திங்கள், 24 பிப்ரவரி, 2020

மகஇக விவகாரங்கள்
----------------------------------
சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு, இன்று மருதையன் எழுதியிருக்கும் இதே கருத்துக்களை, இதே மகஇகவிற்கு தலைமை தாங்கும் அமைப்பின் அரங்கில் ஒற்றை ஆளாக முன்வைத்து போராடி, அதனால் இதே போன்று "வெளியேற்றப்பட்டேன்".
வாழ்க்கை ஒரு வட்டம்தான் போலும்.
"பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு – அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது." என எழுதியிருக்கிறார்.
நல்லது. அந்த அதிகாரத்துவத்தை உறுதிபடக் கட்டியெழுப்பியதில், தனக்கும், நாதனுக்கும் உள்ள மறுக்கவியலாத பங்கு குறித்து, ஏதேனும் சுயவிமர்சனம் இக்கட்டுரையில் இருக்கிறதா?
"ஒவ்வொரு விமர்சனத்திலும் ஒரு சுயவிமர்சனம் பொதிந்திருக்கிறது" என அணிகளுக்கு வகுப்பெடுத்தாரே, ஆனால் இந்த மொத்தக் கட்டுரையிலும் சுயவிமர்சனம் மருந்துக்கும் இல்லையே, ஏன்? ஏனெனில், அப்படி ஒரு முழுமையான சுயவிமர்சனம் வெளிவந்தால், இந்த விமர்சனம் உருவாக்கும் சிறிய ஆதரவு அலை சுவடின்றி காணாமல் போய் விடும். குருச்சேவ் குறித்த புகழ்பெற்ற ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.
ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு, ஒரு கூட்டத்தில் குருச்சேவ் ஸ்டாலினை கண்டித்துப் பேசிக் கொண்டிருந்தாராம். கூட்டத்திலிருந்து ஒரு குரல், "அப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?" எனக் கேட்டதாம். "யார் இந்த கேள்வியைக் கேட்டது?" என குருச்சேவ் சீறினாராம். ஒரே அமைதி. தொண்டையை சரி செய்து கொண்ட குருச்சேவ், "இப்படித்தான் நாங்களும் அமைதி காத்தோம்!" என்றாராம்.
இந்தப் பத்தாண்டுகளில், அன்று என்னை "சீர்குலைவுவாதி" என முத்திரை குத்தியவர்களில், பலர் வெளியேறி புதிய "சீர்குலைவுவாதிகளாக" மாறும் காட்சிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். சிலர் அமைப்பிற்கு உள்ளேயிருந்து "சீர்குலைவில்" ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்படுவதையும் கேள்விப்படுகிறேன்.
வேடிக்கை என்னவென்றால், இதுவரை இப்படி ஒரு பகிரங்க அறிக்கையைக் கூட நான் வெளியிடவில்லை. அது போகட்டும்.
"அமைப்பு என்பது சிலரின் உடைமையல்ல. தலைமையால் தனது அதிகாரத்தின் துணை கொண்டு, தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும்." எனவும் எழுதியிருக்கிறார்.
கீழிருந்து மேல் மட்டம் வரை தலைமை தாங்கும் தோழர்களின் தவறுகளை அணிகளிடமிருந்து மறைத்து வைப்பதையே "அமைப்பு முறை", லெனினும், ஸ்டாலினும் வகுத்த போல்சுவிக் கட்சிக் கோட்பாடு என விளக்கம் சொன்னவர்கள், தீடீரென புது விளக்கமும், கோரிக்கையும் எழுப்புவது ஆச்சர்யம் தரவில்லை, கசப்பான நகைச்சுவையாக இருக்கிறது.
"நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன."
மறுபடியும் வேடிக்கைதான். அமைப்பிலிருந்து விலகும் தோழர்களிடம் தீண்டாமையை கடைபிடிப்பதில் மகஇக-வின் புகழ் ஊரறிந்தது. கடந்த காலங்களில் நீங்கள் "செண்டிமெண்ட்" என எள்ளி நகையாடியதைப் போல, நானும் செய்ய விரும்பவில்லை. புரிந்து கொள்ள முடிகிறது. என்னையும், பலரையும் போல கடந்து வாருங்கள்.
மகஇக-வை குறித்து மாத்திரம் பேசுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதனை ஒரு புரட்சிகர அமைப்பாக கருதுவதிலிருந்து விலகி ஒரு தசாப்தம் முடிந்து விட்டது.
ஒட்டுமொத்தமாக நமது நாட்டிலும், பிற நாடுகளிலும், இடதுசாரி இயக்கங்களில் மிக நீண்ட காலமாக ஜனநாயக மத்தியத்துவம் எனும் கோட்பாடு எவ்வாறு கேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என இளைஞர்கள் வாசித்தறிய வேண்டும் என்பதையே வலியுறுத்த விரும்புகிறேன்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஜனநாயக மத்தியத்துவம், தாட் மூன்றுலகக் கோட்பாடு முதலான காலத்தால் தோற்றவை என உறுதியாக நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளை தூக்கியெறிந்து விட்டு, புதிய நிலைமைகளுக்கேற்ப தன்னை வடிவமைக்கா விட்டால், இன்றைய தேக்க நிலையிலிருந்து மார்க்சியம் என்றும் விடுபட இயலாது.
====================================
எழுதியவர் FB post by Saravana Raja .
=====================================================  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக