செவ்வாய், 19 மார்ச், 2019

முகிலன் உயிருடன் இருக்கிறார்; பத்திரமாக இருக்கிறார்!
தேர்தல் முடிந்ததும் திரும்பி வருவார்!
முகிலனின் மனைவி பூங்கொடி பேட்டி!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) கடந்த மாதம் பெப்ரவரி 15 (15.02.2019) நள்ளிரவுக்குப் பின்னர்
முகிலனைக் காணவில்லை என்று செய்தி வந்தது. சில நாட்களில்
 இச்செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.

2) ஹென்றி திபேன், சுதா ராமலிங்கம் ஆகிய இருவரும்
மனித உரிமை வழக்கறிஞர்கள். ஆள்கொணர்வு மனு எனப்படும்
ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில்
இவர்கள் தாக்கல் செய்தனர்.

3) அம்மனு மீதான விசாரணை நேற்று (18.03.2019) சென்னை
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் விவரங்கள்
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில்
(19.03.2019) 5ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளன. ஆங்கிலம்
அறிந்த அன்பர்கள் அச்செய்தியை முழுமையாகப் படிக்கவும்.

4) தம் கணவர் முகிலன் உயிருடன் நலமாக இருப்பதாகவும்
தேர்தல் முடிந்ததும் வீடு திரும்புவார் என்றும் முகிலனின்
மனைவி பூங்கொடி அம்மையார் தெரிவித்துள்ளார்.

5) பூங்கொடி அம்மையார் மிகுந்த நம்பிக்கையுடன்
இருக்கிறார். அவருக்கு சகல உண்மைகளும் தெரியும்
என்பதும், தலைமறைவாக இருந்து வரும் (self exile) முகிலன்
தன் துணைவியாருடன் தகவல் தொடர்பில் இருக்கிறார்
என்பதும் இதன் மூலம் உறுதிப் படுத்தப் படுகிறது.

6) காவல்துறையும் அநேக உண்மைகளையும் அல்லது
தேவையான எல்லா உண்மைகளையும் அறிந்து
கொண்டு விட்டது என்பது தெரிய வருகிறது.

7) இசை என்கிற ராஜேஸ்வரி (Isai aka Rajeswari) என்ற
பெண்மணி இந்த வழக்கில் மிகவும் முக்கியமானவர்.
அவரைப் பற்றி முகிலனின் மனைவி பூங்கொடி
அம்மையார் கூறியிருப்பது உண்மையல்ல. எனினும் அது
இயல்பான காழ்ப்பு. காலங்காலமாக பூங்கொடிகள்
ராஜேஸ்வரிகளை ஏற்றுக் கொள்வதில்லை.

8) சலம்புணர் கொள்கை சலதியோடு ஆடி
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு என்ன......

நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி........

முகிலன் கொடுத்து வைத்தவர்தான்!

9) எனவே குட்டி முதலாளித்துவ அன்பர்கள், முகிலனைப்
பற்றி இனிமேலும் கவலைப்படாமல் வேறு ஏதேனும்
விஷயத்தில் போர்க்கோலம் பூணலாம்.

10) குறிப்பாக, மறைந்த தோழர் உ ரா வரதராசனுடன்
முகிலனை ஒப்பிடும் இமாலயத் தவறைச் செய்ய
வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

11) பாதை எங்கும் தியாகங்களால் நிரம்பிய ஒரு
மகோன்னதமான வாழவி வாழ்ந்து வந்த தோழர் உ ரா
வரதராசன் தமது 64ஆவது வயதில் சற்றே சறுக்கினார்.
அந்தச் சறுக்கல் அவரின் உயிருக்கே உலையானது.

12) "தவறுகள் குற்றங்கள் அல்ல" என்ற ஜெயகாந்தனின்
தியரியை இங்கு பொருத்தி இருக்க வேண்டும் என்பது
என் தாழ்மையான கருத்து. (தவறுகள் குற்றங்கள் அல்ல
என்ற ஜெயகாந்தனின் மகத்தான சிறுகதையை
வாசகர்கள் படிக்க வேண்டும்).

13) ஆனால் உ ரா வரதராசனின் மனைவியான சரஸ்வதியும்
உ வாசுகியும் hardlinersஆக இருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்
மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்ற 74 CC Memberகளும்
உ ரா வரதராசனின் மீதான ஒழுங்கு நடவடிக்கையை
ஆதரித்தனர். அதன் பிறகு நடந்தவை அனைவரும்
அறிந்ததே.

14) பெருமதிப்புக்குரிய தோழர் பிரகாஷ் காரத்தின்
முடிவை நான் விமர்சிக்க விரும்பவில்லை. முழுமையான
விவரங்கள் கிடைக்கப் பெறாத நிலையில், காரத்தை
விமர்சிக்கும் அருகதை எனக்கு இல்லாமலும் இருக்கக்
கூடும். காரத்தின் முடிவு 100 சதம் சரியானதாகவும்
இருக்கக் கூடும்.

15) எனக்கு உ ரா வரதராசன் நல்ல நண்பர்தான். இங்கு
நண்பர் என்பதை விட மூத்த வழிகாட்டும் நிலையில்
இருந்த தோழர் என்பது அதிகமாகப் பொருந்தும்.
நாங்கள் இருவரும் 1970களிலும் 1980களிலும் மத்திய
அரசு ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களில்
செயலூக்கமுள்ள பங்கு வகித்தவர்கள்.

16)  எனவே வரதராசனின் சோக முடிவு எனக்கு மிகுந்த
துயரைத் தந்தது. ஆனால் என்னால் வருத்தப்பட மட்டுமே
முடிந்தது. ஏனெனில் நான் அவர்களின் கட்சி அல்ல.
அவர்களுக்குப் பகைமையான ஒரு கட்சியில் செயல்பட்டவன்.
            
17) முகிலனை வரதராசனுடன் ஒப்பிடும் மடத்தனத்தைச்
செய்ய வேண்டாம் என்று குட்டி முதலாளித்துவ அன்பர்களை
மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
முகிலன் குறித்த எல்லா உண்மைகளையும் தற்போது வெளியிட
விரும்பவில்லை..  அவர் வீடு திரும்பியதும் வெளியிடுகிறேன்.
***************************************************************

சலம் புணர் கொள்கை என்றால் என்ன?
சலதி என்றால் என்ன?
-------------------------------------------------------------
பொதுவாக, தேங்காயை உடைத்தது போல
எழுதுவதுதான் எமது வழக்கம். ஆனால்
இக்கட்டுரையில் that was not practiced.

வேற்றுப்பொருள் வைப்பணி பயில்வது போன்று
இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. ஜெயகாந்தனின்
குறிப்பிட்டுள்ள சிறுகதையைப் படித்திருந்தால்
மட்டுமே இக்கட்டுரை முழுமையாகப் புரியும்.
அடுத்து சிலப்பதிகாரம் படித்திருக்க வேண்டும்.

"சலம் புணர் கொள்கை சலதியோடு ஆடி"
என்று தொடங்கும் சிலப்பதிகாரச் செய்யுளின்
பொருள் புரிந்தால் மட்டுமே கட்டுரையை
முழுமையாகப் புரிய இயலும். எனினும்
புரிந்தவரை போதும் என்ற நினைப்பில்
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.     




 
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக