ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

முடவர்கள் நடக்கிறார்கள்!
குருடர்கள் பார்க்கிறார்கள்!
மகான்கள் குணப் படுத்துகிறார்கள்!
படியுங்கள்!குணம் அடையுங்கள்!!
--------------------------------------------------------------
(4) காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல 
மகானிடம் ஆசி பெற்றதும் நோய்  குணமான கதை!
5 சதம் அறிவும் 95 சதம் அறியாமையும்!
(குவான்டம் சிகிச்சை பற்றிய ஹெக்டே கட்டுரைக்கு மறுப்பு)
----------------------------------------------------------------------------------------------
டாக்டர் ஹெக்டே சில தரவுகளைத் தருகிறார். சில முடிவுகளைச் 
சொல்கிறார். ஆனால், அவர் அளித்த தரவுகளுக்கும் அவர் வந்தடைந்த 
முடிவுகளுக்கும் எவ்விதத் தர்க்கப் பொருத்தமும் இல்லை.
எனவே அவரின் முடிவுகள் ஏற்கத் தக்கவை அல்ல.
**
இன்றைய அறிவியல் மானுடம் முழுமைக்கும் சொந்தமானது.
அதை மேற்கத்திய குறைப்புவாத அறிவியல் என்று கூறுவது 
முற்றிலும் தவறு. The modern science is both western and oriental; It is
isotropic and hence universal. It does not have any sort of a reductionism in it.
**
இந்தப் பிரபஞ்சம் பற்றி ஐந்து சதம் அளவுக்கு மட்டுமே இன்றைய 
அறிவியல் அறிந்திருக்கிறது என்கிறார் ஹெக்டே. ஆம், இது 
உண்மையே. 1) அறியப்பட்ட பிரபஞ்சம் 2) அறியப்படாத 
பிரபஞ்சம் என்று பிரபஞ்சத்தை இரு பிரிவாகப் பிரிக்கிறது 
அறிவியல்.( observable universe and unknown universe). கரும்பொருள்,
கரும் ஆற்றல் (dark matter and dark energy) குறித்து அறிவியல் 
இன்னும் முற்றாக அறியவில்லை. இவ்வாறு அறியப்படாத 
பகுதி 95 சதம் ஆகும். 
**
இதை வைத்துக் கொண்டு மொட்டைத் தலைக்கும் முழங்
காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் ஹெக்டே.நவீன அறிவியலால் 
நோயாளியைக் குணப்படுத்த முடியவில்லை, ஆனால் மகான் 
குணப்படுத்தி விட்டார், பாரீர் என்று குதூகலிக்கிறார்.
**
கரும்பொருளைப் பற்றி அறியாமல் இருப்பதால்தான்  
நோயாளியைக் குணப்படுத்த முடியவில்லையா? நோயாளி,
மகான், ஹெக்டே, நீங்கள், நான் ஆகிய எல்லோரும் அறியப் 
பட்ட பிரபஞ்சத்தில்தானே இருக்கிறோம்! அன்று எலும்புருக்கி 
நோய்க்கு (Tuberculosis) மருந்து இல்லை. நேருவின் மனைவி 
கமலா நேருவைக் காப்பாற்ற முடியவில்லை. இன்று 
மருந்து கண்டு பிடித்து இருக்கிறோம். அது போல, மானுட 
அறிவு தேங்கிப் போய் விடுவதல்ல. அது தொடர்ந்து 
வளர்ந்து கொண்டே இருப்பது. எனவே ஹெக்டேயின் 
புலம்பலில் பொருள் இல்லை.
**     
தீராத வலியால் வேதனை அடைந்த ஒரு நாத்திகர், ஒரு 
மகானிடம் சென்று ஆசி பெற்றபின் குணம் அடைந்தார் என்று 
சொல்லும் ஹெக்டே, மகானிடம் ஆசி பெற்றதால்தான்
குணம் அடைந்தார் என்று உறுதிபடக் கூறவில்லை.
இது விளக்க இயலாத நிகழ்வு என்கிறார். இது போன்ற 
விளக்க இயலா நிகழ்வுகள் குவாண்டம் இயற்பியலிலும் 
உண்டு என்று குவாண்டம் இயற்பியலில் தஞ்சம் 
அடைகிறார். எந்த அறிவியலை மேற்கத்தியக் குறைப்புவாத 
அறிவியல் என்றாரோ, அதனிடமே சென்று தஞ்சம் அடைகிறார்.
**  
யோகா, தியானம் முதலிய மனப் பயிற்சிகளுக்கு நோய்களைக் 
குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்கிறார். நல்லது, இதை 
அவர் நிரூபிக்க வேண்டும் அல்லவா! ஆனால் அவர் அதை 
நிரூபிக்கவில்லை; ஏனெனில் நிரூபிக்க முடியவில்லை.
அதுவரை அவரின் கூற்று ஒரு வெற்றுக் கூற்றே! (a mere statement)
**
அவரின் தரவுகளை நாம் சந்தேகிக்கவில்லை. அவற்றின் 
FACE VALUE அடிப்படையில் அவை உண்மை  என்றே ஏற்றுக்
கொள்வோம். அவர் கூறும் நாத்திகர் குணம் அடைந்த
விவகாரம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு; தனித்தவொரு ஒற்றை 
நிகழ்வு  இதை எங்ஙனம் பொதுமைப் படுத்த இயலும்?  
No generalisation can be made out of a single isolated event.
**
பிள்ளையார் சிலையை உடைத்த பிறகுதான் தனக்கு வந்த 
தீராத வயிற்று வலி குணமாகியதாக எங்கள் ஊரில் 
ஒரு கடவுள் பக்தர் கூறுகிறார். இதை வைத்துக் கொண்டு 
வயிற்றுவலி உள்ளவனை எல்லாம் பிள்ளையார் சிலையை 
உடைக்கச் சொல்ல முடியுமா? 
**
ஆக, திரு ஹெக்டே அபத்தமானதும் பரிசீலிக்கத் தகுதி 
அற்றதுமானதும் ஆன ஒரு தர்க்கத்தை முன்வைக்கிறார் 
என்பது புலனாகிறது. 
-----------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக