செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

எல் ஐ சியை விற்க முடியாது!
நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவதை விட
மாற்றுப் பொருளாதாரத்தை முன்மொழிய வேண்டும்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
திருப்பதி வெங்கடாசலபதியை பணக்காரக்
கடவுள் என்று சொல்லுவார்கள். அது போல
எல்ஐசி இந்தியாவின் ஆகப்பெரிய பணக்காரப்
பொதுத்துறை நிறுவனம். அதை யாராலும் விற்க
இயலாது. விற்றாலும் யாராலும் வாங்க முடியாது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது
வாழைக்காய் கத்தரிக்காய் விற்பது போன்றதல்ல.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டேட் வங்கி 99 சதம்
அரசுப் பங்குகளைக் கொண்டிருந்தது. தற்போது
61.23 சதம் அரசுப் பங்குகளைக் கொண்டு,
அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கிறது. இந்த 25 ஆண்டுகளில்
சுமார் 38 சதம் பங்குகள் விற்கப் பட்டுள்ளது.

ONGC இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம்.
நவரத்னா அந்தஸ்துக்குரிய பொதுத்துறை நிறுவனம்.
இது தற்போது 81 சதம் அரசுப் பங்குகளைக் கொண்டு
அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கிறது. மீதிப் பங்குகள்
விற்கப் பட்டு விட்டன.

இன்னும் பல உதாரணங்களைச் சொல்ல இயலும்.
ONGCயின் பங்குகளை விற்க அரசு முனைந்தபோது
வாங்க நாதியில்லை. ஏனெனில் தனியார்
முதலாளிகளிடம் ONGCயின் பங்குகளை வாங்கப்
பணமில்லை. எனவே எல்ஐசி நிறுவனம் முன்வந்து
சுமார் 8 சதம் அளவுள்ள பங்குகளை வாங்கியது.

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை
முற்றிலுமாக மார்ச்சு மாதத்தில் விற்க அரசு
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யார் வாங்கப்
போகிறார் என்று தெரியவில்லை.

வக்கற்ற முதலாளிகள்!
---------------------------------------
அனைவரும் இந்த உண்மையை மனதில் பதிக்க
வேண்டும்.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை
நிறுவனங்களை தங்கத் தாம்பாளத்தில் வைத்து
விற்க அரசு முனைந்தாலும், அதை வாங்கும் சக்தி
இந்தியாவின் பெரு முதலாளிகளுக்கு இல்லை.
அம்பானி, அதானி. டாட்டா, பிர்லா என்று எந்தவொரு
தனியார் முதலாளியும் இந்தியாவின் பொதுத்துறை
நிறுவனங்களை வாங்க வக்கற்றவர்களே!
1995 முதல் நாளது தேதி வரையிலான 25 ஆண்டு கால
வரலாறு இந்த உண்மையைத் தாங்கி நிற்கிறது.

இந்த நிமிடம் வரை எல்ஐசி 100 சதம் அரசுப் பங்குகளைக்
கொண்டுள்ளது. எவ்வளவு சதம் பங்குகளை அரசு
விற்கப் போகிறது என்று அறிவிக்கப் படவில்லை.
ஆனால் நடப்பாண்டில் பங்கு விற்பனை இலக்கில்
பெரும்பகுதி எல்ஐசி பங்குகளை விற்பதன் மூலம்
பெற இயலும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மும்பை டெல்லி ஆகிய இரு நகரங்களில் மட்டும்
செயல்படும் MTNL என்னும் பொதுத்துறை
நிறுவனத்தில் 57 சதம் மட்டுமே அரசின் பங்காக
(57 percent stock) உள்ளது. தற்போது இந்நிறுவனம்
BSNL உடன் இணைக்கப் படுகிறது.

மேலே கூறிய நிறுவனங்களில் அரசின் பங்கு
பின்வருமாறு உள்ளது:-
1) MTNL = 57 சதம்
2) ONGC = 81 சதம்
3) SBI = 61,23 சதம்
4) LIC = 100 சதம்

பங்கு விற்பனைக்குப்பின், LICயில் அரசின் பங்குகள்
95 சதம் அல்லது 96 சதம் இருக்கக் கூடும்.

ஆக, என்ன நடக்கப் போகிறது என்றால், எல்ஐசியின்
பங்குகள் சிறிதளவுக்கு விற்கப்பட உள்ளன. மற்றப்படி
எல்ஐசியை விற்கப் போகிறார்கள் என்பதோ எல்ஐசியை
தனியார்மயம் ஆக்கப் போகிறார்கள் என்பது
உண்மையல்ல.

LPG பொருளாதாரம் என்றால் என்ன?
---------------------------------------------------------
1995 முதல் நாளது தேதி வரையிலான இந்தியப்
பொருளாதாரக் கட்டுமானத்தில், பொதுத்துறை
நிறுவங்களின் பங்கு விற்பனை ஒரு தவிர்க்க
இயலாத அம்சமாக இருந்து வருகிறது.

இந்த உலகமய, தனியார்மய, தாராளமயப்
பொருளாதாரத்தில் பங்கு விற்பனை என்பது
எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.
இந்தப் பொருளாதாரத்தின் பண்பு அது.

நடக்க இருக்கும் எல்ஐசியின் பங்கு விற்பனை என்பது
ஒரு நிகழ்வு (event) மட்டுமே. இந்த நிகழ்வானது ஒட்டு
மொத்த இந்திய பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத
பகுதி ஆகும்.

எனவே பங்கு விற்பனை கூடாது என்று எவ்வளவுதான்
கூச்சலிட்டாலும் பங்கு விற்பனை நடந்து கொண்டுதான்
இருக்கும். ஸ்டேட் வங்கியின் சுமார் 38 சதம் பங்குகள்
விற்கப் பட்டபோது இந்திய இடதுசாரிகள் நடத்திய புரட்சி
என்ன? ஒரு ரோமமும் இல்லை என்பதுதானே உண்மை!

ONGCயில் 19 சதம் பங்குகள் விற்கப்பட்ட போது
இந்தியாவில் நடந்த புரட்சி என்ன? இடதுசாரிகள்
ஏற்படுத்திய பூகம்பம் என்ன?

ஒரு நிகழ்வுக்கு மட்டும் எதிர்வினை ஆற்றுவதால்
என்ன பயனும் விளையாது. பங்கு விற்பனை என்பது
ஒரு நிகழ்வு. கண்டன ஆர்ப்பாட்டம், தர்ணா,
ஒன்றிரண்டு நாள் வேலைநிறுத்தம் ஆகியவற்றால்
ஒரு நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்ற முடியும்.
இந்த எதிர்வினைகளால் பங்கு விற்பனையைத்
தடுத்து நிறுத்த முடியாது.

மாற்றுப் பொருளாதாரம் எங்கே?
-----------------------------------------------------
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவின்
தனியார்மய தாராளமய உலகமயப்
பொருளாதாரத்துக்குப் பதிலாக, அதற்கு முற்றிலும்
எதிரான ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை (alternate economy)
முன்வைக்க வேண்டும். அதன் மீது மக்களின்
ஆதரவைத் திரட்ட வேண்டும். மக்களைத் திரட்டிப்
போராட வேண்டும்.

இதைச் செய்யாமல் வெறுமனே அவ்வப்போது ஏற்படுகிற
நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவதால் எப்பயனும்
விளையாது.

ஆனால் இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் எதுவும்
LPG பொருளாதாரத்துக்கு எதிராக எந்த ஒரு
மாற்றுப் பொருளாதாரத்தையும் முன்வைக்கவில்லை.

கட்சிவாரியாகப் பரிசீலிக்கலாம்.
1) CPI: இக்கடசி ஏற்கனவே சித்தாந்த ரீதியாக
திவாலான கட்சி. இவர்களிடம் போய் மாற்றுப்
பொருளாதாரம் என்ன என்று கேட்பவன் மனச்சாட்சியே
இல்லாதவன்.

2) CPM: இவர்கள் எந்தவொரு மாற்றையும்
முன்வைக்கவில்லை. தற்போதைய LPG பொருளாதாரமே
சரியானது என்று கருதுகிறார்கள். ஆனால் அதை
வெளிப்படையாகச் சொல்லாமல், கபடத் தனமாக
நிகழ்வுகளின் மீது பலவீனமான எதிர்வினை
ஆற்றிக் கொண்டு மக்களையும் கட்சி அணிகளையும்
ஏமாற்றி வருகிறார்கள்.

3) மாவோயிஸ்டுகளைப் பொறுத்தமட்டில் அவர்களின்
அஜெண்டாவில் மாற்றுப் பொருளாதாரம்
என்பதற்கெல்லாம் இடமில்லை. மேலும் அவர்களின்
நடைமுறையும் (practice) அதற்கு அனுமதிப்பதில்லை.

4) பல்வேறு குழுக்களாகச் சிதறிக் கிடைக்கும்
ML குழுக்களில் எந்த ஒரு குழுவுக்கும் மாற்றுப்
பொருளாதாரம் குறித்து எந்தவொரு புரிதலும்
இல்லை. இதெல்லாம் அவர்களின் சிந்தனையின்
வரம்பைத் தாண்டிய விஷயங்கள்.

என்னால் கட்சி வாரியாக, குழு வாரியாக பட்டியல்
இட முடியும். இக்குழுக்களின் மிகப்பெரும் சித்தாந்த
"ஆளுமைகள்"(??) அனைவரையும் நான் நன்கறிவேன்.

இதுதான் மாற்றுப் பொருளாதாரம் என்று நாம் சொன்னால்
குட்டி முதலாளித்துவ அறியாமை, அகந்தை காரணமாக
நாம் சொல்வதை இந்தத் தற்குறியும் ஏற்க
மாட்டார்கள். அப்படி ஏற்காதவர்கள் சரித்திரத்தின்
தாழ்வாரங்களில் சருகாய் உலர்ந்து போவார்கள்.

ஆக, இறுதிக்கும்  இறுதியான பரிசீலனையில்
இது மட்டுமே தீர்வு!
ஒட்டு மொத்தமான ஒருங்கிணைத்த அணுகுமுறை
(integrated approach) இல்லாமல், ஒவ்வொரு நிகழ்வின்போதும்
அதற்கு மட்டுமான எதிர்வினை ஆற்றுவதால் எந்தப்
பயனும் விளையாது.

LPG பொருளாதாரத்துக்கு மாற்றாக, ஒரு மாற்றுப்
பொருளாதாரத்தை முன்வைக்காமல் LPG
பொருளாதாரத்தை வீழ்த்த முடியாது.
***********************************************     .
       

     

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக