வியாழன், 30 ஜனவரி, 2020

வெட்டிப் பயல்களின் ஆங்கில அடிமைத் தனம்!
தமிழ்ப் பகைவர்களின் தற்குறித்தனம்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
தமிழா, ஆங்கிலமா, சமஸ்கிருதமா? இம்மூன்றில்
தமிழ்நாட்டின் உற்பத்தி மொழி எது? இந்தியாவின்
உற்பத்தி மொழி எது?

எந்த ஒரு சமூகத்திலும் உற்பத்தி மொழி
(language of production) எது என்ற கேள்வியே முக்கியமானது.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் மொழி குறித்து
எவரும் பேச முடியாது.

தமிழ்நாட்டின் உற்பத்தி மொழி ஆங்கிலம் ஆகும்.
இந்தியாவின் உற்பத்தி மொழியும் ஆங்கிலமே ஆகும்.

மற்ற நாடுகளில் எப்படி?
அ) ஜெர்மனியின் உற்பத்தி மொழி ஜெர்மன் ஆகும்.
ஆ) ரஷ்யாவின் உற்பத்தி மொழி ரஷ்ய மொழி ஆகும்.
இ) சீனாவின் உற்பத்தி மொழி சீனம் (மாண்டரின்) ஆகும்.
ஈ) ஜப்பானின் உற்பத்தி மொழி ஜப்பானியம் ஆகும்.
உ) பிரான்சின் உற்பத்தி மொழி பிரெஞ்சு ஆகும்.
ஊ) இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா
நாடுகளின் உற்பத்தி மொழி ஆங்கிலம் ஆகும்.

மேற்கூறிய நாடுகளில் மக்களின் தாய்மொழி எதுவோ
அதுவே உற்பத்தி மொழியாகவும் இருக்கிறது. இந்த
உண்மை நம் அறிவினில் உறைதல் வேண்டும்.

முந்தைய பத்தியில் இங்கிலாந்தின் உற்பத்தி மொழி
ஆங்கிலம் என்று குறிப்பிட்டுள்ளேன். அது எவ்வளவு
காலமாக? அண்மைக் காலத்தில்தான்; சில
நூற்றாண்டுகளாகத்தான்!

அதற்கு முன்பு இங்கிலாந்தில் இலத்தீன் மொழிதான்
உற்பத்தி மொழியாக, ஆட்சி மொழியாக, வழிபாட்டு
மொழியாக இருந்து வந்தது. உலகையே புரட்டிப் போட்ட
தமது புகழ்பெற்ற "பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா"
என்ற நூலை இலத்தீன் மொழியில்தான் எழுதினார்
நியூட்டன். ஆயிரம் கடவுளுக்குச் சமமான நியூட்டனின்
தாய்மொழி ஆங்கிலம். என்றாலும் நியூட்டனால்
அன்று தமது தாய்மொழியான ஆங்கிலத்தில் அந்த
நூலை எழுதும் சூழல் இல்லை. ஏனெனில் அன்று ஆங்கிலம்
உற்பத்தி மொழியாக இல்லை. இந்த உண்மையும் நம்
அறிவினில் உறைதல் வேண்டும்.
(அறிவினில் உறைதல் வேண்டும் என்பார் பாவேந்தர்)

உற்பத்தி மொழியாக இல்லாமல் ஒதுக்கப்பட்டுக்
கிடந்த ஆங்கிலமானது, எவ்வாறு சில நூறு ஆண்டுகளில்
உற்பத்தி மொழியாக உயர்ந்தது? எவ்வாறு இந்தியா
போன்ற நாடுகளின் சுதேசி மொழிகளை வீழ்த்தி,
தன்னை ஆட்சி மொழியாக, உற்பத்தி மொழியாக
உயர்த்திக் கொண்டது? உலகின் அறிவியலை
ஆங்கிலமானது எவ்வாறு தனக்குள் உள்ளிழுத்துக்
கொண்டது? இந்தக் கேள்விகளுக்கு விடை காண
வேண்டும். இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஆங்கிலம் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றி
செம்மொழியான தமிழும் தன்னை உற்பத்தி மொழியாக
உயர்த்திக் கொள்ள முடியும் என்று உறுதிபட யான்
கருதுகிறேன். இது வெறும் நம்பிக்கை (faith based belief) அல்ல.
என்னுடைய கருத்து சரிதான் என்று என்னால் நிரூபிக்க
இயலும். அந்த அடிப்படையில்தான் கடந்த சில
ஆண்டுகளாக அறிவியலைத் தமிழில் எழுதி
வருகிறேன். நிற்க.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடக்க உள்ளதாக
அறிகிறேன். இது ஏற்புடையதே. இது சதுரங்கத்தில்
டிரா (draw) என்ற முடிவுக்குச் சமம்.
(Both sides share the honours).

தமிழில் குடமுழுக்கு என்ற கோரிக்கையை, ஏனைய
அம்சங்களில் இருந்து துண்டித்துக் கொண்டு
தனிமுதலான (absolute) ஒன்றாகப் பார்க்கக் கூடாது.
கடவுள் இல்லை என்ற உண்மையின் வரம்புக்கு
உட்பட்ட ஒரு கோரிக்கையாக மட்டுமே பார்க்க
வேண்டும்.

மேலும் மார்க்சியத்தில் மொழிவெறுப்புக்கு
இடமில்லை. எனவே சமஸ்கிருதத்தின் மீதான
வீணான பொருளற்ற காழ்ப்புக்கு மார்க்சியத்தில்
இடமில்லை. மொழிகளைக் கடவுள் படைக்கவில்லை.
அவற்றை மானுடம் படைத்தது. தமிழைப் போலவே
சமஸ்கிருதமும் மானுடத்தின் படைப்பே.

தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழும்
சமஸ்கிருதமும் பகை மொழிகளாக இருக்கவில்லை.
இன்று சமஸ்கிருதம் வழக்கு வீழ்ந்து இறந்துபட்ட
மொழியாக இருப்பினும், நிலவுடைமைச் சமூக
அமைப்பு நிலவிய காலத்தில் அது இந்தியாவின்
அறிவியல் மொழியாக இருந்துள்ளது. இங்கிலாந்தின்
இலத்தீன் மொழி போன்றதே இன்றைய சமஸ்கிருதம்.

இந்தியாவின் உற்பத்தி மொழியாகவோ அல்லது
தமிழ்நாட்டின் உற்பத்தி மொழியாகவோ இன்று
சமஸ்கிருதம் இல்லை. அது வழக்கு வீழ்ந்து பல
நூற்றாண்டுகள் ஆகின்றன. உற்பத்தியில் இல்லாத
எந்தவொரு மொழியும் பிற மொழிகளின் மீது
ஆதிக்கம் செலுத்த இயலாது. இது அறிவியல்பூர்வமான
உண்மை.

நோயுற்றால் மருத்துவரிடம் போகிறோம். மருந்துச்
சீட்டில் மருத்துவர் மருந்துகளை எழுதித் தருகிறார்.
சமஸ்கிருதத்தில் எழுதித் தருகிறாரா? அல்லது
ஆங்கிலத்தில் எழுதித் தருகிறாரா?

ஸ்கூட்டர், பைக், கார், லாரி போன்ற வாகனங்கள்
ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவிலும் சரி,
தமிழ்நாட்டிலும் சரி உற்பத்தி ஆகின்றன. இந்த
உற்பத்திக்கான மொழி எது? ஆங்கிலமா,
சமஸ்கிருதமா அல்லது தமிழா? இந்த உற்பத்திக்கான
படிப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதா. சமஸ்கிருதத்தில்
இருக்கிறதா?

எது உற்பத்தி மொழியோ அதில்தானே உற்பத்திக்கான
கட்டளைகள் இருக்கும்? இங்கு சமஸ்கிருதத்திற்கோ
தமிழுக்கோ எங்கு இடம் இருக்கிறது?

எனவே சமஸ்கிருதம் ஆதிக்க மொழியாக இன்று
இருக்கவில்லை. மாறாக இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும்
எவ்விதத் தொடர்புமற்ற ஆங்கிலமே இந்தியாவின்
ஆதிக்க மொழியாக உள்ளது. தமிழ் மீது ஆதிக்கம்
செலுத்துகிற மொழி எது என்றால், சமஸ்கிருதம்
அல்ல, ஆங்கிலமே. இந்த உண்மையும் நம் அறிவினில்
உறைதல் வேண்டும்.

பெற்ற தாய் தகப்பனைக்கூட அம்மா அப்பா என்று
கூப்பிடாமல் மம்மி டாடி என்று தமிழ்க் குழந்தைகள்
கூப்பிடும் அளவுக்கு தமிழனின் சிந்தனையில்
ஆதிக்கம் செலுத்துகிறது ஆங்கிலம்.

தமிழனைப் பொறுத்த மட்டில், ஆங்கிலம் என்பது
வெறும் மொழி மட்டுமல்ல; அதுதான் தமிழனுக்கு
அறிவை வழங்கும் அமுதசுரபி என்ற நிலையும்
ஏற்பட்டு விட்டது. ஜெர்மனியிலும் பிரான்சிலும்
ஆங்கிலத்திற்கு மதிப்பு எதுவும் கிடையாது.
ஏனெனில் நவீன அறிவியலை ஆங்கிலத்தை
விடச் சிறப்பாக ஜெர்மன் மொழியிலும் பிரெஞ்சு
மொழியிலும் சொல்ல இயலும். அவை அறிவியல்
மொழிகள்; எனவே அவை உற்பத்தி மொழிகள்.

ஆனால் தமிழின் நிலை அப்படி அல்ல. அறிவியல்
மொழியாகவோ உற்பத்தி மொழியாகவோ தமிழ்
இல்லை.எனவே தமிழானது ஆங்கிலத்தைச்
சார்ந்தும், ஆங்கிலத்தை அண்டிப் பிழைக்கும்
அவல நிலையிலும் உள்ளது. இதுதான் உண்மை.
இது நம் அறிவினில் உறைதல் வேண்டும்.

இந்த உண்மை நம் மூளையில் உறைத்தால் மட்டுமே
இந்த நிலையை மாற்றுவது பற்றிச் சிந்திக்க இயலும்.
இந்த உண்மையையே ஏற்றுக் கொள்ள மறுப்பவன்
தமிழின் பகைவன் ஆவான். அவனால் ஆங்கிலத்தால்
அடிமைப் படுத்தப் பட்டுள்ள தமிழை ஒருபோதும்
விடுதலை செய்ய முடியாது.

இந்தச் சூழ்நிலையில் வெட்டிப் பயல்களின் வீணான
சம்ஸ்கிருத எதிர்ப்பால் தமிழுக்கு எப்பயனும்
விளைந்திடாது. உற்பத்தியில் இல்லாத
சமஸ்கிருதத்தை எதிர்ப்பதில் தன் ஆற்றலை
வீணாக்கும் மூடர்கள் ஆங்கிலத்துக்கு அடிமைப்
பட்டுக் கிடப்பதில் சுகம் காணும் இழிபிறவிகள்.

அதே நேரத்தில், ஆங்கிலமே கூடாது என்று
சொல்வதிலும் எப்பயனும் விளையாது. ஆங்கிலத்தின்
வளர்ச்சியை தமிழ் அடையும்வரை, ஆங்கிலம்
தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தே தீரும். இலத்தீனை
எதிர்த்ததால் ஆங்கிலம் வளரவில்லை. மாறாகத்
தன்னை வளர்த்துக் கொண்டதால் மட்டுமே ஆங்கிலத்தால்
இலத்தீனை அகற்ற முடிந்தது.

ஆக, மொழிச்சிக்கலில் சரியான தீர்வு இதுதான்:-
1) தமிழும் சரி, சமஸ்கிருதமும் சரி இரண்டுமே இன்று
உற்பத்தியில் இல்லாத மொழிகள். உற்பத்தியில்
இல்லாத சமஸ்கிருதத்தை எதிர்ப்பதில் ஆற்றலை
வீணடிப்பதை விடுத்து, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை
எதிர்ப்பதில் தமிழானது சமஸ்கிருதத்தின் துணையை
நாட வேண்டும்.

2) தமிழை அறிவியல் மொழியாகவும் உற்பத்தி
மொழியாகவும் ஆக்க முயல வேண்டும். தமிழில்
அறிவியலைச் சொல்லும் அறிவியலாளர்களின்
முயற்சிகளைத் தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டும்.
*********************************************************











 


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக