புதன், 23 செப்டம்பர், 2015

350 இயக்கம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளோம்!
அனைவரும் சேருங்கள்! ஆதரவு தாருங்கள்!
வேண்டாம் 400, வேண்டும் 350!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------
356 என்றால் தெரியும். மாநில அரசுகளைக் கலைக்க வகை 
செய்யும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 356.
144 என்றால் தெரியும். பலர் கூடத் தடை விதிக்கும் நகரக் 
காவல் சட்டத்தின் பிரிவு அது. 786 என்றாலோ அது 
இசுலாமியர்கள் போற்றும் எண். இவ்வாறு வரலாற்றில் பல 
எண்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இவை போலவே  தற்போதைய உலக வரலாற்றில் 350 என்ற 
எண் மாபெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

அது என்ன 350? 
------------------------
பூமி சூடேறிக் கொண்டே போகிறது. இது பூமி வெப்பம் அடைதல் 
(GLOBAL WARMING) என்று அழைக்கப் படுகிறது. இந்த ஆண்டு 
2015 மார்ச் மாதத்தில், பூமியின் வளி  மண்டலத்தில் (ATMOSPHERE)
சேகரமான கார்பன் டை ஆக்சைடின் அளவு 400 ppm என்று 
அபாய அளவை எட்டி விட்டது. ppm என்றால் parts by million என்று 
பொருள். 400 ppm என்றால் பத்து லட்சத்தில் 400 பங்கு என்று பொருள்.

பாதுகாப்பான அளவு 350; அபாய அளவு 400.
---------------------------------------------------------------------
பூமியின் வளிமண்டலத்தில் சேகரமாகும் கார்பன் டை 
ஆக்சைடு (CO2) 350 ppm  என்று இருந்தால் அது பாதுகாப்பான 
அளவு  (safety level). ஆனால் 400 ppm என்பது அபாய அளவு.

எனவே, வளி  மண்டலத்தில் சேகரமாகும் கார்பன் டை 
ஆக்சைடின் அளவை 400 ppm என்பதில் இருந்து 350 ppm 
என்ற அளவுக்குக் குறைக்க வேண்டும். அப்படிக் குறைத்தால்தான்
பூமி வெப்பம் அடையாமல் தடுக்க முடியும். எனவேதான் 
350 இயக்கத்தைத் தொடங்கி உள்ளோம்.

நீரழிவு நோய் போல இது கார்பன் நோய்!
-------------------------------------------------------------------
ரத்தத்தில் சர்க்கரை 400 mg per dl வரை இருக்கின்ற ஒரு முற்றிய 
நீரழிவு நோயாளியைப் போல் ஆகி விட்டது பூமி. இன்சுலின் 
ஊசி போட்டு ரத்த சர்க்கரை அளவை நோயாளி குறைப்பதைப் 
போல, இந்த பூமியில் வாழும் நாம் அனைவரும் வளிமண்டல 
கார்பன் டை ஆக்சைடு சேகரத்தை 400 ppm என்பதில் இருந்து 
350 ppm என்ற அளவுக்குக் குறைக்க வேண்டும். இதற்குத்தான் 
இந்த இயக்கத்தை ஆரம்பித்து உள்ளோம்.


400இல் இருந்து 350ஆகக் குறைக்கா விட்டால் என்ன நடக்கும்?
-------------------------------------------------------------------------------------------------
பூமி சூடாகும். இதனால் கடல் மட்டம் உயரும். அதாவது 
நிலமட்டத்தை விடக் கடல் மட்டம் உயர்ந்து விடும். அதாவது 
கடலில் உள்ள நீர் நிலத்துக்கு வந்துவிடும். முதலில் கடற்கரை 
ஊர்கள் தண்ணீருக்குப் பலியாகி விடும். இன்னும் நிறைய 
விளைவுகள் உள்ளன. அவற்றை விவரமாகப் பின்னர் காணலாம்.

350 இயக்கத்தில் இணையுங்கள்! பூமியைக் காப்பாற்றுங்கள்!
-------------------------------------------------------------------------------------------------
தற்போது நாங்கள் ஆரம்பித்து இருக்கும் இந்த 350 இயக்கம் 
ஒரு பிரச்சார இயக்கம் மட்டுமே. இந்த இயக்கத்தில் சேரத் 
தகுதி இது ஒன்றுதான்: இந்த பூமியில் உயிர் வாழும் ஒரு 
மனிதனாக இருக்க வேண்டும். இது ஒன்றுதான் தகுதி.

நமது 350 இயக்கம் ஒரு அரசியல் கட்சி அல்ல! இதில் சேருவோர் 
எவ்வித சந்தா நன்கொடை லெவி என எதுவும் செலுத்தத் 
தேவையில்லை. இந்த 350 இயக்கம் எங்களுக்கு மட்டும் 
சொந்தமானது அல்ல. யார் வேண்டுமானாலும் 
(350 இயக்கம்) ஆரம்பித்துக் கொள்ளலாம். எத்தனை இயக்கம் 
ஆரம்பித்தாலும் வரவேற்கக் கூடியதுதான்.

இதில் சேருங்கள்! ஆதரவு தாருங்கள்! 400இல் இருந்து 
350க்கு பூமியை  இறக்குவோம் என்ற சங்கல்பத்துடன் 
வேலை செய்யுங்கள்.
வேண்டாம் 400! வேண்டும் 350!!
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், 350 இயக்கம், தமிழ்நாடு.
தலைமையகம்: சென்னை.
--------------------------------------------------------------------------------------------------------
தொடரும் (அடுத்த கட்டுரை: நாம் என்ன செய்ய வேண்டும்?) 
-------------------------------------------------------------------------------------------------------------  

   



  
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக