சனி, 1 பிப்ரவரி, 2020

தவறான பிரச்சாரங்களைத் தடுப்போம்! எல்ஐசியைக் காப்போம்!
-அறிவுக்கடல்
'எல்ஐசி தனியார்மயமாகிறது' என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து, ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சத்தைப் பாலிசிதாரர்களுக்குத் திருப்பித் தந்துகொண்டிருக்கிற ஒரு நிறுவனம் தனியார்மயமாகிறது என்றால், இத்தகைய பரபரப்பு ஏற்படுவது இயல்பானதே.
அரசின் திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடியை, மக்கள் சேமிப்பிலிருந்து திரட்டித் தந்துகொண்டிருக்கிற ஒரு மாபெரும் நிறுவனம் அரசின் கையைவிட்டுப் போவது என்பது, நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்பதால் உறுதியான எதிர்ப்புடன் போராடி, தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நடவடிக்கையே.
அதே நேரத்தில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படுகிற, ஏற்படுத்தப்படுகிற அச்சங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன. எல்ஐசியுடன் 23 தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கிற நிலையில், முக்கால் பங்கு(74.71 சதவீதம்) சந்தைப் பங்கினை எல்ஐசி கொண்டிருக்கிறது. அதாவது, தனியார் நிறுவனங்களின் சராசரி சந்தைப் பங்கு வெறும் 1.09 சதவீதம்.
தனியார் அனுமதிக்கப்பட்ட பிற துறைகள் அனைத்திலும் ஒரு சில ஆண்டுகளிலேயே, சந்தையின் மிகப்பெரிய பங்கினை கைப்பற்றிவிட்ட தனியார், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும், 20 ஆண்டுகளாக முயற்சித்தும் ஒரு சதவீதத்தைத்தான் கைப்பற்ற முடிந்துள்ளது என்பதே, எல்ஐசியின் நம்பகத்தன்மைக்கு சான்று. அப்படியான நம்பகத்தன்மைகொண்ட நிறுவனத்துடன் போராட முடியாத நிலையில், அந்நிறுவனத்தை பலவீனப்படுத்தவும், மக்களின் நம்பிக்கையைக் குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இயல்பே.
அத்தகைய ஒரு முயற்சியே, சில நாட்களுக்கு முன் பரபரப்பையூட்டிய, எல்ஐசியின் வராக்கடன் பற்றிய செய்தியாகும். இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதை, பெரு முதலாளிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பல துறைகளும் அதனால் ஆட்குறைப்பு செய்வதையும் அன்றாடம் செய்திகளில் காண முடிகிறது. அப்படியான வீழ்ச்சியைச் சந்தித்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு, அவற்றுக்கு நிதியுதவி அளித்திருக்கிற வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிலும் வராக்கடனாக வெளிப்பட்டிருக்கிறது. எனவே, வராக் கடனுக்குக் காரணம் இந்த அரசு கடைப்பிடித்துக்கொண்டிருக்கிற பொருளாதாரக் கொள்கைகளே.
அப்படியான வராக் கடனைக்கூட, வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களின் வராக்கடனுடன் ஒப்பிட்டால், மிகக்குறைவாகவே இருக்கிறது என்பது ஒருபுறம். மறுபுறம், எல்ஐசி நிர்வகிக்கும் ரூ.31 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால், சுமார் ரூ.30 ஆயிரம் கோடி என்பது, சதவீத அடிப்படையிலேயே மிகமிகக் குறைவு என்பதும் புரியும். ஆனாலும், ஏதோ எல்ஐசியே திவாலாகிவிடப் போவதுபோன்ற பதட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதைப் போன்றதொரு நடவடிக்கையே, தற்போது, எல்ஐசி தனியார்மயமாக்கப்பட்டு, 40 கோடி மக்களின் பணமும் பறிபோய்விடும் என்ற பிரச்சாரமும்.
இப்பிரச்சாரத்தைச் செய்வதன்மூலம், அதைச் செய்பவர்களே ஒரு செய்தியை ஒப்புக்கொள்கிறார்கள். அது, தனியாரிடம் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்காது என்பதுதான்.
அப்படி மக்கள் பணத்தைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்துகிற ஒரு தனியார் முதலாளியிடம் எல்ஐசியை தந்துவிடப்போவதில்லை என்பதுதான் மறைக்கப்படும் உண்மை.
எல்ஐசியின் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்று, பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு முயற்சிக்கிறது என்பதுதான் உண்மை. வெறும் ரூ.100 கோடி முதலீட்டைச் செய்த அரசிற்கு, லாபத்தில் பங்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.2610 கோடியைத் தருகிற ஒரு நிறுவனத்தை விற்பது, பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக, மாதம் மூவாயிரம் ரூபாய்க்குப் பால் கறக்கும், கறவை மாட்டை விற்பதுபோன்ற புத்திசாலித்தனமாகும்.
ஆனால், மாட்டை விற்றதும், மாடு வாங்கியவரிடம் சென்று விடுவதைப் போல, எல்ஐசியின் நிர்வாகம் மாறிவிடப்போவதில்லை. விற்கப்பட்ட பங்குகளுக்கான லாபப் பங்கையும், மக்களின் சேமிப்பிலிருந்து கிடைக்கும் நிதியையும் அரசு இழக்கப் போகிறது என்பது, அனைத்துப் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே. அதனால், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகிற இழப்பு, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின்மீது விழுந்த அடியாக, 134 கோடி மக்களின்மீதும் விழப்போகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அதற்காக, 40 கோடிப் பாலிசிதாரர்களின் நிதியும் காணாமல் போய்விடுமா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக, டிசம்பர் 2019 நிலவரப்படி, ஸ்டேட் வங்கியின் 42.32 சதவீதப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் 57.68 சதவீதப் பங்குகளை வைத்திருக்கிற அரசுதான் இன்றும் அதன் உரிமையாளர். பங்கு விற்பனைக்குப்பின் ஸ்டேட் வங்கியில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சிந்தித்துப் பாருங்கள்.
அப்படியானால், எல்ஐசிக்குப் பாதிப்பே இல்லையா, பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள்? பாதிப்பு இல்லை என்று சொல்லவில்லை. பாதிப்பு எவ்வளவு, யாருக்கு என்பதெல்லாம்தான் மறைக்கப்பட்ட உண்மைகள்.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதால், இந்தியாவின் பொதுமக்களுக்குத்தான் முதல் பாதிப்பு. பாலிசிதாரராகப் பார்த்தால், தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகம் சென்றால், அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட்டால், தவறான நிர்வாகத்தால் இழப்பு ஏற்படலாம். 1994இல் முதல் பங்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்டேட் வங்கியின் 40 சதவீதப் பங்குகளை விற்க கால் நூற்றாண்டு ஆகியுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஏற்கெனவே அரசு விற்பதாக அறிவித்திருக்கிற பல நிறுவனங்களை விற்காமல், சரியாகச் சொன்னால் விற்க முடியாமல் இருப்பதற்குக் காரணமே வாங்குமளவுக்கு சந்தையில் நிதிப்புழக்கம் இல்லாததுதான். சிறிய நிறுவனங்களுக்கே அதுதான் நிலை என்னும்போது, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை வாங்க நிதி வேண்டுமல்லவா?
அரசின் மற்ற நிறுவனங்களை விற்றபோது, எல்ஐசிதான் கணிசமான பங்குகளை வாங்கி உதவியது. அதாவது, எல்ஐசியிம் மட்டும்தான் அவ்வளவு நிதியிருந்தது. அப்படிப்பட்ட எல்ஐசியை வாங்க? அதனால், எல்ஐசியின் பங்குகளை விற்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், பண்ட பாத்திரங்களை விற்கும் குடிகாரனைப் போல இந்த அரசு, எதை விற்றாவது, அடிமாட்டு விலைக்கு விற்றாவது பற்றாக்குறையைச் சரிசெய்யவேண்டிய மிகமோசமான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதால், எப்படியாவது விற்க முயற்சி செய்யும் என்பதுதான் உண்மை. அந்த விற்பனை உடனடியாக எல்ஐசி வாடிக்கையாளர்களைப் பாதிக்கப் போவதில்லை.
ஆனால், 64 ஆண்டுகளில் எல்ஐசி ஒருமுறைகூடப் பயன்படுத்தியிராத, அரசு உத்தரவாதம் இல்லாமற்போகும். எல்ஐசிக்கு அரசு உத்தரவாதம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்படும். லாபத்தில் நிறுவனத்தின் உரிமையாளருக்கும், பாலிசிதாரருக்கும் வழங்கும் பங்கின் விகிதம் மாறுவதால், பின்னாளில் போனஸ் குறைக்கப்படலாம். இவற்றின்மூலம் அரசு உதவ முயற்சிப்பது தனியார் நிறுவனங்களுக்கே.
தனியார் முதலாளிகளிடம் நிதி வாங்கி, ஆட்சியைப் பிடித்தபின், அவர்களுக்காக, அரசின் நிறுவனங்களுக்கே கேடு விளைவிப்பதைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளினால், இந்திய மக்கள் அனைவருக்கும் ஏற்படும் பாதிப்புகளைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு பறிபோய்விடும் என்பதான தப்புப் பிரச்சாரத்தைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
இவற்றை மட்டும் எதிர்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக