வியாழன், 30 ஜனவரி, 2020



10ஆம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள் தற்கொலை!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள
குழந்தை இயேசு மேனிலைப் பள்ளியில் 10ஆம்
வகுப்பில் படித்து வந்த மாணவி பேச்சியம்மாள்
(தகப்பனார் பெயர்: பெருமாள்) தற்கொலை செய்து
கொண்டார்.

 பேச்சியம்மாள் மதிப்பெண் குறைவாகப் பெற்று வருவதால்,
பள்ளியின் 100 சதத் தேர்ச்சி பாதிக்கப் படக்கூடும்
என்பதால் டிசியை வாங்கிக்கொண்டு போகும்படி
பள்ளியின் தமிழாசிரியை கூறியதாகச் சொல்லப்
படுகிறது. இந்த நெருக்கடியைத் தாங்க இயலாத
குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை
செய்து கொண்டது.

ஏழை எளிய கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த
இந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு இத்தற்கொலை
மிகப்பெரும் பேரிழப்பு.

பதினைந்து நாட்களுக்கு முன்பு, ஒரு மாணவனின்
தலை முடியை  அவனுடைய தாய் ஓட்ட வெட்டி
விட்டதால் அம்மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
இச்செய்தியை அதற்குள் மறந்திருக்க முடியாது.
இக்குடும்பமும் ஏழை எளிய குடும்பம்தான்.

இன்னும் கணக்கற்ற பள்ளிக் குழந்தைகளின்
தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
பெரும்பாலும் ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகள்தான்
இவ்வாறு தற்கொலை செய்து கொள்கின்றன. இவை
சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஏனெனில்
பிண அரசியல் செய்து வயிறு வளர்க்கும்
அமைப்புகளுக்கு இத்தகைய தற்கொலைகளால்
பயன் எதுவும் கிட்டப் போவதில்லை.

ஒரு தற்கொலை எப்போது தமிழ்ச் சமூகத்தின்
கவன ஈர்ப்பைப் பெறும் என்றால், அத்தற்கொலையால்
பிண அரசியல் செய்யக் கூடிய வாய்ப்பு அதிகமாக
இருந்தால் மட்டுமே!

இதற்குச் சிறந்த உதாரணம் மருத்துவம் படிக்க
விரும்பிய அனிதாவின் தற்கொலை. அனிதாவின்
தற்கொலை நன்கு திட்டமிடப்பட்டு தூண்டப்பட்ட
தற்கொலை. ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த
பட்டியல் இனப் பெண் குழந்தையை தங்களின்
வக்கிர நோக்கத்திற்காக உச்சநீதிமன்றம் வரை
அழைத்துச் சென்று ஏமாற்றிய, தனியார் மெட்ரிக்
பள்ளி அதிபர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் சில
திமுக அரசியல்வாதிகளுமே அனிதாவின்
தற்கொலைக்கு காரணம். எனினும் அவர்கள் இந்த
நோய் பீடித்த சமூகத்தில் போராளிகளாக  வலம்
வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பேச்சியம்மாள் தற்கொலையில், பள்ளியின்
தமிழாசிரியையைக் கைது செய்ய வேண்டும் என்று
உள்ளூரில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மாவட்டக் கல்வி அதிகாரி அநேகமாக அந்த
ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்யக்கூடும்.

போராட்டம் தீவிரமாக நடந்தால் அந்த ஆசிரியை
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவும்
கூடும். பேச்சியம்மாளுக்கு உயிர் போய் விட்டது.
ஆசிரியைக்கு வாழ்க்கை போய்விடும்.

மொத்தச் சமூகமே நோயுற்ற சமூகமாக இருக்கும்போது
ஒரு ஆசிரியையைச் சிறையில் அடைப்பதால் என்ன
பயன் விளையும்? தேர்ச்சி விகிதம் குறைந்தால்
பள்ளி நிர்வாகமும் கல்வி அதிகாரிகளும் ஆசிரியருக்கு
மெமோ வழங்குவார்கள். மாணவனைப் படிக்கச்
சொல்லிக் கண்டித்தால் அவனோ தற்கொலை செய்து
கொண்டு விடுவான். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும்
இடி என்பது போல, ஆசிரியர்களுக்கு 360 டிகிரியிலும்
நெருக்கடி! இந்தச் சூழலில் எந்த ஆசிரியராவது
மன நிம்மதியுடன் பணி செய்ய முடியுமா?
(இறந்து போன மாணவியின் சாதியும்
ஆசிரியையின் சாதியையும் தெரியாத நிலையில்
இக்கட்டுரை எழுதப் படுகிறது).

அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு எந்த ஒரு
மாணவனுக்கும் எந்தக் காரணம் கொண்டும்
பள்ளி நிர்வாகம் டிசி கொடுக்கக் கூடாது என்று
ஒரு சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.
டிசி வேண்டுவோர் முதன்மைக் கல்வி அதிகாரியிடம்
சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகிய இரு தரப்பினரும்
மூச்சுத் திணறும் நெருக்கடிக்கு இலக்காகி
உள்ளனர். தமிழ்ச் சமூகம் இது குறித்து அக்கறை
கொள்வதே இல்லை. ஏதாவது தற்கொலை நடக்காதா,
எங்காவது பிணம் விழாதா, அதை வைத்து பிண
அரசியல் செய்ய முடியுமா என்று ஏங்கிக் கிடப்பது
மட்டும்தான் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின்
அரசியலாக உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்
தாழ்வு மனப்பான்மை கடந்து 50 ஆண்டுகளாக
விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை
விதைப்பதை தங்களின் குலத் தொழிலாகவே
செய்து கொண்டிருக்கின்றனர் இங்குள்ள
அரசியல்வாதிகள் விதிவிலக்கின்றி. வேறெந்த
மாநிலத்திலும் இந்த அளவு அகல்விரிவாகவும்
ஆழமாகவும் தாழ்வு மனப்பான்மை விதைக்கப்
படுவதில்லை.

தற்கொலைகள் கொண்டாடப் படுவதும்
தமிழ்நாட்டில்தான். உணர்ச்சிவசப்பட்டு
தற்கொலை செய்து கொள்பவர்கள் பெருந்
தியாகிகளாகப் போற்றப்படுவதும் தமிழ்நாட்டில்தான்.

இதெல்லாம் எதன் அடையாளம்? வாழ்வு மறுப்புத்
தத்துவம் (Life negation philosophy) தமிழ்நாட்டில்தான்
வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பதன்
அடையாளம் ஆகும்.. இங்கு தோற்றுப்போன
தத்துவம் வாழ்வுறுதித் தத்துவம்தான்
(Life affirmation philosophy).

நியூட்டன் அறிவியல் மன்றம் தாழ்வு மனப்பான்மைக்கு
எதிரானது: அதை உடைத்தெறிவதில் வல்லது.
தொடங்கிய நாள் முதலாக வாழ்வுறுதித் தத்துவத்தையே
நியூட்டன் அறிவியல் மன்றம் பிரச்சாரம் செய்து
வருகிறது.

ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம். ஐஐடி
கல்லூரிகளில் சூத்திரப் பிள்ளைகள் படிக்க முடியாது
என்றும் அங்கு இடஒதுக்கீடே கிடையாது என்றும்
தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யப்பட்டு அந்தப் பொய்யே
உண்மையாக நிறுவப் பட்டு இருந்தது. திராவிட
இயக்கங்களே இந்தப் பொய்யை அரங்கேற்றி
வைத்திருந்தன.

இந்தப் பொய்யைத் தாக்கித் தகர்ந்தெறிந்து, சூத்திர
பஞ்சமப் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு உண்டு
என்ற உண்மையை நிலைநாட்டுவதில் நியூட்டன்
அறிவியல் மன்றம் பெரும்பங்காற்றியது. இதன்
விளைவாக இந்தப் பத்தாண்டுகளில், பல்லாயிரக்
கணக்கானோர் IIT JEE தேர்வு எழுதினார். அதில்
குறைந்தது சில நூறு பேரேனும் தேர்ச்சி பெற்று
ஐஐடியில் படித்தனர். இதற்குக் காரணம்
வாழ்வுறுதித் தத்துவத்தை நியூட்டன் அறிவியல்
மன்றம் நடைமுறைப் படுத்தியதுதான்.
அது மட்டுமே தற்கொலைகளைத் தடுக்க வல்லது.
**************************************************
   

   














   


 
 






 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக