புதன், 15 ஜனவரி, 2020

பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் தேவைதானா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அறியப்பட்ட மார்க்சியத்தின் இறுகிய பாறை பிளந்து பசுந்தளிராக வெளிப்பட்ட புத்தம்புதிய சிந்தனை மரபில் முகமையான ஓரிடம் தோழர் இராசேந்திரசோழனுக்கு உண்டு. அறிவும் துணிவுமார்ந்த அவரது புதிய பார்வையை வெளிப்படுத்திய பல ஆக்கங்களில் ஒன்று: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைதானா? என்ற குறுநூல். சற்றொப்ப 50 பக்கங்களில் தோழர் இராசோ கோட்பாட்டளவிலும் நடைமுறையளவிலும் மார்க்சியம் சந்தித்து வரும் முதன்மையான சிக்கல்களில் ஒன்றை விரிவாக அலசித் தலைப்பின் வினாவிற்கு விடை காண்கிறார்.
தமக்கேயுரிய எளிய தமிழ்நடையில் வாசகரோடு நேரில் பேசுகிற பாங்கில் இந்நூலை இயற்றியுள்ளார் இராசோ. எதையும் ஏற்கெனவே தெரிந்ததுதானே என்று விட்டு விடாமல் ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் பாமரரும் விளங்கிக் கொள்ளத்தக்கவாறு இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கிறார்.
சனநாயகம் என்றால் என்ன? வழக்கமான புரிதலைச் சொல்லி, அதில் என்ன குறை என்பதையும் விண்டுரைத்து சனநாயகத்துக்கு விளக்கம் தருகிறார்:
“சனநாயகம் என்பது வெறும் சனநாயகம் மட்டுமே அல்ல. அதில் சர்வாதிகாரமும் அடங்கியிருக்கிறது. அதாவது பெரும்பான்மை சிறுபான்மையினர் மீது செலுத்தும் சர்வாதிகாரம், சரிதானே?”
சரிதான் என்பார் ஞாய உணர்வுள்ள வாசகர். சர்வாதிகாரம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு இராசோ தரும் விடை:
“சர்வாதிகாரம் என்பது வெறும் சர்வாதிகாரம் மட்டுமே அல்ல. அதனுள் சனநாயகமும் இருக்கிறது. அதைச் செலுத்துபவர்களுக்கு, அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சுதந்திரமும் இருக்கிறது.”
அடுத்து, அரசு என்றால் என்ன? அது அனைவருக்கும் பொதுவானதன்று. அது தோன்றியதே சுரண்டும் வர்க்கங்களின் நலன் காப்பதற்குத்தான். இந்த நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை ஒடுக்குபவதற்குத்தான். இப்போதும் அது அப்படித்தான் இருக்கிறது. இராசோ சொல்கிறார்:
“அரசு என்பதே வர்க்கச் சார்புடைய ஒரு வன்முறை அமைப்பேயன்றி, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட, வர்க்கங்களைச் சாராத அரசு என்பதே ஒன்று இல்லை. அப்படி ஒன்று வரலாற்றில் இருந்ததும் கிடையாது.”
அரசின் சனநாயக வடிவத்தையும் சர்வாதிகார வடிவத்தையும் ஒப்பிட்டுக் காட்டி இராசோ சொல்கிறார்:
“… அரசு சனநாயக வடிவில் நிலவினாலும் சரி, சர்வாதிகார வடிவில் நிலவினாலும் சரி, அதன் சாரம் வன்முறைதான்… அல்லது வன்முறையைச் சாரமாகக் கொண்ட ஓர் அரசு சனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இருவடிவங்களில் எந்த வடிவில் வேண்டுமானாலும் நிலவலாம்….”
இந்த அடிப்படை விளக்கங்களுக்குப் பின் தோழர் இராசோ பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து விவாதிக்கத் தொடங்குகிறார்; இந்தக் கோட்பாடு எப்படிப் பிறந்தது?
“முதலாளிய அரசை வீழ்த்தி பாட்டாளி வர்க்கம் நிறுவும் அரசுப் பொறியமைவுக்கு அது” (தொழிலாளி வர்க்கத் தத்துவம்) முன்வைத்த வடிவமே ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ என்பதாகும்.”
மார்க்சியம் எப்படிப் படிப்படியாக பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற கருத்தாக்கத்துக்கு வந்து சேர்ந்தது என்பதை இராசோ எடுத்துக்காட்டுகிறார். மார்க்சிய மூலவர்கள் வறட்டு மந்திரங்களை அருளிச் சென்றவர்கள் அல்ல என்பதும், அவர்கள் எப்படிக் கோட்பாட்டு ஆராய்ச்சியின் ஊடாகவும், வர்க்கப் போராட்டப் பட்டறிவின் துணைக் கொண்டும், தங்கள் நிலைபாடுகளை வகுத்தும், சரிபார்த்தும், செழுமைப்படுத்தியும் சென்றார்கள் என்பதையும் இராசோ எடுத்துரைக்கும் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848இல் வெளிவந்தது.
“… பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது பற்றி இந்நூலில்” (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்) ”எங்குமே குறிப்பிடப்படவில்லை. அப்படிப்பட்ட ஒரு கருத்தாக்கமும் அப்போது எழுந்திருக்கவில்லை.”
1850இல் வெளிவந்த ”பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்” என்ற நூலில்தான் மார்க்ஸ் முதன்முதலாகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார் என்பதை இராசோ எடுத்துக்கட்டுகிறார்.
1852இல் வெளிவந்த ”லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்” என்ற நூலில் மார்க்ஸ் எடுத்தியம்பும் இரு முகமைச் செய்திகளை இராசோ எடுத்துக்காட்டுகிறார்:
“1. பாட்டாளி வர்க்கம் பழைய அரசாங்கத்தை அப்படியே எடுத்துத் தன் நலன்களுக்குகந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. என்பதால் முதலில் அது பழைய அரசாங்க எந்திரத்தை நொறுக்கித் தகர்க்க வேண்டும்.
”2. போராடும் தொழிலாளி வர்க்கம் விவசாயி வர்க்கத்தைத் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு அக்கூட்டனிக்குத் தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும்.”
1871 பாரிஸ் கம்யூன் பாட்டாளி வர்க்க அரசு பற்றிய கண்ணோட்டத்தில் பெருந்தாக்கம் கொண்டதை இராசோ எடுத்துக்காட்டுகிறார். கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் எட்டாம் ஜெர்மன் பதிப்புக்கான முன்னுரையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் குறிப்பிட்டனர்:
(கம்யூன் மெய்ப்பித்தது என்ன?) “தயாராயுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு தன் குறிக்கோளுக்காகப் பயன்படுத்த முடியாது.”
1875இல் வெளிவந்த ”கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம்” என்ற நூலில் மார்க்ஸ் சொன்னார்:
“முதலாளித்துவ சமுதாயத்துக்கும் கம்யூனிச சமுதாயத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய்ப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாய் அர்சியல் இடைக்காலக் கட்டமும் ஒன்று உள்ளது. இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரமாய் அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.”
இந்தப் படிமலர்ச்சியின் இறுதியில் உருசியப் புரட்சியின் போது சோவியத்து அரசு வடிவம் முகிழ்த்ததை இராசோ எடுத்துக்காட்டுகிறார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது சோவியத்துகளின் ஆட்சியாக, சோவியத்துகளின் சர்வாதிகாரமாகப் பரிமாணம் பெற்ற வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கிறார்.
சோவியத்து அதிகாரம் நீண்டு சென்ற போது, நடைமுறையில் அனைத்து மக்கள் மீதும் சர்வாதிகாரம் செலுத்தும் அமைப்பாகவே செயல்பட்டது என்று இராசோ குற்றஞ்சாட்டுகிறார். இதில் கட்சி வகித்த பங்கு என்ன?
“… புரட்சிக்குப் பின் சுதந்திரமான அரசியல் நிர்ணய சபை அமைக்கப்படும் என்று லெனினும் போல்ஷெவிக் கட்சியும் கொடுத்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமலேயே போயின. மேற்கண்ட சூழ்நிலைகள் அதை நிறைவேற்ற முடியததாகவும் ஆக்கியிருந்தது. விளைவு சோவியத்துகளைச் சுற்றி மையப்பட்டிருந்த அதிகாரம் படிப்படியாகக் கட்சியின் கைகளுக்கு மாற்றப்பட்டது.”
இம்மாற்றங்கள் குறித்து இலெனின் என்ன சொன்னார் என்பதையும் இராசோ எடுத்துக்காட்டுகிறார்:
“இன்று நிகழ்வது என்னவென்றால், கட்சி பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் தன்னை வரித்துக் கொண்டதுடன், இம்முன்னணிப்படை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைச் செயல்படுத்துகிறது.”
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிஸ்டுக் கட்சியின் சர்வாதிகாரமாக மாறியதை இலெனினும் ஸ்டாலினுமே நியாயப்படுத்தினார்கள் என்று இராசோ சுட்டிக்காட்டிச் சொல்கிறார்:
“இவ்வாறாக, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்கும் கம்யூன், சோவியத்து போன்ற பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்புகளிலிருந்து மையப்படுத்தப்பட்ட பொதுவுடைமைக் கட்சிக்கு மாற்றப்பட்டு, பின் அதுவே ஒருகட்சி சர்வாதிகாரமாகவும் ஆக்கப்பட்டது.”
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் ஒருகட்சிச் சர்வாதிகாரமாகக் குறுகிப் போனதால் கருத்துரிமை பறிபோயிற்று, இதற்குச் சான்றாக, இந்தியாவில் 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலையை சோவியத்து அரசு ஆதரித்தது மட்டுமல்லாமல் அது பற்றிய உண்மைகளை மக்களுக்குத் தெரியாமலும் பார்த்துக் கொண்டது என்பதை இராசோ எடுத்துக்காட்டுவது பொருத்தமாக உள்ளது.
1976இல் பெர்லினில் நடைபெற்ற சோசலிச, பொதுவுடைமைக் கட்சிகளின் மாநாட்டில் பிரெஞ்சுப் பொதுவுடைமைக் கட்சி பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்து, சனநாயக உரிமைகளையும் கருத்து சுதந்திரத்தையும் மேலும் விரிவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியது.
எந்த நாட்டின் வர்க்கப் போராட்டப் பட்டறிவிலிருந்து பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டை மார்க்ஸ் வடித்தாரோ அந்த நாட்டின் பொதுவுடைமைக் கட்சியே அக்கோட்பாட்டை மறுதலித்த இம்முரணிலையை இராசோ சுட்டிக்காட்ட மறக்கவில்லை.
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றிய வினாக்களும் விவாதங்களும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதான மார்க்சியக் குற்றாய்வைக் குறைத்து விடாது என்பதில் தோழர் இராசோ தெளிவாய் இருக்கிறார். இது குறித்து மார்க்சிய ஆசான்களின் தெளிந்த பார்வையைத் தக்க மேற்கோள்களோடு எடுத்துக்காட்டுகிறார்.
முதலாளித்துவ ஜனநாயகம் போலியானது, சாரமற்றது, வடிவ அளவிலானது என்றால் அதனிடத்துக்குப் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தைத்தானே முன்மொழிந்திருக்க வேண்டும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எவ்வாறு முன்மொழியலாம்? என்று இராசோ கேட்கிறார். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லும் காலத்துக்குரிய பாட்டாளி வர்க்கப் புரட்சிகர சர்வாதிகாரம் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகமும் சுரண்டும் சிறுபான்மைக்குத்தான் ஒடுக்குமுறையும் ஆகும் என்று லெனின் கூறும் விளக்கத்தை இராசோ எடுத்துக்காட்டினாலும், இதை ஜனநாயக வழிமுறையில் அடைய முடியாதா? என்று கேட்கிறார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒரே கட்சி மட்டும் சட்டத்தில் அனுமதிக்கப்படுவதில் உள்ள முரண்பாடுகளை இராசோ கூர்மையாக எடுத்துக்காட்டுகிறார், ஒருகட்சி முற்றுரிமைக்கான வாதுரைகளை ஏரண முறையில் வீழ்த்துகிறார்.
இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே சுத்தமாய் வேண்டாம் என்று சொல்லவில்லை, அது நெருக்கடியான சில கட்டங்களில் தேவைப்படலாம் என்று ஒரு சலுகை வழங்குகிறார் இராசோ:
“புரட்சி நடத்தி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு குறிப்பிட்ட இடைக்காலத்துக்கு சர்வாதிகார வடிவம் தேவைப்படுகிறது.”
இந்த இடைக்கட்டமும் மார்க்ஸ் சொன்ன இடைக்கட்டமும் ஒன்றல்ல என்பதை இராசோ தெளிவுபடுத்துகிறார். அதாவது பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்பதை அரசின் உள்ளடக்கம் பற்றியதாக அல்லாமல் வடிவம் பற்றியதாக மாற்றி விடுகிறார். இந்த இடத்தில்தான் இராசோவுக்குக் கோட்பாட்டு நோக்கில் ஒரு வழுக்கல் நேரிடுவதாக எனக்குத் தோன்றுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாடே சரியில்லை என்பதற்கு இராசோ கோட்பாட்டு நிலையில் மார்க்ஸ் எங்கு பிழை விட்டார் என்று காட்ட வேண்டும்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரால் ஒருகட்சி அரசு நடத்தியதை நாம் ஏற்க வேண்டியதில்லை. அது சிறுகுழுவாட்சியாகச் சீரழிந்ததையும் மறைக்க வேண்டியதில்லை. போல்பாட், சௌசெஸ்கு என்று இராசோ குறிப்பிடுவதற்கு மறுப்பாக மற்றொருவர் காஸ்ட்ரோ, குவேரா என்று காட்ட முற்பட்டால் அது சரியான விவாதமாக அமையாது.
அரசு என்பதே சாரத்தில் சர்வாதிகாரம்தான் என்று தொடக்கத்தில் விளக்கிச் சொன்ன தோழர் இராசோவே முடிக்கும் போது பாட்டாளி வர்க்க அரசின் சர்வாதிகார உள்ளடக்கத்தை மறுதலிப்பது பொருத்தப்படவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு ”மார்க்சியம் அனா ஆவன்னா” நூலுக்கான பின்னுரையில் பாட்டாளி வர்க்க அரசும் சனநாயகமும் என்ற பொருள் குறித்து விரிவாகப் பேசியிருந்தேன். அதில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தியும், பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம் என்ற பெயரிலான ஒற்றைக் கட்சி சர்வாதிகாரம் என்ற நடைமுறையை எதிர்த்தும் எழுதியிருந்தேன்.
இதே நூலை விரைவில் தூயதமிழ்ப் பதிப்பாக மீள்வெளியீடு செய்யவிருக்கிறேன். தூயதமிழ் சொல்லாட்சியில் சர்வாதிகாரம் (dictatorship) வல்லாட்சி ஆகிறது. வர்க்கம் வகுப்பு ஆகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி ஆகிறது. சமூகம் குமுகம் ஆகிறது. சோசலிசம் குமுகமை அல்லது குமுகியம் ஆகிறது. ஜனநாயகம் குடியாட்சி ஆகிறது. சுதந்திரம் விடுமை ஆகிறது. முதலாளித்துவம் முதலமை அல்லது முதலியம் ஆகிறது. இந்த மாற்றங்களை மனத்தில் கொண்டு இனிவருவதைப் படியுங்கள்.
குமுகமைக் குமுகம் (சோசலிச சமூகம்) என்பது மக்கள்திரளின் உயிர்ப்புமிக்க படைப்பு என்றார் இலெனின். ஒரு தலைவராலோ ஒரு தலைமைக் குழுவாலோ ஒரு கட்சியாலோ படைக்கப்படுவதன்று குமுகமைவு. ஒரே ஒரு வகுப்பாலும் கூட --- அது தொழிலாளர் வகுப்பாகவே இருந்தாலும் --- குமுகமைவைப் படைக்க முடியாது, அது மக்கள்திரளின் படைப்பு, வெகுமக்களின் படைப்பு, தொழிலாளர் வகுப்பும் அவ்வகுப்பின் சார்பில் பொதுமைக் கட்சியும் தலைமைப் பங்கு வகிக்கலாமே தவிர, தாமாகவே குமுகமைவைப் படைத்து விட முடியாது.
குமுகமைக் குமுகம் என்பது மக்கள்திரளின் படைப்பு என்னும் போது, எளிய படைப்பன்று, உயிர்ப்புமிக்க படைப்பு என்பதை மறந்து விடக் கூடாது. கங்காணியின் சவுக்குக்கு அஞ்சி வேலை செய்யும் அடிமைகளாலோ, பட்டினிச் சவுக்குக்கு அஞ்சி வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களாலோ குமுகமைவைப் படைக்க முடியாது. குமுக உணர்வுடன் தாமாகவே ஊக்கத்துடனும் உளமார்ந்த ஈடுபாட்டுடனும் சலியாது பாடுபடும் மக்களால்தான் குமுகமைவைப் படைக்க முடியும். எனவேதான் அது உயிர்ப்புமிக்க படைப்பு எனப்படுகிறது.
குமுகமைக் கட்டுமானத்தில் நாட்டுமக்கள் அனைவரும் ஊக்கத்துடன் பங்கேற்க வேண்டுமானால் அவர்களுக்கு எல்லா நிலைகளிலும் முடிவெடுத்தலில் உரிய பங்கு இருக்க வேண்டும். அதாவது முழுமையான குடியாட்சிய உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
குமுகமை நாடுகளில் நடந்தது என்ன? பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற பெயரால் பெரும்பாலும் பொதுமைக் கட்சியின் வல்லாட்சியே செயல்பட்டது. பெரும்பாலான நாடுகளில் பொதுமைக் கட்சி தவிர வேறு கட்சிகள் இயங்குவதற்கு விடுமை இல்லை. ஒருசில நாடுகளில் வேறு கட்சிகள் இயங்குவதற்கு விடுமையளிக்கப்பட்ட போதிலும், அவை பொதுமைக் கட்சிக்கு ஒத்தூதும் கட்சிகளாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது. குமுகத்தின் ஒவ்வொரு துறையிலும் பொதுமைக் கட்சியின் தலைமையை நிறுவுவது என்ற பெயரால் மக்களின் குடியாட்சிய உரிமைகள் மறுக்கப்பட்டன. பொதுமைக் கட்சியின் வல்லாட்சி என்பது மையக் குழுவின் அல்லது ’பொலிட் பீரோ’ என்னும் அரசியல் தலைமையகத்தின் வல்லாட்சியாகச் சுருங்கி சிறுகுழுவாட்சியாகச் சீரழிந்தது. கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளரின் வல்லாட்சியாகச் சீரழிந்ததும் கூட உண்டு.
பல கட்சிகள் இயங்க விடுமையளிப்பது முதலமைக் குடியாட்சி என்றும், குமுகமை அரசமைப்பில் பொதுமைக் கட்சி என்ற ஒரே ஒரு கட்சிதான் இருக்க முடியும், அதுதான் நல்லது என்றும் கூட ஒரு தவறான கருத்து நிலவுகிறது.
பலகட்சிக் குடியாட்சி என்பது முதலியம் உலகிற்களித்த கொடைகளில் ஒன்று. அதற்காகவே அவ்வேற்பாட்டைக் குமுகியம் புறந்தள்ள வேண்டும் என்பதில்லை. முதலியத்தின் சாதனைகளில் மாந்தக் குமுகத்திற்குப் பயனுள்ளவை இருக்குமானால் அவற்றை உள்வாங்கிக் கொண்டு முன்னெடுத்துச் செல்வது குமுகியத்தின் கடமையாகும்.
இறுதியாகப் பார்க்குமிடத்து முதலியம் வழங்கும் குடியாட்சி உரிமைகள் இறுதிநோக்கில் பொய்யானவை, வடிவ அளவிலானவை என்றார் லெனின். குமுகியம் இந்த உரிமைகளைக் கைகழுவி விட வேண்டும் என்பதன்று இதன் பொருள். மாறாக அது இவ்வுரிமைகளைத் தொடரவும், பொருளுடைத்தவை ஆக்கவும் வேண்டும். தனியுடைமைக் குமுகத்திற்குரிய ஏற்றத் தாழ்வுகளால் பொய்யாகிப் போகும் குடியாட்சி உரிமைகள் ஏற்றத்தாழ்வுகளை நீக்கிச் செல்லும் குமுகமைக் குமுகத்தால் மெய்யாக்கப்படுவதுதானே முறை?
குமுகிய அரசு பலகட்சி குடியாட்சிக்கு இடமளித்தால் முதலமை மீட்சி ஏற்பட்டு விடும் என்றும், பொதுமைக் கட்சி மட்டும் முற்றுரிமையாய் இருந்தால்தான் அதைத் தடுக்க முடியும் என்றும் கருதுவது தவறு. பொதுமைக் கட்சி முற்றுரிமையாய் இருந்த நாடுகளில் குமுகிய அரசுகள் சடசடவென்று சரிந்ததைக் கண்கூடாய்ப் பார்த்த பிறகு இப்படி ஒரு கருத்துக்கு ஞாயமே இல்லை. மேலும் இக்கருத்து மக்கள் மீதும் குமுகியத்தின் மீதும் நம்பிக்கை வைக்க மறுப்பதைக் காட்டுகிறது. குமுகமைவை மக்கள் தங்களுடையதாக ஏற்றுப் பாதுகாப்பதும் அதன் வளர்ச்சிக்கு உளமாரப் பாடுபடுவதும்தான் முதலிய மீட்சியைத் தடுத்து நிறுத்தும் உறுதியான அரணாகுமே தவிர, பொதுமைக் கட்சியின் முற்றுரிமை ஆட்சியன்று.
குமுகமை நாடுகளின் அரசமைப்பிலான குடியாட்சி மறுப்பு தேசிய இன உரிமைகளையும் விட்டுவைக்கவில்லை என்பதைத்தான் சோவியத்து நாட்டின் பட்டறிவு காட்டுகிறது. அங்கு தேசிய இனங்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் குடிய தன்றீர்வுரிமை (சுய நிர்ணய உரிமை) உண்டென்று அரசமைப்பில் எழுதி வைக்கப்பட்ட போதிலும் மெய்ந்நடப்பில் சோவியத்து ஒன்றிய அரசு பெருமளவுக்கு மையப்படுத்தப்பட்ட ஒற்றையரசாகவே மாறிப் போனது. குடியரசுகள் மாநிலங்களை விடவும் மோசமான நிலைக்குத் தாழ்ந்து போயின. அரசில் மட்டுமல்லாமல், கட்சியிலும் குடியாட்சியத்தை மறுக்கும் போக்கு இந்த வீழ்ச்சிக்குத் துணைசெய்தது.
இப்படி ஒவ்வொரு துறையிலும் குடியாட்சியத்தை மறுக்கும் போக்கு வளர்ந்து முற்றியதன் விளைவாகப் பெருந்திரளான மக்கள் குமுகமைப் பொருளியலுக்கு அயன்மையாகிப் போனார்கள். இதனால் ஏற்பட்ட நெருக்கடிகள் முதலமை மீட்சிக்கு வழிகோலின.
ஆக, குமுகமை நாடுகளில் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற பெயரில் ஒற்றைக் கட்சி வல்லாட்சி நடைபெற்றது என்ற பர்வையில் இராசோவுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி கோட்பாட்டளவில் ஒற்றைக் கட்சி வல்லாட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று நான் சொல்கிறேன். முதலாளர் வகுப்பின் வல்லாட்சிக்கு வெவ்வேறு வடிவங்கள் இருக்க முடியும் என்றால் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி மட்டும் ஒற்றைக் கட்சி வல்லாட்சி என்ற ஒரே வடிவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பாட்டாளி வகுப்பு நலன்களுக்கு ஒற்றைக் கட்சி அரசமைப்புதான் சிறந்தது என்ற கருத்து நிகாரகுவா, வெனிசுவேலா உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அண்மைக்காலப் பட்டறிவால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நேபாளமும் பிரசண்டாவும் கூட இந்த விவாதத்துக்குப் பங்களிப்புச் செய்ய முடியும் என நம்புகிறேன்.
என்ன நடந்தாலும் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி எனும் கோட்பாட்டையும் அதன் நடைமுறையையும் மீளாய்வு செய்ய மாட்டோம்! என்ற வறட்டுப் பிடிவாதத்தை மறுதலிப்பதில் தோழர் இராசோவுடன் தோழமை கொள்கிறேன். அதே போது, சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று தொப்பென்று போட்டு விடக் கூடியதன்று பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற கோட்பாடு! அது ஓர் உத்தியன்று அவ்வப்போது மாற்றிக் கொள்வதற்கு!
இது குறித்து ஏன் இவ்வளவு கவலையோடு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது என்றால் அது மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. அரசு குறித்தான மார்க்சியக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்காமல் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்க முடியாது.
பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி குறித்து மார்க்ஸ் கூறியதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். தனது கண்டுபிடிப்பு என்ன என்பதை அவரே சொல்கிறார். வகுப்புகளை அவர் கண்டுபிடிக்கவில்லை. வகுப்புப் போராட்டத்தையும் அவர் கண்டுபிடிக்கவில்லை. இதையெல்லாம் அவருக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள். வகுப்புப் போராட்டம் தவிர்க்க முடியாதவாறு பொதுமைக் குமுகத்திற்கு வழிகோலும் என்பதையும், அந்தப் பொதுமைக் குமுகத்திற்கு மாறிச் செல்கிற இடைக்காலத்தில் (குமுகமைக் குமுகத்தில்) பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி இன்றியமையாதது என்பதையும்தான் மார்க்ஸ் கண்டுபிடித்துச் சொன்னார்.
பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி ஒற்றைக் கட்சி வல்லாட்சியாகச் சீரழிந்து போகாமல் தடுக்க என்ன வழி? இது குறித்தும் தோழர் இராசோ விரிவாக அலசுகிறார். ஒற்றைக் கட்சிக் குடியாட்சி என்று ஒன்று இருக்க முடியாது என்பதிலும், முதலமைக் குடியாட்சி என்றாலும் குமுகமைக் குடியாட்சி என்றாலும் ஒற்றைக் கட்சிக் குடியாட்சி என்பது குடியாட்சியே ஆகாது என்பதில் இராசோவைப் போலவே அடியேனும் தெளிவாய் இருக்கிறேன்.
1918இலேயே ரோசா லக்சம்பர்க் என்ன எழுதினார் என்று பார்க்க வேண்டும். பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற கோட்பாட்டை அவர் அட்டியின்றி ஏற்றுக் கொண்டார். ஆனால், இலெனினும் போல்சுவிக்குகளும் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற பெயரில் அரசியல் குடியாட்சியத்தை ஒடுக்குவதாக அவர் குற்றாய்வு செய்தார். .
பலகட்சிக் குடியாட்சியத்தை வலியுறுத்திய கவுத்ஸ்கியை “ஓடுகாலி” என்று திட்டுகிறார் லெனின்.
ஒற்றைக்கட்சிக் குடியாட்சி என்பது குடியாட்சியே அன்று. அது ஒற்றைக் கட்சி வல்லாட்சிக்கான இடக்கரடக்கலே தவிர வேறன்று. . இத்தகைய அரசியல் அமைப்பு அரசில் மட்டுமின்றி குமுகத்தின் அனைத்துத் துறைகளிலும் குடியாட்சியம் சிதைக்கப்படுவதற்குக் காரணமாயிற்று. இதுதான் வரலாற்று உண்மை. யாரிடமும் இரக்கம் காட்டாத உண்மை!
ஆனால் மார்க்ஸ் முன்னுரைத்த பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி இதுவன்று. பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற அடிப்படையின் மீதே பலகட்சிக் குடியாட்சி இயலும் என்பது மட்டுமல்ல, தேவையுமாகும். சோவியத்து நாட்டில் பெயரளவிலும் சரி, மெய்ந்நடப்பிலும் சரி, ஒரே ஒரு கட்சிதான், சோவியத்து ஒன்றியப் பொதுமைக் கட்சி மட்டும்தான் இருந்தது. வேறு கட்சிகள் அமைப்பதற்கோ நடத்துவதற்கோ சட்டப்படி உரிமை இல்லை,
வடிவம் எதுவானாலும் முதலமை அரசு என்பது இறுதி நோக்கில் வல்லாட்சியே என்கிறோம். ஏன்? எப்படி? முதலாளர் வகுப்பின் அரசு என்பது வடிவத்தில் குடியாட்சியானாலும் கொடுங்கோலாட்சியானாலும் சாறத்தில் முதலாளர் வகுப்பின் வல்லாட்சியே ஆகும் என்கிறோம் பெருமக் குடியாட்சி உரிமைகளுக்கு இடந்தருகிற ஒரு முதலமைக் குடியரசும் கூட சாறத்தில் முதலாளர் வகுப்பு வல்லாட்சியைத்தான் குறிக்கும் இது எப்படி? முதலமை அரசின் அடிப்படைக் கடமை முதலமைத் தனிச்சொத்துரிமையைப் பாதுகாப்பதாகும். எதை விட்டுக் கொடுத்தாலும் அது தனிச்சொத்துரிமையை மட்டும் விட்டுக் கொடுக்காது. எவ்வளவு வேண்டுமானலும் குடியாட்சிய உரிமைகள் இருக்கட்டும், தனிச் சொத்துரிமைக்கு ஆபத்து இல்லை என்றால் சரிதான். குடியாட்சிய உரிமைகளின் செயற்பாடு முதலமை வல்லாட்சிக்குக் கேடாகி விடாமல் முதலமைத் தனிச் சொத்துரிமையே பார்த்துக் கொள்ளும்.
இதே வழியில் பாட்டாளி வகுப்பின் வல்லாட்சியையும் அணுகிப் பார்க்க வேண்டும். அது குமுகமை அரசின் சாறமாகவே இருக்க வேண்டும். முதலமைவுக்குத் தனிச் சொத்துரிமை எப்படியோ குமுகமைவுக்குத் குமுகச் சொத்துரிமை அப்படித்தான். குமுகச் சொத்துரிமையைப் பாதுகாப்பதுதான் குமுகமை அரசின் அடிப்படைக் கடமை. இந்த அடிப்படைக்குக் கேடில்லாதவாறு பாட்டாளி வகுப்பின் வல்லாட்சியிலும் குடியாட்சிய உரிமைகள் இருக்க முடியும், இருக்க வேண்டும். இந்தக் குடியாட்சிய உரிமைகள் என்பவை வெறும் தனிமாந்த உரிமைகள் மட்டுமல்ல, குழு உரிமைகளும் கூடத்தான். ஒத்த கருத்துடையவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து தம் கருத்துக்கு ஆதரவு திரட்டவும் அந்தக் கருத்தின் வெற்றிக்குப் பாடுபடவும் உரிமை வேண்டும். அதாவது கட்சி அமைக்கவும் நடத்தவும் உரிமை தேவை. இந்த உரிமை இல்லாத போது குடியாட்சி என்ற சொல்லுக்கே பொருள் இல்லை. இந்தக் குடியாட்சி வெகுமக்களை விழிப்புறச் செய்து அவர்களை உயிரோட்டமாய் இயங்கச் செய்து பாட்டாளி வகுப்பின் வல்லாட்சியைப் பாதுகாக்குமே தவிர, அதனைக் கெடுத்து விடாது.
வகுப்பரசு என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு புரிந்து கொள்வது? எடுத்துக் காட்டாக முதலமை அரசு முதலாளர் வகுப்பின் அரசாக இருப்பதை ஒரு நேர்கோட்டுத் தொடர்பாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்த அரசு குறிப்பிட்ட ஒரு சிக்கலில் ஒரு முதலாளருக்கு அல்லது பல முதலாளர்களுக்கு, ஏன், அனைத்து முதலாளர்களுக்கும் எதிராகவும் கூட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு.
முதலமை அரசில் முதலமைத் தனிச் சொத்துக்கு அளிக்கப்படுகிற பாதுகாப்பு அது முதலமை அரசாகவே இருப்பதை உறுதி செய்கிறது. ஆளும் வகுப்பையும் ஆளும் அரசையும் கண்ணுக்குத் தெரியாத இழைகள் பிணைக்கின்றன. இலஞ்ச ஊழல் கூட இந்த உறவுக்குப் பயன்படுகிறது. இப்படி அல்லாமல் ஆளும் வகுப்பு அனுப்பி வைக்கிற ஆணைகளை அரசு அப்படியே செயலாக்குவது போல் எந்திரத்தனமாகப் புரிந்து கொள்ளத் தேவையில்லை.
எவ்வளவு பெரிய குடியாட்சி நிலவினாலும் முதலமைக் குமுகத்தில் முதலாளர் வகுப்பின் வல்லாட்சி தனிச்சொத்துரிமையால் உறுதி செய்யப்படுவது கருத்துக்குரியது. ஏட்டுரிமையை எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம், முதலாளர் வகுப்பு அரசாண்டாலும் பாட்டாளி வகுப்புக்கும் ஏட்டுரிமை உண்டு. முதலாளி, பாட்டாளி யார் வேண்டுமானாலும் ஏடு நடத்தலாம். கோயங்காவுக்கு உள்ள அதே ஏட்டுரிமைதான் எனக்கும். ஆனால் இந்த ஏட்டுரிமையை அவர் துய்ப்பது போல் நான் துய்க்க முடியுமா? ஏன் முடியாது? அவர் சொத்துள்ளவர், நான் சொத்தில்லாதவன். ஆயிரம் பாட்டாளிகள் சேர்ந்தாலும் ஒரு முதலாளருக்கு நிகராக ஏடு நடத்த முடியாது என்பது கண்கூடான உண்மை. அரசுத் தரப்பிலிருந்து தடைச் சட்டங்கள், தணிக்கை நெறிகள் என்று எதுவுமே இல்லையென்று வைத்துக் கொண்டாலும் இதுதான் நிலைமை. வேறு உரிமைகளுக்கும் இதுவே பொருந்தும்.
முதலமை அரசமைப்பில் வெறுங்கூடாக இருக்கிற குடியாட்சிய உரிமைகளைச் சாறமும் சத்தும் மிக்கவையாக்கும் வாய்ப்பை குமுகமை வழங்குகிறது. ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்த, அல்லது பெரிதும் குறைந்த நிலையில், குமுகச் சொத்துரிமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குடியாட்சிய உரிமைகளை எல்லாக் குடிமக்களும் உண்மையிலேயே துய்த்திடும் வாய்ப்பு வந்து சேருகிறது. குடியாட்சிய உரிமைகளைக் கண்டு முதலாளர் வகுப்பு அஞ்சுவதற்குக் காரணம் உண்டு. தொழிலாளர் வகுப்பு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை.
பாட்டாளி வகுப்பின் வல்லாட்சியை உறுதியாக முன்மொழிந்தவர் இலெனின். முழுமையான குடியாட்சியம் என்றும் முரணற்ற குடியாட்சியம் என்றும் வலியுறுத்தியவரும் அதே இலெனின்தாம். இந்த இரு நிலைபாடுகளையும் அறிவியல் குமுகியம் எனும் ஒரே முழுமையின் இரு பக்கங்களாகவும், எதிர்க்கூறுகளின் ஓர்மையாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.
தோழர் இராசோ குமுகிய அரசில் குடியாட்சியத்தை வலியுறுத்துகிற பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். பாட்டாளி வகுப்பின் வல்லாட்சி என்ற மார்க்சியக் கோட்பாட்டை முறையாக முன்வைப்பது அவரது பணியை மேலும் சிறப்புறச் செய்திருக்கும் என்பது என் கருத்து.
எப்படியாயினும் தோழர் இராசோவின் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் தேவைதானா?” என்ற இந்தக் குறுநூல் சிக்கலானதொரு கேள்வியின் மீது துணிந்து புத்தொளி பாய்ச்சுவதில் வெற்றி கண்டுள்ளது. மேலுமான ஆய்வுகளுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது.
 தியாகு
 15.02.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக