வியாழன், 24 செப்டம்பர், 2015

(1) இந்தியாவில் 3G படுதோல்வி!
4G என்பது மெய்யான 4G அல்ல!
அலைக்கற்றை குறித்த அறிவியல் விளக்கக் கட்டுரை!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
வணிக ரீதியான 3G மொபைல் சேவையை இந்தியாவில்
முதன் முதலில் வழங்கியது BSNL நிறுவனமே. தனியார்
நிறுவனங்கள் கடைசியில் நின்றன. அன்றைய
தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசா, முன்பணம்
எதுவும் செலுத்தாமலும் (without any upfront payment),
ஏலத்தில் பங்கெடுக்கக் கோராமலும் BSNLக்கு
3G அலைக்கற்றையை ஒதுக்கித் தந்தார்.

இந்தியாவில் 3G அலைக்கற்றைக்கான ஏலம் 2010ஆம்
ஆண்டில் நடைபெற்றது. 2010 ஏப்ரல் மாதம் தொடங்கிய
ஏலம், 34 நாட்கள் நடைபெற்று, மே 19 அன்று முடிவுற்றது.
மொத்தம் 183 சுற்றுக்களில் இந்த ஏலம் நடைபெற்றது.
மிகவும் வெளிப்படையாகவும் சர்வதேச அளவிலான
பார்வையாளர்கள் பங்கேற்புடனும் நடந்த இந்த
ஏலத்தில் மொத்தம் ஒன்பது நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த அலைக்கற்றை ஏலத்தை நடத்திய அமைச்சர் யார்?
வேறு யார்? ஆ ராசாதான். ஏலமே விடாமல், 2G அலைக்
கற்றையைத் தாரை வார்த்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு
ஆளான அதே ஆ ராசாதான்.

இந்த ஏலம் மட்டுமின்றி வேறொரு அலைக்கற்றை ஏலத்தையும்
ஆ ராசா நடத்தினார். அது BWA (Broadband Wireless Access)
அலைக்கற்றைக்கான ஏலம் ஆகும். தொழில்நுட்ப
வட்டாரங்களில் இது வைமேக்ஸ் என்று அழைக்கப்படும்.
WiMAX என்றால்  Worldwide inter operability of Microwave access என்று
பொருள்.

2010 மே மாதம் தொடங்கிய இந்த ஏலம், 16 நாட்கள் நடைபெற்று
ஜூன் 11 அன்று முடிவுற்றது. 11 நிறுவனங்கள் பங்கேற்ற
இந்த ஏலத்தில் 6 நிறுவனங்கள் மட்டுமே அலைக்கற்றை
கிடைக்கப் பெற்றன.

தமது பதவிக் காலத்தில் அலைக்கற்றை குறித்த இரண்டு
ஏலங்களை நடத்திய ஒரே அமைச்சர் ஆ ராசாதான். அவருக்குப்
பின் பதவியேற்ற கபில் சிபில் ஒரு தோல்வி அடைந்த
ஏலத்தை நடத்தினார்.

3G ஏலத்தின் விளைவாக ரூ 67718.95 கோடி அரசுக்குக் கிடைத்தது.
முப்பதாயிரம்  கோடி ரூபாய்தான் கிடைக்கும் என்று
DOT (Dept of Telecom) எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு
இரு மடங்குக்கு மேல் கிடைத்தது.

ஏலத்தின் இறுதியில், மொத்தம் 71 உரிமங்கள் வழங்கப் பட்டன.
ஒரு உரிமதாரருக்கு 5 MHz (மெகா ஹெர்ட்ஸ்) வீதம் மொத்தம்
355 MHz அளவுள்ள 3G அலைக்கற்றை வழங்கப் பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற BWA அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக
அரசுக்கு ரூ 38543.31 கோடி கிடைத்தது. இவ்விரண்டு
ஏலங்களிலும் சேர்த்து மொத்தம் 106262.26 கோடி ரூபாய்
அரசுக்குக் கிடைத்தது. அதாவது ஒரு லட்சத்து ஆறாயிரம்
கோடி ரூபாய் ஏலத்தொகையாக அரசுக்குக் கிடைத்தது.
இதற்கான பெருமை ஆ ராசா அவர்களையே சேரும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்தும்கூட, இந்தியாவில்
3G சேவை என்பது முற்றிலும் படுதோல்வி அடைந்த ஒன்று.
இந்த உண்மையை அன்றைய அமைச்சர் கபில் சிபல்
வெளிப்படையாகவே பேசினார். இது நாளிதழ்களிலும்
தொலைக்காட்சிச் செய்திகளிலும் வெளிவந்ததை வாசகர்கள்
நினைவு கூரட்டும். எனினும், அமைச்சரின் ஒப்புதல்
வாக்குமூலமான 3G சேவை படுதோல்வி என்ற பொருளின்மீது
இந்தியாவில் எந்த விவாதமும் நடக்கவில்லை.

அறிவுபூர்வமான விவாதங்களுக்கு இந்தியாவில் இடமில்லை
என்ற ஒளிவீசும் உண்மையை அறிந்து வைத்திருக்கும்
எவருக்கும் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்தியாவில் 3G சேவை படுதோல்வி அடைந்ததற்குக் காரணம்
தனியார் நிறுவனங்களே. பல நிறுவனங்கள் அலைக்கற்றையைப்   
பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில்
3G  அலைக்கற்றை உரிமம் பெற்றவை 1) பாரதி ஏர்டெல் 2) ஏர்செல்
3) வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே. ரிலையன்ஸ்,
டாட்டா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கிடத்
தேவையான அலைக்கற்றை உரிமத்தைப் பெறவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

டாட்டா ஃபோட்டான் என்ற பெயரில் 2G அலைக்கற்றையில்
அதிவேகம் தருவதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றும்
டாட்டா நிறுவனம் 3G உரிமத்தைப் பெறாததில் வியப்பில்லை.
3G உரிமம் பெற்ற நிறுவனங்கள்கூட குறித்த நேரத்தில்
சேவையைத் தொடங்க முன்வரவில்லை.

2G, 3G, 4G என்ற தலைமுறை மாற்றங்களின்போது, புதிய
தலைமுறையின் வேகம் முந்தைய தலைமுறையை விட
அதிகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு
பொதுவான பண்பு. ஆனால் 2G, 3G சேவைகளுக்கு இடையிலான
பெரும் வேறுபாடு என்னவெனில், 3G சேவையில் வீடியோ
அழைப்பு (VIDEO CALL)   உண்டு என்பதுதான்.  அதாவது இரு
முனைகளிலும் பேசுவோரின் முகம் (உருவம்) தெரியும்.
அதற்காகவே இரு பக்கங்களிலும் காமிரா ( camera at both front
and back) உடையதாக  3G மொபைல் ஃபோன்கள் வடிவமைக்கப்
படுகின்றன.

3G சேவை வெற்றி பெற்று இருக்குமேயானால், இந்தியா
முழுவதும் வீடியோ அழைப்புகள் பிரபலமாகி இருக்கும்.
இருபுறமும் காமிரா கொண்ட 3G வசதி கொண்ட  செட்டுகள்
உற்பத்தியாகி இருக்கும். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில்
ரூ 20000க்கும்,   ரூ 30000க்கும் மொபைல் ஃபோன் வாங்கும்
அளவு வசதி படைத்த வாடிக்கையாளர்கள்கூட 3G வசதி கொண்ட
மொபைல் ஃபோன்களை (3G enabled handsets) வாங்குவதில்
ஆர்வம் காட்டவில்லை.

ஆக, 3G சேவை இந்தியாவில் படுதோல்வி என்ற அன்றைய
அமைச்சர் கபில் சிபலின் கூற்று உண்மையே என்று
வாசகர்கள் உணர இயலும்.
---------------------------------------------------------------------------------------------
தொடரும்
----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக