சனி, 28 ஜனவரி, 2017

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும்
தமிழக அரசின் உத்தேச அவசரச் சட்டம்!
முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து
விலக்கு அளிக்கும் ஓர் அவசரச் சட்டத்தை
(ordnance) தமிழக அரசு கொண்டுவர இருப்பதாகச்
செய்திகள் வெளியாகி உள்ளன.

2) தமிழக சட்டமன்றத்தின் ஜனவரி 2017 கூட்டத்தொடர்
(assembly session) முடிந்து விட்டது. எனவே சட்டமன்றம்
நடைபெறாத நிலையில், அவசரச்சட்டம் மட்டுமே
கொண்டுவர இயலும்.

3) தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்
தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்
பல்கலைகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு
மட்டுமே உத்தேசச் சட்டம் விலக்கு அளிக்கக் கூடும்.

4) UG நீட் தேர்வுக்கு மட்டுமே உத்தேசச் சட்டம்
விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏனெனில் PG நீட் தேர்வு ஏற்கனவே நடைமுறைக்கு
வந்தாகி விட்டது. It has become a fait accompli.    

5) உத்தேச அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின்
ஒப்புதலைப் பெற வேண்டும். பிரணாப் முகர்ஜி
அவர்கள் ஒப்புதல் அளிப்பதாகவே வைத்துக்
கொள்ளலாம்.

6) உச்சநீதிமன்றம் அந்த அவசரச் சட்டம் செல்லாது
என்று தீர்ப்பு வழங்கி விடக்கூடாது. உச்சநீதிமன்றம்
அப்படியொரு தீர்ப்பை வழங்காது என்று
உறுதிபடக் கூற இயலாது. இன்னும் சொல்லப்
போனால், சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்குவதற்கான நிகழ்தகவு அதிகம்.
The required probability may be > 0.7 என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கருதுகிறது.

7) என்றாலும் உத்தேச அவசரச் சட்டம் குறித்தும்
அது செல்லுமா, நிற்குமா என்பவை குறித்தும்
தகுதி வாய்ந்த சட்ட நிபுணர்களே கருத்துச் சொல்ல
இயலும். எனவே அவசரச் சட்டத்தின் செல்லுபடித்
தன்மை குறித்து நியூட்டன் அறிவியல் மன்றம் கூற
எதுவுமில்லை.

8) நீட் தேர்வுக்கான உத்தேசத் தேதி 07.05.2017 ஆகும்.
இன்னும் 99 நாட்களே உள்ளன. மாணவர்கள் நீட்
தேர்வுக்குத் தயாராகி விட்டார்கள். 100 நாள் கால
அட்டவணையைத் தயாரித்துக் கொண்டு, படிப்பில்
மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

9) இந்நிலையில், பன்னீர்ச்செல்வம் அரசின் உத்தேச
அவசரச் சட்டம் குறித்து மிகைமதிப்பீடு செய்து,
பலூனைப் பெரிதாக ஊதி, "நீட் தேர்வு ரத்தாகி விடும்"
என்றெல்லாம் ஆருடம் கூறி, படிப்பில் மூழ்கிப்போன
மாணவர்களின் கவனத்தைச் சிதைத்து, அவர்களின்
படிப்பில் மண்ணள்ளிப் போட வேண்டாம் என்று
அனைத்து ரக குட்டி முதலாளித்துவ அன்பர்களையும்
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.

10) இதன் பொருள், உத்தேச அவசரச் சட்டத்தை நியூட்டன்
அறிவியல் மன்றம் எதிர்க்கிறது என்பதல்ல. அத்தகைய
புரிதல் ஏற்படுமாயின் அது பிறழ் புரிதலே ஆகும்.
முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; அதன்
பிறகு சித்தப்பா (அல்லது பெரியப்பா) என்று
அழைப்பது பற்றி யோசிக்கலாம்.
******************************************************************         
   
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக