வெள்ளி, 29 மார்ச், 2019

செயற்கைக்கோள் தகர்ப்பு : இந்திய அவசரத்தின் காரணம்.
நாசா, சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இருக்கிறது. 2028ஆம் வருடம் அனுப்ப வேண்டும் என திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டே அனுப்ப வேண்டும் என தேதியை நான்கு வருடம் முன்னோக்கி நகர்த்தி இருக்கிறார்.
இந்த தேதி முன்னகர்த்தல் நாசா உட்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அதே சமயத்தில், பெரும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது - அதாவது, இது சாத்தியப்படுமா, தேவைப்படும் அதிகப்படியான பணத்தை காங்கிரஸ் ஒதுக்குமா - போன்ற விவாதங்கள். (நோட் - ராகுல் காங்கிரஸ் அல்ல, அமெரிக்க காங்கிரஸ்)!
அமெரிக்க அதிபர், தாம் இரண்டாம் முறை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப் படுவோம் என தீவிரமாக நம்புகிறார். அதனால், அவர் பதவியின் இறுதியில் இந்த சாதனை நிகழ்ந்தால், விண்வெளி வரலாற்றில் இன்னுமொரு மையில்-கல்லை எட்ட டிரம்ப் உதவினார் என வரலாறு பேசும் என்பது அவர் எண்ணம்.
மற்றொரு விஷயம், சீனா, விண்வெளி ஆதிக்கம் செலுத்துவதில் நான்கு-கால் பாய்ச்சலில் சென்று கொண்டு இருக்கிறது. அது, அமெரிக்காவை முந்தி விடக் கூடாது என்பத்தில் டிரம்ப் கவனமாக இருக்கிறார்.
ரஷ்யா இப்போது பிரச்சனையே இல்லை. இதில் பார்க்கப்பட வேண்டிய விஷயம், சீனாவுடன் போட்டி போட இந்தியா இருக்கிறது - அமெரிக்கவுக்கு இணையாக விண்வெளி ஆதிக்கம் செலுத்த சீனா முனைய, சீனாவிற்கு இணையாக ஆதிக்கம் செலுத்த இந்தியா முனைய, சீனாவுக்கு போட்டியாக இந்தியா வருவது நல்லதுதான் என அமெரிக்கா நினைக்க, நிக்சன் காலத்து இந்திய வெறுப்பை அமெரிக்கா கைவிட்டு, இந்தியாவிற்கு சர்வதேச அளவில் ஆதரவாக செயல்பட - ஒரு முக்கோணக் காதல் போல, ஒரு முக்கோண வால்பிடிகள் நடக்கிறது.
இப்போது Mission Shakti எனும் பெயரில் இந்தியா, தன் 740 கிலோ எடை உள்ள, 300 கிலோமீட்டர்கள் உயரத்தில் இருந்த செயற்கைக் கோளை தகர்த்து இருக்கிறது. விஞ்ஞான உலகில் இந்த செயற்கைக் கோள் தகர்ப்புக்கு எதிர்ப்பு இல்லை, காரணம் 2007 ஆம் ஆண்டு சீனா செய்ததைப் போல பைத்தியக்காரத் தனத்தை இந்தியா செய்யவில்லை, தகர்ந்த செயற்கைக்கோளின் குப்பைகள் இரண்டே மாதத்திற்குள் சுவடே இல்லாமல் காணாமல் போய்விடும். சீனாவின் சோதனையால் விளைந்த குப்பைகள் இன்னமும் பூமியை சுற்றிக்கொண்டு இருக்கின்றன.
இந்தியாவின் Mission Shakti, அமெரிக்கா, 2008 ஆம் ஆண்டு நடத்திய Burnt Frost exerciseக்கு இணையானது. இந்த Burnt Frost exercise உருவாக்கிய விண்வெளிக் குப்பை சுவடு தெரியாமல் அழிய 18 மாதங்கள் ஆனது.
இந்திய செயற்கைக்கோள் தகர்ப்புக்கு அமெரிக்கா லேசாக முணுமுணுத்தது, அதோடு சரி. இதனை இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டும் - முன்பு முணுக் என்றால் பொருளாதாரத் தடை பேசிய அமெரிக்காவா இது?
சீனாவின் ASAT ஆயுதங்கள் இதுவரை, அமெரிக்க செயற்கைக் கோள்களை நோக்கியே இருந்தது, இனி, இந்தியாவின் செயற்கைக் கோள்களை நோக்கியும் இருக்க வேண்டும்.
எதிர்காலப் போர்களில், ஒரு நாட்டின் செயற்கைக் கோளகள்தான், அதன் கண்களாகவும், காதுகளாகவும் இருக்கும். எதிரி நாட்டின் செயற்கைக் கோள்கள் அழிக்கப்பட்டால், அவை குருடாகவும், செவிடாகவும் ஆகிவிடும், பிறகு வெல்வது எளிது.
மேலும், செயற்கைக் கோள் தகர்ப்பு என்பது, ஏவுகணைப் பாதுகாப்பின் முதற்படி. ஒரு செயற்கைக் கோள், எந்தப் பாதையில் சுற்றுகிறது, என்ன வேகத்தில் சுற்றுகிறது, எந்த நேரத்தில் எந்த இடத்திற்கு வரும் என எல்லாம் முதலிலேயே தெரிந்திருக்கும், ரேடார் வைத்து துல்லியமாக கண்காணிக்க முடியும். ஏவுகணை என்பது எப்போது எதிரியால் ஏவப்படும் எனத் தெரியாது, ரேடாரில் மிகச் சிறியதாகதான் தெரியும். அதனை ட்ராக் செய்து அழிப்பது, செயற்கைக் கோளை அழிப்பதை விட சற்று கடினம். ஏவுகணை வந்து தாக்கும் முன்னரே, அதனை வானிலேயே அழிக்க உதவும் ஒரு missile shield system தான் அடுத்த படி.
இந்தியா ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதா? - இதற்கு நேரடி பதில் : இல்லை, மறைமுகமாக அதற்கு கொஞ்சம்-கொஞ்சமாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். இஸ்ரேலுடன் எந்த அளவிற்கு இந்தியா ஒட்டுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் அந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவை அடைந்துவிடும்.
சரி.
தேர்தல் திருவிழா நடக்கும் காலத்தில் தான் இந்தியா இந்த செயற்கைக் கோள் தகர்ப்பு திட்டத்தை செயற்படுத்த வேண்டுமா? கொஞ்சம் தள்ளிப் போட்டு இருக்கலாமே எனும் விமர்சனம் இந்திய அரசியல்வாதிகளாலும், மீடியாவிலும் வைக்கப்படுகிறது.
NPT - Non-Proliferation Treaty - அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் என்று ஒன்று இருக்கிறது, அது ஜனவரி 1967 ஆம் ஆண்டுக்கு முன் அணு வெடிப்பு சோதனை நடத்திய நாடுகளுக்கு தனி அதிகாரத்தையும், மற்ற நாடுகளுக்கு குறைந்த அதிகாரத்தையும் அளிக்கும் ஒப்பந்தம். இதில் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா, தெற்கு சூடான் தவிர ஏனைய 190 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இதன் படி, ஜனவரி 1967க்கு முன் அணு வெடிப்பு சோதனை நடத்திய நாடுகளுக்கு விசேஷ அந்தஸ்து உண்டு, அவை அணு வெடிப்பு சோதனைகள் நடத்தலாம், மற்ற நாடுகள் நடத்தக் கூடாது.
இந்தியா இதில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அபோதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஷ்திரி அணு வெடிப்பு சோதனை செய்ய முயன்றார், அது நனவாகும் முன்னமே அவர் இறந்தார். ஒருவேளை, அவர் தாஷ்கண்ட்டில் இறக்காமல் இருந்திருந்தால் அப்போதே அணு வெடிப்பு நடந்து இந்தியா NPTயின் வீட்டோ அதிகாரத்துடன் கூடிய முழு உறுப்பினர் ஆகி இருக்கும். அது நடக்காமல் போனதால், இன்று வரை இந்தியா உறுப்பினராக முடியவில்லை - முட்டுக்கட்டை போடும் ஒரே நாடு - சீனா!
அதே போல, செயற்கைக் கோள் தகர்ப்பை கட்டுப்படுத்தும், அது தொடர்பான சோதனைகளையோ, வெடிப்புகளையோ நடத்திடக் கூடாது எனும் ASAT Ban மற்றும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது குறித்தான ஒப்பந்தம் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி ஒரு உலகளாவிய ஒப்பந்தம் வந்து, அதில் இதுவரை சோதனை செய்யாத நாடுகள் இனி சோதனை செய்யக்கூடாது என ஒரு ஷரத்து வருமானால் இந்தியாவிற்கு பெரும் இழப்பு. இந்தியர்கள் ஏற்கனவே விண்வெளிப் பயணங்கள் செய்துவிட்ட படியால், அது பிரச்சனை இல்லை. அமெரிக்கா இதனை கவனத்தில் கொண்டே, இரண்டாவது சந்திர விஜயத் தேதியைப் பற்றி சந்திக்கிறது.
இப்போது இந்தியா முதற் சோதனையிலேயே செயற்கைக் கோள் தகர்ப்பில் தன் திறனை உலகிற்கு பறைசாற்றி விட்டது. இனி, அப்படி ஒரு ஒப்பந்தம் வந்தாலும், இந்தியா, வீட்டோ அதிகாரத்துடன் கூடிய முழு உறுப்பினராக இருக்கும்.
NPT மற்றும் ஐநா நிரந்தர உறுப்பினர் பதவிகளில் சொதப்பியது போல, இனி இந்தியா மந்தமாக இருக்காது என்றும் உலகிற்கு சொல்லியாகி விட்டது.
இப்போது, விண்வெளிப் பரப்பில் ஆயுத சோதனைகள் நடத்தக் கூடாது என்று ஐநாவில் ஒரு தீர்மானமும், PPWT - Proposal of Placement of Weapons Treaty எனும் விண்வெளி ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை தீவிரமாக முன்னெடுக்கும் நாடு எது தெரியுமா?
சீனா!
இப்போது புரிந்ததா - இந்தியா ஏன் அவசர-அவசரமாக தேர்தல் காலம் என்று பார்க்காமல் ஒரு பெரும் கொள்கை முடிவை எடுத்து செயலில் இறங்கியது என்று!
PPWT ஒப்பந்தம் எப்போது தீர்மானமாகி, நடைமுறைக்கு வரும்?
இது மில்லியன் டாலர் கேள்வி - நாளையும் வரலாம், அடுத்த வருடமும் வரலாம்.
எப்போது வேண்டுமானாலும் வரட்டும், இனி இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த ஒப்பந்தம் செயற்பாட்டிற்கு வர முடியாது!
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக