வியாழன், 28 மார்ச், 2019

விண்ணில் பறக்கும் செயற்கைக்கோளைத்
தாக்கி அழிக்கும் ஏவுகணை!
--------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
ஒரு மரத்தின் கிளையில் சில காக்கைகள் அமர்ந்திருக்கின்றன.
பறவைகளைச் சுடும் துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர்
அக்காக்கைகளில் ஒன்றைச் சுட்டு வீழ்த்துகிறார்.

காக்கை மட்டுமின்றி, குருவி, புறா, கொக்கு ஆகிய
பறவைகளை கவண் முதல் துப்பாக்கி வரையிலான கருவிகளைக்
கொண்டு சுட்டு வீழ்த்துவது பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களின்
பழக்கமாக இருந்து வருகிறது. மகாபாரதம் கூறும் பிரசித்தி பெற்ற
அர்ச்சுனன்-கிளி கதை இவற்றுள் தொன்மையானது.

இந்த அனைத்துக் கதைகளிலும் வரும் பறவைகள்
எல்லாம் நிலையாக ஓரிடத்தில் இருப்பவை (stationary).
அதாவது இவை நகர்பவை அல்ல (not in motion ).
பறக்கும் கிளியை அர்ச்சுனன் வீழ்த்தினான் என்று
கதை இல்லை. மரக்கிளையில் சிவனே என்று
இருக்கும் கிளியைத்தான் அர்ச்சுனன் வீழ்த்தினான்.
ஏனெனில் துரோணர் காலத்தில் ஒரு நகரும் பொருளை
வீழ்த்தும் தொழில்நுட்பம் இல்லை. அதற்கான அறிவியலும் இல்லை.

நகரும் பொருட்களை (objects in motion)  பற்றிய கணித அறிவு
17ஆம் நூற்றாண்டு வரையிலான மானுடத்திடம் இல்லை.
எண் கணிதம்,வடிவியல், அல்ஜீப்ரா, முக்கோணவியல்
ஆகிய கணிதத்துறைகள் அனைத்துமே நிலையாக
இருக்கும் பொருட்களை (stationary quantities) பற்றியதுதான்.

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான், ஒருபுறம் நியூட்டனும்
மறுபுறம் லீபினிட்சும் (Gottfried Leibniz) தத்தம் சொந்த முயற்சியில்
ஒருவரை ஒருவர் சாராது கால்குலசைக் கண்டுபிடித்தனர்.
கால்குலஸ் என்பது நகரும் பொருட்களைப் பற்றிய
கணிதம் ஆகும். இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்களின்
மீதான கணித விசாரணையே (mathematical investigation over the moving quantities)
கால்குலஸ் ஆகும். ஆக அல்ஜிப்ராவும் வடிவியலும் தங்களின்
தாடையை உடைத்துக் கொண்டும் தீர்வு காண இயலாத சிக்கல்களுக்கு நகரும் கணிதமான கால்குலஸ் மட்டுமே தீர்வு அளித்தது.

தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்:
--------------------------------------------------------------
ஒரு செயற்கைக் கோள் என்பது நகரும் பொருள்
(moving object). அது ஒருபோதும் நிலையாக
ஓரிடத்தில் நிற்பதில்லை. செயற்கைக் கோள்கள்
பலவகையானவை. அவற்றின் சுழற்சி வேகமும்
அவ்வாறே வேறுபடுபவை.

சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி
நடைபெறுகிறது. இதை உலகின் அனைத்துத்
தொலைக்காட்சிகளும் ஒளிபரப்புகின்றன.
இந்த ஒளிபரப்புக்குப் பயன்படும் செயற்கைக் கோள்கள்
எவை? இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்
(communication satellites) எனப்படும்.

ஆரம்ப கால "இன்சாட்" முதல் அண்மையில் (பெப்ரவரி 2019)
விண்ணில் செலுத்தப்பட்ட GSAT-31 வரை இவை அனைத்துமே
தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்தான். இவை பொதுவாக
பூமத்திய ரேகைக்கு மேல் 36,000 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்
படுகின்றன. இவற்றின் சுற்றுப்பாதை புவிநிலைப்புச் சுற்றுப்பாதை (geostationary orbit) எனப்படும்.

இந்த செயற்கைக்கோள்கள் எவ்வளவு வேகத்தில்
சுற்றுகின்றன? வேகம் என்பது உயரத்தைப் பொறுத்துத்
தீர்மானிக்கப் படுகிறது. 36,000 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்
பட்ட செயற்கைக் கோள்கள் மணிக்கு 11,300 கிமீ வேகத்தில்
சுற்றுகின்றன.

தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதை:
---------------------------------------------------
உளவு பார்க்கும் செயற்கைக்கோள்கள் (reconnaissance satellites),
பூமியைக் கூர்நோக்கி ஆய்வு செய்யும் கூர்நோக்கு
செயற்கைக் கோள்கள் (Earth observational satellites)  ஆகிய
செயற்கைக்கோள்களும் உண்டு. இவை தகவல்
தொடர்பு செயற்கைக் கோள்கள் போல 36,000 கிமீ
உயரத்தில் நிலைநிறுத்தப் படுபவை அல்ல.
மாறாக மிக மிகக் குறைவான உயரத்தில்
நிலைநிறுத்தப் படுபவை. 200 கிமீ உயரம் முதல் 2000 கிமீ
உயரம் வரை என்ற வரம்புக்குள் இவற்றின் சுற்றுப்பாதை
அமையும். இச்சுற்றுப்பாதை தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதை
(Low Earth Orbit) எனப்படும்.

உளவு செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்படும்
உயரம் மிகவும் குறைவு என்பதால், இந்த செயற்கைக்
கோள்கள் அதிக வேகத்தில் சுற்ற வேண்டும். அதாவது
தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களின் வேகமான
மணிக்கு 11,300 கிமீ என்பதை விட மிகவும் அதிகமாக இருக்க
வேண்டும்.

எனவே உளவு செயற்கைக் கோள்கள் மணிக்கு 28,000 கிமீ
வேகத்தில் சுற்ற வேண்டும். அதாவது தகவல் தொடர்பு
செயற்கைக்கோள்களின் வேகத்தை விட இரண்டரை
மடங்கு வேகத்தில் சுற்ற வேண்டும்.

குறைந்த உயரத்தில் தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில்
(Low Earth Orbit) சுற்றும் செயற்கைக் கோள்கள் அதிக வேகத்தில்
சுற்ற வேண்டும் என்பது செயற்கைக்கோளின் இயக்கம்
பற்றிய விதி. உயரம் அதிகரிக்க அதிகரிக்க செயற்கைக்கோளின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

உளவு செயற்கைக்கோளின் வேகம் மணிக்கு 28,000 கிமீ என்பதை
ஒரு வினாடிக்கு 8 கிமீ வேகம் என்று புரிந்து கொண்டால்,
விஷயத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.. அதாவது ஒரு வினாடி
நேரத்துக்குள் இந்த உளவு செயற்கைக் கோள் 8 கிமீ தூரம் நகர்ந்து விடும்.

எனவே இதை வீழ்த்த எண்ணும் ஒருவரிடம் அதிதுல்லியக் கணக்கீடு இருத்தல் வேண்டும். உதாரணமாக சென்னை எழும்பூரில் செயற்கைக்கோள்
இருக்கிறது என்ற கணிப்பில் ஒரு வினாடி பிசகினால் கூட,
8 கிமீக்கு அப்பாலுள்ள மாம்பலத்திற்கு செயற்கைக்கோள்
சென்று விடும்; வீழ்த்த முடியாது. இந்தச் சூழலில்தான், செயற்கைக்கோளை வீழ்த்திய இந்தியாவின் சாதனையை எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.

வீழ்த்தப்பட்ட இலக்கு குறித்த விவரங்கள்:
-----------------------------------------------------------------
இந்திய விண்வெளி வரலாற்றில் மார்ச் 27, 2019 என்பது
சிறப்புக்குரிய ஒரு நாள் ஆகும். ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் கடற்கரைக்கு அருகில் வங்கக் கடலில் ஒரு சிறிய தீவு உள்ளது. அத்தீவுக்கு விஞ்ஞானி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அன்று காலை 11.10 மணிக்கு அத்தீவில் இருந்து, இடை மறித்துத்தாக்கும் ஓர் ஏவுகணை (interceptor missile) புறப்பட்டு, விண்ணில் பறந்து கொண்டிருந்த ஒரு செயற்கைக்கோளைத் தாக்கி அழித்தது. மிஷன் சக்தி (Mission Shakthi) என்று பெயரிடப்பட்ட இந்நிகழ்வு வெற்றி அடைந்து வரலாற்றில் இடம் பெற்றது.

இந்த மொத்த நிகழ்வும் மூன்று நிமிடத்திற்குள் நடந்து முடிந்து
விட்டது. அழிக்கப்பட்ட செயற்கைக்கோளும் நம்முடையதுதான்.
ஜனவரி 24, 2019ல் இஸ்ரோவால் ஏவப்பட்ட மைக்ரோசேட் எனப்படும்
(Microsat-R) 740 கிலோகிராம் நிறையுள்ள புவி கூர்நோக்கு
செயற்கைக்கோளே அது. 274 கிமீ உயரத்தில் தாழ்நிலை புவி சுற்றுப்பாதையில் (LEO) நொடிக்கு 7.8 கிமீ வேகத்தில் புவியைச் சுற்றி வந்தபோது இது அழிக்கப்பட்டது.

மிஷன் சக்தி என்னும் இந்தத் தொழில்நுட்பச் செயல்பாடு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால்
(DRDO) மேற்கொள்ளப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டுத்
தொழில்நுட்பத்தால் ஆனது என்று DRDOவின் தலைமை
இயக்குனர் ஜி சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

300 விஞ்ஞானிகள் மற்றும் DRDO ஊழியர்கள் ஒன்றிணைந்து
இத்திட்டத்தில் பணியாற்றினர். இந்த இடைமறித்துத் தாக்கும்
ஏவுகணை 18 டன் நிறை கொண்டது. நம்மிடம் உள்ள
பிருத்வி ஏவுகணை 80 கிமீ உயரத்தில் உள்ள இலக்கைத்
தாக்கி அழிக்கும். இது 300 கிமீ உயரத்தில் உள்ள
இலக்கைத் தாக்கி அழிக்கும். இதுவரை
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள்
மட்டுமே இத்திறனைப் பெற்றிருந்தன. இந்த வரிசையில்
நான்காவதாக இந்தியா இணைந்துள்ளது.

விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோளை குறிபார்த்துத்
தாக்கி அழிப்பது எளிதல்ல. தற்போது அழிக்கப்பட்ட
செயற்கைக்கோள் வினாடிக்கு 7.8 கிமீ வேகத்தில் (மணிக்கு 28000 கிமீ)
புவியைச் சுற்றுவது; 740 கிலோகிராம் நிறை மட்டுமே கொண்டது.
பரந்த விண்வெளியில் இது ஒரு சிறு புள்ளி போலத்தான்
தெரியும். ஒரு நாளில் 10 நிமிடம் மட்டுமே இந்தச் செயற்கைக்கோள்
இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும். இலக்கை ஊடறுப்பதற்கு (intercepting the target) ஒரு வினாடிக்கும்  குறைவான நேரமே
நமக்குக் கிடைக்கிறது. செயற்கைக்கோளுக்கும் ஏவுகணைக்கும்
இடையிலான சார்புத் திசைவேகம் (relative velocity) வினாடிக்கு
10 கிமீ ஆகும். ஒருபுறம் செயற்கைக்கோளின் குறைந்த நிறையம்
மறுபுறம் அதன் அதிக வேகமும் அதன் இடத்தைக் கண்டறிந்து
(detecting) தாக்கி அழிப்பதை  மிகவும் கடினமானதாக ஆக்குகிறது.

எந்த எரிபொருளையோ வெடிமருந்தையோ பயன்படுத்தி
இச்செயற்கைக்கோள் அழிக்கப் படவில்லை அதிவேகத்தில்
செல்லும் செயற்கைக்கோளின் இயங்கு சக்தியைப் பயன்படுத்தியே
(kinetic energy) இது அழிக்கப்பட்டது.

நம் நாட்டை வேவு பார்க்கும் நோக்கத்துடன் எந்தவொரு
செயற்கைக்கோளோ அல்லது ஏவுகணையோ இந்திய
வான் எல்லைக்குள் நுழைந்தாலும் அது உடனடியாக
சுட்டு வீழ்த்தப்படும் என்ற எச்சரிக்கையை மிஷன் சக்தி
உலகிற்கு உணர்த்தி உள்ளது. இந்திய விஞ்ஞானிகளின்
ஆற்றலும் அர்ப்பணிப்பும் குன்றிலிட்ட விளக்காய் ஒளிர்கிறது.
*****************************************************************

  











    







    .

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக