சீத்தாராம் யெச்சூரி/ தீக்கதிர்
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு,ஐரோப்பா மீதும் உலக அரசியலிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுப் போக்குகளை உருவாக்கியுள்ளது.
ஆத்திரமூட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என எதுவாக இருந்த போதிலும், ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இத்தகைய ஒரு பெரிய அளவிலான - முழு அளவிலான ராணுவ நடவடிக்கை என்பது, பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழியல்ல.
உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்வதும், ராஜ்ய ரீதியிலான பேச்சுக்களை துவக்கி தொடர் பேச்சுவார்த்தை நடத்துவதும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரண்டு முக்கிய அம்சங்கள்
உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு காரணமான இரண்டு அம்சங்களை பற்றி நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
முதலாவது, சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது முதல் ஏற்பட்ட நிகழ்வுப் போக்குகள்.
சோசலிச சோவியத் குடியரசுகளின் ஒன்றியம் (சோவியத் ஒன்றியம்) இருந்த போது, வார்சா ஒப்பந்தம் கையெழுத்தானது. சோவியத் ஒன்றியமும் அதன் கூட்டாளிகளாக இருந்த கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் இணைந்து வார்சா ஒப்பந்த கூட்டணியை உருவாக்கின.
சோசலிச நாடுகளின் இந்த அணிசேர்க்கைக்கு எதிராக ராணுவரீதியாக தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனும், அன்றைய காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவந்த பனிப்போரை தீவிரப்படுத்தும் நோக்கத்துடனும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நேட்டோ என்று சொல்லப்படுகிற வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினை உருவாக்கியது.
நேட்டோ ராணுவக் கூட்டணி உருவானதன் நோக்கம் இதுதான் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
சோவியத்தே இல்லாமல் போன பின்
எதற்காக நேட்டோ?
நேட்டோ என்பது பனிப் போர் காலத்தில் சோசலிசத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வந்த தத்துவார்த்தப் போரின் ராணுவ அணி சேர்க்கையே ஆகும்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, சோசலிச நாடுகளின் வார்சா ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. எனவேதான், அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கூட்டணியும் தொடர்ந்து நீடிப்பதற்கு
எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறுகிறோம்.
அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த காரணமே இல்லாமல் போன பிறகு - அதாவது சோவியத் ஒன்றியமே இல்லாமல் போன பிறகு அது கலைக்கப்படுவதுதான் சரியானது.
இதுதொடர்பாக 1992 ஜனவரி துவக்கத்தில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் :கம்யூனிஸ்ட் கட்சியின் 14 ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது
“வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டுவிட்டது; ஆனால் நேட்டோ இன்னும் செயலூக்கத்துடன் நீடிக்கிறது, வளைகுடா போரில் அது ஒன்றுபட்டு செயலாற்றவும் செய்கிறது.
நேட்டோ சக்திகள் தங்களது நீண்டகால சூழ்ச்சி திட்டங்களை மறுசீரமைத்துக் கொள்ளவும், அனைத்து உறுப்பு நாடுகளின் ராணுவத் துருப்புகளை ஒருங்கிணைத்து உலக நாடுகளில் மிக வேகமாக தலையீடு செய்வதற்காக அதிரடி படையை கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளன.”
அத்தீர்மானம் ஒரு அறைகூவலையும் விடுக்கிறது
“அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் கூட்டாளிகளும் மிக வேகமாகவும், பெரிய அளவிலும் உலகளாவிய முறையில் உருவாக்கியுள்ள ராணுவ தளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று உலக சமாதான சக்திகள் வலியுறுத்த வேண்டும். புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள்; ராணுவ துருப்புகளின் எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைத்திடுங்கள்;
அணு ஆயுதங்களை அழித்திடுங்கள் என்றும் அமைதி சக்திகள் வற்புறுத்த வேண்டும். இந்த இலக்குகளை நிறைவேற்றிட உலக சமாதான சக்திகள் அவசியம் வலுப்படுத்தப்பட வேண்டும்.”
அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் தனது தீராத வேட்கையுடன், பனிப்போருக்கு பிந்தைய மோதலை இடைவிடாமல் தொடரும் நோக்கத்துடன், நேட்டோ ராணுவக் கூட்டணியை தக்கவைத்து கொள்வது என்று தீர்மானித்தது; அதுமட்டுமல்ல, அதை மேலும் வலுப்படுத்தவும், உலகம் முழுவதிலும் - குறிப்பாக ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் ராணுவ நடவடிக்கைகளுக்காக அதை பயன்படுத்திக் கொள்வது என்றும் தீர்மானித்தது.
கலைப்பதற்குப் பதிலாக
விரிவாக்கியது அமெரிக்கா
நேட்டோ ராணுவக் கூட்டணியை கலைப்பதற்கு பதிலாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வதில் தீவிர முனைப்பு காட்டியது. இது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஜனாதிபதி கோர்ப்பசேவுக்கு அமெரிக்கா அளித்த வாக்குறுதிக்கு நேரெதிரானது.
1990 இல் நேட்டோவில் 16 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. 1999இல் போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.
2004 இல் பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவேகியா ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டன.
2009 இல் அல்பேனியாவும், குரேசியாவும் இணைந்தன.
2017 இல் மாண்டிநீக்ரோவும் வடக்கு மாசிடோனியாவும் இணைந்தன.
2021 இல் போஸ்னியாவும், ஹெர்ஸிகோவினாவும் இணைக்கப்பட்டன.
இப்படியாக, உக்ரைன் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளை தவிர கிட்டத்தட்ட கிழக்கு ஐரோப்பியாவின் அனைத்து நாடுகளும் நேட்டோவின் உறுப்பு நாடுகளாக மாற்றப்பட்டன.
இந்த நாடுகளின் ரஷ்ய எல்லைகளில் தற்சமயம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் நேட்டோ ராணுவத் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில், 2008 இல் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடும் மற்றொரு நாட்டின் பாதுகாப்பை கபளீகரம் செய்து வலுப்படுத்தக் கூடாது என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யா முன்மொழிந்தது.
எனினும், இது மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேட்டோ ராணுவக் கூட்டணியில் உக்ரைன் நுழைவது தனது பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் மிகக் கடுமையான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று ரஷ்யா மிகச் சரியாக உணர்ந்தது; எதிர்த்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பரில் ரஷ்யாவுக்கும், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உத்தரவாதங்களை உருவாக்குவது தொடர்பாக ரஷ்யா சில முன்மொழிவுகளை பரிந்துரைத்தது:
(1) நேட்டோ கூட்டணியை மேலும் விரிவாக்கம் செய்யக் கூடாது.
(2) ரஷ்ய எல்லைகளில் உயிர் பறிக்கும் கொடிய ஆயுதங்களை நிலைநிறுத்தக் கூடாது.
(3) நேட்டோ - ரஷ்யா இடையிலான முதன்மை சட்டம் 1997க்கு அனைவரும் திரும்ப வேண்டும்.
ரஷ்யா முன்மொழிந்த இந்த பாதுகாப்பு உத்தரவாதப் பரிந்துரைகளை அமெரிக்கா நிராகரித்தது மட்டுமல்ல; உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக அதிகாரக் கும்பல்களை தீவிரமாக ஊக்குவித்தது;
அந்த நாட்டில் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டு ஒரு கலகத்தை தூண்டிவிட்டு அரங்கேற்றியது.
அதன்தொடர்ச்சியாக, உக்ரைன் அதிகாரப்பூர்வமாக நேட்டோவில் இணையாமலே, நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் கட்டமைப்பானது அந்த நாட்டிற்குள் வளரத் துவங்கியது.
இத்தகைய பகைமைப் போக்குகளை புடினும் ரஷ்யாவும், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பார்த்தனர். இதுதான் தற்போதைய ராணுவ நடவடிக்கைகளுக்கும் படையெடுப்பிற்கும் இட்டுச் சென்றுள்ளது.
எனவே, இந்தப் போர் அடிப்படையில் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா - நேட்டோ கூட்டணிக்கும் இடையிலானது என்பதே.
உக்ரைன் என்பது இந்தப் போர் அரங்கேறும் இடம் என்பது மட்டுமே.
“மகா ரஷ்யா”வை மீட்கும் நோக்கத்துடன்
கூடிய பதிலடி
இந்தப் பிரச்சனையின் இரண்டாவது அம்சம், உக்ரைன் என்பது ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று புடின் கருதுவதும்; அந்த அடிப்படையில் உக்ரைனும் இணைந்த பழைய மகாரஷ்யாவை மீட்பது என்றும் புடின் பின்பற்றத் துவங்கியுள்ள அவரது பதிலடித் திட்டம். (இழந்த பகுதியை மீட்பதற்காக பதிலடி கொடுப்பது என்ற கொள்கை)
இன்னும் விரிவாக சொல்லப்போனால், ரஷ்யாவின் வரலாறு, மதம் உள்ளிட்ட அனைத்துமே இன்றைய உக்ரைனின் பகுதிகளாக உள்ள நிலங்களிலிருந்து பரவியவைதான். ரஷ்யாவும் உக்ரைனும் பல நூற்றாண்டு காலமாக ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த வரலாற்றினைக் கொண்டவை.
உக்ரைனின் மேற்குப் பகுதியில் பெருமளவிற்கு கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள் என்றால் கிழக்குப் பகுதியில் பெருமளவிற்கு ரஷ்ய பழைமைவாத மதத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கிறார்கள்.
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உக்ரேனியன் மொழி பிரதானமாக உள்ளது. கிழக்குப் பகுதியில் ரஷ்ய மொழி முதன்மையாக உள்ளது.
இந்த நிலையில், இழந்த பகுதிகளை மீட்கும் நோக்கத்துடன் கூடிய பதிலடித் திட்டத்தைக் கொண்டுள்ள புடின் 2022 பிப்ரவரி 21 அன்று ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய உரையில், தற்போதைய உக்ரைனின் உருவாக்கம் பற்றி விரிவாக பேசினார்.
உக்ரைன் என்ற தனி நாடு உருவாக்கப்பட்டதற்கு போல்ஷ்விக்குகள்தான் இதற்கு காரணம் என்றும், இன்றைய உக்ரைன் “விளாடிமிர் லெனினது உக்ரைன்” என்றும் கூறினார்.
ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு அறிவியல் பூர்வமான மற்றும் ஜனநாயகப்பூர்வமான லெனினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தில் இணைந்து கொண்ட குடியரசுகளின் தேசிய இனங்களது சுய நிர்ணய உரிமை உட்பட அவர்கள் இதிலிருந்து பிரிந்து போவதற்கான உரிமை உட்பட 1922இல் உருவாக்கப்பட்டு 1924ல் நிறைவேற்றப்பட்ட சோவியத் ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்தது.
இந்த கோட்பாட்டினை, தவறு என்று தனது உரையில் புடின் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்ல, மேற்கண்ட கோட்பாடுதான் “அடிப்படைக் காரணியாக அமைந்த பாவம்” என்று அதற்கு ஒரு கற்பிதத்தை புடின் அளிக்கிறார்; அதுதான் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் தேசியவாத சக்திகள் தலைதூக்குவதற்கு வித்திட்டது என்றும் அவர் கூறுகிறார்.
1997 சோசலிசப் புரட்சியின் மாபெரும் வெற்றியானது அன்றைய ஏகாதிபத்திய ஆட்சியாளரான ஜார் மன்னராட்சியின் கனவாக இருந்த மகா ரஷ்யா என்ற நோக்கத்தை வீழ்த்தியது என்றும் அதற்கு காரணம் லெனினும், போல்ஷ்விக்குகளும்தான் என்றும் புடின் தனது பேச்சின் மூலம் முன் வைக்கிறார் என்பது தெளிவாகிறது.
அந்த அடிப்படையில் தற்போது அதை மீட்க வேண்டும் என்று அவர் கூறுவது இன்றைய உலகில் எந்தவிதத்திலும் எட்டமுடியாத இலக்கே ஆகும்.
சண்டை நிறுத்தம் அறிவித்திடுக;
அமைதியைக் கொணர்க!
எனவே தற்போதைய படையெடுப்பு மேலும் தொடராமல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமானது; உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் மிகக்கொடூரமான பின்விளைவுகளை உருவாக்கிவிடாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
இந்த மோதலைத் தூண்டிவிடும் சக்திகள் பெரிய அளவிற்கு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அவை உலகளாவிய முறையில் மோதல்களை மேலும் தூண்டுவதற்கு தூபம் போடுகின்றன. இது அனைத்து வகைகளிலும் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும்.
உடனடி சண்டை நிறுத்தமும் ரஷ்யா தனது படையெடுப்பைத் திரும்பப் பெறுவதும் மிகவும் அவசியமானது.
இத்தகைய பின்னணியில், நேட்டோ ராணுவக் கூட்டணி மேலும் கிழக்கு நோக்கி தன்னை விரிவாக்கிக் கொள்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
ரஷ்யாவின் எல்லைகளில் அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் ஏவுகணைக் கட்டமைப்புகளையும் கொடிய ஆயுதங்களையும் குவிப்பதை நேட்டோ கட்டாயமாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உக்ரைன், ஒரு நடுநிலை இறையாண்மை அரசாக அவசியம் இருக்க வேண்டும்; ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் நேட்டோவின் ஏவுகணை கட்டமைப்புகள் மற்றும் இதர ஆயுத கட்டமைப்புகளை தனது நாட்டில் அமைப்பதை எந்தவிதத்திலும் அனுமதிக்கக் கூடாது.
ஏற்கெனவே சமீப சில ஆண்டுகாலமாக உக்ரைனில் உருவாக்கப்பட்டுள்ள நேட்டோ ராணுவத்தின் அடிப்படைக் கட்டமைப்பு முற்றாக கலைக்கப்பட வேண்டும்.
அமைதியை உறுதி செய்யும் விதத்தில் பேச்சுவார்த்தையை தொடர்க!
தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. ஆனால் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையை தொடர்வது என இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 2, 3 தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் அதேவேளையில், போர் என்பது துரதிருஷ்டவசமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றத்தை எட்டி, அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுதான் அனைத்து தரப்பினருக்கும் - இந்த பிரச்சனையில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினருக்கும் - குறிப்பாக, அமெரிக்கா மற்றும் நேட்டோ உட்பட அனைவருக்கும் அவசியமானதாகும்.
இந்திய அரசு அனைத்து இந்தியர்களையும் துரிதமாக மீட்க வேண்டும்
உக்ரைனின் கார்கிவ் நகரில் குண்டுவீச்சில் சிக்கி 21 வயது இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தது மிகப்பெரிய துயரம் ஆகும். அவரது மரணத்திற்கு இந்திய நாடே தனது அஞ்சலியையும் துயரத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றது.
வளைகுடா யுத்தம், லிபியா நெருக்கடி உட்பட இதுபோன்ற ஒவ்வொரு தருணத்திலும் அந்த இடங்களில் சிக்கியிருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை உடனடியாக, பத்திரமாக மீட்ட பெருமை இந்தியாவுக்கு உண்டு!
அந்த அடிப்படையில் இந்திய அரசு ஒரே மனதுடன், போர்க்கால அடிப்படையில் அனைத்து இந்தியர்களையும் உடனடியாகவும் துரிதமாகவும் மீட்க கவனம் செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக