திங்கள், 27 ஜூலை, 2020

மருத்துவப் படிப்பில் OBCக்குரிய இடஒதுக்கீடு!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
-----------------------------------------------------------------------
OBCக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையான சட்டத்தை 
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அச்சட்டத்தை 
இன்னும் 3 மாத காலத்துக்குள் கொண்டு வர வேண்டும்.
இதுதான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பு ஒரு விஷயத்தை மண்டையில் அடித்துக் 
கூறுகிறது. அது என்ன? தற்போது அமலில் உள்ள சட்டம் 
எதுவும் OBCக்கு இடஒதுக்கீட்டை வழங்கப் போதுமானதாக 
இல்லை. எனவே புதிதாக ஒரு சட்டத்தை இயற்றினால் 
மட்டுமே, OBCக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும்.

உயர்நீதிமன்றம் கூறுவது உண்மை அல்ல. எப்போது 
93ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறி விட்டதோ 
அப்போதே OBCக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட சம்மதம் 
கிடைத்து விட்டது. (93rd amendment 2005)

93ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது?
இது குறித்து முன்பே நான் எழுதிய கட்டுரைகளில் 
செய்தி உள்ளது. OBCக்கு உயர்கல்வி நிலையங்களில் 
இடஒதுக்கீடு வழங்குவதை அனுமதிக்கும் சட்டத் 
திருத்தம் இது.

சரி, சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பின் பின்விளைவுகள் 
என்ன? மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றுகிற வரை 
OBCக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது. சட்டம் இயற்றுவது 
என்பது மூன்று மாத காலத்துக்குள் ஒருபோதும் முடியாது.

சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், அதை எதிர்த்து எவரேனும் 
நீதிமன்றத்திற்குச் செல்லலாம். வழக்குத் தொடரலாம்.
அதில் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வருவதற்கு யாரும் 
கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது.

ப சிதம்பரம்- ராஜ கண்ணப்பன் தேர்தல் வழக்கில் 
இன்னமும் தீர்ப்பு வரவில்லை. அப்பாவு ஜெயித்தாரா,
தோற்றாரா என்பதை ஓட்டுக்களை எண்ணிச் சொல்ல 
வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வரும்?
அநேகமாக கிபி 3020ல் வரலாம்.

எனவே சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சி 
அடைவதற்கு ஒன்றுமே இல்லை.
**************************************************************  
       

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக