செவ்வாய், 31 ஜனவரி, 2017

தமிழக அரசின் நீட் விதிவிலக்குச் சட்டம்!
எல்லாக் கண்டங்களையும் தாண்டுமா?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து
விதிவிலக்கு வழங்க வகை செய்யும் சட்டம்
சட்ட மன்றத்தில் தாக்கல் ஆகியுள்ளது.விண்ணதிரும்
முழக்கங்களுடன், பன்னீர் ஸ்டாலின் இருவரின்
ஆதரவுடன் இச்சட்டம் ஏகமனதாக நிறைவேறுவது
உறுதி. இது முதல் கட்டம்.

2) அடுத்த கட்டமாக, இச்சட்டம் ஜனாதிபதியின்
ஒப்புதலைப் பெற வேண்டும். இந்திய ஜனாதிபதி
சுயேச்சையாக முடிவு எடுக்க இயலாது. மத்திய
அரசின் பரிந்துரைக்கு ஏற்பவே முடிவு எடுக்க இயலும்.

3) அன்றைய மன்மோகன் அரசுதான் நீட் தேர்வை முதன்
முதலாகக் கொண்டு வந்தது. இன்றைய மோடி அரசு
அதைத் தொடர்கிறது. நீட் விஷயத்தில் காங்கிரஸ்,
பாஜக அரசுகளுக்கு இடையே எந்த விதமான முரண்பாடும்
கிடையாது. இரு அரசுகளும் நீட் ஆதரவாளர்கள்தான்.

4) எனவே நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை
மோடி அரசு ஏற்பது கடினம் ஆகும். எனவே
ஜனாதிபதியின் ஒப்புதல் தமிழக அரசின் சட்டத்திற்கு
கிடைப்பது கடினம்.

5) ஒருவேளை, ஏதோ ஒரு விதத்தில், ஜனாதிபதியின்
ஒப்புதல் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
அப்போது இச்சட்டம் செல்லுபடி ஆகிவிடும்;
அரசிதழில் இடம் பெறும்.

6) இதற்கு அப்புறமும் ஒரு கண்டம் இருக்கிறது. உச்சநீதி
மன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குத்
தொடரப்படும். அப்போது உச்சநீதிமன்றம் இந்தச்
சட்டம் செல்லும் என்று அறிவிக்க வேண்டும். அதற்கு
மாறாக, சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வருமானால்,
தமிழக அரசின் சட்டம் உயிரை விட்டு விடும்.

7) ஆக, இச்சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குள்
இவ்வளவு கண்டங்களைக் கடக்க வேண்டும்.
இச்சட்டத்தின் தலைவிதியை இறுதியாக முடிவு
செய்வது உச்சநீதி மன்றமே.

8) இவையெல்லாம் நிகழ்வதற்குள் மே மாதம் வந்து
விடும். மே 7 நீட் தேர்வுக்கான உத்தேசத் தேதி.
ஆக, தேர்வு நெருக்கத்தில் மாணவர்களையும்
பெற்றோர்களையும், இந்தியாவில் உள்ள எல்லோரும்
சேர்ந்து வறுத்து எடுப்பார்கள். கடந்த ஆண்டு இதுதானே
நடந்தது. இந்த ஆண்டும் இது மீண்டும் நடக்கும்.

9) நீட் தேர்வு குறித்த வழக்கில் இன்னமும் முதன்மைத்
தீர்ப்பு வரவில்லை. அத்தீர்ப்பு எப்படி வரும் என்று
கூற இயலாது. நீட் செல்லும் என்றோ அல்லது செல்லாது
என்றோ தீர்ப்பு வரலாம். அந்தத் தீர்ப்பையும்
வழங்காமல், உச்ச நீதிமன்றம் இழுத்தடித்துக்
கொண்டு இருக்கிறது. தற்போது நீதியரசர் அனில்
தவே அவர்கள் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான்  இவ்வளவும் நடந்து கொண்டு
இருக்கிறது.

10) வழக்கில் முதன்மைத் தீர்ப்பை (main verdict)
வழங்காமல் இழுத்தடிக்கும் உச்சநீதிமன்றம்தான்
தலைமைக் குற்றவாளி.
***************************************************************** 
பின்குறிப்பு: நீட் குறித்து இதுவரை 15 பதிவுகள் வரை
எழுதப் பட்டுள்ளன. அவற்றை அனைவரும் படிக்குமாறு
வேண்டுகிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக