வெள்ளி, 8 மார்ச், 2019

ஏ எம் கே பற்றி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் யுத்தம் (போல்ஷ்விக்) கின் செயலாளரான ஏ.எம்.கே. என்று அழைக்கப்படும் ஏ. எம் கோதண்டராமன் அவர்கள் கடந்த 2018 நவம்பர் 25 அன்று, தனது 84வது வயதில் இயற்கை எய்தினார். அவரது மரணத்தை ஒட்டி சமூக ஊடகங்களிலும் துண்டறிக்கைகள் போன்றவற்றிலும் அவர் குறித்த பல மதிப்பீடுகளும் விமர்சனங்களும் வெளிவந்துள்ளன. ஏ எம் கே அவர்களைப்பற்றிய ஒரு முழுமையான மதிப்பீடு என்பது முக்கியமாக எண்பதுகளுக்குப் பிறகு அவர் மக்கள் யுத்தத் கட்சியிலும் பின்னர் மக்கள் மக்கள் யுத்தம் (போல்ஷ்விக்) கட்சியிலும் மேற்கொண்டிருந்த பாத்திரத்தை ஒட்டியே வரையறுக்கப்பட முடியும். மா-லெ இயக்கத்தில் எம் கே அவர்களின் பங்களிப்பு பற்றிய ஒரு மதிப்பீட்டை உடனடியாக எழுதி இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு பணிச்சுமைகள் காரணமாக அதை தாமதமாக எழுதுகிறேன்.
நக்சல்பாரி இயக்கத்தில் முன்னர் பங்கு கொண்ட தோழர்கள் சிலர், அவருடன் கொண்டிருந்த பழைய உறவுகளின் அடிப்படையில் அவரது பழைய பங்களிப்புகளை சிலாகித்து எழுதுகின்றனர். இது ஒரு முழுமையான மதிப்பீடு எனக் கருதப்பட முடியாது. அவர்களுக்கு அவருடன் இருந்த நெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு ஒரு புகழ் அஞ்சலி செலுத்தியதாகவே இவற்றைக் கருதலாம். அதேசமயம் அவரது அமைப்பைச் சேர்ந்த பலர் அவரை இந்தியாவின் லெனின் என்றும் மாவோ என்றும் புகழ்ந்து தள்ளுகின்றனர். ஆனால் அவரது இயக்கத்தின் நிலையும் அவரது பெரும்பான்மை புரட்சிகர வாழ்வின் உண்மைகளும் இவை அப்பட்டமான கேலிக்கூத்துகள் என்பதை நிரூபிக்கின்றன.
ஏ. எம். கே.வின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி பலரும் எழுதியுள்ளதால், அதை நான் மீண்டும் எழுதப் போவதில்லை. இருப்பினும் அவரது பாத்திரத்தை சுருக்கமாகச் சொல்வது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
மிகச் சிறிய வயதில் பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக மாறி, ஒரு ஆளுமை கொண்ட தொழிற்சங்கத் தலைவராக வளர்ந்து, சிபிஎம் கட்சிக்குள் திரிபுவாதத்தை எதிர்த்து போராடி, தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை கட்டிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தது அவரது அரசியல் வாழ்வின் நேர்மறையான பங்களிப்பு காலகட்டம்(80கள் வரை) என்று கருதலாம்.
அதன் பின்னர் குறிப்பாக எண்பதுகளின் இறுதி 5 ஆண்டுகளில், தமிழகத்தில் மிகப்பெரும் புரட்சிகர மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்த மக்கள் யுத்தக் கட்சியை சீரழித்து, அதன் பின்னர் புரட்சிகர உணர்வும, நடைமுறையும் எள்ளளவும் இல்லாத, ஒரு பெயருக்கு செயல்படும் அமைப்பாக போல்ஷ்விக் கட்சியை நடத்திச் சென்றது என்ற கலைப்புவாத- சந்தர்ப்பவாத தலைவராகவே அவர் தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை நடத்திச் சென்றார். தமிழக மார்க்சிய லெனினிய இயக்கத்திலான அவரது பங்களிப்பை தொகுத்து பார்த்தோமேயானால், அது முதன்மையாக எதிர்மறையானது என்றே மதிப்பிட முடியும்.
பெரும் ஆளுமை கொண்டிருந்த ஒரு புரட்சிகர தலைவர், புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுறை ஆகியவற்றில் கொண்டிருந்த உறுதியற்ற தன்மை காரணமாக, ஒரு கலைப்புவாதத் தலைவராக சீரழிந்துபோன அவலம்தான் எம் கே அவர்களின் வரலாறு ஆகும்.
அவருடைய இறுதிக்கால நிலை இதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. எழுபதுகளில் தலைமறைவு முழுநேர ஊழியர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு லெனினிய புரட்சிகர கட்சியை கட்டிய முக்கியத் தலைவராக இருந்த ஒருவர் ஏ எம் கே. ஆனால், அவரது இறுதி காலகட்டத்தில் அவரது போல்ஷ்விக் கட்சியின் ஒரே ஒரு ரகசிய முழு நேர ஊழியர் அவர் மட்டுமே என்ற அவல நிலையில் அவரது அமைப்பு இருந்தது. கடைசி 20 ஆண்டுகளில் அவரது தலைமறைவு வாழ்க்கையும் கூட, அவரால் தொந்தரவில்லை என்று கருதிய எதிரி அவரை அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் சாத்தியமானது. எழுபதுகளில் ஒரு புலி சிக்கவில்லை என்று எதிரி அவரைப் பற்றி கூறினான். ஆனால் பிற்காலத்தில் அவரை தொல்லையற்றவர்என்றே அவன் கருதினான்,.

எழுபதுகளில் தமிழகத்தின் கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகவும், மா-லெ தலைவர்களில் ஒருவராகவும் எதிரிகள் கண்டஞ்சிய, புரட்சிகர சக்திகளால் கொண்டாடப்பட்ட ஒரு நபர் மறைநத போது எத்தகைய பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே அவரது அரசியல் வாழ்க்கையின் சாரத்தை நமக்கு காட்டுகிறது.
#அரசியல்_வழியில்_பற்றுறுதி_இல்லாத #சந்தர்ப்பவாதம்
1970 பேராய வழியை உயர்த்திப் பிடிப்பதாக எம்கே அவர்கள் கூறிக் கொண்டபோதும், அவர் விவசாயப் புரட்சியை முன்னெடுப்பது, ஆயுதப் போராட்டத்தை வளர்த்தெடுப்பது போன்ற நீண்ட கால மக்கள் யுத்த வழியின் அடிப்படை விஷயங்களைஉறுதியாகப்பற்றி நின்றதில்லை. உண்மையில், அவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மாநில அமைப்புக் கமிட்டி(SOC) போல, பேருக்கு நீண்டகால மக்கள் யுத்தப் பாதையை ஓதிக்கொண்டே, சோவியத் ரஷ்யாவில் கடைப்பிடிக்கப்பட்ட வழியை இந்தியாவிற்கு பொருத்தும் ஒரு குழப்பவாத நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.
கட்சியின் அரசியல் வழியில் மட்டுமல்ல, தான் கொண்டிருந்த கருத்துக்களில் கூட உறுதியான பற்றற்ற ஒரு தலைவராகவே ஏ எம் கே இருந்து வந்தார். 70 களில் தோழர் அப்பு சிறைப்பட்டிருந்த காலத்தில் மா-லெ கட்சியின் மாநிலக் குழுவில் அழித்தொழிப்பு வழிக்கு எதிரான ஒரு அறிக்கையை ஏ.எம்.கே. முன்வைத்தார். மாநிலக் குழு அதை ஏற்றுக்கொண்டது. ஆனால் தோழர் அப்பு வெளியே வந்த பிறகு, இது ஒரு சந்தர்ப்பவாத அறிக்கை என்று விமர்சிக்கப்பட்டது. அந்த அறிக்கையை ஏ.எம். கே. திரும்பப் பெற்றுக் கொண்டார். அந்த தன்னுடைய கருத்துக்காக கட்சிக்குள் போராடவில்லை.
அவர் சிறையிலிருந்து வந்தபோதுகூட அவரது கருத்தை ஒத்திருந்த மாநில அமைப்புக் கமிட்டியில் (SOC) இணைவார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ கூட்டக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதேபோல எண்பதுகளில் தர்மபுரியிலும் வடாற்காட்டிலும் அரசின் தீவிர அடக்குமுறைகள் நிலவிய காலகட்டத்தில், இங்கு ஆயுதக் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற கருத்தை மையக் குழுவில் தமிழ்வாணன் உடன் இணைந்து ஏ. எம்.கே. முன்வைத்தார். மையக்குழு மக்கள் திரள் அமைப்புக்களை இன்னும் விரிவாகக் கட்டிய பிறகு ஆயுதக்குழுக்களை கட்டவேண்டும் என்று கூறியது. இப்போதும் அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்தக் கருத்துக்கள் ஏன் வைக்கப்பட்டது? பின்னர் அவை என்னவாயின என்பது எவருக்கும் தெரியாது.
ஒரு கம்யூனிஸ்ட் தான் கொண்டுள்ள கருத்துக்களை கட்சியில் வைத்து தொடர்ந்து போராடுவதன் மூலமாக தான் உண்மையில் புரட்சியின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும். தோழர் லெனின் ஆகட்டும் தோழர் மாவோ ஆகட்டும் பலமுறை அவர்களது கருத்துக்கள் சிறுபான்மை கருத்துக்களாக இருந்தபோதும், தமது கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்துப் போராடியதன் மூலமாகத்தான் ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் வெற்றிவாகை சூடுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர. இதுதான் ஒரு பாட்டாளிவர்க்க தலைமையின் புரட்சிகர பண்பு ஆகும. ஆனால் ஒரு குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவியை போல கட்சி வழியிலோ, தன்னுடைய கருத்துக்களில் கூட உறுதியான பற்றற்ற நபராக ஏ எம் கே விளங்கினார்.
இதை இன்னும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் கூட நாம் காணமுடியும்.
மக்கள் யுத்தக் கட்சிக்குள் கலைப்பு வாதத்தை முன்னெடுத்ததுதான்
ஏ. எம்.கே. அவர்கள் நிகழ்த்திய மிகப்பெரும் துரோகமாகும்.
அனைத்திந்திய அளவிலும் தமிழகத்திலும் மக்கள் யுத்தக் கட்சியின் தலைமையில் இருந்த போது அரசு அடக்குமுறைகளை எதிர்கொண்டு புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் உறுதியாக நிற்க தயார் இன்றி, இரு வழிப் போராட்டம் என்ற பெயரில் நடைமுறையை நிறுத்தி வைத்தது, மக்கள்யுத்தக் கட்சியில் தலைமையாக இருந்துகொண்டே அக்கட்சியின் வழி தவறு என்று அராஜகமாக அணிகளை குழப்பியது, எண்ணற்ற முழுநேர ஊழியர்களை திட்டமிட்டு வீட்டுக்கு அனுப்பியது, தத்துவப் பணியே முதன்மை என்று நடைமுறையை கோட்பாட்டு ரீதியாக இரண்டாம்பட்சம் ஆக்கியதும் தமிழக புரட்சிகர இயக்கத்தை சீரழித்த கலைப்பு வாதத்தின் அரசியல் வேர்கள் ஆகும். இவை ஏ எம் கே அவர்களால் முன்வைக்கப்பட்டவை. இந்த கலைப்புவாத பாதிப்பிலிருந்து எம் கே அவர்களும் போல்ஷ்விக் கட்சியும் இன்று வரை வெளி வர இயலவில்லை.
போல்ஷ்விக் கட்சி உருவான பிறகும், அவர்களின் 88 சிறப்புக் கூட்டம் பல முக்கியமான அரசியல் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், அவற்றைத் தீர்ப்பதுதான் முதன்மை கடமை என்றும் முடிவு செய்திருந்தது. இருப்பினும், அதில் எந்த ஒரு பிரச்சனையும் துளியளவும் தீர்க்காத ஒரு நிலையே ஏ.எம்.கேவின் மறைவு வரை தொடர்கிறது. தாம் எடுத்த முடிவை நிறைவேற்ற உறுதியாக போராடாமல், அதை 30 வருடங்கள் கிடப்பில் போட்ட ஒரு மாபெரும் புரட்சியாளர் ஏ எம் கே ஆகத்தான் இருக்க முடியும்.
இன்னொரு முக்கிய விஷயம் அரசியல்ரீதியாக எதிர்க்கருத்துக்களை எதிர்த்து போராடுவதற்கு பதில் முத்திரை குத்துவது, பீதி ஊட்டுவது, வரட்டுத்தனமான மேற்கோள்களைக் காட்டி முறியடிப்பது போன்ற குட்டி முதலாளிய தந்திரங்களை தனது அரசியல் போராட்ட வழிமுறையாக அவர் கொண்டிருந்தார். எண்பதுகளில் மக்கள் யுத்தக் கட்சி மிகப்பெரும் அடக்குமுறையை எதிர்கொண்டு, ஆயுதப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான புதிய செயல் உத்திகளையும், அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்கவேண்டிய நிலையை எதிர் கொண்டு இருந்தது. இந்தச் சிக்கல்களை தீர்ப்பதற்கு அரசியல்ரீதியாக பங்களிப்பதற்கு பதில், ஆயுதப் போராட்டத்தை முடக்கிவிட்டு அமைப்பை சீர்குலைக்கும் கலைப்பு வாதத்தை முன்னெடுக்க மட்டுமே, சில அரசியல் சிக்கல்களை அவர் முகமூடியாக பயன்படுத்தினார்.
இறுதிவரையிலும் கூட தன்னுடைய அரசியல் எதிர்ப்பாளர்களை முறியடிக்க மிக மோசமான குட்டி முதலாளிய தந்திரங்களை அரசியல் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி வந்தார். எந்த ஒருவரையும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் என் ஜி. ஓ. என முத்திரை குத்துவது அல்லது பெரியாரிஸ்ட் ,அம்பேத்காரிஸ்ட் என அவதூறு பேசுவது போன்றவையே அவரதுஅமைப்பின் மகத்தான ஒரே அரசியல் போராட்டமாக இருந்து வருகிறது.
மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் ஆக உருவெடுத்த பின்நவீனத்துவம் போன்றவற்றுக்கு எதிரான தத்துவார்த்த அரசியல் பங்களிப்புகள் எதையும் செய்ய திறனற்ற போல்ஷ்விக் கட்சி தலைமை, வெறுமனே அத்தகைய கருத்துக்களை முன்வைக்கும் அறிவுஜீவிகளை கலைப்புவாதிகள், ஏகாதிபத்திய ஏஜென்டுகள் என பூச்சாண்டி காட்டுவதை மட்டுமே தங்களுடைய அரசியல் போராட்டமாக நடத்தி வருகிறது.
அ. மார்க்ஸ் போன்ற சில முன்னாள் புரட்சிகர அறிவுஜீவிகள் பின்நவீனத்துவத்தை தமிழகத்தில் பரப்பியதை இங்கு புரட்சிகர இயக்கம் கட்ட முடியாததற்கு காரணம் என்று நொண்டிச் சாக்கு கூறுமளவிற்கு இவரது அரசியல் போராட்டம் கேலிக்கூத்தாக இருந்தது.இந்த அறிவுஜீவிகள் புரட்சியில் நம்பிக்கை இழந்து பின்நவீனத்துவத்திடம் தஞ்சமடைந்ததற்கும் மக்கள் யுத்தக் கட்சியில் இவரது கலைப்புவாதமே புறநிலைக் காரணம் என்ற உண்மையை நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு புரட்சிகர கட்சியை வெத்துவேட்டு கட்சியாக மாற்றிவிட்ட ஒரு கலைப்புவாத தலைவர் சில தனிநபர்களை கலைப்பு வாதத்தின் ஊற்றுக்கண் என கூறும் நகைப்புக்கிடமான அரசியல் நிலையை எடுத்தார்.
இவரது இந்த போக்கானது அரசியல் ரீதியாக எந்த வித பங்களிப்பையும் செய்ய இயலாத ஒரு கையறு நிலைக்கு இவரை தள்ளிவிட்டது.
இன்றுவரையிலும் 70 திட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் அதையே தமது திட்டம் எனக் கூறிக் கொண்டிருக்கும் ஒரே மா-லெ அமைப்பாக போல்ஷ்விக் கட்சி மட்டுமே இருக்க முடியும்.
அதேபோல சாதி அமைப்பைப் பற்றி வரலாற்றைத் திருப்பிப் போடும் ஒரு ஆய்வை இவர் செய்து கொண்டிருப்பதாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே இவரது விசிறிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால், இறுதிவரை அத்தகைய ஆய்வு எதையும் இவர் செய்து முன் வைக்கவில்லை என்பதே உண்மை.
இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியும், காலனிய சுரண்டல் முறையை பற்றியும், இந்திய அரசமைப்பு பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற போல்ஷ்விக் கட்சியின் 88 சிறப்புக்கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கூட 30 வருடங்களாக எந்த முயற்சியும் செய்யாத அளவுக்குத்தான் இவரது அரசியல் பங்களிப்பு இருந்தது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வையும் , சிறந்த அரசியல் புலமையையும் கொண்டிருந்த ஏ. எம் கே அவர்களின் படைப்புகள் என்று சொல்வதற்கு கூட பெரிதாக ஒன்றும் இல்லை என்ற அளவிற்குத் தான் அவரது அரசியல் பங்களிப்பு இருக்கிறது.பெரியாரிசத்தை விமர்சித்து சுயமாக எழுத முடியாத இயலாமை, ஜீவாவின் அரதப் பழைய புத்தகத்தை வெளியிடும் நிலைக்கு இவர்களை இட்டுச் சென்றது.
தத்துவார்த்த பணியே முதன்மைப் பணி என்று கூறி கட்சியின் புரட்சிகர நடைமுறையையே நிறுத்தி வைத்த ஏ.எம்கே அவர்களது தத்துவார்த்த பணி இவ்வளவுதான். இத்தகைய சூழ்நிலையில் ஏ.எம். கே. அவர்களை லெனின் என்றும் மாவோ என்றும் தூக்கிப் பிடிப்பதை எந்த வகையில் சேர்ப்பது?
அமைப்பு ரீதியாகவும் கூட ஜனநாயக மத்தியத்துவத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு ஒரு திடமான புரட்சிகர அமைப்பை கட்டி அமைப்பது என்ற பாட்டாளிவர்க்க நிலைக்கு மாறான நடைமுறையையே ஏ .எம்.கே. கொண்டிருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் ஜனநாயக- மத்தியத்துவம் மிக அடிப்படையான விஷயம். அனைத்து கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஒரு மாநாட்டை நடத்துவது அடிப்படை ஜனநாயக கடமை ஆகும். ஒரு கட்சியின் அரசியல் வழியையும் அமைப்பு தலைமையையும் மாநாடுதான் தீர்மானிக்கிறது. ஆனால் ஏ.எம். கே. மக்கள் யுத்தக்கட்சியில் பல காலமாக நொண்டிச் சாக்குகளை கூறி தமிழக மாநாட்டை நடத்தாமல் தள்ளிப் போட்டார். அவர் இருக்கும் வரை அங்கு மாநாடு நடத்தப்படவே இல்லை. அதன் பிறகு உருவான போல்ஷ்விக் கட்சி ஏறத்தாள 30 ஆண்டுகளாக மாநாடு என்று ஒன்று இல்லாமலேயே, அரசியல் வழி என்பது ஜனநாயக ரீதியில் தீர்மானிக்க படாமலே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது முழுக்க பாட்டாளிவர்க்க ஜனநாயகத்திற்கு எதிரான நடைமுறையாகும்.
மக்கள் யுத்தக் கட்சியில் அனைத்திந்திய மற்றும் தமிழகத்தில் தலைமைக் குழுவில் இருந்தஇவர், ஜனநாயக மத்தியத்துவத்தைப் பின்பற்றுவதற்கு பதிலாக தனக்கு எதிராக உள்ளவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதைத்தான் எப்போதும் தன்னுடைய நடைமுறையாக கொண்டிருந்தார். அது தோழர் தமிழரசன், கலியபெருமாள் ஆகியோருக்கு எதிராக இருக்கட்டும் அல்லது அனைத்திந்திய அளவில் கொண்ட பள்ளி சித்தராமையாவுக்கு எதிராக இருக்கட்டும், அவருடைய நடைமுறை சந்தர்ப்பவாத கூட்டுகளையும் சதிகளையும் சார்ந்ததாகவே இருந்தது. கட்சிக்குள் ஒரு முறையான அரசியல் போராட்டத்தை நடத்தி மாறுபட்ட கருத்துக்களை தீர்த்துக்கொள்வது என்பதற்கு பதிலாக, தனக்கு எதிராக உள்ளவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான, தனது தலைமையை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு குட்டி முதலாளிய சதித்தனமான நடைமுறைகளையே இவர் மேற்கொண்டார்.
எடுத்துக்காட்டாக, கூட்டக் குழுவின் செயலாளராக இருந்து சிறைப்பட்ட தோழர் தமிழரசனும், நீண்ட காலம் சிறைப்பட்டிருந்த தோழர் கலியபெருமாளும் (புலவர்) வெளியே வந்த பின்னர், " தனித்தமிழ்நாடு", " தமிழ் தேசிய விடுதலையே முதன்மை கடமை" போன்ற கருத்துக்களை முன்வைத்தனர். இவர்களுடன் விவாதம் நடத்தி, கட்சியில் இவர்களின் கருத்துக்களை சுற்றுக்கு விட்டு, முறையாக அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு பதில் இவர்களை தனிமைப்படுத்தும் நடைமுறையே ஏ.எம்.கே. தலைமையிலான தமிழ்நாடு மாநிலக்குழு கடைப்பிடித்தது. ( தோழர் தமிழரசன் தரப்பினரும் அத்தகைய அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு ஆர்வம் காட்டாமல், தனி அமைப்பை கட்டினர்.)
அதேபோல மக்கள் யுத்தக் கட்சியில் உட்கட்சி நெருக்கடி தோன்றிய சமயத்தில் (85 -87) தமிழகத்தில் தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பிய தோழர்கள் மிக மோசமாக தனிமைப்படுத்தப் பட்டனர். சென்னையில் நடந்தமுற்போக்கு மாணவர் சங்கத்தின் மாநாட்டை சீர்குலைக்கும் வேலையில் பல மூத்த கட்சி உறுப்பினர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். பலர் மாநாட்டு அரங்கிற்கு வந்து அதை செயல்படுத்தினர்.

இது மக்கள் யுத்தக் கட்சியோடு முடியவில்ல. மக்கள் யுத்தக் கட்சியில் இவர் சந்தர்ப்பவாதமாக அணி சேர்த்துக்கொண்ட தமிழ்வாணன் உள்ளிட்ட ஒவ்வொரு தலைவர்களாக போல்ஷ்விக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது கூட இதே வகையில்தான். ஜனநாயகப்பூர்வமான அமைப்பு வடிவத்திலான ஒரு அரசியல் போராட்டத்திற்கு பதிலாக, தன்னுடைய ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டு, எதிர்க் கருத்து கொண்டவர்களை வெளியேற்றுவதற்கான வேலைகளைச் செய்வது இவருடைய வழி முறையாக இருந்து வருகிறது. கடைசியில் இவரது சந்தர்ப்பவாதக் கூட்டு மற்றும் மற்றவர்களை தூக்கி எறியும் செயல்பாடானது போல்ஷ்விக் கட்சியில் இவரை தவிர பழைய தலைமை யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டது.
தனது தலைமை இடத்தை எப்பாடுபட்டேனும் தக்க வைத்துக் கொள்வதற்காக போராடுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு பிழைப்புவாத பண்பு (carreerism)இவரது மிகப்பெரிய பலவீனம் ஆகும். இதற்காக தனக்கான விசுவாசிகளை உருவாக்குவது, அவர்களைக் கொண்டு தன்னைப் பற்றிய ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பத்தை உருவாக்குவது போன்ற முதலாளிய வழிமுறைகளை இவர் தொடர்ந்து பின்பற்றினார். இன்றுகூட இவரது அமைப்பினர் ஒரு யதார்த்தமற்ற தலைமை வழிபாட்டை தொடர்வதற்கும் இதுதான் காரணம். அதுமட்டுமின்றி போல்ஷ்விக் அமைப்பில் இன்று அரசியல் முரண்பாடுகளுக்கு பதிலாக, வெறும் தலைமை இடத்தை கைப்பற்றும் பிழைப்புவாத பண்பு மேலோங்கி நிற்பதற்கும் இதுவே அடிப்படையாகும். தமிழக மா -லெ இயக்கத்தில் பெரிய தத்துவார்த்த அல்லது நடைமுறை பங்களிப்பையும் செய்திராத , உண்மையில், 80களில் தமிழகத்தில் புரட்சிகர இயக்கம் ஒரு பாய்ச்சலில் முன்னேறுவதற்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தயாரற்ற ஏ. எம்.கே. அவர்களை, இந்தியாவின் லெனின் என்றும் மாவோ என்றும் நகைக்கத்தக்க விதமாக அவரது விசிறிகள் புகழ்ந்து கொண்டிருப்பதும் இந்த காரணத்தினால் தான்.
இறுதியாக சுருக்கமாகச் சொல்வதெனில்,ஏ. எம் கே அவர்கள் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி அவரது அரசியல் பங்களிப்பு பற்றிய மதிப்பீட்டை புறநிலையில் வழங்கிக் கொண்டிருக்கிறது.
அவரது போல்ஷ்விக் கட்சி எப்படி உள்ளது? மாநாடு என்ற ஜனநாயக வழிமுறை அறவே அற்ற, இருவழி போராட்டத்திற்கு பதிலாக குழுச் சண்டைகள் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பாக அது இருந்து வருகிறது. தனக்கு ஒரு திட்டமில்லாத, தனது சிறப்பு கூட்டத்தால் தீர்மானிக்கப்பட்ட அரசியல் சிக்கல்களை 30 வருடங்களுக்கும் மேலாக தீர்க்காத, அவதூறுகளையும், முத்திரை குத்தல்களையும் அரசியல் போராட்டமாக நடத்தி வரும் ஒரு அமைப்பாகத்தான் அது செயல்பட்டு வருகிறது. மக்கள் அடித்தளமே இல்லாத, மக்களின் போர்க்குணம் மிக்க போராட்டங்களுக்கு தலைமை தாங்க தயாரில்லாத, மக்களைப். புரட்சிக்கு அணி திரட்ட தயாரில்லாத வெறும் துண்டுப்பிரசுர புரட்சி அமைப்பாகவே போல்ஷ்விக் கட்சி இருந்து வருகிறது. புரட்சிகர உணர்வும், புரட்சிகர நடைமுறையும் முற்றிலும் நீக்கப்பட்ட ஒரு நீர்த்துப்போன சந்தர்ப்பவாத அமைப்பாகவே அது இருந்து வருகிறது. அதன் சந்தர்ப்பவாதமும் வரட்டுத்தனமும் கூடங்குளம் போன்ற பிரச்சனைகளில் மக்கள் விரோத ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடுகளை எடுக்கும் அளவிற்கு அதை முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளன.
ஏ. எம்.கே. அவர்களின் அரசியல் வாழ்க்கை பற்றிய ஒரு வாழும் மதிப்பிடாகவே போல்ஷ்விக் கட்சி உள்ளது என்றால் அது மிகையாகாது.
ஏ எம் கே அவர்களின் எதிர்மறையான பங்களிப்பு வெறுமனே ஒரு தனி நபர் விஷயமாக மட்டும் பார்க்கப் பட முடியாது என்பது உண்மைதான். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நீண்ட காலம் நிலவி வந்த சந்தர்ப்பவாத அரசியலும், எழுபதுகளில் மா-லெ இயக்கத்தில் நிலவிய அரசியல் குழப்பங்களும், அமைப்பு அராஜகங்களும் இதற்கான புறநிலைக் காரணிகளாக உள்ளன. இருப்பினும்கட்சியின் அரசியல் வழியிலும், வர்க்கப் போராட்டத்திலும, தவறுகளை மாற்றுவதற்கான போராட்டத்திலும் உறுதியாக நின்று, அதன் போக்கில் தன்னிடமுள்ள பலவீனங்களையும் மாற்றிக் கொள்வதுதான் ஒரு புரட்சிகர தலைமையின் குறி.அடையாளம் ஆகும். இல்லையெனில், எத்தகைய மாபெரும் தலைவர்களும் புரட்சிகர இயக்கத்திற்கு தடையாக மாறி அதளபாதாளத்தில் விழுவது நிச்சயம. இதுதான் ஏ எம் கே அவர்கள் விஷயத்திலும் நிகழ்ந்தது.
பதிவு Mskkpalani Veepalani 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக