செவ்வாய், 7 ஜனவரி, 2020

ஓடுகின்ற பேருந்துகளும்
ஓடாத வேலைநிறுத்தமும்!
----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
இன்று ஜனவரி 8 அகில இந்தியப் பொது வேலைநிறுத்தம்.
தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் பெரும்
செல்வாக்குடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கும்
சங்கங்கள் திமுகவின் LPF மற்றும் CPMன் CITU.
இவ்விரு சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்திற்கு
அறைகூவல் விடுத்துள்ளன. இது வரவேற்கத் தக்கது.

ஆனால் களநிலைமை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.
இன்று வழக்கத்தை விட அதிகமான பேருந்துகள்
சாலையில் ஓடுகின்றன. எந்த டிப்போவும் மூடப்படவில்லை.
LPFம் CITUவும் தீவிரமாகக் களத்தில் இறங்கி வேலை
செய்தால், சென்னையிலேயே 20 டிப்போக்களை மூட
வேண்டியிருக்கும்.

திமுகவைப் பொறுத்தமட்டில் எப்போதுமே ஒரு அகில
இந்திய வேலைநிறுத்தத்தில் அது அக்கறை காட்டாது.
தன்னுடைய இமேஜைத் தக்க வைக்க, வேலைநிறுத்தத்துக்கு
அறைகூவல் விடுக்கும். ஆனால் .வெறும் அடையாளப்
பங்கேற்புடன் சுருக்கிக் கொள்ளும்.       

இதுகுறித்து மறைந்த செ குப்புசாமி அவர்களிடம் நாங்கள்
ஒருமுறை கேட்டோம். அவர் சொன்ன பதில் இதுதான்!

"நாங்கள் ஒரு மாநிலக் கட்சி. எனவே ஒரு அகில இந்திய
வேலைநிறுத்தத்தில் உங்களைப்போல் வரிந்து கட்டிக்
கொண்டு இறங்க வேண்டிய தேவை கிடையாது.

அகில இந்திய வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களின்
சக்தியை விரயமாக்கி விட்டால், நாளைக்கு மாநில
அளவிலான வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்கள்
ஒத்துழைக்க மாட்டார்கள். 

மேலும் இந்தக் கோரிக்கைகளில் பலவற்றை எங்கள்
ஆடசி வரும்போது கலைஞரிடம் சொல்லி நிறைவேற்றிக்
கொள்வோம். எனவே அடையாளப் பங்கேற்புடன்
நாங்கள் நின்று விடுவது எங்களைப் பொறுத்த மட்டில்
சரியானது".

இவ்வாறு செ குப்புசாமி அவர்கள் திமுகவின் நிலையை
நியாயப் படுத்தினார்.

திமுக போல CITU நடந்து கொள்ளக் கூடாது.ஆனால்  CITUவும்
அடையாளப் பங்கேற்புடன் அமைதி அடைந்து விட்டது
என்பதையே இன்றைய நிகழ்வு காட்டுகிறது. இது
மிகவும் வருந்தத் தக்கது.

மத்திய அரசில் குறைந்த பட்ச மாதச் சம்பளமாக
ரூ 19,000 நிர்ணயித்து இருக்கிறோம். ஆனால் உதிரித்
தொழிலாளர்களுக்கான மாதச் சம்பளமாக ரூ 4500
மட்டுமே தற்போது வழங்கப் பட்டு வருகிறது. இதை
ரூ 21,000 ஆக உயர்த்த வேண்டும் என்பது
வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளில் ஒன்று.

மிகவும் நியாயமான இந்தக் கோரிக்கை வெல்ல
வேண்டுமென்றால், வேலைநிறுத்தம் சிறப்பாக
நடந்திருக்க வேண்டும். வேலைநிறுத்தம்
பிசுபிசுத்து விட்டது என்றால் கோரிக்கையும்
பிசுபிசுத்து விடும். இதை CITU தலைவர் தோழர்
அ செளந்திரராஜன் அவர்கள் கணக்கில் எடுக்க
வேண்டும்.

வேலைநிறுத்த அறைகூவலைச் சிறப்பாக நிறைவேற்ற
முடியாத சங்கத் பொறுப்பாளர்களை பதவி நீக்கம்
செய்யுங்கள். தாராளவாதத்தைக் கைவிட்டு கையில்
தடியை எடுங்கள் அ சௌந்திரராஜன் அவர்களே!
****************************************************   

படத்தில்:
CITUவின் முயற்சியால் வெறிச்சோடிக் கிடைக்கும்
காசர்கோடு கேரளா.


அவர்கள் ATPக்குப் போகட்டும்!

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக