புதன், 13 மார்ச், 2019

பண்ட உற்பத்தியில் தமிழ் இல்லை!
--------------------------------------------------------
தனித்தமிழ் இயக்கத்தின் பெருங்குறை யாதெனில்,
சமூகத்தின் பண்ட உற்பத்தியில் இருந்து துண்டித்துக்
கொண்ட ஒன்றாக மொழியைப் பார்க்கும் பார்வைதான்.

மொழி என்பது பண்ட உற்பத்தியோடு நேரடியான தொடர்பு
உடையது. இது வெறும் நேரடித்தொடர்பு மட்டுமின்றி
நெருக்கமான உயிரோட்டமான தொடர்பும் ஆகும்.
இந்தப்புரிதல் தனித்தமிழ் இயக்கத்திற்கு அதன் பிறப்பு
முதற்கொண்டே இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தும் சதா இயங்கிக் கொண்டே
இருக்கின்றன என்றும் இயக்கத்தின் போக்கில் மாறிக்கொண்டே
இருக்கின்றன என்றும் ஜெர்மானிய அறிஞர் ஹெக்கல் கூறினார்.
இதை மார்க்சும் எங்கல்சும் ஏற்றுக் கொண்டனர்.

மொழி என்பது வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டுப்
பாதுகாக்கப்படும் ஒரு வைர நகை அல்ல. பேசப்படுவதாலேயே
ஒரு மொழி உயிருடன் இருக்கிறது. பெருவழக்கே மொழியை
வாழவைக்கிறது. இதையே தொல்காப்பியரும் "வழக்கும்
செய்யுளும் ஆயிரு முதலின்" என்று கூறி, செய்யுளினும்
வழக்கையே முதன்மையானதாக வரையறுக்கிறார்.

வழக்கு என்பது (அதாவது வழங்கப்படுதல் என்பது)
மொழியின் இயக்கத்தின் அடையாளம். இறந்து போன
மொழியை வழக்கு வீழ்ந்த மொழி என்கிறோம்.

தமிழ் மொழி  மக்களால் எப்படி வழங்கப் படுகிறது?
தனித்தமிழாக தூய்மை மிக்கதாக மக்களால் பேசப்
படுவதில்லை. மொழித்தூய்மை என்பது ஒருவித
நிலவுடைமைக்காலத்திய தீண்டாமை உளவியல் ஆகும்.
மொழி சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது. உற்பத்தியில்
உள்ள மொழியுடன் அது ஊடாடுகிறது. உற்பத்தியில் இருந்து
பிறக்கும் சொற்களையே அது ஏற்றுக் கொள்கிறது;
வழங்குகிறது. காலப்போக்கில் அதுவே பெருவழக்காக
ஆகி விடுகிறது.

ரோடு, சைக்கிள், கார், ரயில், குக்கர், மிக்சி போன்ற
சொற்கள் தமிழில் எவ்வாறு உட்புகுந்தன? எவ்வாறு
பெருவழக்காய் ஆயின? இவை உற்பத்தியில் செயல்படுகிற 
ஆங்கில மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்களாகும்.
தமிழ் உற்பத்தியில் இருந்திருக்குமெனில், மேற்கூறிய
ஆங்கிலச் சொற்கள் தமிழுக்கு வர வேண்டிய தேவை
ஏற்பட்டு இருக்காது.

தமிழ் நிலவுடைமைச் சமூகத்திற்கு முந்திய (pre feudal)
காலத்தில் பிறந்த மொழி. நிலவுடைமைக் காலத்தில்
அது உச்சம் பெற்றது. சமூகத்தின் பண்ட உற்பத்தியில்
இடம் பெற்றது. எனவே தமிழ் ஆட்சியில் இருந்தது.

தற்போதைய காலம் முதலாளிய ஏகாதிபத்திய காலம்
(post feudal, imperial). இந்த நவீன காலத்துக்கு ஏற்றதாக
தமிழ் இல்லை என்பது கண்கூடு. இதன் பொருள்
சமகாலத்தின் பண்ட உற்பத்தியில் தமிழ் இல்லை
என்பதுதான். பண்ட உற்பத்தியில் இல்லாத ஒரு
மொழியில் கலப்பு தவிர்க்க இயலாதது. இங்கு
மொழித்தூய்மை தனித்தன்மை பேசுவது
புறநிலை யதார்த்தத்துக்குப் பொருத்தமற்றது.
எனவே மார்க்சியமற்றது.

      
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக