வெள்ளி, 29 மார்ச், 2019

விண்ணில் பறக்கும் செயற்கைக்கோளைத்
தாக்கி அழிக்கும் ஏவுகணை!
(அறிவியல் ஒளிக்கு அனுப்பிய கட்டுரையில் இருந்து
சில பகுதிகள்! முழுக்கட்டுரையையும் வெளியிட இயலாது)
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
ஒரு மரத்தின் கிளையில் சில காக்கைகள் அமர்ந்திருக்கின்றன.
பறவைகளைச் சுடும் துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர்
அக்காக்கைகளில் ஒன்றைச் சுட்டு வீழ்த்துகிறார்.

காக்கை மட்டுமின்றி, குருவி, புறா, கொக்கு ஆகிய
பறவைகளை கவண் முதல் துப்பாக்கி வரையிலான
கருவிகளைக் கொண்டு சுட்டு வீழ்த்துவது பல்லாயிரம்
ஆண்டுகளாக மனிதர்களின் பழக்கமாக இருந்து வருகிறது.
மகாபாரதம் கூறும் பிரசித்தி பெற்ற அர்ச்சுனன்-கிளி கதை
இவற்றுள் தொன்மையானது.

இந்த அனைத்துக் கதைகளிலும் வரும் பறவைகள்
எல்லாம் நிலையாக ஓரிடத்தில் இருப்பவை (stationary).
அதாவது இவை நகர்பவை அல்ல (not in motion ).
பறக்கும் கிளியை அர்ச்சுனன் வீழ்த்தினான் என்று
கதை இல்லை. மரக்கிளையில் சிவனே என்று
இருக்கும் கிளியைத்தான் அர்ச்சுனன் வீழ்த்தினான்.
ஏனெனில் துரோணர் காலத்தில் ஒரு நகரும் பொருளை
வீழ்த்தும் தொழில்நுட்பம் இல்லை. அதற்கான
அறிவியலும் இல்லை.

நகரும் பொருட்களை (objects in motion)  பற்றிய கணித அறிவு
17ஆம் நூற்றாண்டு வரையிலான மானுடத்திடம் இல்லை.
எண் கணிதம்,வடிவியல், அல்ஜீப்ரா, முக்கோணவியல்
ஆகிய கணிதத்துறைகள் அனைத்துமே நிலையாக
இருக்கும் பொருட்களை (stationary quantities) பற்றியதுதான்.

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான், ஒருபுறம் நியூட்டனும்
மறுபுறம் லீபினிட்சும் (Gottfried Leibniz) தத்தம் சொந்த முயற்சியில்
ஒருவரை ஒருவர் சாராது கால்குலசைக் கண்டுபிடித்தனர்.
கால்குலஸ் என்பது நகரும் பொருட்களைப் பற்றிய
கணிதம் ஆகும். இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்களின்
மீதான கணித விசாரணையே (mathematical investigation
over the moving quantities) கால்குலஸ் ஆகும். ஆக அல்ஜிப்ராவும்
வடிவியலும் தங்களின் தாடையை உடைத்துக்
கொண்டும் தீர்வு காண இயலாத சிக்கல்களுக்கு நகரும் கணிதமான கால்குலஸ் மட்டுமே தீர்வு அளித்தது.

வீழ்த்தப்பட்ட செயற்கைக்கோள் எந்த நாட்டினது?:
------------------------------------------------------------------------
இந்திய விண்வெளி வரலாற்றில் மார்ச் 27, 2019 என்பது
சிறப்புக்குரிய ஒரு நாள் ஆகும். ஒடிஷா மாநிலத்தின்
பாலசோர் கடற்கரைக்கு அருகில் வங்கக் கடலில் ஒரு
சிறிய தீவு உள்ளது. அத்தீவுக்கு விஞ்ஞானி
அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

அன்று காலை 11.10 மணிக்கு அத்தீவில் இருந்து,
இடை மறித்துத்தாக்கும் ஓர் ஏவுகணை (interceptor missile)
புறப்பட்டு, விண்ணில் பறந்து கொண்டிருந்த ஒரு
செயற்கைக்கோளைத் தாக்கி அழித்தது.
மிஷன் சக்தி (Mission Shakthi) என்று பெயரிடப்பட்ட
இந்நிகழ்வு வெற்றி அடைந்து வரலாற்றில் இடம் பெற்றது.

இந்த மொத்த நிகழ்வும் மூன்று நிமிடத்திற்குள் நடந்து முடிந்து
விட்டது. அழிக்கப்பட்ட செயற்கைக்கோளும் நம்முடையதுதான்.
ஜனவரி 24, 2019ல் இஸ்ரோவால் ஏவப்பட்ட மைக்ரோசேட்
எனப்படும் (Microsat-R) 740 கிலோகிராம் நிறையுள்ள
புவி கூர்நோக்கு செயற்கைக்கோளே அது.

274 கிமீ உயரத்தில் தாழ்நிலை புவி சுற்றுப்பாதையில் (LEO)
நொடிக்கு 7.8 கிமீ வேகத்தில் புவியைச் சுற்றி வந்தபோது இது அழிக்கப்பட்டது.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக