புதன், 29 ஜனவரி, 2020



தமிழில் குடமுழுக்கு என்ற கோரிக்கை மீது தமது
ஆற்றலைத் திரட்டி வருகிறார் திரு தமிழரசன்.
தமிழ் மொழி உற்பத்தியில் இல்லை. உற்பத்தியில்
இல்லாத தமிழ் எங்ஙனம் பண்பாட்டு மொழியாக
இருக்க இயலும்? குடமுழுக்கு என்பதும் வழிபாடு
என்பதும் பண்பாடு சார்ந்தவை.

தமிழை உற்பத்தி மொழியாக ஆக்குவது ஒன்றே
தமிழுக்குச் செய்யும் நன்மை ஆகும். தமிழை
உற்பத்தி மொழியாக ஆக்கத் துப்பற்றவர்கள்
குடமுழுக்கு தமிழில் வேண்டும் என்று கோருவதன்
மூலம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து
கொக்கைப் பிடிக்க நினைக்கிறார்கள்.

முதலில் தமிழை உற்பத்தி மொழியாக ஆக்க
வேண்டும். உற்பத்தி என்பது அறிவியல் மூலம்
நடைபெறும் ஒன்று. எனவே தமிழ் உற்பத்தி மொழியாக
ஆக வேண்டுமெனில், அது அறிவியல் மொழியாக
ஆக்க வேண்டும். தமிழை அறிவியல் மொழியாக
ஆக்குவது அறிவியலாளர்களால், அறிவியல்
கற்றவர்களால் மட்டுமே இயலும்.

இங்கு தமிழ்ப் பண்டிட்டுகளால் ஒரு பயனும்
விளையாது. அவர்களால் ஒருபோதும் தமிழை
அறிவியல் மொழியாக ஆக்க முடியாது.
விஷயம் என்பதை விடயம் என்று சொன்னால்
போதும், தமிழ் வளர்ந்து விடும் என்று நினைக்கும்
முழு மூடர்களே தமிழ்ப் பண்டிட்டுகள்.

இன்று குவான்டம் கணினி உருவாகிக்
கொண்டிருக்கிறது. அதைப் பற்றி மாணவர்களுக்குத்
தமிழில் விளக்க வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு
இருக்கிறது. ஆனால் தமிழில் கட்டுரைகளோ
விளக்கக் குறிப்புகளோ இல்லை.

இந்நிலையில் நியூட்டன் அறிவியல் மன்றம் மேற்கூறிய
உடனடித் தேவையை நிறைவு செய்யும் நோக்கில்
குவான்டம் கணினி குறித்து தமிழில் ஒரு
குறுங்கட்டுரையை எழுதியது. இதன் மூலம் தமிழை
அறிவியல் மொழி ஆக்கவும், தமிழை உற்பத்தி
மொழியாக ஆக்கவும் நியூட்டன் அறிவியல் மன்றம்
உரிய பங்கை ஆற்றியது. இதுதான் இன்று செய்ய
வேண்டிய வேலையே அன்றி விடயம் விடயம் என்று
உளறிக் கொட்டிக் கொண்டு இருப்பதல்ல.  

  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக