செவ்வாய், 28 ஜனவரி, 2020

கரோனா வைரஸ் (Corona virus) தாக்குதல்!
தற்காத்துக் கொள்வது எப்படி?
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி
வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கு
மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம்
வரை (28.01.2020 0400 hours IST) தமிழ்நாட்டில் இந்த
வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

இந்த வைரஸ், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்
ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது.

அறிகுறிகள்:
-------------------
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன்
இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்
கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும்,
உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில
நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல்
ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும்
நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும்.

சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில்,
இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த
சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு,
SARS (Severe Acute Respiratory Syndrome)
எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல்
நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

ஒருவருக்கு இந்நோய் கண்டிருப்பது உறுதியானால்
அவர் quarantine செய்யப்பட வேண்டும்.
(quarantine = மருத்துவத் தனிமைச் சிறை)

மருந்து இல்லை!
------------------------
இந்த வைரஸ் தாக்குதலால் விளையும் நோய்க்கு
மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம்
(WHO) அறிவித்து உள்ளது. இதற்கான தடுப்பூசியும்
(vaccine) இதுவரை கண்டுபிடிக்கப்  படவில்லை.
விரைவில் கண்டுபிடிக்கப் படும்.

தற்காத்துக் கொள்வது எப்படி?
-----------------------------------------------
1) ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு
கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
டெட்டால், சாவ்லன்  போன்ற கிருமி நாசினி சோப்புகள்
மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை.

2) கை, கால் விரல் நகங்கள் நன்றாக வெட்டப்
பட்டிருக்க வேண்டும். அந்தரங்க சுத்தம்  மற்றும்
உணவுச் சுத்தம் (personal and food  hygiene) கறாராகப்
பேணப்பட வேண்டும்.

3) நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும்.

4) இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக
வேகவைத்த பின்னரே உண்ணுமாறு WHO .கூறுகிறது.
எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத்
தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled)
முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்
சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதைப்
பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.

5) முதியவர்கள் (age > 60), நோயாளிகள், சிகிச்சைக்குப்
பின் உடல்நலம் தேறி வருவோர், ஜீரண சக்தி
குறைந்தோர் ஆகியோர் அசைவ உணவுகளைத் தவிர்த்து,
புரதச் சத்து மிகுந்த பயிறு வகைகள், காய்கறிகளை
உண்ணலாம். இது இச்சூழலில் பாதுகாப்பானது.

7) மிகவும் குறைவாக சுகாதாரம் பேணப்படும்
தெருவோரக் கடைகள், கையேந்தி பவன்களில்
உண்பதைத் தவிர்க்கவும். அதற்கு மாற்றாக
ஒரு நல்ல பேக்கரிக்குச் சென்று, அதே விலையில்
ரொட்டியும் ஜாமும் உண்ணலாம்! 

8) கிருமித் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ள
பெருங்கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதை
கர்ப்பிணிகள், சிசுக்கள் (infants), சிறு குழந்தைகள்,
நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல் நலம்
தேறி வருவோர், முதியவர்கள் ஆகியோர் இயன்றவரை
தவிர்க்க வேண்டும். திரையரங்குகள், ரயில், பேருந்து
நிலையங்கள், புத்தகச் சந்தைகள் போன்றவை
இவ்வாறு தவிர்க்கப் படக்கூடிய இடங்கள் ஆகும்.
ஏனெனில் இருமல், தும்மல், கண்ட இடங்களில்
துப்பப்படும் சளி, எச்சில் ஆகியவற்றின் மூலம்
இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது.

9) கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய
தேவை உள்ளவர்கள், குறிப்பாக கர்ப்பிணிகள்,
நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் சளித்தொல்லை
உள்ளவர்கள், முதியவர்கள், சிகிச்சைக்குப்பின்
உடல்நலம் தேறி வருவோர் ஆகியோர் உரிய
முகமூடி (nose mask) அணிந்து அவ்விடங்களுக்குச்
செல்லலாம். மருந்துக் கடைகளில் ரூ 10க்கு விற்கும்
முகமூடிகள்  உரிய பயனைத்  தராது. ரூ 80 அல்லது
ரூ 100 விலையில் நன்கு வடிகட்டக் கூடிய
பாதுகாப்பான முகமூடிகள் (nose masks) கிடைக்கின்றன.
அவற்றை அணியவும்.

10) எந்த நோயையும் வெல்லும் ஆற்றல் இன்றைய
மருத்துவ அறிவியலுக்கு உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நோய்த்தடுப்புச் சக்தியை
அளிக்கக் கூடிய சத்துள்ள ஆகாரத்தை உண்பதுதான்.

எனவே, கடவுளை அல்ல, அறிவியலை நம்பி, மேற்கூறிய
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, அச்சம்
தவிர்த்து, இயல்பு வாழ்க்கையை வாழுமாறு தமிழ் மக்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரை ஒரு மருத்துவராலோ அல்லது ஒரு
Pathologistஆலோ எழுதப் பட்டதல்ல. உலக சுகாதார
நிறுவனத்தின் (WHO) நிறுவனத்தின் அறிவுரைகளை
ஏற்று, அவற்றைத் தமிழகச் சூழலுக்குப் பொருத்தி,
மக்களிடையே கரோனா வைரஸ் குறித்த அறிவியல்
வழியிலான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் நோக்கில்,
ஒரு தேர்ந்த அறிவியல் பணியாளரால் இக்கட்டுரை
எழுதப் பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களுக்கே இக்கட்டுரை முதன்மை
அளிக்கிறது. இக்கட்டுரையின் சரித்தன்மைக்கு
நியூட்டன் அறிவியல் மன்றம் பொறுப்பேற்கிறது.
****************************************************

மருதுபாண்டியன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக