வியாழன், 23 ஜூலை, 2020

ஆளும் வர்க்கக் கட்சிகள் எவை, யாவை என்று
பார்ப்பதுதான் மார்க்சியப் பார்வை. ஆளும் கட்சி
எதிர்க்கட்சி என்று பார்ப்பது குட்டி முதலாளியப்
பார்வை. காங்கிரஸ் இன்று மத்தியில்
எதிர்க்கட்சியாக இருக்கலாம்; ஆனால் அது
ஆளும் வர்க்கக் கட்சி. திமுக தமிழ்நாட்டில்
எதிர்க்கட்சியாக இருந்த போது, எத்தனையோ முறை
மத்தியில் ஆளும் கட்சியாக இருந்துள்ளது.

பிரசித்தி பெற்ற கருணாநிதி கைதின் போது, திமுக
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால்
மத்தியில்  முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார்.
எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்கிற
குட்டி முதலாளியப் பார்வையைக் கைவிட்டு,
ஆளும் வர்க்கக் கட்சி, உழைக்கும் வர்க்கக் கட்சி
என்ற மார்க்சியப் பார்வையைக் கைக்கொள்ளவும்.

கடத்த 20 ஆண்டுகளாக அறிவியலையும்
பொருள்முதல்வாதத்தையும் பரப்பி வரும் ஒரே
அமைப்பு  நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.
எமது பங்களிப்பில் லட்சத்தில் ஒரு பங்கு கூட
வேறு யார் எவரும் அல்லது எந்த அமைப்பும்
எந்தக்  கட்சியும் செய்தது இல்லை. இது அறிவியல்
வட்டாரங்களிலும், பள்ளி கல்லூரி பல்கலைக்கழக
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும்
நன்கறிந்த செய்தி.


அறிவியலைப் பரப்பாமல் சமூகத்தில் உள்ள
மூட நம்பிக்கையை, மதத்தின் செல்வாக்கை
ஒருபோதும் ஒழிக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள
எந்தக் கட்சியோ அல்லது அமைப்போ, அறிவியலைப்
பரப்புவதில், நியூட்டன் அறிவியல் மன்றம் செய்ததில்
கொஞ்சமாவது செய்துள்ளது என்று நிரூபிக்க
முடியுமா?

பொருள்முதல்வாதம் பற்றிப் பேசுவதற்கு
அருகதை உள்ள அமைப்பு நியூட்டன் அறிவியல்
மன்றம் மட்டுமே. எனவே போலி நாத்திகர்களை
அடையாளம் கண்டு களையெடுக்கவும், மெய்யான
நாத்திகத்தைப் பரப்பவும், யாரெல்லாம் நாத்திகர்கள்
என்று சான்றிதழ் வழங்கும் பொறுப்பை நியூட்டன்
அறிவியல் மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. வேறு எந்த
அமைப்பும் போலி நாத்திகர்களை அடையாளம் கண்டு
களையெடுக்கத் தயாராக இல்லை. சோவியத் ரஷ்யாவில்
லெனின், ஸ்டாலின் காலத்தில் தீவிர ஆத்திகர்களும்
அவர்களை ஆதரிக்கும் போலி நாத்திகர்களும்
களையெடுக்கப் பட்டார்கள். இது போல்ஷ்விக்குகளின்
வரலாறு.

உங்களை போன்றவர்கள் செய்வது என்ன?
நீங்கள் அறிவியலைப் பரப்ப மாட்டீர்கள்.
பரப்புகின்ற எனக்கும் ஆதரவு அளிக்க மாட்டீர்கள்.
போலி நாத்திகர்களை நாங்கள் இழுத்துப் போட்டு
அடிக்கும்போது, குறுக்கே வந்து போலிகளைக்
காப்பாற்ற வருவீர்கள் என்றால், இது கடைந்தெடுத்த
பிற்போக்குத் தனம் ஆகும். கேவலம், திமுகவின்
போலி நாத்திகத்துக்கும் வாரிசு அரசியல் என்னும்
வருணாசிரமத்துக்கும் வக்காலத்து வாங்குவது
மார்க்சியம் ஆகாது. மாறாக அது மார்க்சியத்தை
இழிவு படுத்துவதாகும்.








  





      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக