சனி, 4 ஜனவரி, 2020

தமிழில் எழுதாதே! தற்கொலை செய்யாதே!
TNPSC Group I முதன்மைத் தேர்வை
தமிழில் எழுதுவது தற்கொலைப் பாதை ஆகும்!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
நீட் தேர்வில் தமிழ் வழி வினாத்தாளில் பிழைகள் என்பது
கடந்த ஆண்டு பெரிதாகப் பேசப்பட்டது. நீட் தேர்வில்
மட்டுமல்ல, தமிழ் வழியில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு
வினாத்தாளிலும் பிழைகள் நிறையவே இருப்பது
வழக்கம் ஆகி விட்டது.

ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்.
TNPSC நடத்திய போட்டித் தேர்வு அது. ஆண்டு 2019.
தேர்வு நடந்த தேதி மார்ச் 3, 2019.
(அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-1
முதல்நிலைத் தேர்வு)

இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் உண்டு. தமிழ் வழி
வினாத்தாளில் 24 வினாக்கள் தவறாக இருந்தன.
காரணம் மொழிபெயர்ப்புத் தவறுகள்.

எந்த ஒரு இடத்திலும் தமிழ் வினாவுக்கும் ஆங்கில
வினாவுக்கும் முரண்பாடு ஏற்பட்டால், ஆங்கில
வினாவே பின்பற்றப்பட வேண்டியதும் இறுதியானதும்
ஆகும் என்ற விதி உள்ளது.(The English version is final and binding).
இந்த விதியே வினாத்தாளைக் காக்கிறது. நிற்க.

ஏன் தமிழ் வழி வினாத்தாளில் இத்தனை தவறுகள்
நேர்கின்றன? பிழையற்ற வினாத்தாளை தமிழில்
ஒருபோதும் தயாரிக்க முடியவில்லையே ஏன்?

காரணம் என்ன என்று நான் ஆயிரம் முறை சொல்லி
இருக்கிறேன். பலருக்கும் அதைப்  புரிந்து கொள்ள
முடியவில்லை.  
         
1) உற்பத்தியில் உள்ள மொழிக்கும்
உற்பத்தியில் இல்லாத மொழிக்கும்
பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. .

2) ஆங்கிலம் உற்பத்தியில் உள்ள மொழி.
தமிழ் உற்பத்தியில் இல்லாத மொழி.

3) உற்பத்தியில் உள்ள மொழியான ஆங்கிலத்தில்
பிழையற்றதும் துல்லியமானதுமான வினாத்தாளைத்
தயாரிக்க இயலும்.

4) உற்பத்தியில் இல்லாத தமிழில் பிழையற்ற வினாத்தாளைத்
தயாரிக்க இயலாது.

5) இதுதான் உண்மை. இது மட்டுமே உண்மை.

நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் பிழைகள் என்றால்
அது நாட்டின் கவனத்தை ஈர்த்து விடுகிறது. ஆனால்
TNPSC முதன்மைத் தேர்வில் தமிழ் வினாத்தாளில்
பிழை என்பது ஊடக மூடர்களின்  மரமண்டையில்
ஏறாது.

எமது அறிவுரை!
-------------------------
TNPSC தொகுதி-1, தொகுதி-2 முதன்மைத் தேர்வுகளில்
தமிழ் வழியில் எழுதுவது தற்கொலைப் பாதை ஆகும்.
(இது எமது கருத்து அல்ல; இது ஒரு தேற்றம் ஆகும்;
எவர் கேள்வி எழுப்பினாலும், எமது தேற்றத்தை யாம்
நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்).   

எனவே தேர்வர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுகளை
ஆங்கில வழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அறிவுரை
கூறுகிறோம்.
(DESCRIPTIVE PATTERNல் உள்ள தேர்வுப் பகுதியை மட்டுமே
இக்கட்டுரை குறிப்பிடுகிறது)

இத்தேர்வுகளை பட்டதாரிகள் மட்டுமே எழுதத் தகுதி
உடையவர்கள் என்பதால் பட்டதாரிகளுக்கு ஆங்கிலத்தில்
ஒரு தேர்வை எழுதுவதில் சிரமம் இருக்காது.

இத்தேர்வுகள் எழுத்தர் பணிக்கானவை அல்ல;
அதிகாரிகள் பணியிடங்களுக்கான தேர்வு. எனவே
ஆங்கிலத்தில் எழுதுவதில் சிரமம் இருக்காது.
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
போட்டித்  தேர்வுகள் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்,
தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு போட்டித்தேர்வையும்
எழுதி இராதவர்கள் மற்றும் கல்வி அறிவற்றவர்கள்
பின்னூட்டங்களில் தங்கள் அறியாமையை
வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
************************************************************ 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக