திங்கள், 6 ஜனவரி, 2020

ஈரானின் சர்வ அதிகாரம் கொண்ட புரட்சிப்படை எனப்படும் ரெவல்யூசனரி கார்ட்ஸ் என்ற ராணுவ பிரிவின் தலைவராக இருந்த குசாம் சுலேமேனி என்பவரை அமெரிக்கா ஈராக்கிய விமானதள ஓடுபாதையிலே வைத்துபோட்டு தள்ளியிருக்கிறது.
கொசுறாக ஈராக்கின் பல ஆயுதமேந்திய குழுக்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்களையும் கூண்டோடு எமலோகம் அனுப்பியிருக்கிறது.
மத்திய கிழக்கு பற்றி எரியும் மூன்றாம் உலகப்போர் வருமென்றெல்லாம் சொல்கிறார்கள்...
இது ஏன் என புரியவேண்டுமென்றால்
இந்த சுலேமேனி யார் அவர் வகித்த பதவி என்னவென்று பார்க்கவேண்டும்.
சுலேமேனி இரானிய ரெவல்யூசனரி
கார்ட்ஸ் மற்றும் குதுஸ் போர்ஸ் எனப்படும் படைகளின் தலைவர்.
இரண்டுமே பல நாடுகளால் தீவிர
வாத குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதெப்படி ஒரு நாட்டின் ராணுவத்தை தீவிரவாத குழுவாக அறிவிக்க முடியும் என்றால் இந்த இரண்டும் ராணுவம் மாதிரி தான் ஆனால் ராணுவம் இல்லை.
ஈரானிய ராணுவம் என்பது தனி.
இந்த ரெவல்யூசனிரி கார்ட்ஸ் என்பது ஈரானின் மத அமைப்பை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.
ஈரானிய நாட்டின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தும். உள்நாட்டு பாதுக்காப்பு, காவல்துறை போல செயல்படுவது...
அடுத்த நாட்டிலே போய் போரிடுவது அடுத்த நாட்டு தீவிரவாத இயக்கங்களுக்கு பயிற்சி அளிப்பது என எல்லா வேலைகளையும் இது செய்யும். கிட்டத்தட்ட தனி நாடு போலவே செயல்படும்.
குதுஸ் போர்ஸ் என்பது அடுத்த நாட்டிலே சதி வேலைகளை செய்யும் கிட்டத்தட்ட தீவிரவாத கும்பல் போல செயல்படும் அமைப்பு.
இது நேரடியாக ஈரானிய மததலைவர் அதயத்துல்லா கொமேனியின் கீழ் வருவது அவருக்கு மட்டுமே பதில் சொல்ல கடமை பட்டது.
ஈரானிய அதிபரோ, நாடாளு
மன்றமோ இதை கேள்வி கேக்கமுடியாது.
பக்கத்து நாடுகள் ஆன ஈராக், பஹ்ரைன், லெபனான், சிரியா, எகிப்து,ஏமன் போன்ற நாடுகளிலே நாட்டுக்கு இரண்டு மூன்று என தீவீரவாத குழுக்களை...
இந்த இரண்டு அமைப்புகளும் பணம் பொருள் ஆயுதம் ஆள் அம்பு என எல்லாம் கொடுத்து வளர்த்து பராமரித்து வருகிறது.
அமைப்புகள் தான் இப்படி என்றால் பல இடங்களிலே ஆயுதத் தாக்குதல் மூலம் நாடுகளை நிலைகுலைய வைத்ததால்...
இந்த சுலேமேனி ஈரானின் இரண்டாம்
சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்தார்.
ஈரானிய அதிபரை விட இவருக்குத்
தான் அதிகாரங்கள் அதிகம்.
பண பலம், படைபலம் என எல்லாவற்றையும் பயன்படுத்தி நாசகார வேலைகளை செய்வதிலே திறமையானவர் என்பதால் அதிகாரங்கள் குவிந்தன.
சிரிய அதிபர் பஷர் அல் அசாட்டை தூக்கி எறிய ஆரம்பிக்கப்பட்ட சிரிய உள்நாட்டு போரை தன்னுடைய திறமையால் முடித்தவர்
அப்படியே அங்கிருந்த சில லட்சம் மக்களின் சாவுக்கும் பல லட்ச மக்கள் அகதியாய் ஓடவும் காரணமானவர்.
சிரியாவிலே உள்நாட்டுப்போர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலே ஈராக்கின் மீது பார்வையை திருப்பி அங்கிருந்த மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றி விட்டு
ஈரான் போலவே குறிப்பிட்ட மதத்தின் குறிப்பிட்ட பிரிவின் ஆதிக்கத்தை கொண்டு வரமுடிவு செய்து ஈராக்கிலே வேலை செய்து கொண்டிருந்தார்.
ஈராக்கிலே இருக்கும் ஆயுதம் தாங்கிய
பல குழுக்களுக்கு ஆலோசகராக மேற்பார்வையாளராக இருந்து கொண்டு ஈராக்கின் பல பகுதிகளை கிட்டத்தட்ட ஆட்சியாளர் போல ஆண்டு வந்தார்.
சரி இவ்வளவு வெற்றி பெற்றுவிட்டோம் அதிகாரம் வந்து விட்டது அமெரிக்கா ஏதும் செய்யாது என நினைத்து...
அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டிலே இருக்கும் ஈராக்கின் பகுதிகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தார்.
அமெரிக்கா நேரம் பார்த்து போட்டு தள்ளிவிட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரிடையாகவே இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
ஏவுகணை தாக்குதலிலே சில டஜன்
பேரை எரித்து சாம்பலாக்கிவிட்டார்கள்.
ஈரானிலே இருக்கும் சூழ்நிலையும்
அங்கே மக்கள் நடத்தப்படுவது மனதை பிழியும் விஷயங்கள்.
எழுதவே முடியாத விஷயங்கள்.
அங்கே பெண்கள் முகத்தை மூடிக் கொள்ளா விடில் அந்த இடத்திலே அடி உண்டு.
அதற்கு என தனியே இந்த படை உண்டு.
மீறி ரகளை செய்பவர்களுக்கு கசையடியோ அல்லது தூக்கு தண்டனையோ உறுதி.
ஈரானிய அரசியல் அமைப்போ மிகவும் காமெடியான விஷயம். மதத்தலைவருக்கே முழு அதிகாரம் இந்த அதிபர், நாடாளுமன்றம் தேர்தல் இன்னபிற எல்லாம் லுல்லுலாயிக்கு.
தேர்தல்கள் என்றைக்குமே சரியான நடந்தது கிடையாது. அதிலே ஜெயிப்பவர்களும் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி தான்.
இப்படி நல்லாட்சி ஆறாக பொங்கி வழிந்து கொண்டிருந்ததை பார்த்து ஈரானிய மக்கள் போராடுகிறார்கள்.
அதை கொடூரமாக ஒடுக்கியது இந்த ரெவல்யூசனரி கார்ட்ஸ் படை கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கும் மேல் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
ஈரானிய மக்கள்தொகை தமிழ்நாட்டை
விட கொஞ்சம் தான் அதிகம்.
8 கோடி பேர் மட்டுமே கொண்ட நாட்டிலே ஐநூறு பேரை சும்மா போட்டுத் தள்ளியிருப்பது பற்றி நம்மூரிலே எந்த போராளியும் பேசி பார்த்திருக்க மாட்டீர்கள்.
இப்படி உள்நாட்டிலேயும் வெளிநாட்டிலேயும் அமோகமாக ஆயுதம் ஏந்திக்கொண்டிருந்த ஆளை அமெரிக்கா போட்டுதள்ளியிருக்கிறது.
ஒரு பக்கம் ஈரானிய மக்கள் அது உள்நாட்டிலே இருந்தாலும் சரி வெளி நாட்டிலே அகதிகளாக தஞ்சம் புகுந்திருந்தாலும் சரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈரானால் வளர்த்து விடப்பட்ட ஆயுததாரி குழுக்களோ துக்கம் கொண்டாடுகின்றன.
இதனால் எல்லாம் போர் வருமா என்றால் வராது. ஈரான் திவாலுக்கு ரொம்பவும் கிட்டே இருக்கிறது. எனவே போர் அறிவித்து முழுதாக அழிய விரும்பாது.
அமெரிக்காவிலே டிரம்ப் அதிபாராக இருக்கிறார். முன்பு போலெல்லாம் வீராப்பு பேசினால் நாடே இருக்காது என தெரியும்.
ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாகும். கொல்லப்பட்ட சுலேமேனி போல திறமை படைத்தவர்கள் இல்லை என்றாலும் தாக்குதல்களை நடத்த ஈரானால் முடியும்.
நமக்கு பாதிப்பு வருமா என்றால்
வரலாம் ஈரான் முயற்சிக்கலாம்.
இஸ்ரேலிய தூதரகத்தில் ஈரானிலே
பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குண்டு வைத்திருக்கிறார்கள்.
அது போல் ஏதும் நடக்கலாம்.
மத்திய கிழக்கை ஆட்டிப்படைத்த கொடூர நாட்களிலே ஒன்று முடிவுக்கு வந்திருக்கிறது.
டிரம்ப் சாதித்து காட்டியிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக