சனி, 2 மார்ச், 2019

போரும் ராணுவமும் தமிழ்நாட்டின்
குட்டி முதலாளித்துவமும்!
சாரு மஜூம்தாரின் "நம் அன்புக்குரிய இந்தியா"வும்!  
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
Theirs not to reason why
Theirs but to do or die.
-----Lord Tennyson, Poet Laureate. England
        (From his poem:The charge of the Light Brigade)

உலகின் பல நாடுகளில் கட்டாய ராணுவப் பயிற்சியும்
கட்டாய ராணுவ சேவையும் உண்டு.இங்கு CONSCRIPTION
என்ற சொல்லின் பொருளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
CONSCRIPTION என்றால் கட்டாய ராணுவ சேவை என்று பொருள்.

அமெரிக்க ஜனாதிபதிகளில் பலர் ராணுவத்தில் சேவை
செய்தவர்கள். ஆப்ரகாம் லிங்கன் முதல் ஜார்ஜ் புஷ் வரை
ராணுவ சேவை செய்தவர்களே.

இந்த இடத்தில் இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களுக்கு
ஒரு சின்னக் கேள்வி. வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் பத்துப்பேரை இங்கு
குறிப்பிடுகிறேன். அவர்களில் ஏழு பேர் ராணுவத்தில்
பணிபுரிந்தவர்கள். மூன்று பேர் ராணுவசேவை புரியாத
வெறும் சிவிலியன்கள். அவர்கள் யார் யார் என்று
வாசகர்கள் சொல்ல வேண்டும். இதோ பட்டியல்:
1. ஜான் கென்னடி 2. டொனால்டு டிரம்ப் 3.பேரக் ஒபாமா
4. ஜார்ஜ் வாஷிங்டன் 5. பில் கிளின்டன் 6.ட்வைட் டி ஐசனோவர்
7. ஜிம்மி கார்ட்டர் 8.ரிச்சர்ட் நிக்சன் 9. ரொனால்டு ரீகன்
10. ஹாரி ட்ரூமன்.

தற்போதைய ரஷ்யாவில் ஆண்களுக்கு இரண்டாண்டு கட்டாய
ராணுவ சேவை உண்டு. சீனா, வட கொரியா மற்றும் இஸ்ரேல்
நாடுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் கட்டாய ராணுவ
சேவை உண்டு.  

இந்தியா கோழைகளின் சொர்க்கம். இங்கு கட்டாய
ராணுவப் பயிற்சியோ ராணுவ சேவையோ கிடையாது.
பள்ளி கல்லூரிகளில் NCC கூட நம் நாட்டில் கட்டாயம்
கிடையாது. எனினும் பஞ்சாப் அரியானா மாநிலங்களில்
பெருமளவில் சீக்கியர்கள் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.
சீக்கிய சமூகத்தை அடுத்து ஜாட் சமூகமும் மராத்தியர்களும்
ராணுவ சேவையில் முன்னணியில் உள்ளனர். தமிழ்நாட்டில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமது சமூக
இளைஞர்கள் பலரை ராணுவத்தில் சேரச்சொல்லி
ஊக்குவித்தார்.

இவற்றைத் தவிர, தமிழ்நாட்டு மக்களும் சரி, தமிழ்நாட்டின்
குட்டி முதலாளித்துவமும் சரி ராணுவம் பற்றிய மிக மிக
அடிப்படையான புரிதல் கூட இல்லாதவர்கள். அடிப்படையான
புரிதலே இல்லாதபோது ஆரோக்கியமான புரிதல் குட்டி
முதலாளித்துவத்துக்கு எப்படி இருக்கும்?

Battleக்கும் warக்கும் வேறுபாடு தெரியாத, gunக்கும் rifleக்கும்
வேறுபாடு தெரியாத, தன் மொத்த வாழ்நாளில் ஒரு
துப்பாக்கியைக் கூடக் கண்ணால் பார்த்திராத, தொட்டுப்
பார்த்திராத குட்டி முதலாளித்துவம் இந்த உலகிலேயே
தமிழ்நாட்டில் மட்டும்தான் மிக அதிகம். இது மறுக்க
முடியாத உண்மை. குறைந்தபட்சம் NCCயில் இருந்திருந்தாலாவது
துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடவும் சுடவும் பயிற்சி
பெற்றிருக்கலாம்.

இக்கட்டுரையாசிரியர் மாணவராக இருந்த 1970களில்
கல்லூரியில் மட்டுமே NCC இருந்தது. UG முதலாம் ஆண்டு
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாண்டு NCC
பயிற்சி உண்டு. கல்லூரியில் சென்று படிக்க வாய்ப்பு
இல்லாதவர்கள் NCC பயிற்சி பெற முடியாத நிலை
அன்று இருந்தது. தற்போது பள்ளியிலேயே NCC வந்து விட்டது.
Plus two மாணவர்களுக்கு NCC பயிற்சி வழங்கப் படுகிறது.
இருப்பினும் NCC கட்டாயம் ஆக்கப்படவில்லை.

ராணுவம் குறித்த மிகவும் பிற்போக்கான புரிதல் உடைய
ஒரு பெரும் கூட்டம் எதுவென்றால், உலகிலேயே
தமிழ்நாட்டுக் குட்டி முதலாளித்துவம்தான். இதற்கு
ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றைப் பின்னர்
பார்ப்போம். தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ள
திராவிட இயக்க அரசியல் என்பது முற்றிலும் பிரிட்டிஷ்
ஆதரவு காலனி ஆதிக்கச் சார்பு அரசியலாக இருந்ததும்
இதற்கு முதன்மையான காரணம்.

ஒரு நூறாண்டு கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால்,
ஐரோப்பா அதிகமான போர்களைச் சந்தித்துள்ளது.
எனவே போர் குறித்த இலக்கியங்கள் ஆங்கிலத்தில்
(அல்லது ஐரோப்பிய மொழிகளில்) அதிகமாக உள்ளன.
இவற்றைப் படித்திருந்தால் போர் குறித்த ஒரு புரிதல்
கிடைக்கும். உரிய வயதிலேயே இவற்றைப் படித்திருக்க
வேண்டும்.

ஒரே ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். எர்னஸ்ட்
ஹெமிங்வே (Ernest Hemingway) என்று ஒரு நாவலாசிரியர்;
பிரெஞ்சுக்காரர். இவர் எழுதிய " A farewell to arms" நாவல்
உலகப்புகழ் பெற்றது. முதல் உலகப்போர் பற்றிய
நாவல் இது. முதல் உலகப் போரில் பணியாற்றி,
காயமுற்று, உடல் ஊனமுற்று, மிலன் (Milan) நகரில் உள்ள
செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை
பெற்றவர் எர்னஸ்ட் ஹெமிங்வே. இவரின் நாவலைப்
படித்தால் முதல் உலகப்போரின் துயரம் பற்றி அறியலாம்.

இன்னொரு நாவலும் உள்ளது. அது இரண்டாம் உலகப்
போரைப் பற்றியது. எழுதியவர் லியன் அரிஸ் (Leon Uris);
அமெரிக்க எழுத்தாளர். நாவலின் பெயர் Battle Cry.
என்னுடைய இளம் இருபதுகளில் (early twenties) படித்த
நாவல் இது.

போர் வீரர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி
வர்ணித்து இருப்பார் லியன் அரிஸ். இதில் மிகவும்
காசுவலாக ஒரு போர்வீரன் பாடும் ஒரு பாட்டைக்
குறிப்பிட்டு இருப்பார் லியன் அரிஸ். சற்று அசிங்கமான
பாட்டுத்தான் அது.

This is my rifle
This is my gun
This is for fighting
This is for fun.   
பொருள் புரிகிறதா? புரியாது, பரவாயில்லை.

ஒரு உதாரணத்துக்காக மட்டுமே இவ்விரண்டு
நாவல்களையும் குறிப்பிட்டுள்ளேன். இவை தவிர
நிறைய உள்ளன. அவற்றை எழுத இங்கு இடமில்லை.

1962ல் இந்திய சீனப்போர் நடந்தது. அது பற்றி நிறைய
நூல்கள் இந்தியத் தளபதிகளால் எழுதப் பட்டன.
அவற்றில் பிரிகேடியர் ஜே பி டால்வி (J B Dalvi) எழுதிய
Himalayan blunder என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
லெப்டினன்ட் ஜெனரல் பி எம் கவுல் (B M Kaul) எழுதிய
The Untold Story என்ற நூலும் மிகவும் புகழ் பெற்றது.
இதை நேரு அரசு தடை செய்திருந்தது. போரில்
பங்கேற்றுப் போரிட்ட தளபதிகள் எழுதிய நூல்கள்
இவை என்ற அளவில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

சமகாலத் தமிழில் போர் குறித்த இலக்கியங்கள் இல்லை.
இனக்குழுச் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்த காலத்தில்
கணக்கற்ற போர்கள் நடந்துள்ளன. அவற்றைப் பற்றி அறிய
புறநானூற்றை முழுமையாகப் படிக்க வேண்டும்.
தென்னாட்டுப் போர்க்களங்கள் என்று பன்மொழிப்புலவர்
கா அப்பாத்துரையார் எழுதிய நூலைப் படிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தமிழீழ விடுதலைப் போர் குறித்த
நூல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளன.
அவற்றுள் போரில் பங்கேற்ற தமிழினி எழுதிய
" ஒரு கூர்வாளின் நிழலில்" என்ற நூல் படிக்கத் தகுந்தது.

எனினும் போர் குறித்த கணக்கற்ற நூல்கள், நாவல்கள்,
கவிதைகள் ஆங்கிலத்தில்தான் (ஐரோப்பிய மொழிகளில்)
உள்ளன. அவற்றில் ஒன்றுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு
அறவே இல்லை. எனவே ஆங்கிலப் புலமை
உடையவர்கள் மட்டுமே அவற்றால் பயனடைய முடியும்
என்ற அவலம் தொடர்கிறது.

மேலும் முதல் உலகப்போர் குறித்தோ இரண்டாம்
உலகப்போர் குறித்தோ தமிழில் எவரேனும் நாவல்கள்
எழுதி உள்ளனரா? புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்,
நா பார்த்தசாரதி, கல்கி, அகிலன், அசோகமித்திரன்,
லா ச ரா, எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இப்படி
யாரேனும் எழுதி இருந்தால் வாசகர்கள் தெரிவிக்கலாம்.

War poetry எனப்படும் யுத்தக் கவிதைகளையும் வாசகர்கள்
படிக்கலாம். இக்கட்டுரையின் தொடக்கத்தில்
குறிப்பிட்டுள்ள ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின்
கவிதை ஓர் யுத்தக் கவிதை ஆகும். இது பள்ளி
மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப் படுவது.

Theirs not to reason why
Theirs but to do or die
என்ற வரிகள் ராணுவ வீரனுக்குரிய இலக்கணம் ஆகும்.

இந்தக் கட்டுரையை ஏன் எழுத நேர்ந்தது? இந்திய பாகிஸ்தான்
பதற்றம் குறித்தும் போர் வருமா என்பது குறித்தும் இரு
தரப்பின் ராணுவ வலிமை குறித்தும் சில கட்டுரைகள்
எழுதுமாறு வாசகர்கள் சிலர் கோரினர். ராணுவம் குறித்தும்
போர் குறித்தும் எந்தவொரு அடிப்படைப் புரிதலும்
கொண்டிராத தமிழ்ச் சமூகத்தில், கட்டுரைகள் எழுதி
என்ன பயன் விளையும்? குட்டி முதலாளித்துவம்
புரிந்து கொள்ளுமா?

ராணுவம் பற்றி எழுதுவது என்பது கால்குலஸ் கற்பிப்பது
போன்றது. அரித்மேட்டிக்கே தெரியாத ஒரு சூழலில்
கால்குலசை எப்படிக் கற்பிப்பது? கட்டுரைகளை
எழுதலாம். பிறழபுரிதல் மட்டுமே நிகழும்.

மோடி எதிர்ப்பு வேறு; இந்திய நாட்டை எதிர்ப்பது வேறு.
இரண்டும் ஒன்றுதான் என்பது பிறழ்புரிதல். நக்சல்பாரி
இயக்கத்தின் நிறுவனத் தலைவரும் மகத்தான
புரட்சியாளருமான தோழர் சாரு மஜூம்தார் தமது
கட்டுரைகளில் அடிக்கடி our beloved India என்று
குறிப்பிடுவார். நம் அன்புக்குரிய இந்தியா என்று
அதற்குப் பொருள். தோழர் சாரு மஜூம்தாரும் தோழர்
ஏ எம் கே அவர்களும் வரையறுத்த ஏக இந்தியப் புரட்சி
என்பதில் நியூட்டன் அறிவியல் மன்றம் நம்பிக்கை
கொண்டுள்ளது. ஏக இந்தியாவுக்கான எதிரான
குட்டி முதலாளித்துவ மூடத்தனத்தை நியூட்டன்
அறிவியல் மன்றம் ஏற்கவில்லை. இதில் மிகத் தெளிவாகவும்
கறாராகவும் இருக்கிறோம்.  

பிறழ் புரிதலைத் தவிர்க்க, IQ > or = 110 உள்ளவர்கள்
மட்டுமே படிக்க வேண்டும் என்று நிபந்தனை
விதித்தால், குட்டி முதலாளித்துவம் வருந்துகிறது.
IQ < 95 உடையவர்களும் படிக்கின்றனர். இதை எப்படித்
தடுப்பது?

எமது கட்டுரைகள் பாடப்புத்தகத் தரத்தில் எழுதப்
படுபவை. அநேகமாக எவருமே அறிந்திராத புதிய
செய்திகளைத் தருபவை. இக்கட்டுரைகளில் எழுதப்
படுபவை எமது கருத்துக்கள் அல்ல; அவை நிரூபிக்கப்
பட்ட தேற்றங்கள். பைனாமியல் தேற்றம், அப்பலோனியஸ்
தேற்றம், டி மோவிர் தேற்றம் போன்ற தேற்றங்களுக்கு நிகரான
தேற்றங்கள்தான் எமது கட்டுரையில் உள்ளனவே தவிர
இங்கு கருத்துக்கள் எவையும் இடம் பெறுவதில்லை.

எனவே எமது கட்டுரைகளைப் புரிந்து கொள்ள, ஒரு
குறிப்பிட்ட அளவிலான புரிதல் மட்டம் அவசியம்.
De Moivre's தேற்றத்தைப் புரிந்து கொள்ள எப்படி ஒரு
புரிதல் மட்டம் தேவைப் படுகிறதோ, அப்படியே எமது
கட்டுரைகளைப் புரிந்து கொள்ளவும் உரிய புரிதல்
மட்டம் (Level of understanding) தேவைப்படுகிறது. அது
இல்லாதபோது பிறழ்புரிதல் மட்டுமே நிகழும்.
**********************************************



   
      

  


   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக