புதன், 1 ஜூலை, 2020

(11) மாக்சிம் கார்க்கியும் ரஜனிகாந்தும்!
அடுத்த போப்பாண்டவராக மாக்சிம் கார்க்கி!
ஞானி நாகராஜனுக்கு கருத்துக்கடன் கொடுத்தது யார்?
ஞானிக்கு மறுப்பு கட்டுரைத்தொடர்: எண்-11
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
ஆன்மிக அரசியல் என்பது புதிதல்ல. ஆயிரமாயிரம்
ஆண்டுகளாக இருந்து வருவதுதான்.கூத்தாடி
ரஜனியின் ஆன்மிக அரசியல் மிகுந்த இளக்காரத்தைச்
சந்தித்தது. எனினும் இது போன்ற ஒரு ஆன்மிக
அரசியல் ரஜனிக்கு ஒரு நூற்றாண்டுக்கு
முன்பே முற்றிலும் எதிர்பாராத ஒரு இடத்தில்
இருந்து வந்தது.
மார்க்சியத்தின் இன்னொரு போப்பாண்டவராக
அவதாரம் எடுத்த ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம்
கார்க்கிதான் ஆன்மிக அரசியல் பற்றி ஒரு
தத்துவத்தை முன்மொழிந்தவர்.மார்க்சியப்
போப்பாண்டவர் என்று காரல் காவுத்ஸ்கி
ரஷ்ய போல்ஷ்விக்குகளால் அழைக்கப் பட்டார்
என்று ஏற்கனவே பார்த்தோம்.
இலக்கியத்தில் சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்னும்
உயர்ந்த மார்க்சியக் கோட்பாட்டை உலகிற்கு
வழங்கியவர் மாக்சிம் கார்க்கி. என்றாலும்
அவருக்கு கண்டனத்துக்கு உரிய ஒரு மறுபக்கமும்
உண்டு. மனிதனுக்கு மதம் தேவை என்ற கருத்தைக்
கொண்டிருந்தார் மாக்சிம் கார்க்கி.
மாக்சிம் கார்க்கி ஒரு கருத்துமுதல்வாதியாகவே
இருந்தார். ஜார் ஆட்சியை எதிர்த்துப் போராடிய
போதும், ஜாருக்கு எதிராக முதலில்
கெரன்ஸ்கியையும், பின்னர் போல்ஷ்விக்குகளையும்
ஆதரித்த போதும் கார்க்கி ஒரு கருத்துமுதல்
வாதியாகவே இருந்தார். லெனினோடு முரண்பட்டு
ரஷ்யாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில்
வாழ்ந்தபோதும், பின்னர் ஸ்டாலின் காலத்தில்
சோவியத் ரஷ்யாவுக்குத் திரும்பி வந்த போதும்,
அவர் போர்க்குணமிக்க பொருள்முதல்வாதியாக
இருக்கவில்லை.
67 வயது வரை வாழ்ந்த கார்க்கி தம் வாழ்நாள்
முழுவதும் (1868-1936) கருத்துமுதல்வாதியாகவே
வாழ்ந்தார். அவரின் "ஒப்புதல் வாக்குமூலம்"
(The confessions) என்ற நாவல் கார்க்கியின் கடவுள்
நம்பிக்கையைத் தெளிவாக விளக்குகிறது.
கார்க்கியின் "தாய்" நாவலை மார்க்சிய
வாசகர்கள் பலர் படித்திருக்கக் கூடும்.
ஆனால் கார்க்கியின் "ஒப்புதல் வாக்குமூலம்"
நாவலை, படித்தவர்களை விடுங்கள்,
அறிந்தவர்கள்கூட மிகவும் குறைவு.
புதியதொரு கடவுளை உருவாக்க வேண்டும்,
புதியதொரு மதத்தை உருவாக்க வேண்டும்
என்று கார்க்கி அந்த நாவலில் தொடர்ந்து
வாதாடுவார்.
1905ல் ரஷ்யாவில் ஒரு புரட்சி நடந்தது. அது தோல்வி
அடைந்தது. அதைத் தொடர்ந்து புதிய மதம்
புதிய கடவுள் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதைக் கண்டித்த லெனின், இந்த முயற்சியை
முறியடித்தார். என்றாலும், ஒப்புதல் வாக்குமூலம்
நாவல் வெளியானதைத் தொடர்ந்து, அதில்
கார்க்கி கூறிய புதிய கடவுளும் புதிய மதமும்
என்ற கருத்து ரஷ்ய சமூகத்தில் தொடர்ந்து
நிலவி வந்தது.
புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயும்
"ஒப்புதல் வாக்குமூலம்"(A confession)
என்று
அதே பெயரில் ஒரு நூலை
எழுதி உள்ளார் என்பதை வாசகர்களுக்குத்
தெரியப் படுத்துகிறோம். டால்ஸ்டாயும் ஒரு
கருத்துமுதல்வாதியே. "சொர்க்கத்தின் ராஜ்ஜியம்
உன்னிடம்தான் இருக்கிறது" (The kingdom of heaven is
within you) என்ற நூலையும் டால்ஸ்டாய் எழுதி
உள்ளார்.
இருப்பினும் ரஷ்யப் புரட்சிக்கு டால்ஸ்டாயின்
எழுத்துக்கள் உத்வேகம் அளித்தன என்பதால்,
ஒரு கருத்துமுதல்வாதியாக இருந்த டால்ஸ்டாயை
"ரஷ்யப் புரட்சியின் கண்ணாடி" என்று
பாராட்டினார் லெனின்.
போல்ஷ்விக் புரட்சியை வரவேற்ற அறிவாளிப்
பகுதியினரின் பலர், போல்ஷ்விக் புரட்சியானது
ஒரு புதிய கிறிஸ்துவையும் புதிய மதத்தையும்
கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன்
புரட்சிக்கு ஆதரவாக இருந்தனர்.
போல்ஷ்விக் தத்துவஞானியான அலெக்சாண்டர்
போக்தனாவ் (Alexander Bogdanov 1873-1928) தமது
"Empiriomonism: articles on philosophy" என்ற நூலில்,
புதிய கடவுள், புதிய மதம் என்ற தம் கொள்கையை
விளக்கி எழுதி இருப்பார். இந்நூல் மூன்று
வால்யூம்களைக் கொண்டது. இவர் மிகச் சிறந்த
ஒரு மருத்துவரும் ஆவார்.பின்னாளில் இவரை
லெனின் போல்ஷ்விக் கட்சியில் இருந்து நீக்கினார்.
மாக்சிம் கார்க்கி லெனின் ஆகியோருக்கு இடையில்
கார்க்கியின் புதிய கடவுள் பற்றி அடிக்கடி
தீவிரமான விவாதம் நடைபெற்றது. கார்க்கியின்
ஒப்புதல் வாக்குமூலம் நாவலைப் படித்த லெனின்
மிகவும் கோபம் அடைந்து கார்க்கியைக்
கண்டித்தது வரலாறு.
மேற்கூறிய அனைவருக்கும் பதிலளிக்கும்
விதமாகவே தமது புகழ்பெற்ற "மார்க்சியமும்
அனுபவவாத விமர்சனமும்" (Marxism and emperio criticism)
என்ற நூலை லெனின் எழுதினார்.
மாக்சிம் கார்க்கியின் கருத்துக்களின் மூலஊற்றாக
பின்வருவன அமைந்தன:-
1. லுத்விக் பாயர்பாக்கின் கிறித்துவத்தின் சாரம்
என்ற நூலின் கருத்துக்கள்.
2. கிறித்துவ மதம் பற்றிய எங்கல்சின் கருத்துக்கள்
3.காவுத்ஸ்கியின் கிறித்துவத்தின் அடிப்படைகள்
என்ற நூலின் கருத்துக்கள்.
4. டால்ஸ்டாயின் கருத்துக்கள்.
5.இமானுவேல் கான்டின் கருத்துக்கள்
ஞானி நாகராஜன் ஆகியோர் தம் கருத்துக்களுக்கு
ஆதரவாக மேற்கூறிய மாக்சிம் கார்க்கியின்
கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவை
அனைத்தும் லெனின் எழுதிய "மார்க்சியமும்
அனுபவவாத விமர்சனமும்" என்ற நூலில்
தகர்த்துத் தரைமட்டமாக ஆக்கப்பட்டுள்ளன
என்பதை ஞானி வகையறாவுக்கு நாம்
நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளோம்.
**********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக