ஞாயிறு, 24 மார்ச், 2019

முகிலன் எங்கே? இதோ இங்கே!
தனியொருவனின் சொந்தச் சிக்கலை
மொத்த சமூகத்தின் சிக்கலாக ஆக்குவது தகாது!
முகிலன் தலைமறைவு: உள்மர்மம் என்ன?
-----------------------------------------------------------------------------
ஆக்கம்: கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
                  மாலை வரும் நேரமெல்லாம்
                  மன்னன் வரக் காத்திருந்தேன்
                  வழியெங்கும் விழி வைத்துப்
                  பார்த்த விழி பூத்திருந்தேன்.

முகில்கள் சேர்ந்து நிலவை மறைக்கும். நிலவும் மறையும்.
ஆயினும் முகில்கள் மறைவதில்லை. எனவே அவர் விரைவில்
இல்லம் ஏகுவார் என்று கூறியிருந்தார் திருமதி பூங்கொடி,
முகிலனின் துணைவியார், மன்னிக்கவும், மனைவியார்.

வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
சென்னிமலையில் பூங்கொடியின் இல்லக் கதவு
தேய்ந்து வருகிறது.

பூங்கொடியைப் போன்றே இன்னொரு பெண்ணும்
முகிலன் வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன்
குளித்தலையில் காத்திருக்கிறார். இவர் ராஜேஸ்வரி
என்னும் மடந்தை.

மன்னவன் உங்கள் பொன்னுடல்
அன்றோ இந்திர லோகம்!
அந்தி மாலையில் அந்த மாரனின் கணையில்
ஏன் இந்த வேகம்? ஏன் இந்த வேகம்?

விரகதாபங்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும்
யுக்தி அறிந்தவை. அவை பரத்தமை உடைய தலைவனின்பால்
நாணுத்துறவு உரைப்பவை.

எனினும் பின்னவளை முன்னவள் ஏற்பதில்லை.
"மன்னவன் பணியென்றாகில்
நும் பணி  மறுப்பனோ
என் பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ"
என்று கருதும் பெருந்தன்மை ஆடவர்க்கு மட்டும்
உரியதேயன்றி, பெண்டிர்க்கு உவப்பதில்லை.

ஏற்றவளை வரிசிலையோன் இயம்பாமுன் இகலரக்கி
சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினந்திறுகிச்
சூற்றவளை நீருழக்கும் துறைகெழுநீர் வளநாடா
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம் என்றாள்.

ஆறறிவு படைத்த மானுட இனத்தில் மட்டுமின்றி,
குறையறிவு உடைய தவளை இனத்திலும் கூட
சக்களத்திகள் ஒத்துப் போவதில்லை என்பதை
கம்பரின் பாடல் வாயிலாக உணர்கிறோம்.
Two watches never compromise as two ladies
never compromise என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.
ஆக ஐரோப்பாவிலும் இதே நிலைதான்!

நீங்கள் இருவரும் இப்படி ஒற்றுமையின்றிச்
சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நான் யாருக்கும்
பயன்படாமல் போய் விடுவேன் என்று மிரட்டுகிறாரோ
முகிலன்! நீங்கள் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு
வாருங்கள்; அதன் பிறகு நான் வருகிறேன் என்று
நிபந்தனை விதிக்கிறாரோ முகிலன்! இதுதான் முகிலனின்
மறைவு உணர்த்தும் செய்தியோ?

சிறப்புப்பிரிவு (CB CID) காவல் துறையின்
அழைப்பாணையை ஏற்று, நேற்று (23.03.2019) முகிலன்
குறித்து சாட்சியம் அளிக்கச் சென்றிருந்தேன்.
Clueless என்ற நிலையில்தான் காவல்துறையும்
இருக்கிறது என்று அறிந்தேன்.

நமது காவல்துறை தூங்கும் எவனையும் எழுப்பி விடும்
ஆற்றல் உடையது. ஆனால் தூங்குவது போல்
நடிக்கும் எவரையும் எந்தக் காவல்துறையாலும் 
எழுப்ப இயலாது.

ஆக சிக்கலுக்குத் தீர்வு இதுதான்! தனது மறைவிடத்தில்
இருந்து முகிலன் வெளியே வர வேண்டும். தனது சொந்தச்
சிக்கலை ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் சிக்கலாக
முகிலன் ஆக்கி இருப்பது பெருங்குற்றம். இது தமிழ்ச்
சமூகத்திற்கு முகிலன் செய்துள்ள பெரும் அநியாயம்!
இதை உடனடியாக அவர் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இதைச் செய்ய முகிலன் தயாராகவும் இருக்கக் கூடும்.
எவரேனும் தலையிட்டு பெண்டிர் இருவருக்கும்
இடையில் ஓர் இணக்கப்பாட்டை உருவாக்க
மாட்டார்களா என்று முகிலன் ஏங்கவும் கூடும்.
அவ்வாறு ஓர் இணக்கம் இருவருக்கும் இடையில்
உருவாக்கப்பட்டு விடும் என்றால், முகிலன் தமது
அஞ்ஞாத வாசத்தை (கரந்து உறைதலை) உதறித்
தள்ளி முகங்காட்ட மறுக்க மாட்டார் என்பதே மெய்ந்நிலை.

இணக்கப்பாட்டை உருவாக்க வல்ல நீதியரசர்களுக்குத்
தமிழ்நாட்டில் பஞ்சமே இல்லை. உச்சநீதிமன்ற நீதியரசர்
மேதகு கொளத்தூர் மணி போன்ற ஆன்றவிந்தடங்கிய
சான்றோர் பலர் வாழும் ஊர்தானே நம்மூர்! வேறு எந்த
ஊருக்கு இச்சிறப்பு உண்டு?

ஆக,  முகிலன் வருகிறார்! பெண்களின் வேண்டுதலுக்கு
இறைவன் செவி சாய்க்காமல் இருக்க மாட்டான் அன்றோ!
வண்ணநறு மலர்சொரிந்து வானோர் ஆர்க்க
முகில் கிழித்து வெளிவரட்டும் முகிலன்! பெண்டிர்
பூரிப்பு எய்தட்டும். அவர்கள் அணிந்திருக்கும்
வாம மேகலை இற்று விழட்டும்.வளர வேண்டியது
வளரட்டும்!

சேக்ஸ்பியரின் மாக்பெத் போன்றோ, ஒதெல்லோ
போன்றோ துன்பியலாக முடியாமல், டெம்பஸ்ட்
(The Tempest) போன்று முகிலனின் கதை இன்பியலாக
முடியட்டும்!

கள்ளவிழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ?

காவியத்து நாயகனின்
கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகம் என்று
மோகனப்பண் பாடியதோ!
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1. கலிங்கத்துப் பரணி (கடை திறப்பு), கம்ப ராமாயணம்,
புலவர் புலமைப்பித்தன் பாடல் ஆகியவற்றில் இருந்து
மேற்கோள்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

2. இக்கட்டுரை இலக்கியப் பயிற்சி உடையோர் மற்றும்
IQ > or = 110 உடையோரை நோக்கி எழுதப்பட்டது. எனவே
பிறழ் புரிதலைத் தவிர்க்க, IQ < 110 உடையோர்
இக்கட்டுரையைப் படிக்காமல் இருந்து ஒத்துழைப்பு
நல்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

3. நியூட்டன் அறிவியல் மன்றமானது
குட்டி முதலாளித்துவத்துக்கு கருத்து சுதந்திரம் எதையும்
வழங்குவதில்லை. எனவே குட்டி முதலாளித்துவமானது
இக்கட்டுரை மீதான எவ்வித எதிர்மறைக் கருத்தையும்
சொல்ல அனுமதி இல்லை. இது போன்ற பதிவுகள்
ONE WAY TRAFFIC போன்றவை என்பதையும் இது
annihilation நடந்த இடம் இனி நடக்கும் இடமும் கூட
என்பதையும் குட்டி முதலாளித்துவர்கள் கருத்தில் கொள்க.
*******************************************************




            





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக