அதிகாரம் (veto power) உள்ள ஐந்து நாடுகளில் 
சோவியத் ஒன்றியமும் சீனாவும் இருந்தன.

சுருங்கக் கூறின், அமெரிக்கா தலைமையிலான
முதலாளித்துவ முகாம் என்றும் சோவியத் ஒன்றியம் 
தலைமையிலான சோஷலிச முகாம் என்றும் உலகம் 
இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டுக் கிடந்தது.
அமெரிக்கா சோவியத் ஆகிய நாடுகளுக்கு இடையில்
பனிப்போர் (cold war) எனப்படும் கெடுபிடிப்போர் 
நடந்து கொண்டே இருந்தது.

ஆனால் 1990ன் தொடக்கத்தில், சோவியத் ஒன்றியம்
உடைந்து சிதறியது அதன் குடியரசுகள் அத்தனையும் 
தனி நாடுகள் ஆயின. ரஷ்யாவில் சோசலிசம் 
ஒழிக்கப்பட்டு முதலாளித்துவமும் பல கட்சி
ஆட்சி முறையும் நடைமுறைக்கு வந்தன. 

சீனாவிலும் மாவோவின் மறைவுக்குப் பின்னர், 
முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் ஏற்படுத்தப் 
பட்டது. எனவே 1990களின் தொடக்கத்தில் உலகில் 
நிலவி வந்த இரண்டு முகாம்கள் என்ற நிலை 
மாறியது. உலகில் சோஷலிச முகாம் இல்லாத 
நிலையில், அமெரிக்கா  தலைமையிலான 
முதலாளித்துவ முகாம் மட்டுமே ஒற்றை முகாமாக
உலகில் நிலவி வருகிறது.

இன்று உலகில் ஒரே ஒரு முகாம்தான். அதுவும் 
முதலாளித்துவ முகாம்தான். உலக வர்த்தகக் கழகத்தில் 
(WTO) இன்று 164 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா, வெனிசுலா ஆகிய 
நாடுகள் WTOவில் உறுப்பினராக உள்ளன. நாடுகளுக்கு 
இடையிலான வர்த்தகம் உலக மயமாகி உள்ளது.
எந்த ஒரு நாடும் எந்த ஒரு நாட்டிலும் சென்று 
வியாபாரம் செய்யலாம். 

அமெரிக்கா சீனா பனிப்போர் நிலவிய காலத்தில் 
இரு நாடுகளும் அணுஆயுதப் போட்டியில் 
இறங்கின. இன்று அணுஆயுதப் போட்டி எதுவும் 
இல்லை. மாறிய சூழ்நிலையில் அணுஆயுதங்களும் 
தமது முந்தைய பாத்திரத்தை வகிக்க இயலவில்லை.

மேற்கூறிய காரணிகள் அனைத்தையும்  சேர்த்து 
யோசித்துப் பாருங்கள். உலகப்போர் என்பது 
எப்போது வரும்? இரண்டு வலுவாவான எதிரிகள் 
இருந்தால் மட்டுமே ஒரு உலகப் போருக்கான 
முகாந்திரம் இருக்கும்.  இரண்டு வலுவான எதிரிகள்
இருந்தால் மட்டுமே ஒரு உலகப்போர் வரும்.

இன்றைய உலகில் கடும் முரண்பாடுகளைக் கொண்ட,
அதாவது தீவிரமான பகை முரண்பாடுகளைக் 
கொண்ட, ஒருவருக்கொருவர் எதிரிகளான இரண்டு 
நாடுகளோ, இரண்டு முகாம்களோ இருக்கின்றனவா?
இல்லை. எனவே உலகப்போர் எப்படி வரும்? வராது.

இதன் பொருள் போர்களே இல்லாத உலகைச் சமைத்து 
விட்டோம் என்பதல்ல.போர்கள் இருக்கும். ஆனால் 
உலகப் போர் இருக்காது. போர் என்பதும் உலகப்போர் 
என்பதும் வேறு வேறானவை (qualitatively different). 
நாடுகளுக்கு இடையிலான போர் உலகப்போராக 
பரிணமிக்காது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் 
போர் நடைபெற்றது. அது உலகப்போராகி விட்டதா?
இல்லையே!

எனவே உலகப்போர் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
கணித ரீதியாக இதைச் சொல்வதானால்,  சமகால 
உலகில் எந்த ஒரு நாடும் நாஷ் சமநிலையைப் 
பேணவே விரும்பும்; அதை ஒருபோதும் மீறாது.

ஆக உலகப்போர் வராது.
உலகப்போரின் சகாப்தம் முடிந்து விட்டது.
அணுஆயுத உலகப்போர் என்பதற்கு வாய்ப்பே 
இல்லை. அதற்கான நிகழ்தகவு பூஜ்யம்.
மேலே கூறிய அனைத்தையும் நிரூபித்து 
உள்ளேன். QED.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு: 
எனது தேற்றத்தை DISPROVE செய்ய முன்வருவோரை 
வரவேற்கிறேன்.
*************************************************     
 

     
     

  
 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக