வெள்ளி, 18 செப்டம்பர், 2015

(1) குவான்டம் சிகிச்சை என்று ஒரு சிகிச்சை உண்டா?
பேரா பி எம் ஹெக்டே எழுதிய கட்டுரையின் பொய்மை!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------------------
இதயநோய் மருத்துவ நிபுணர் மற்றும் மணிப்பால் பல்கலையின் 
முன்னாள் துணைவேந்தர் திரு ஹெக்டே. எமது முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி, ஆங்கில இந்து ஏட்டில் (15.09.2015)
Some thoughts on Quantum healing என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
**
அக்கட்டுரையில் சுய இயக்கச் சிகிச்சை (auto healing), குவான்டம்
சிகிச்சை ஆகியன பற்றிக் குறிப்பிடுகிறார். இடது மார்பிலும் 
இடது தோள்பட்டையிலும் ஏற்பட்ட தாள முடியாத வலியின் 
காரணமாக, தான் அமர்ந்திருக்கும் நாற்காலியிலேயே 
முடங்கிப்போன ஒரு நோயாளி, ஒரு பெரிய மகானிடம்
சென்று ஆசிர்வாதம் பெறுகிறார். உடனே வலி நீங்கி குணம் 
அடைகிறார் என்று ஒரு செய்தியை இக்கட்டுரையில் 
கூறுகிறார் ஹெக்டே.
**
மேற்கூறிய நோயாளி ஒரு தீவிர நாத்திகர் என்றும், அவரை 
வற்புறுத்தி அவரின் மனைவிதான் அந்த மகானிடம் ஆசி 
பெற அழைத்துச் சென்றார் எனவும் குறிப்பிடுகிறார்.
**
கட்டுரையின் பிறிதோர் இடத்தில், அமெரிக்கப் பகுத்தறிவாளர் 
சங்கத்தின் தலைவரான திரு ராக் ஹட்சன் (Rock Hudsoan)
எய்ட்ஸ் நோயின் கொடுமையால் துன்புற்றபோது,
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து மாதா ஆலயத்தின் சுனைநீரை 
அருந்தி உயிர் பிழைத்தார் என்றும் குறிப்பிடுகிறார்.
**
மருத்துவ அறிவியல் குணப்படுத்தத் தவறிய நாத்திகர்களை 
இறையருளும், இறையருள் நிரம்பப்பெற்ற மகான்களின் 
ஆசியும் குணப் படுத்தி விட்டன என்கிறார் ஹெக்டே.
"பகுத்தறிவாளர்கள் இதை நம்புவது கடினம் ஆனாலும் இது 
உண்மை" என்கிறார் ஹெக்டே. இதை நியாயப் படுத்த 
குவான்டம் இயற்பியலையும் எபிஜெனடிக்ஸ் (epigenetics) 
என்னும் "உபரி மரபியல்" கருத்துக்களையும் முன்வைக்கிறார்.
**
EPIGENETICS என்ற ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நூறு சதம் 
பொருத்தமான தமிழ்க் கலைச்சொல் உபரி மரபியல் என்பதுதான்.
எனவே அனைவரும் இச்சொல்லையே பயன்படுத்தக் 
கோருகிறேன்.
**
திரு ஹெக்டே நவீன அறிவியலை, மேற்கத்தியக் குறைப்புவாத 
அறிவியல் (WESTERN REDUCTIONIST SCIENCE) என்கிறார்.
இந்த அறிவியல், பிரபஞ்சத்தைப் பற்றி ஐந்து சதம் மட்டுமே 
அறிந்துள்ளது என்றும் மீதி 95 சதம் அறிவியலால் 
அறியப்படாமலே உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.  
**
குவாண்டம் இயற்பியலின் பிரசித்தி பெற்ற Double slit experiment
முதற்கொண்டு, காரணம்-விளைவு கோட்பாட்டுக்கு  (cause and effect)
அப்பாற்பட்ட குவான்டம் நிகழ்வுகள்வரை (இவற்றை quantum haps
என்று குறிப்பிடுகிறார்) கூறிச்செல்லும் திரு ஹெக்டே, இவற்றை 
தர்க்கப் பொருத்தமற்ற விதத்தில் எடுத்தாள்கிறார். இதன் மூலம் 
வாசகர்களைக் குழப்புகிறார்.
**
மனநல மருந்துகள் (psychotic drugs) அனைத்தையும் பணம் பறிக்கும் 
மோசடி என்று ஒட்டுமொத்தமாகச் சாடுகிறார். ஆனால் ஒவ்வொரு 
நாளும் இந்த மருந்துகளால் நோயாளிகள் நலம் பெற்று 
வருவதை மறைக்கிறார்.
** 
கட்டுரையின் ஒருபகுதியில், குறிப்பாக இறுதிப் பகுதியில்,
இதயநோய் மருத்துவம் சார்ந்து சில செய்திகளைச் சொல்கிறார்.
இதயநோயால் பாதிக்கப் பட்டு இறந்துபோன ஒரு செல்லின் 
இடத்தில் அருகிலுள்ள செல் தானாகவே சென்று புதுப்பித்துக் 
கொள்ளும் ஒரு சுய இயக்கம் (auto healing) குறித்துக் 
குறிப்பிடுகிறார்.
**
இதற்கு ஒரு இதயநோய் மருத்துவரே (cardiologist) தக்க விளக்கம் 
அளிக்க இயலும் என்பதால், நியூட்டன் அறிவியல் மன்றம் இது 
குறித்து இதயநோய் நிபுணர்களிடம் விளக்கம் கோரியுள்ளது.
விளக்கம் கிடைக்கப் பெற்ற பின்னர் அது வெளியிடப்படும்.
தற்போது, கட்டுரையின் இந்தப் பகுதி தவிர, மீதி அனைத்துக்கும் 
நியூட்டன் அறிவியல் மன்றம் விடையளிக்கிறது.
**  
இவரின் கட்டுரை போலி மருத்துவர்களுக்கும் பித்தலாட்டத்தை 
மூலதனமாகக் கொண்டு இயங்கும் பணம் பறிக்கும் 
மோசடியாளர்களுகும் ஒரு வரப்பிரசாதம். இதுவரை 
நெளிந்து கொண்டே தொழில் செய்து வந்த போலி 
மருத்துவர்களுக்கு தற்போது ஹெக்டே அவர்களின் அங்கீகார 
முத்திரை கிடைத்து இருக்கிறது.  
**
குவாண்டம் இயற்பியல் மானுட அறிவின் அதிஉச்சம். குவான்டம்
இயற்பியலும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகளும் 
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய பார்வையை முற்றிலுமாக 
மாற்றி அமைத்துள்ளன. இந்த உலகில் நிகழும் ஒவ்வொரு 
பரிசோதனையும் இந்த நிமிடம் வரை, குவான்டம் இயற்பியலின் 
சரித்தன்மையை உறுதி செய்துள்ளன. 
**
குவான்டம் இயற்பியல் உள்ளார்ந்த (inherent) நிலையிலேயே 
நிறைய நிச்சயமற்ற தன்மைகளையும், வாய்ப்பு சார்ந்த 
நிகழ்வுகளையும் (uncertainties and probabilities) கொண்டது.  
இதன் காரணமாக இதை எவர் ஒருவரும் தவறாக விளக்கம் 
அளிக்கவும், கேடாகப் பயன்படுத்துவதும் சாத்தியப் படுகிறது.
This particular article written by Mr Hegde is the best example for the 
misinterpretation of quantum physics with a malafide intention.
**
ஹெக்டேவுக்கான மறுப்பை, இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் 
காணலாம். எடுத்த எடுப்பிலேயே மறுப்பைக் கூறுதல் 
தமிழ்ச் சூழலில் சாத்தியம் இல்லை. ஒரு நீண்ட பீடிகை 
தேவைப் படுகிறது. இஃது இல்லாவிடில் கட்டுரை 
பெரும்பான்மையினருக்குப் புரியாமலே போய்விடும்.   
-------------தொடரும்--------------------
************************************************************************        
       
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக