வியாழன், 16 ஜனவரி, 2020

தைப் பொங்கலும் மகர சங்கராந்தியும்!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
தை முதல் நாளன்று கொண்டாடப்படும் பொங்கல்
பண்டிகை ஒரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த
வானியல் நிகழ்வின் அடையாளம் ஆகும்.

சூரியன் ஆண்டுக்கு இருமுறை ஆறுமாத காலப்
பயணத்தை மேற்கொள்கிறது. வடதிசை நோக்கிய
ஆறு மாத காலப் பயணத்தையும் (உத்தராயனம்)
தென்திசை நோக்கிய ஆறு மாத காலப் பயணத்தையும்
(தட்க்ஷிணாயானம்)  சூரியன் மேற்கொள்கிறது.

நம்மில் அனைவரும் இப்படித்தான் படித்து இருக்கிறோம்.
மேற்கூறியவை அறிவியல் ரீதியாகத் துல்லியம்
ஆனவை அல்ல. ஏனெனில் சூரியன் பூமியைச்
சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது.

பூமி தன்னுடைய நீள்வட்டப் பாதையில் சூரியனைச்
சுற்றி வரும்போது 12 ராசி மண்டலங்களைக் கடக்கிறது.
ஜனவரி 14 (அல்லது 15) தேதியில் தனுஷ் ராசியில் இருந்து
மகர ராசிக்கு சூரியன் செல்கிறது. அதாவது அப்படி
நமக்குத் தோன்றுகிறது. இது உத்தராயனம் ஆகும்.
அதாவது மேல் திசை நோக்கிய பயணம் ஆகும்.

ராசி என்ற சமஸ்கிருதச் சொல் உருவம், சித்திரம் என்று
பொருள்படும். குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே, நமது முன்னோர்கள் வானத்தில் தெரிந்த
நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து. அது எந்த வடிவில்
அவர்களுக்குத் தெரிந்ததோ, அந்த வடிவத்தையே
அதற்குப் பெயராகச் சூட்டினார்கள். அப்படிச் சூட்டப்
பட்ட பெயர்களே இன்றைய 12 ராசிகள். 12 ராசிகளும்
12 மாதங்களைக் குறிக்கும்.

மேஷ ராசிக்கு ஆடு படம் போட்டு இருப்பார்கள்.
மகர ராசிக்கும் ஆடு படத்தையே போட்டு இருப்பார்கள்.
எனினும் இரண்டு ஆடுகளுக்கும் வேறுபாடு உண்டு.
மகர ராசியின் சித்திரம் கொம்புகளுடன் கூடிய
ஆட்டின் பின்னுடலில் மீன் இருக்கும். ஒருவகை
கற்பனையான விலங்கு இது.

ஆக தமிழர்களின் பொங்கல் பண்டிகை என்பது
அறிவியல் ரீதியாக தனுஷ் ராசியில் இருந்து சூரியன்
மகர ராசிக்குச் செல்வதாக நாம் உணரும் நிகழ்வே ஆகும்.
இதை சங்கராந்தி என்ற சொல் குறிக்கிறது. சங்கராந்தி
என்று சொல் "நகர்ந்து செல்லுதல்" என்ற பொருளைக்
கொண்டது. மகர சங்கராந்தி என்ற சொல்லுக்கு மகர
ராசிக்கு சூரியன் நகர்ந்து செல்லுதல் என்று பொருள்படும்.

புத்தரிசி பொங்கலிடுவது தமிழர்களுக்குச் சொந்தம்.
அது தமிழர்தம் பண்பாட்டின் அடையாளம். அதே நேரத்தில்
மகர சங்கராந்தி என்பது பூமியில் உள்ள அனைத்து
மாந்தருக்கும் சொந்தம். ஏனெனில் வானமும் பூமியும்
சூரிய சந்திரனும் தமிழனுக்கு மட்டுமல்ல பூமியில்
வாழும் அனைத்து மானிடருக்கும் சொந்தம்.

மகர சங்கராந்தி என்பது ஜனவரி 14 (அல்லது 15)
தேதியில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும்
கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி
இந்தோனேஷியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா
ஆகிய நாடுகளிலும் கொண்டாடப் பட்டு வருகிறது.

எனவே பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டுக்கு மட்டும்
உரியது என்று கருதுவது பெரும்பிழை ஆகும். நாடு
முழுவதும் கொண்டாடப் பட்டு வரும் மகர சங்கராந்தியை
நாம் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம்.

சித்திரைப் புத்தாண்டும் தைப் புத்தாண்டும்!
----------------------------------------------------------------------
வானியல் ரீதியாக ஓர் ஆண்டில் நான்கு நாட்கள்
மிகவும் முக்கியமானவை. இரண்டு சம இரவு நாட்கள்
(equinox) மற்றும் இரண்டு கதிர்த்திருப்ப நாட்கள்
(solstice). உலகம் முழுவதும் இந்த நான்கு நாட்களில்
தங்களுக்கு உகந்த ஒரு நாளைக் கொண்டுதான்
தங்களின் புத்தாண்டை உருவாக்கிக் கொண்டனர்
பல்வேறு கலாச்சாரத்தினர். அப்படித்தான் தமிழர்களின்
சித்திரைப் புத்தாண்டு உருவானது.


மார்ச் equinoxஐ அடுத்து பெரும்பாலும் ஏப்ரல் 14ல்
சித்திரை முதல் நாளன்று தமிழர்களின் புத்தாண்டு
பிறக்கும். சித்திரைப் புத்தாண்டு பல நூற்றாண்டுகளாக
நீடித்து இருந்தது.

கலைஞர் முதல்வராக இருந்தபோது சித்திரைப்
புத்தாண்டை நீக்கம் செய்து தைப் புத்தாண்டை
அறிவித்தார். கலைஞரின் இந்த முடிவு unilateral and
highly arbitrary என்று வர்ணித்த ஜெயலலிதா, தாம்
முதல்வரானதும் தைப்புத்தாண்டை நீக்கம் செய்து
மீண்டும் சித்திரைப் புத்தாண்டை அரியணையில்
அமர்த்தினார்.

தைப்புத்தாண்டை அறிவிப்பதற்கு முன்னால், வானியல்
அறிஞர்களின் குழு ஒன்றை நியமித்து அவர்களிடம்
ஆய்வறிக்கை பெற்று, அவர்கள் தைப்புத்தாண்டைப்
பரிந்துரைத்து இருந்தால், கலைஞரின் தைப்புத்தாண்டு
செயல்பாட்டுக்கு வந்திருக்கும். ஆனால் கலைஞர்
அதைச் செய்தார் அல்லர். தைப்புத்தாண்டுக்கான
அறிவியல் நியாயத்தை கலைஞரால் முன்மொழிய
.இயலவில்லை.  ஒரு சில தமிழ்ப் பண்டிட்டுகள் கூடி
முடிவெடுக்கிற விஷயம் அல்ல இது.

தமிழாண்டு நெடுங்கணக்கில் ஒரு தொடர்ச்சி இல்லை.
(recurring effect) . இதற்காக திருவள்ளுவர் ஆண்டை
அறிமுகப்படுத்தினார் கலைஞர். ஆனால் திருவள்ளுவரின்
பிறப்பை தான்தோன்றித் தனமாக தை மாதத்திற்குக்
கொண்டு வந்தார். இது உண்மைக்கும் வரலாற்றுக்கும்
புறம்பானது. நிற்க.

சித்திரைப் புத்தாண்டோ அல்லது தைப்புத்தாண்டோ
எதுவாக இருந்தாலும் அது பண்பாட்டுத் தளத்தில்
மட்டுமே செயல்பட இயலும். உற்பத்தித் தளத்தில்
இவ்விரண்டுக்கும் எந்த வேலையும் இல்லை. இந்த
உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அறிவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து
உரிய முறையில் பஞ்சாங்கத் திருத்தம் செய்ய வேண்டும்.
அதற்கான நேரம் இதுவே ஆகும்.
***************************************************






   

 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக